வானொலிச் சேவை இப்போதும், எப்போதும் தேவை!

- பேரா.ஜெய் சக்திவேல் நேர்காணல்

வானொலியால் வளர்ந்த தலைமுறைகள் இன்றும் சொல்வர், வானொலியின் பெருமைகளை! இன்றும் உலக நாடுகள் அனைத்திலும் வானொலிச் சேவைகள் மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. சமூக வானொலிகள்  சகாப்தங்களை படைத்து வருகின்றன. வானொலிச் சேவைகளின் பல பரிமாணங்களை சொல்கிறார், ஜெய்.சக்திவேல்;

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தான், ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்து  இதழியல் படிப்பு இரண்டாவதாக ஆரம்பிக்கப்பட்டது. அங்கு படித்த, தங்க. ஜெய் சக்திவேல், சில காலம் பிபிசியில் பணியாற்றி, சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே  துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் வானொலி குறித்து  பல்வேறு நூல்களை எழுதி தொகுத்துள்ளார். இந்த நேர்காணலில், வானொலிகளுக்கு இன்னமும் தேவை இருக்கிறது என்கிறார்.

வானொலி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறீர்கள். இதன் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?

எங்கள் வீட்டில் சிறு வயதில் கைத்தறி வேலையை செய்து கொண்டே வானொலி கேட்போம். தினமும் இரவு 9.15 மணி முதல் 9.45 வரை  பிபிசி தமிழோசை செய்தியைக் கேட்டு தான் தூங்க வேண்டும் என்பது எங்கள் அப்பாவின் கட்டளை. நான் ஊடகத் துறைக்கு வர இந்த அனுபவம் தான் காரணம்.

சந்து பொந்தான இடங்களாக இருந்தாலும், வானொலி கேட்கலாம்.  வானொலியின் ஒலி அலை நாட்டு எல்லைகளை கடந்து போகிறது. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ‘திரைக் கடல் ஆடி வரும் தமிழ் நாதம்’ என்ற பெயரில் தினமும் அகில இந்திய வானொலி காலையில்  தில்லியில் இருந்தும், மாலை ஒலிபரப்பை சென்னையில் இருந்தும் சிற்றலையில் ஒலிபரப்பி வந்தது. இதில் செய்திகள் அவர்கள் விரும்பும் கோணத்தில் இருக்கும்.

உக்ரைன், காசா யுத்தங்கள் பற்றிய செய்திகள் வானொலி ஊடாகவே அந்த மக்களுக்கு சென்று சேர்கின்றது. மற்ற ஊடகங்களை அவர்கள் போர்ச் சூழலில் பயன்படுத்த இயலாது.  ஈழப்போரின் போது பதுங்கு குழிகளில் இருந்தவர்களுக்கு வானொலி தானே செய்தி தந்தது. புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது – தொலைக் காட்சியோ, அச்சு ஊடகமோ, இணைய வசதியோ இருக்காது. ஆனால் மின்கலம்  மூலமாக சில வாரங்கள் வரை கூட வானொலியைக் கேட்க முடியும்.

சீனா சிற்றலை மூலமாக இரவு 7.30 மணி முதல் 9.30 வரை இரண்டு  மணி நேரமும், காலை 7.30 முதல் 9.30 வரை தினமும் ஒலிபரப்பி வருகிறது. அமெரிக்காவில் பல வாரங்கள்  தீயை அணைக்க முடியாமல் இருந்தது. புயலினால் சில நாட்கள் கடந்தாலும் மின்வசதி, இணைய வசதி கிட்டாது. அதனால் தான் பல வெளிநாடுகள் வானொலி சேவையை இன்றும்  நிறுத்தவில்லை. ஆனால், இந்தியா வெளிநாட்டு ஒலிபரப்பை நிறுத்தி விட்டது.

நம் நாடு பண்பலை மற்றும் மத்தியலை தவிர சிற்றலை ஒலி பரப்பினை நிறுத்தி விட்டது. அதற்கு தகவல் ஒலிபரப்பு த்துறை அமைச்சகம் சொன்ன காரணம் தான் விநோதமானது. இதற்கான நிதியை வெளியுறவுத் துறை நிறுத்தி விட்டது என்றார்கள். நமது பிரதமர் வெளிநாடுகளுக்குப் போகும்போது கூட  அதுகுறித்து செய்தியை ஒலிபரப்ப முடியாது.

