தேர்தல் ஆதாயத்திற்காக தேர்தல் ஆணையர்களை தில்லு முல்லு செய்ய வைத்த மோடி, அடுத்த கட்டமாக ராணுவத் தளபதிகளையும் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்கு அழைக்கிறார்..! சிந்தூர் ஆபரேஷன் குறித்து தொடர்ந்து கட்டமைக்கபடும் பொய்களால் உலக அரங்கில் இந்தியா தனைமைப்படுவதோடு, ராணுவ கட்டுக் கோப்பும் சிதைவது குறித்த கட்டுரை;
பாஜக தனது தேர்தல் வெற்றிக்கு எப்படியெல்லாம் தேர்தல் ஆணையத்தை துஷ்பிரயோகம் செய்ய வைக்கிறது என்பதை கண்டு நாடு அதிர்ந்த வேளையில் அடுத்து ராணுவத்தையும் பித்தலாட்ட அரசியலுக்கு களம் இறக்க துணிந்துள்ளதை சமீபத்திய சம்பவங்கள் காட்டுகின்றன;
பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பாக்கிஸ்தானை ஒரு தோல்வியடைந்த நாடாக வருணிக்கிறார்கள்.
பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் நாடு, தோல்வியடைந்த நாடு என பாஜக அரசு கூறி வருவதை உலக நாடுகள் அங்கீகரிக்கின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, உலக நாடுகளின் பார்வையில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் குறித்த மதிப்பீடுகள் என்ன? பாக்கிஸ்தான் மீது இந்தியா தொடுத்த தாக்குதலை உலக நாடுகள்
ஆதரித்தனவா? இந்திய நாட்டுடன் இஸ்ரேலை தவிர, வேறு எந்த நாடும் துணை நிற்காதது ஏன்?
அமெரிக்கா இன்று பாக்கிஸ்தான் பக்கம் சாய்வதோடன்றி, ராணுவ தளபதி அசீம் முனீருக்கு அதிபர் டிரம்ப் விருந்து வைக்கும் அளவிற்கு சென்றது ஏன்? இந்தியாவிற்கு அதிக வரியை விதிப்பதேன்? என்ற கேள்விகள் மோடி பக்தர்கள் உடபட அனைவரின் மனதிலும் தோன்றுவதில் வியப்பில்லை.
பாக்கிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டும் நாடு, அது ஒரு தோல்வியடைந்த நாடு, மதவெறி நிறைந்த, முன்னேற்றமறியாத நாடு என நம்மில் பலர் எண்ணுகிறோம்.
உண்மையில் தோல்வியடைந்த நாடு என்பதை எதை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது? அதற்கு முதன்மையானதாக வல்லுநர்கள் கூறுவது ஜனநாயகப் பின்னடைவு (Democratic backsliding) என்ற அம்சம் தான்.
இதற்குப் பெயர் தான் ஜனநாயகப் பின்னடைவு;
ஜனநாயகப் பின்னடைவு என்பது நீதிமன்றங்கள், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகங்களின் சுதந்திரமான செயல்பாட்டின் மேல் ஆளுவோரின் தாக்குதலையும், அதிகார குவியலைக் கண்டு அச்ச உணர்வில் ஒரு நாடு மூழ்குவதையும் குறிக்கிறது எனலாம்.
அடுத்த முக்கியமான காரணியாக கருதப்படுவது ஆளுவோரின் நலன்களை தேசத்தின் நலன்களாக சித்தரிப்பதோடன்றி, அதை முரட்டுதனமாக திணிப்பது என்பது தான்.
மூன்றாவதாக , ஆட்சியிலுள்ளோர் சட்டத்தின் கூறுகளை கையிலெடுத்து அவற்றை தன்னிச்சையாக தங்களுக்கு பிடிக்காத எதிர்கட்சிகளையும், தாங்கள் வெறுக்கும் சிறுபான்மை சமூகத்தினரையும் அடக்கி ஒடுக்குவது என்ற நிலை .
நான்காவதாக முப்படையினரின் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் சீரழித்து அவர்களை ஆளுவோரின் அதிகார வட்டத்திற்குள் இழுக்க முனைவது!
இவை அனைத்துமே ஒரு நாட்டின் சீரழிவை படம் பிடித்து காட்டும் காரணிகளாகும் .
மக்களின் நலன்களை புறந்தள்ளி, ஓரிரண்டு முதலாளிகளை வளர்த்தெடுப்பதற்கே சட்டங்களை போடுவதும், நாட்டின் வளங்களையும், பொது சொத்துக்களையும் தாரை வார்த்து அவர்களை பாதுகாப்பதும் சீரழிவின் இலக்கணமாகும். இவையாவும் 2014க்கு பிறகு நம் நாட்டில், நாம் கண்ணுற்று வரும் அவலங்களுக்கு இலக்கணம் கூறுபவை போல் உள்ளன.
இது வரையில் இந்திய மக்களின் ஆழ்மனதில் இருந்த சந்தேகம் தேர்தல் முடிவுகள் நேர்மையானது தானா? என்பதே! சந்தேகங்கள் – உண்மை தான் என ராகுல் காந்தி வெளிப்படையாக போட்டு உடைத்தது பெரும் கொந்தளிப்பை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளன.

