மக்களின் நம்பிக்கைக்கு தன்னை தகுதிபடுத்திக் கொள்வாரா?

-சாவித்திரி கண்ணன்

தமிழகத்தையே நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது தவெக மதுரை மாநாடு. விஜய்யின் அபாரமான மக்கள் செல்வாக்கு கேள்விக்கிடமில்லாமல்  நிருபணமாகியுள்ளது. தன்னெழுச்சியாக வந்த மக்கள் பெரும் திரள் ஒரு அரசியல் மாற்றத்தின் தேவையை உறுதிபடுத்துகிறது. அந்த தேவைக்கு தன்னை தகவமைத்துக் கொள்வாரா விஜய்? என்பதே கேள்வி?

தற்போதைய தமிழகத்தில் பணம் கொடுக்காமல் இவ்வளவு பெரும் மக்கள் திரளை ஈர்க்கும் இன்னொரு அரசியல் தலைவர் கிடையாது என்பதல்ல, இதில் கால்வாசி கூட்டத்தைக் கூட காசு கொடுக்காமல் வரவழைக்கும் தலைவர்கள் இல்லை.

மாலை நடக்கும் கூட்டத்திற்கு அதிகாலை தொடங்கி, தொண்டர்கள் சாரி,சாரியாக வருவது என்பதெல்லாம் இளைஞர்கள் ஒரு அரசியல் மாற்றத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கி உள்ளதைத் தான் காட்டுகிறது. அதுவும் இளம் பெண்கள் அணி அணியாக திரண்டு வந்ததும், குடும்பங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்திருந்ததும் புதிய அரசியலுக்கான தேடல் மக்களிடம்  இருப்பதைத் தான் காட்டுகிறது.

ஒரு நடிகரை நம்பி இவ்வளவு கூட்டம் கூடுகிறதே.. என்ற கவலை பலரையும் போல எனக்கும் இருக்கிறது.

அதே சமயம் இந்த தேவைக்கும், தேடலுக்கும் தற்போதைய தமிழகத் தலைவர்கள் யாருமே – கொள்கைத் தெளிவு, அனுபவ ஞானம் இருந்த போதிலும் – மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கதக்க வகையில் நடக்கவில்லை.. என்ற கசப்பான யதார்த்ததையும் நாம் மறுதலிக்க முடியாது.

சரி, விஜய்யின் பேச்சுக்கு வருவோம்.

ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பதை போல, அவரது உரை அவரது அரசியல் ஆலோசகர்களால் வடிவமைத்து தரப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்,

# திமுக எதிர்ப்பை வலுவாக வைப்பதன் மூலம், திமுக எதிர்ப்பு ஓட்டுகள் அதிமுக – பாஜக கூட்டணிக்கு போவதை தடுக்கிறார்.

# அதே சமயம் மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர், பாஜக ஒரு பாசிச சக்தி, கொள்கை எதிரி என்றெல்லாம் மீண்டும், மீண்டும் அழுத்தமாக சொல்வதன் மூலமும், திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்பதையும் சொல்வதால், திமுக கூட்டணியின் பாஜக எதிர்ப்பு ஓட்டையும் கணிசமாக அறுவடை செய்ய வாய்ப்புள்ளது.

# ஊழல் எதிர்ப்பு, தமிழர் நலன் ஆகியவற்றைப் பேசி,  கூட்டம் சேர்த்து காட்டி அண்டர்கிவுண்ட் டீலிங் செய்வது..என சீமானை டார்கெட் செய்ததன் மூலம் நாம் தமிழர் வாக்குகளையும் கணிசமாக சிதறடிக்கலாம்.

# எம்.ஜி.ஆரின் புகழ்பாடி அவரது வாரிசாக தன்னை காட்டுவதன் மூலம், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளை பதம் பார்க்கிறார்.