தமிழ் நாட்டில் சென்னை வானொலியை மட்டும் வைத்துக் கொண்டு, மதுரை, கோயமுத்தூர், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற மற்ற ஒலிபரப்புகளை அஞ்சல் நிலையங்களாக மாற்றி விடப் போவதாக சொல்கிறார்கள். இது நல்லதல்ல. ஏனெனில், ஒரு மாநிலத்திற்குள்ளேயே பேச்சு மொழி மாறுபடும். திருநெல்வேலி பேச்சு மொழி வேறு. கோவை மொழி வேறு.

யார் சார் இப்பவெல்லாம் வானொலி கேட்கிறாங்க‘  ன்னு ஒரு புத்தகத்தை வெளியிட்டீர்களே?

சென்னையில் இலயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகம், எம்.ஓ.பி. வைணவக் கல்லூரி, நலம் தானா (ECR சாலை)  என நான்கு சமுதாய வானொலிகள் உள்ளன. அவை அந்த வளாகத்திற்கு வெளியே கேட்காது.  அதன் சக்தி 100 வாட். இதன் திறனை ஒரு கிலோ வாட்டில் இருந்து 5 கிலோ வாட் வரை அதிகரிக்க வேண்டும். ஏனெனில் எஃப்.எம். ஒலிஅலைகள் நேர்கோட்டில் பயணிக்கும். அதிக கட்டடங்கள் உள்ள, சென்னை போன்ற நகரத்தில் இதன் திறனை உயர்த்த வேண்டும். திண்டுக்கல்லில் பசுமை எஃப்.எம் வானொலி தமிழ், கன்னடம், சௌராஷ்டிரா, தெலுங்கு, இந்தி என ஐந்து மொழிகளில் ஒலிபரப்பு செய்கிறது. இது போன்று அரசு வானொலியோ, தனியார் வானொலியோ நிச்சயம் செய்ய முடியாது.

மக்கள் பேசும் மொழிகளில் பேசினால், அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். சமுதாய வானொலிகளை பெருமளவில் அனுமதித்தால் முகநூல், டிவிட்டர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் சமூக வலைத் தளங்களுக்கு பாதிப்பு வருமென, கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

சமுதாய வானொலி ஆரம்பிக்க மத்திய அரசின் 13 அமைச்சகங்களின் அனுமதி வேண்டும். ஒற்றைச் சாரள முறையில் உரிமம் பெறும் வகையில் இருக்க வேண்டும். தமிழக அரசு, தாலுகா வாரியாக சமுதாய வானொலியை  அமைக்கலாம். ரேஷன் கடைவாரியாக கூட வானொலி பெட்டிகளை இலவசமாகக் கொடுக்கலாம். இதனால் உள்ளூர் செய்திகள், வியாபாரம், பொழுதுபோக்கு போன்றவை நடக்கும். வேலை வாய்ப்பு உருவாகும். வருமானம் கிட்டும். வானொலியைக் கேட்டுக் கொண்டே வேலை செய்ய முடியும்.  வானொலியில் கதை கேட்கும் போது கற்பனைக்கு வாய்ப்பு உள்ளது. ‘குதிரையில் ஏறி பாய்ந்து சென்றான்’ என்று சொல்வது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கற்பனை அனுபவத்தைத் தரும்.

தொலைக் காட்சியில் இதற்கு வாய்ப்பில்லை. வானொலி மூலமாக பயன் அடைந்தவர்களின் அனுபவங்களைத் தொகுத்து ‘யார் சார் இப்ப ரேடியோ கேட்கிறாங்க? ‘ என்ற புத்தகமாக தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியிருக்கிறோம். வானொலி பற்றிய நல்ல அம்சங்களை வெளியில் சொல்லுவது எங்களது நோக்கம்.

ரேடியோ மிர்ச்சி, ஹலோ எப்.எம். போன்றவை நன்றாகவே  செயல்படுகின்றவே

ஹலோ எப்.எம். என்பது தந்தி குழுமத்தின் வானொலி;  ரேடியோ மிர்ச்சி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வானொலி;  பிக் எஃப்.எம் என்பது ரிலையன்சின் வானொலி. சென்னையில் 11 தனியார் வானொலிகள் உள்ளன. எஃப்.எம், விவித் பாரதி, எஃப்.எம் கோல்டு என்பவை அரசின் வானொலிகளாகும்.

