பேசுவது ஆன்மீகம், செய்வதெல்லாம் பித்தலாட்டம் என்பதற்கான ஒரு சம்பவமே இது!
ஆரம்பகாலத்தில் துக்ளக்கில் ஆடிட்டர் குருமூர்த்தி தன் மனைவியை ஒரு பங்குதாராக ஆக்கியிருந்தார்.
அதனால்,அவர் கணக்கு,வழக்குகள் பார்ப்பதற்கென்று ஒரு அக்கவுண்ட் மேனேஜரை சோவுக்கு பரிந்துரைத்தார். அவர் பெயர் சீனிவாசன்.,குள்ளமாக இருப்பார். துக்ளக் அலுவலகத்தில் அவருக்கென்று ஒரு தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது!
துக்ளக் இதழ் விற்பனை,விளம்பர வருவாய் அனைத்தையும் அவர் தான் கவனித்தார்.அப்போது துக்ளக் அலுவலகம் மயிலாப்பூர் சிஐடி நகரில் இருந்தது. அவர் சர்வ அதிகாரங்களுடன் சுதந்திரமாக செயல்பட்டார்.அவரை சந்திக்க ஆர்.எஸ்.எஸ் ஆட்களெல்லாம் அலுவலகத்திற்கு வருவார்கள். வந்தால் காபி கொடுத்து உபசரிப்பார். சமயங்களில் அவர்களை அழைத்துச் சென்று ராதாகிருஷ்ணன் ரோடு மாரீஸ் ஹோட்டலிலும் செலவழிப்பார். குருமூர்த்திக்கு நெருக்காமனவர் என்பதால் சோவும் எதிலும் தலையிடமாட்டார்.
ஆனால்,அவர் கணக்கு,வழக்குகளில் நிறைய முறைகேடு செய்கிறார் என அரசல்புரசலான செய்திகள் ஆசிரியர் சோவின் காதுகளுக்கு சென்றது. குறிப்பாக அப்போது ஆர்டிஸ்டாக இருந்த கோபியும், நிருபர் காசியும் சோ சார் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், சோ அவர்கள் தன் நண்பர் குருமூர்த்தியே ஒருவரை பரிந்துரைத்திருக்கிறார் என்றால், கண்டிப்பாக அவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகத் தான் இருப்பார் என பெரிதும் நம்பிவிட்டதால் யார் சொன்னதையும் பொருட்படுத்தவில்லை!
பிறகு ஒரு சமயம் ஒரு ஏஜெண்ட் எழுதிய கடிதம் சோவின் நேரடி கவனத்திற்கு வந்தது. அதில் தான் இந்த தேதியில் வங்கியில் பணம் கட்டிவிட்டதாகவும் ஆனால், தான் பணம் தரவில்லை ஆகவே,துக்ளக் இதழ்களை அனுப்பமுடியாது என்று உங்கள் மானேஜர் சொல்கிறார்.எனக்கு நியாயம் வழங்க வேண்டும் என கேட்டு எழுதியிருந்தார். இதை உடனடியாக சீனிவாசனை அழைத்து சோ விசாரித்தார். முதலில் அப்படி,இப்படி சமாளித்த சீனிவாசன் பிறகு தன்னுடைய கவனக்குறைவால் இந்த தவறு நேர்ந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார். சோ எச்சரித்து விட்டுவிட்டார். அதன் பிறகு ஒரு நாள் ஒரு விளம்பரத்திற்காக பணம் கட்டிய ஒருவர் தன் விளம்பரம் ஏன் பிரசுரமாகவில்லை என நேரடியாக அலுவலகம் வந்து சீனிவாசனிடம் சண்டை போட்டார். என்ன சத்தம் வருகிறது என சோ அவர்களே நேரடியாக சீனிவாசன் அறைக்கு வந்த போது விளம்பரம் தந்தவர் எல்லாவற்றையும் விளக்கி கூற, சோ அதிர்ந்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து தன் பால்ய நண்பர் ரங்காச்சாரியாரை அழைத்து, ’’டேய், தயவு செய்து உடனே பாங்கிற்கு லீவு போட்டுவிட்டு இந்த ஆள் வேலையில் சேர்ந்தது முதல்…இன்று வரையிலான எல்லா கணக்குகளையும் கவனமாக சரிபார்த்து சொல்லுடா…’’ன்னு கேட்டார். வங்கியில் வேலைபார்த்து வந்த ரங்காச்சாரி கணக்கு வழக்குகளை ஆராய்ந்து பார்த்து, ’’சுமார் இரண்டரை லட்சரூபாய் விடுப்பட்டிருக்கு’’ என்றதும், சோ ஆடிப் போய்விட்டார். 25 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டரை லட்சம் என்பது மிகப் பெரிய தொகை! சீனிவாசனிடம் கேட்ட போது ஒத்துக் கொண்டார். ஆனால், தற்போது என்னிடம் எதுவும் பணம் இல்லை…எல்லாம் செலவழிந்துவிட்டது எனக் கூறி மன்னிப்பு கேட்டார். இதை போலீசில் புகார் தந்தால் அது குருமூர்த்திக்கும், ஆர்.எஸ்.எஸீக்கும் தர்மசங்கடத்தை தரக் கூடும், ஒரு தனிமனிதன் செய்த தவறால் தனது நட்பும், நல்லுறவும் பாதிக்கலாகாது என்பதால், அந்த நபரை கடுமையாக எச்சரித்து, ”இனிமே இந்த பக்கம் தலைவைத்து படுக்காதே” என திட்டிஅனுப்பிவிட்டார். ஆனால், இந்த சம்பவத்திற்கு குருமூர்த்தி வெட்கப்படவோ,வருத்தப்படவோ இல்லை என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து என்ன காரணத்தாலோ, துக்ளக்கில் குருமூர்த்தியின் மனைவிக்கான பங்குகள் திரும்ப பெறப்பட்டது.
