மரபணு மாற்றுப் பயிர்களும், மத்திய அரசின் தந்திரங்களும்!

-சாவித்திரி கண்ணன்
Cornfield with multiple rows of corn. Green and yellow

இந்தியாவின் மக்கள் தொகையை குறைப்பதற்கான சதித் திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்குமோ.. என்று எண்ணத் தோன்றுகிறது. விஷத்தையே அமிர்தமென்றும், பசுமை அழிப்பையே பசுமை புரட்சி என்றும், மரபணு மாற்றுப் பயிர்களே மானுடத்தின் மீட்பு என்றும் விளம்பரங்கள் செய்யும் அரசுகள் குறித்த விழிப்புணர்வு அலசல்;

மரபணு மாற்றப்பட்ட டி.ஆர்.எஸ் தன் (கமலா), பூசா டிஎஸ்டி ரைஸ் 1 என்கிற இரண்டு நெல் ரகங்களை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு. இதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் மிக அற்பமானவை என்பதால் தான், நமக்கு இப்படித் தோன்றுகிறது.

# இது கூடுதலாக இருபது சதவிகித உற்பத்தி தருமாம்.

# தண்ணீர் கொஞ்சமாக தந்தால் போதுமாம்.

# பருவ சூழல்களை தாக்கு பிடிக்குமாம்.

# அறுவடை காலத்தை 150 நாட்களில் இருந்து 130 நாட்களாக குறைக்கிறதாம்!

இந்த நான்கு காரணங்களும் ‘நாக் அவுட்’ செய்ய வேண்டியவை. ஏனென்றால்,

# பயிர் விளைச்சல் அதிகரிப்பதற்கு மண் வளம், அதில் உள்ள நுண் உயிர்களின் எண்ணிக்கை, அதற்கு தரப்படும் இயற்கையான ஊட்டச் சத்து இவை தான் தேவை. விளைச்சலை 20 சதவிகிதம் என்ன? 50 சதவிகிதமே அசால்ட்டாக அதிகரிக்கச் செய்திடுவாங்க, நம்ம விவசாயிகள்.

# சொட்டு நீர் பாசனம் தொடங்கி தண்ணீர் சிக்கனத்திற்கு எத்தனையோ வழிமுறைகளை விவசாயிகள் பார்த்துட்டாங்க. ஆனால், விவசாயிகள் குறைவான தண்ணீரை பயன்படுத்த நீங்க இப்படி குறுக்கு வழியைத் தேடாமல் முறையான நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துங்க. ஏரி,குளங்களை தூர்வாரி பாசன கட்டமைப்புகளை மேம்படுத்தி உயிர்ப்புடன் வையுங்க.

# எந்தெந்த இடத்திற்கு, எந்தெந்த பருவச் சூழல்களுக்கு என்னென்ன நெல் ரகம் விதைக்கணும் என்பதில் பல பி.எச்.டி வாங்குனவங்க நம்ம விவசாயிகள். அந்த அளவுக்கு வெள்ளம், வறட்சி ஆகியவற்றை தாக்கு பிடிக்கதக்க  பாரம்பரிய நெல் வகைகள் நம்ம கிட்ட இருக்கிறது.

# அப்புறம் அறுவடை நாளை 150 ல் இருந்து 130 ஆக குறைத்திருக்காங்கலாம். ஏன், நம்மகிட்டேயே அறுபதாம் குறுவை இருக்கிறதே. அறுபது நாட்களில் அறுவடை எடுக்க.

இயற்கையின் விதி ஒரு குழந்தை கருவில் இருக்கும் காலம் 10 மாதங்கள் என்றால், அது முழுமை அடைந்தால் தான் ஆரோக்கியம். குறை பிரசவம் குறைபாடுடையதே. இதை ஆராய்ச்சி செய்து குறைப்பது சாதனையா? சதியா?

இப்படி சில அற்ப காரணங்களை சொல்லி, இந்திய மக்களையே ஆபத்தில் தள்ளும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை திணிக்கிறாங்க.

மரபணு மாற்ற நெல் ரகங்கள் அறிமுக நிகழ்வு

இந்த விதைகளால் நம் மண்வளம் கெட்டு, மலடாகி, கெட்டிதட்டிப் போகும்.