பள்ளிக் கல்வித்துறை  மாணவர்களுக்கு வானொலிகளை அறிமுகப்படுத்தலாம். கடிதம், வானொலி, தொலைக்காட்சி போன்றவைகளை ஒருங்கிணைத்தல் (convergence) என்ற பெயரில் இன்று கைப்பேசி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. வானொலிகளின் பயன்பாடு பின்னுக்கு தள்ளப்படுகிறது. ஹாம்  ரேடியோ என்ற அமெச்சூர் ரேடியோ சுனாமி காலத்தில் நன்கு பயன்பட்டது.  வானொலிகளுக்கு இன்னமும் தேவை உள்ளது.

அஞ்சல் தலை சேகரிப்பது, தபால் அட்டை சேகரிப்பது போன்றவைகள் நேரத்தை வீணடிக்கும் வேலை அல்லவா?

இவையெல்லாம் நமது வரலாற்றை சொல்லுபவை. மாணவர்களை எழுத தூண்டுபவை. அஞ்சல் அட்டைகளை சேகரிப்பது (Deltiology)  போன்றவையும் இங்கு இருக்கிறது. மிகப் பழமையான கடிதங்களுக்கு, அஞ்சல் தலைகளுக்கு  மதிப்பு அதிகம். ஏன் நம் காலத்திலேயே 22.2.22 அன்று (Palindrome எப்படிப்பார்த்தாலும் ஒரே எண் )  வாங்கப்பட்ட மெட்ரோ இரயில் பயணச்சீட்டை சேகரிப்பவர்கள் உள்ளனர். ஜி.டி.நாயுடு நடத்திய பேருந்துகளின் பயணச் சீட்டுகளையும், திருவள்ளுவர் போக்குவரத்து கழக பயணச் சீட்டுகளையும் சேகரிப்பவர்களும் உள்ளனர். இவை ஏதோ ஒரு கதையை நமக்குச் சொல்லுபவை.

அண்ணா சாலை அஞ்சல் நிலையத்தில் அஞ்சல் தலை சேகரிப்புக்கு என தனி பிரிவு (Philately Bureau)  உள்ளது. நூறு ரூபாய்க்கு ஓர் அஞ்சல் ஆல்பம் கிடைக்கும். அதில் உலகத் தலைவர்கள், சம்பவம், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த அஞ்சல் தலைகள் பல வண்ணங்களில் இருக்கும். இதனை வெளிநாட்டினருக்கு அனுப்பலாம்.

ரோஜா முத்தையா நூலகத்தில் 1950 களில் வாங்கிய வானொலி பெட்டியின் ரசீது உட்பட பலவற்றையும்  சேகரிக்கிறார்கள். 1984 ஆண்டு வரை வானொலிக்கு நாம் உரிமம் வைத்திருக்க வேண்டும். சில குறிப்பிட்ட அஞ்சல் நிலையங்களில் நிரந்தர பட முத்திரை (Permanent Pictorial Cancelation) மூலம் அஞ்சல் முத்திரை யிட்டு தபால்களை அனுப்ப இயலும். அதில் அந்தப் பகுதியின் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னம் இருக்கும்.

உதாரணமாக குன்னூரில், நீலகிரி இரயில் முத்திரை இருக்கும். சென்னையின் இரண்டாவது சினிமா தியேட்டர் இன்றும் அண்ணாசாலையில் இருக்கிறது. அதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர். இந்த அஞ்சல் சினிமா தியேட்டருக்கும் சிறப்பு நிரந்தர முத்திரையை வெளியிட்டுள்ளனர். பிபிசி உலக சேவையின் ஆங்கில வானொலி தமிழ்நாட்டில் இருந்த ஒரு நேயரின் ஆலோசனையைக் கேட்டு Write On என்ற நேயர் கடித நிகழ்ச்சியை ஒலிபரப்பி வருகிறது.

