ஆயிரம் கோடியை அள்ள ‘கூலி’ என்ற பெயரையே கெடுப்பதா?

-பிரகாஷ் தேவேந்திரன்

75 வயதிலும் துடிப்பான ரஜினிகாந்த்! ஈர்ப்பைத் தரும் ஸ்டைல் நடிப்பு, அதிரடி சண்டைகள், ரத்தம் சொட்டும் வன்முறை, கணக்கு வழக்கில்லாமல் நடக்கும் கொலைகள்.. என அதகளம் காட்டும் படத்தில் கதை இருக்கிறதா? நல்ல மெசேஜ் இருக்கிறதா? குழந்தைகள், பெண்கள் என குடும்பத்தோடு பார்க்க முடியுமா? ஒரு அலசல்;

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  கூலி திரைப்படம், அவரது திரையுலக பயணத்தில் 50-ம் ஆண்டை நிறைவு செய்யும் திரைப்படமாக வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகிறது என்றாலே, அது வொரு திருவிழா போல அமைந்துவிடுகிறது அவரது ரசிகர்களுக்கு..

சன் பிக்சர்கஸ் தயாரிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படம் இயக்குகிறார் என்ற அறிவுப்பு வெளியாகிய உடனேயே, மக்கள் மத்தியில் பற்றிக் கொண்டு விட்டது ஒரு எதிர்பார்ப்பு. ஆடியோ ரிலீஸ்சில் ரஜினிகாந்த் பேசிய அந்த வார்த்தைகள், தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சில் இன்னமும் நெகிழ்வாக நின்றுகொண்டிருக்கிறது. அதாவது, “என்னை வாழ வைக்கும் தமிழ்நாட்டு மக்களின் பாதங்களில் என் தலையை வைத்து எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்பது தான் அது.

சக்சஸ்ஃபுல் கமர்ஷியல் டைரக்டராக உயர்ந்திருக்கிறார், லோகேஷ் கனகராஜ் என்று புகழாரங்கள் சூட்டப்படுகின்றன. கூலி திரைப்படத்திலும் அதே ஃபார்முலா  தான். கத்தி, கோடாரி, வெட்டு குத்து ரத்தம், கொடூரமான கொலைகள்.. அப்பப்பா.. ஜீரணிப்பதற்கு காலம் தேவைப்படுகிறது.

இந்தப் படத்தின் கதையை வித்தியாசமாக அமைக்கலாம் என்ற முடிவில், திரைக்கதைக்குள் பல ட்விஸ்ட்டுகளை வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ். அவை பெரிதாக எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும்.

க்ரிமேட்டர் மெஷின், அதாவது இறந்த உடலை மின்சாரம் பாய்ச்சி சில நொடிகளில் அதனை சாம்பலாக்கும் நவீன இயந்திரம். அந்த க்ரிமேட்டர் மிஷினை உருவாக்கும் சத்யராஜை கொண்டு, தங்களால் கொலை செய்யப்பட்ட ஒரு இருபது பேரின் உடல்களை அழிக்கச் சொல்கிறார் வில்லன் நாகார்ஜுனா.

சத்தியராஜ் அதை செய்யவில்லை என்றால், அவரது மூன்று இளம் மகள்களை அழித்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததால், அவர் அதை ஒப்புக் கொண்டு செய்து வருகிறார். இங்கு தொடங்கும் கதை, நாகார்ஜுனாவின் கையாள் சோபின் ஷாஹிரால் சத்தியராஜ் கொல்லப்பட, தனது உற்ற நண்பனும் மைத்துனனும் ஆன சத்தியராஜின் கொலைக்கு பழி வாங்குவதற்காக உள்ளே வருகிறார் ரஜினிகாந்த்.

திரைப்படத்தின் கதையை முமையாக சொல்வது சரியல்ல.  ஆனால், இந்த படத்தின் கதையில் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை.  அதே கமர்ஷியல் கதை தான். கதைக் களம் துறைமுகத்தில் நிற்கும் கண்டைனர் கப்பல்கள் மற்றும் கடல் அலைகள் பின்னணியோடு நகர்கிறது. திரைப்படம் ஆரம்பித்து பத்தாவது நிமிடத்தில் ஹீரோ அறிமுகம், அதைத்தொடர்ந்து ஹீரோ அறிமுகப் பாடல். முக்கால் மணிநேரம் முடிவதற்குள், மூன்று ஃபைட், மூன்று பாடல்கள் முடிந்து விடுகிறது. ஒருமணிநேரத்துக்குள் ஐந்து பாடல்கள், ரத்தம் சொட்டச் சொட்ட ரணகளமான கொலைகள். ஒரு இருபது பேர் உடல்களை, காவல்துறை கண்களுக்கு தெரியாமல் மறைப்பதற்கு சத்யராஜின் க்ரிமேட்டர் தொழில் நுட்பத்தை அணுகும் வில்லன் நாகார்ஜுனா, அதற்கு பிறகு நிகழும் கேட்பாரற்ற, சுமார் நூறு கொலைகளை எப்படி மறைத்தார் என்று தெரியவில்லை.