பல தில்லுமுல்லுகள் செய்த பிறகும், 2024 தேர்தலில் 240 இடங்களை மட்டுமே பெற்ற மோடி கூட்டணி ஆட்சியே அமைக்க முடிந்தது. ஹரியானா, மகாராஷ்டிர தேர்தல்களை பிரித்து தனித்தனியே நடத்தி, ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு அதில் வெற்றியையும் பெற்றார். இதற்கெல்லாம் உதவிய தேர்தல் ஆணையர்களுக்கு நன்றி செலுத்திய மோடி அடுத்த இலக்கான பீகார் மற்றும் மே. வங்க தேர்தல்களுக்கான காய்களை நகர்த்திய வேளையில் பெகல்காம் தாக்குதல் நடந்தது.
பாகிஸ்தானின் எதிர்பாராத திடீர் தாக்குதல்;
தனது அதிர்ஷ்டத்தை நினைந்து மகிழ்ந்தார் மோடி! பயங்கரவாதிகள் தாக்குதல் – பாக்கிஸ்தான் மீது பழி- இந்தியா எதிர் தாக்குதல் – என்ற முன்னெடுப்பின் மூலம் பீகார் தேர்தலை சந்திக்க திட்டமிட்ட மோடிக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.

மே -6 இரவு நடந்த ஏவுகணை தாக்குதலை எதிர்பார்த்து விழித்திருந்த பாக்கிஸ்தான் ஆறு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தி, மோடியின் திட்டங்களை தவிடு பொடியாக்கி விட்டது,
மூக்குடைபட்ட மோடி தாக்குதல்களை விரிவுபடுத்த முனைந்த போது , அமெரிக்க உட்பட பிற நாடுகள் (அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஈரான், யு ஏ இ) தலையிட்டு போர் நிறுத்தத்தை வற்புறுத்தினர். அதில் வெற்றியும் பெற்றனர். அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை முதலில் அறிவித்ததோடன்றி, அதற்கு தமது முயற்சி தான் காரணம் என்பதையும் அறிவித்தார்.
டிரம்பின் முயற்சிகளுக்கு நன்றி சொல்லாமல் எந்த உலகத் தலைவர் சொல்லியும் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என மோடி பொய் பேசிய மறுநாள் டிரம்ப், இந்திய பொருட்களின் மீது வரி விதிப்பை கூட்டினார். வணிக ஒப்பந்த பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்து விட்டார்.
தனிமைப்பட்ட இந்தியா;
சீனாவும் பாக்கிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்தது, அமெரிக்காவும் பாக்கிஸ்தானை பாராட்டியது. விஸ்வ குருவான மோடியின் பக்கம் ரஷ்யா உட்பட யாரும் இல்லை! மோடி அரசின் தான் தோன்றிதனமான வெளியுறவு கொள்கையினால் இந்தியா உலகில் தனிமை பட்டு நின்றது.
இந்த நிலையில், உள்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தேர்தல் ஆணையம் பலத்த எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
ராகுல் காந்தி,தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டை, போலியாக வாக்காளர்களை சேர்த்து பாஜக வின் வெற்றிக்கு துணை போனதை ஆதாரங்களுடன் பொது வெளியில் கொண்டு வந்தது மிகப் பெரிய அவப் பெயரை மோடி அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்வாதிகளை போல ராணுவத் தளபதி பொய் பேசலாமா?
ஆகஸ்டு 9 அன்று பெங்களூரில் பேசிய விமான படை தளபதி அமர் ப்ரீத் சிங் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, F16 உட்பட- ஆறு பாக்கிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தனது பேச்சில் குறிப்பிட்டார்.

விமான படை தளபதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டு மூன்று மாதங்கள் கழித்து இப்பொழுது இதை ஏன் கூறவேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இப்பேச்சு குறித்த பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையிலும் (hand out about the speech) பாக்கிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்திய தகவல் இல்லை.
பொது வெளியிலோ, இணைய தளத்திலோ, சேட்டிலைட் படத் தொகுப்பிலோ இதற்கான ஆதாரங்கள் இல்லை. அமெரிக்கா,ரஷ்யா , சீனா போன்ற நாடுகளின் தொழில்நுட்பம் மிகுந்த செயற்கை கோள்களும் இத்தகைய விவரங்களை தெரிவிக்கவில்லை.
சண்டையின் போதும், அதன் முடிவின் போதும் “ ஊடகங்களிடம் பேசிய இந்திய விமானப் படை செய்தி தொடர்பாளரும் இந்தியா பாக். விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறவில்லை.