இதை ஏன் நான் நினைவு கூற வேண்டி இருக்கிறது என்றால், அந்த குறிப்பிட்ட நபர் சோவின் மரணத்திற்கு பிறகு குருமூர்த்திக்கு நெருக்கமானவர் என்ற கோதாவில் துக்ளக் அலுவலகத்திற்கெல்லாம் தற்போது சர்வசாதரணமாக வருவதோடு தான் தான் துக்ளக்கை கவனித்து வருவதாகவும் வெளியில் கூறிக் கொண்டு உள்ளார். சோவின் அனுபவம் ரஜினிக்கு ஒரு பாடமாகட்டும் என்பதால் தான்! குருமூர்த்தியின் சிபாரிசால் அர்ஜுன்மூர்த்தியை ரஜினி தன் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமித்திருக்கிறார். குருமூர்த்தி சொன்னார் என்பதற்காக ரஜினி கண்ணை மூடிக் கொண்டு ஒருவரை நம்பிவிடக் கூடாது என எச்சரிக்கத்தான்!
Also read
பாஜகவில் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாமல் இருந்த – சமூக வலைதள செயல்பாடு மற்றும் தொழில் நுட்ப அறிவிற்காக மட்டுமே பயன்பட்டு வந்த – அர்ஜுன் மூர்த்தி ஒரே நாளில் ரஜினியோடு கூட நின்றதில் பெரும் கவனம் பெற்றுவிட்டார். இவர் பற்றி பாஜக வட்டாரத்திலேயே நல்ல பெயர் இல்லை என்பதற்கு கீழ்கண்ட பதிவே சாட்சி! தமிழிசை செளந்திரராஜன் அவர்களுக்கு அந்த கட்சிகாரர்களாலேயே எழுதப்பட்டுள்ள – அர்ஜுன் மூர்த்தி தொடர்பான – ஒன்றை இங்கு கவனப்படுத்துகிறேன்.
டிசம்பர் 24 2019 ல் அர்ஜுன் மூர்த்தியும், அவரது மகள் லட்சுமி தீபாவும் ஆந்திர மாநில ராஜ்பவன் சென்று தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் எடுத்துக் கொண்ட படத்தை ஆந்திர மாநில ஆளுநரே தான் முக நூல் பக்கத்தில் பதிவிடுகிறார். இதற்கு சில எதிர்வினைகள் வருகின்றன. அதில் ஒன்று பூமிகா ரமணி என்பவர் இட்ட பதிவு.
” மேடம் இவர்கள் எல்டி (யெல்டி சாப்ட்காம் பிரைவேட் லிமிடெட்) என்ற பெயரில் ஒரு கம்பனி வைத்திருந்தனர். அந்த கம்பனி ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை. அதனை மூடிவிட்டனர். அந்த கம்பனியின் முதல் ஆர்டரில் மோசடி செய்தனர். தயவு செய்து அவர்களது முழு விபரங்களையும் பரிசோதனை செய்து பாருங்கள். இவருக்கு சென்னையில் பயங்கரமான பெயர் இருக்கிறது. உங்கள் பெயருக்கும், புகழுக்கும் இது போன்ற கன்மேனை ( con.man conning man இருக்கலாம்) ஏன் அங்கீகரிக்கிறீர்கள்?’’ என்று பதிவிட்டுள்ளார்.
மகேஷ் இஷா என்பவர், “அக்கா நீங்க ஏன் இது போன்ற மோசடிப் பேர்வழிகளை அங்கீகரிக்கிறீர்கள்” என்று கேட்டு உள்ளார். அதற்கு தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பதில் கூறியதாக அவரது முக நூல் பதிவில் எதுவும் இல்லை. ஆனால், இனி சுதாரித்துக் கொள்ளலாம் என்று கூட கருதியிருக்கலாம்.
சோ உயிருடன் இருந்திருந்தால், ரஜினிக்கு குருமூர்த்தி போன்றவர்கள் தரும் நிர்பந்தங்களில் இருந்து நிச்சயம் காப்பாற்றி இருப்பார். ஒரு முறை துக்ளக் ஆண்டுவிழாவில் குருமூர்த்தியை அறிமுகம் செய்து வைத்து பேசிய சோ, ‘’பல பிரச்சினைகளில் பாஜக மேலிடம் குருமூர்த்தியை நம்பி விசாரித்து சொல்லக் கேட்பார்கள். ஆனால்,எப்பேர்பட்டவர்களானாலும் அவர்களுக்கு கிளீன் சர்டிபிகேட் தந்துவிடுவார்..’’ என சொல்லி கிண்டலடித்தார். அரங்கமே கைதட்டியது. அதற்கு சில நாட்கள் முன்பு தான் ஒரு குற்றம் சாட்டப்பட்ட ஒரு மோசடி தொழில் அதிபர் குறித்து பாஜக மேலிடத்திற்கு குருமூர்த்தி நற்சான்று பத்திரம் வழங்கியதாக செய்தி வெளியாகி இருந்தது. அது தான் அன்றைய கிண்டலுக்கும்,கைதட்டலுக்கும் காரணம்! தற்போது ரஜினி ஏமாறுவது பற்றி கூட எனக்கு கவலையில்லை.ரஜினி நம்புவதன் மூலம் ரஜினியை நம்பும் பெரும் ரசிகர் கூட்டமும், மக்களும் நாளைய தினம் பெரிதும் பாதிக்கப்படக் கூடும் என்பதால் சொல்லி வைக்கிறேன்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Kadharal pathala… Indha uruttulaam pathaadhu