# இவ்வளவையும் செய்ததோடு நிறுத்தாமல், விஜயகாந்தின் மண்ணில் நிற்பதை உணர்ச்சிபூர்வமாகச் சொல்லி, அவருடனான தன் உறவு பிணைப்பை சொல்லி, தேமுதிக வாக்கு வங்கியையும் தேய்த்து எடுக்கிறார்.

# திமுக ஆட்சியின் குறைகளை, பலவீனங்களை சுட்டிக் காட்டியது, பாஜகவுடன் நேரடியாக அதிமுகவும், மறைமுகமாக திமுகவும் ஊழல் காரணமாக அடிபணிந்து போவதையும் கூறுவதன் மூலம் உண்மையான பாஜக எதிர்ப்பாளனாக தன்னை நிறுவப் பார்க்கிறார்.

எல்லாம் சரி, முதலமைச்சர் ஸ்டாலினை இது வரை ”சார்” என்றே கூறி வந்தவர் ”அங்கிள்” என்று மீண்டும், மீண்டும் அழுத்தம் தந்து சொல்லியதை புரிந்து கொள்ள முடியவில்லை.

அடுத்ததாக இவ்வளவு பெரிய மக்கள் செல்வாக்கு இருக்கும் ஒருவர், அதற்கேற்ப  தன்னை தகவமைத்துக் கொள்ள நேரத்தையும், உழைப்பையும் தராமல் இன்னும் தாமதம் காட்டுவதை புரிந்து கொள்ள முடியவில்லை.

விஜய்யின் தவெக கட்சி பற்றி சமீப காலமாக அவரது கட்சியில் உள்ளவர்களும், அந்தக் கட்சியில் தொடர முடியாமல் வெகுவேகமாக வெளியேறி வருபவர்களும் பெற்ற கசப்பு அனுபவங்கள் விஜய் மீது பல கேள்விகளை எழுப்புகிறது.

முக்கிய நிர்வாகிகளே விஜய்யை சந்திக்கவே முடிவதில்லை.

புஸ்லி ஆனந்த் ஒருவரோடு மட்டுமே விஜய் தொடர்பில் உள்ளார்.

மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் கட்சி பொறுப்புக்கு வருபவர்கள் கணிசமாக லஞ்சம் கொடுத்தே கட்சி பொறுப்புகளை பெற முடிகிறது.

பொறுப்புக்கு வருபவர்கள் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை. ‘புஸ்லி ஆனந்திடம் பெட்டி பாம்பாக அடங்கி நடக்கும் வரை அங்கு தொடரலாம்’ என்பதே யதார்த்த நிலையாம்!

சந்திக்கவே முடியாத விஜய்யை நம்புவதா? ‘நானே சகலமும்’ என்பதாக உள்ள புஸ்லி ஆனந்தை நம்புவதா? என்ற குழப்பம் அடிமட்ட நிர்வாகிகளிடம் பரவலாக காணப்படுகிறது. இதனால், புஸ்லி ஆனந்தை விழாவுக்கு அழைத்த நிர்வாகி ஒருவர், ‘வருங்கால முதல்வரே வருக’ என்று போஸ்டர் ஒட்டும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டுள்ளது.

மேற்படி பிரச்சினைகளுக்கு விஜய் தீர்வு காணாத வரை, விஜய்யின் செல்வாக்கு வீழலுக்கு இரைத்த நீராகலாம். சினிமாவுக்கு அவர் தந்த நேரத்தை காட்டிலும், அதிக நேரத்தை அரசியலுக்கு முற்ற முழுக்க ஒதுக்கி, உரியவர்கள் எளிதாக சந்திக்கும் நிலையை உருவாக்கிக் கொள்ளவும், எல்லாவற்றுக்கும் ஒருவரை சார்ந்திருக்காமல் தானே நேரடியாக உண்மையான தொண்டர்களிடம், நிர்வாகிகளிடம் தொடர்பில் இருக்கவும் முடிந்தால் மட்டுமே அவர் நினைத்த இலக்கை அடைய முடியும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time