சிங்கப்பூரில் பேட்டி கொடுத்த முப்படை தளபதி அனில் சவுகானும் , “இந்தியா சில இழப்புகளை சந்தித்தது. பிறகு சுதாரித்து கொண்டு தாக்குதலைத் தொடுத்தது” என்று கூறிய போதும், இந்தியா பாக்கிஸ்தான் நாட்டு விமானங்களை தாக்கி அழித்தது என்று கூறவேயில்லை.
நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதைப் பற்றி பேசவில்லை!
தேச பராக்கிரமத்தின் மொத்த குத்தகைதாரர் மோடியும் பாக்கிஸ்தான் போரை நிறுத்த மண்டியிட்டது என்றாரே ஒழிய, 6 பாக்., விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக கூறவில்லை! ஏன்?
வாக்கு திருட்டிற்கு எதிரான இயக்கம் வலு பெற்று வரும் வேளையில், அதை திசை திருப்ப, அதிகார பீடம் இட்ட உத்தரவின் விளைவாகவே விமானபடை தளபதி இப்படிக் கூறியதாக கருத தோன்றுகிறது.
அவரது கூற்றுக்கு ஆதாரமோ, புகைப்படமோ ஏதுமில்லாததால் இதன் உண்மைத் தன்மை கேள்விக்குள்ளாகிறது. ஆபரேஷன் மகாதேவ் மூலம் சுட்டு கொல்லபட்ட 3 நபர்கள் தான் பகல்காம் படுகொலை நிகழ்த்திய பயங்கரவாதிகள் என்ற அமீத்ஷாவின் கூற்று போல,
விமானபடை தளபதியின் ஆறு விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்ட கதையும் கேட்பார் யாருமின்றி மடிந்து போனது.
ஆனால், இத்தகைய “தகவல்களை” உண்மையைப் போல கசிய விடுவதன் மூலம் ஆட்சியிலுள்ளோர் சாதிக்க நினைப்பது எதுவாயினும், இத்தகைய அறிவிப்பு முப்படையினரிடையே என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆளுவோர் உணர்ந்திருக்கிறார்களா?
போரின் முடிவில் படைவீர்ர்களுக்கு எதிரிக்கும் தமக்கும் ஏற்பட்ட இழப்பு என்ன என்பது பற்றிய தெளிவான புரிதல் இருக்கும். வெளியுலகிற்கு அறிவிக்காவிட்டாலும், படையினருக்கு உண்மை நிலவரம் தெரியும்.
கட்டுப்பாடும், கண்ணியமும் மிக்க படைப் பிரிவுகளில், தளபதியே உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறுவது படையினரின் நம்பிக்கையையும், பெருமையையும் குலைக்காதா?
அவர்களது தொழில்முறை கட்டுகோப்பிற்கு ஊறு விளைவிக்காதா?
மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் கால முதலே ஆட்சியாளர்களின் வரம்பு மீறிய உத்திரவுகளுக்கும் கண்ணசைவிற்கும் தாளம் போடும் வழக்கம் இந்திய படைத் தலைமைக்கு இருந்ததாக சான்றுகள் கூறுகின்றன.

இரு முனை யுத்தம், கலாச்சார யுத்தம் என்றெல்லாம் பாஜகவின் அரசியலைப் பேசியதால், பிபின் ராவத்திற்கு முப்படை தளபதி பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதனால் அவர் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்களை கண்டித்து பேசினார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் கோரக்பூர் மடம் சென்று தனது சார்பை வெளிப்படுத்தினார். இப்பொழுதுள்ள இராணுவ தலைமை தளபதி உபேந்திர திவிவேதி இந்து மத சாமியாருக்கு “குரு தட்சணையாக” ஆசாத் காஷ்மீரை மீட்டு கொடுப்பேன் என்று நாகூசாமல் கூறுகிறார்.
Also read
அக்னி பாத் போன்ற திட்டங்களை எதிர்த்த படைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனேக்கு முப்படை தளபதி பொறுப்பு கொடுக்காமல், “இந்திய ராணுவத்தில் தொழில் முறை கட்டுப்பாடும் அரசியல் சித்தாந்தமும் இணைந்து நடைபோடுவதின் அவசியத்தை “ அவரது ( Ready Relevant And Resurgent) என்ற புத்தகத்தில் கூறியிருந்த அனில் சவுகானுக்கு – மூன்று ஸ்டார்கள் மட்டுமே பெற்றிருந்த அனில் சவுகானுக்கு- முப்படை தளபதி பதவி (CDS) மோடியால் கொடுக்கப்பட்டது தற்செயலான நிகழ்வல்ல.
எந்த இராணுவம் தனது தொழில்முறை கட்டுபாட்டை மறந்து, அரசியல் சித்தாந்தத்தில் இணைகிறதோ, அன்றே அதன் சீரழிவும் தொடங்குகிறது.
கட்டுரையாளர்; ச.அருணாசலம்














உண்மையை சொல்லும் முக்கியமான கட்டுரை. பாராட்டுகள்