”இந்த பயிர்களை பூச்சிகள் அணுகாது. அப்படி அணுகிச் சாப்பிட்டால் அது அழிந்து விடும்” என்கிறீர்கள்.  இவற்றை பயிரிடும் நிலங்களில் களைகள் வளராமல் களைக் கொல்லியாகவும் செயல்படும்’’ என்கிறீர்கள்.

ஆக, பூச்சிகள் கூட உண்ண முடியாத விஷத்தை –  களைகள் என்று சொல்லக் கூடிய மூலிகளை செடிகளைக் கூட தலை எடுக்கவிடாமல் அழித்துவிடக் கூடிய நச்சுப் பயிரை – தான் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள் என்பது உங்கள் வாக்குமூலத்திலேயே தெளிவாகிறது.

அப்படியானால், ‘மக்கள் தொகையை குறைக்கத் தான் இந்த மரபணு மாற்றப்பட்ட நெல் ரகங்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்’ என்பது தானே உண்மை.

மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்சை முதலில் எலிகளுக்கு கொடுத்த போது, எலிகளின் விதைப்பை சுருங்கிப் போய்விட்டதையும், கோழிகளுக்கு கொடுத்த போது அந்தக் கோழிகள் மூன்று மாதத்தில் இறந்து போனதையும் நன்கு அறிந்த பிறகு தானே, கனஜோராக அறிமுகம் செய்தார்கள்! ( ஆதாரம்; Genetic Roulette – the gample of our life –author; Jeffrey m.smith)

மக்காச் சோளம், கத்திரிக்காய், மிளகாய், கடுகு.. எனத் தொடங்கி தற்போது இந்திய மக்களின் ஆதார உணவான அரிசியிலேயே கை வைக்கிறார்கள்! நமது நாட்டின் விதைச் சந்தையை எடுத்து வெளி நாட்டு நிறுவனங்களிடம் முற்ற, முழுக்க ஒப்படைக்கும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள் போலும்.

அதனால் தான் இது போன்ற உண்மைகள் அம்பலப்பட்டுவிடக்கூடாதென்று இந்தியாவில் மரபணு மாற்று விதைகளை ஆய்வு செய்வதற்குரிய ஆய்வுக் கூடங்களே  கூடாது  என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெனட்ரிக் என்ஜினியரிங் அத்தாரிட்டி கவுன்சில் தெளிவாக செயல்படுகிறது.

இது போன்ற மரபணு மாற்று பயிர்களுக்கு உள்ள எதிர்ப்புகளைக் கொண்டு பின் வாங்குவது போல பாவனை செய்துவிட்டு , பின் வாசல் வழியாக அவற்றை புழக்கத்தில் விடுவதில் கெட்டிக்கார்களாக உள்ளனர், நமது ஆட்சியாளர்கள்.

மதுரை கத்தரி,  பொள்ளாச்சி கத்தரி, பாலூர் கத்தரி, கிள்ளிக்குளம் கத்தரி ஆகிய நான்கு கத்தரி ரகங்களிலும் பிடி கத்தரி ரகங்களை உருவாக்கி  எதிர்ப்பு காரணமாக ஆய்வு கூடத்தில் வைத்துவிட்டதாக, அண்டப் புளுகை அவிழ்த்துவிட்டு, அவற்றை அப்படியே வங்க தேச ஏழை விவசாயிகளிடம் தந்து, அப்படியே பரவலாக்கி இந்தியாவிலும் தற்போது நீக்கமற நிரவிவிட்டீர்களே..!

டெல்லி பல்கலைக்கழகத்தின் மூலம் ஆய்வு செய்து வெளியிடப்பட்ட மரபணு மாற்றப்பட்ட கடுகு விதையை கூட எதிர்த்து போராடினோம். ஆனால், தடுக்க முடிந்ததா?