பழைய பாடல்களை ஒலிக்க விட்டு, நிகழும் சண்டை காட்சிகள், தலைமறைவாக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்னாள் வீரர்கள் (கேங்க்ஸ்டர்ஸ்), அப்பா மகள் செண்டிமெண்ட் என்று எல்லாமே லோகேஷின் ட்ரெண்டில் கூலி திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கேமரா பதிவுகளும், எடிட்டரின் ஒட்டு-வெட்டுகளும் நன்றாக இருக்கிறது. சாண்டி மாஸ்டரால் இதில் இவ்வளவு தான் செய்ய முடியும். அனிருத்தின் பாடல்கள் ஓகே ரகம். பிண்ணனி இசையில் இன்னும் கொஞ்சம் மெருகேற்ற வேண்டும். ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சோபின், சார்லி, லொள்ளு சபா மாறன் என்று எல்லோரும் திறமையான நடிகர்களே. உபேந்திராவுக்கு நடிக்க ஒன்றும் இடமில்லை. இதில், ஸ்ருதிஹாசனின் பெர்ஃமார்மன்ஸ் அபாரமாக இருக்கிறது. வாழ்த்துகள் ஸ்ருதி..

அமீர்கான் எப்போது வருவார் என்று ஆடியன்ஸ் மத்தியில் பெரிய எதிர்பார்பையே ஏற்படுத்திவிட்டார்கள். கடைசியில், படம் முடிவதற்கு பத்து நிமிடங்கள் முன்பாக வருகிறார் அவர். வந்தவுடன் என்ன..? டமால் டுமீல் தான்.. ஒரு முப்பது பேர் காலி. அவருடைய கெட்-அப் நன்றாக இருந்தாலும், அவரைப் போய் இப்படியா பயன்படுத்துவது என்று சலிப்பு மேலோங்குகிறது. நல்ல திறமையான நடிகரை முற்றிலும் வீணடித்துவிட்டார்கள்.

படம்  முழுக்க லாஜிக் அவுட்டுகள் நிறைய இருக்கின்றன.

சுத்தியலால் ஓங்கி மண்டையில் அடித்தும் சாகாமல் நின்று பேசுவது,

சவக்குழியில் அதுவும் ஈர மண்ணில் புதைக்கப்பட்டவர் உயிரோடு எழுந்து வருவது,

சோபினின் காதலி சொல்வதை உண்மை என்று நம்பும் கண்ணா ரவி கதாபாத்திரம் என்று, சொல்லிக் கொண்டே போகலாம்.

ரஜினியும், சத்யராஜும் உயிருக்கு உயிரான நண்பர்களாக சொல்லப்பட்டாலும், ஒரேயொரு முறை தான் இருவரும் இணைந்திருக்கும் காட்சி அமைக்கப்பட்டிருப்பது ஏனென்று கேள்விகள் எழுகின்றன.

இன்னொன்றை வெகுவாக பாராட்டியாக வேண்டுமென்றால், நமது AI தொழில்நுட்பம்  தான்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நாற்பது வருடத்திற்கு முந்தைய இளமைத் தோற்றத்தையும், பேச்சையும் அப்படியே படக்குழு கொண்டுவந்து விட்டது. சூப்பர்ப்..!

தொலைக் காட்சிகளில் ஓடும் முப்பதுக்கும் மேற்பட்ட சீரியல்களில், எதில் பார்த்தாலும் எல்லா கதாபாத்திரங்களும் பெரும்பாலும் நின்று கொண்டே பேசிக் கொண்டிருக்கும். படப்பிடிப்புக்கு வசதியாக டிவி தொடர் இயக்குபவர்கள் அதை செய்கிறார்கள். ஆனால், லோகேஷ் கனகராஜுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.. அவரும் அந்த பாணியை கையாண்டிருப்பது போல தோன்றுகிறது.

இதில் இன்னொன்றையும் சொல்லவேண்டுமென்றால், கலாநிதி மாறனுக்கு தனது சொந்த நிறுவனமான சன் பிக்சர்ஸில் படம் எடுத்தால் மட்டுமே அதனை தனது தொலைக்காட்சியில் வெளியிட முடியும் என்ற நிலைமை இருப்பதையும் மறுக்க முடியாது. ஏனென்றால் இன்றைய படங்கள் எல்லாமே ‘ ரெட் ஜெயண்ட்டு’க்கு தானே சொந்தமாகிறது..!

படுபயங்கர வன்முறைக் காட்சி காரணமாக படத்திற்கு ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இதை 18 வயதுக்குள்ளானவர்கள் பார்க்க முடியாது. ரஜினி படத்திற்கான நகைச்சுவை, பன்ச் டயலாக், குழந்தைகள், பெண்களை கவரும் காட்சி அமைப்பு இல்லை என்பது பல ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

இந்தப் படம் LCU இல்லை என்று சொல்லிவிட்டாலும், ICU இருக்கிறது. படத்திற்கு இல்லை.. படத்தில் அடியாட்களாக வரும் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களுக்குத் தான்.. FDFS – First Day First Show பார்க்கத் துடிக்கும் ரசிகர்கள் ஒருபக்கம் காசை கத்தைகத்தையாக செலவழிக்க  துடித்துக் கொண்டிருக்கும் வேளையில், முன்னூறு நானூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாமல் இருக்கும் கூலித் தொழிலாளர்கள் நிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி.

மொத்தத்தில், கூலி திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான திருவிழாவாக அமைந்திருக்கிறது. ரசிகர்களின் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும்..!

திரை விமர்சனம்; பிரகாஷ் தேவேந்திரன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time