பேராசிரியர் ஜெய் சக்திவேல்

இது பற்றி அந்த நேயருக்கு பிபிசி 1970 ல் கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தை அவரிடம் இருந்து பெற்று லண்டன் பிபிசிக்கு அனுப்பினேன். அதனை பிபிசி தனது அருங்காட்சியகத்தில் வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு,  மகளிருக்கு இலவசப் பேருந்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தப் பயணச் சீட்டை மற்ற மாநிலத்தினர் சேகரிக்கின்றனர். இது அவர்களுக்கு வரலாறு. வருகிற 2025 ஆகஸ்டு 17 ம் நாள், மயிலாப்பூர் டைம்ஸ் வார இதழோடு சேர்ந்து, ரானடே நூலகத்தில், சென்னைப் பற்றிய தங்கள் நினைவுகளை கடிதமாக எழுதியிருப்பார்கள் அல்லவா அவற்றை காட்சிபடுத்த உள்ளோம்.

வெளிநாட்டினருக்கு கடிதம் எழுதும் ‘போஸ்ட்கிராசிங்’ எனும்  நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துள்ளோம். நீங்கள் ஐந்து கடிதங்களை வெளிநாட்டினருக்கு எழுதினால், இதற்கான பதிலை, மற்ற நாடுகளில் உள்ள, ஐந்து பேர் உங்களுக்கு, எழுதுவார்கள். www.postcrossing.com என்ற இணைய தளம் உங்களுக்கான முகவரிகளை வழங்கும்.  இதில் முகம் தெரியாதவர்கள் அஞ்சல் அட்டைகளை நமக்கு அனுப்புவார்கள். சென்னை தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.

முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

உலகத்திலேயே மலிவான விலையில் அஞ்சல் அட்டை தரும் நாடு இந்தியா தான். ஒரு அஞ்சல் அட்டையில் நாம் எழுதும் போது என்ன எழுதவேண்டும் என யோசித்து, மனதிற்குள் அதனை எடிட் செய்து எழுதுகிறோம். பழைய கடிதங்கள், கடந்த கால வரலாற்றை, பல நினைவுகளை நமக்குச் செல்லுகின்றன. கடித இலக்கியம் என்று உருவாகி உள்ளது.  வாட்ஸ் அப், டிவிட்டர், முகநூலில் எழுதுபவை ஆவணங்களாக வர வாய்ப்பில்லை. வாட்ஸ் அப் செய்திகளை யாரும் பாதுகாத்து வைப்பதில்லை.

அச்சு நூல்களை எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். தொழில் நுட்பம் வந்த பிறகு இ- புக்,  பிடிஎஃப் போன்றவைகளில் சேகரித்தவைகளை வருடத்திற்கு ஒரு முறையாவது யாரும் திறந்து பார்க்கிறார்களா? என்று தெரியவில்லை. பிளாப்பி, சிடி, மெமரி கார்டு, பென் டிரைவ் என Hard drive இன் வடிவம் மாறிக் கொண்டே உள்ளது. இவையெல்லாம் படிக்கும் பழக்கத்தை குறைக்கின்றன.

வானொலியில் ஒலிபரப்பு செய்ய, பல விதிகள் உள்ளன. ஆனால் முகநூல் போன்றவைகள் எந்த வெளியீட்டு விதிகளும் இல்லாமல் வருகின்றன. அரை நிர்வாண படங்கள் வருகின்றன. சிறுவர், வளரிளம் பருவத்தினருக்கும் இதனால் சிக்கல் வருகிறது.

‘நிர்வாணத்தை காட்சிப்படுத்தக் கூடாது’ என்பது சட்டம். இது அமலாவது இல்லை. இணைய வசதி, இலவச டேடா என்பது மக்களை எந்த நேரமும் இது போன்ற மயக்கங்களிலேயே வைக்கின்றன. ஒரு வேளை இதைத் தான் ஆட்சியாளர்கள் விரும்புகிறார்களோ.. ! வெளியீட்டு அறத்தை (broadcasting ethics) யாரும் கடைபிடிப்பது இல்லை. இதனால் ஏர் டெல், ஜியோ, மார்க் ஜூகர்பெர்க் ( முகநூல் நிறுவனர்) போன்றவர்களே பலனடைகிறார்கள். அரசாங்கத்தை எதிர்த்து ஏதேனும் கேள்வி கேட்டால், மூர்க்கமாகச் சட்டம் பாய்கிறது. ஆனால், இவை சமூகத்தையே சீரழிப்பது பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை.

நேர்காணலும், தொகுப்பும்; பீட்டர் துரைராஜ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time