ஏற்கனவே, இவர்கள் அறிமுகப்படுத்திய பி.டி பருத்தி இந்தியாவில் பல லட்சம் விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிவிட்டதோடு, மண் வளத்தையும் பாழாக்கிவிட்டது. அன்றைக்கு  ஆட்சியாளர்கள் அவிழ்த்து விட்ட பொய்கள் எல்லாம் அம்பலப்பட்டு, இன்றைக்கு வட இந்தியாவில் பருத்தி விளைச்சலே வீழ்ந்துபட்டு  இறக்குமதி செய்யும் கட்டாயத்திற்கு தேசம் தள்ளப்பட்டுள்ளது.

வேளாண் உற்பத்தி இரு மடங்கு உயர வேண்டும் என புகுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால் இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு விளை நிலம் மலடானது. அதன் தொடர்ச்சியாக நஞ்சான விதைகளும், அதிகரித்த  இரசாயனஉரப் பயன்பாடுகளும்.. பூச்சிமருந்துகளும்…உணவை  நஞ்சாக்கி, மக்களை நோயாளிகளாக்கி,  இந்திய சுற்றுச் சூழலையும்  கேடாக்கியது தான் நாம் கண்ட பலன். தற்போது வட இந்திய மாநிலங்கள், குறிப்பாக ஹரியானா, டெல்லி போன்றவை சந்தித்து வரும் காற்று மாசுபாடு பிரச்சைனைக்கு வித்திட்டது பசுமை புரட்சி தானே. நமது பாரம்பரிய விவசாயத்தில் நெல் சாகுபடியில் அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என்ற மரபு இயல்பாக இருந்ததால் விவசாயத்தில் வேஸ்டேஜ் என்று எதுவும் இல்லை. இன்று மாடும் இல்லை, அடிப் பகுதியை காட்டுக்கு விடும் மரபும் இல்லை, ரசாயன உரப் பயன்பாட்டால். ஆகவே விவசாய அறுவடை முடிந்து எரிப்பு மூலம் கழிவை அழிக்கிறார்கள். அது தீர்க்க முடியாத காற்று மாசுபாட்டு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள்; பசுமை புரட்சியின் விளைவு

அரிசி பற்றாகுறையை போக்க, உற்பத்தியை அதிகரிக்க என்று சொல்லி அறிமுகமான பசுமை புரட்சியை உற்பத்தி அதிகரித்து, நிலைமை சமன்பாடானவுடன் கைவிட்டு இருந்தால், இன்றைக்கு மண் வளமும் பாழ்பட்டிருக்காது.,மக்கள் உடல் நலனும் சீர்கெட்டு இருக்காது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் தேவைக்கும் அதிகமாக அரிசி உற்பத்தியாகி பல லட்சம் டன்கள் குடோவுன்களில் அடுக்கி வைக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் ஆண்டு தோறும் அழிகின்றன. ஆன போதிலும், உற்பத்தியை அதிகரிக்க நவீன விஞ்ஞானத்தின் துணையுடன் நச்சு விதைகளை  அறிமுகப்படுத்துகிறார்கள் என்றால், இவர்கள் யாருக்காக நம்மை பணயம் வைத்து சூதாடுகிறார்கள் என நாம் அறிந்து சுதாரித்துக் கொண்டால், நன்று.

மேலும், இதை எதிர்த்து இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது தொடர்பான தீர்ப்பு நிலுவையில் உள்ளது. மத்திய அரசு மரபணு மாற்று தொழில் நுட்பத்துக்கு ஆதரவான கருத்தை உச்ச நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்துள்ளது என்றால், இவர்களின் கெடு நோக்கம் எப்படிப்பட்டது என யோசிக்க வேண்டும்.

தொடர்ந்து மரபணு மாற்று விதைகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். ஆனால், திராவிட மாடல் தமிழ் நாட்டரசோ, காவிரி டெல்டாவில் இதனைப் பயன்படுத்தி பயிரிடுவதற்கும், ஆய்வுகள் மேற்கொள்வதற்கும், ஒப்பந்தம் செய்துள்ளதாக வந்திருக்கிற செய்தி  பேரதிர்ச்சியாக உள்ளது.

இது குறித்து மாநில முதலமைச்சர் ஸ்டாலின் மெளனத்தையே பதிலாக்காமல் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time