இந்த மசோதா, யாரைப் பதம் பார்க்க தீட்டப்பட்ட கத்தி?

உன்னதமான நோக்கம் சட்டத்தில் இருக்கலாம். ஆனால், அதைக் கொண்டு வருபவர்களோ, இந்தியாவின் மிகப் பெரிய கிரிமினல் நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்கள், சிறை சென்றவர்கள்! ஏகப்பட்ட கிரிமினல்களை கட்சியின் வாஷிங் மெஷினில் போட்டு சுத்தப்படுத்தியதாக சொன்னவர்கள்! இனி என்னவாகும் இந்தியாவின் எதிர்கால அரசியல்;

பிரதமர் மற்றும் முதல்வர்களை நீக்கம் செய்யும் மசோதாவை – நீதி மன்றங்கள் குற்றங்களை விசாரித்து தண்டிக்கு முன்னரே, 30 நாட்கள் பிணையின்றி சிறை வைக்கப்பட்டால் , 31வது நாள் பதவி நீக்கம் செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவை- உள்துறை அமைச்சர் அமீத் ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

Vote Chori – வாக்கு திருட்டு க்கு எதிரான இயக்கம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பீகார் வீதிகளில் நடை பெறுவதும், அதன் தாக்கம் நாடு முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதும் மோடியை வெகுவாக பாதித்துள்ளது.

இதை மடைமாற்ற பல அஸ்திரங்களை பிரயோகித்த மோடி கும்பல் தங்களது அம்பறாத்துணியில் இருந்து , கடைசி ஆயுதமாக, “ அரசியலில் நன்னெறியை நிலைநாட்டும்” இந்த சட்ட மசோதாவை அறிமுகம் செய்துள்ளது.

அவசரம் அவசரமாக நன்னெறி பஜனை பாடவேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளதற்கு காரணம், வோட்டு சோரி இயக்கமும் அது மக்கள் மத்தியில் ஏற்படுத்திய எழுச்சியும் தான் அன்றி, வேறொன்றுமில்லை.

 

இந்த சட்டத்தின் மூலம் எதிர் கட்சிகளின் மாநில முதலமைச்சர்களையும், அமைச்சர்களையும் ஏதாவது ஒரு வழக்கில் ஜோடித்து சிறைக்கு அனுப்பி பதவியிலிருந்து நீக்கு முடியும். இது ஒருவகை அதிகார துஷ்பிரயோகமாகும் என்று எதிர்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன. மாநில அரசைக் கலைக்கும் சட்டப்பிரிவு 356-ன் புது வடிவமாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

ஊரே காரி துப்பும் தேர்தல் பத்திர மோசடிகளை சட்டமாக்கியது மோடி கும்பல் தான்! ஊழல்வாதிகளையும், கிரிமினல்களையும் தங்களது கட்சியில் இணைத்து பாஜக வாஷிங் மிஷின் மூலம் புனிதப்படுத்தியதாக காட்டியதும் மோடி கும்பல் தான்!

எதிர்கட்சி ஊழல்வாதிகள் பாஜகவில் சேர்ந்தால், அனைத்து வழக்குகளும் வாபஸாகி, விடுவிக்கபடுவார்கள்!

சிபிஐ மற்றும் இ டி போன்ற அமைப்புகளை ஏவி, எதிர் கட்சியினர் மீது பொய் வழக்குகள் போடுவதும் மோடி கும்பல் தான்!

பொய் வழக்குகள் நீண்ட காலம் நடந்த பின்னரும் நிரூபிக்க முடியாமல்  உயர்நீதி, உச்சநீதி மன்றங்களிடம் குட்டு வாங்கி வருவதும் மோடி கும்பல் தான்!

ஆளுங்கும்பலின் அரசியல் நலன்களை தேசத்தின் நலன்களென பொய்யுரைப்பதும் மோடி கும்பல் தான்!

தேர்தல்களை நூதன முறையில் திருடி, எப்போதும் வெற்றி பெறும் கலையை சட்டமாக்குவதும் மோடி கும்பல் தான்!

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் ஹேமந்த் சோரென், துணை முதல்வர் மனீஷ் சிசோடியா போன்றோரை கைது செய்ததும் மோடி அரசு தான், அமைச்சர் சத்யேந்திர ஜெயின் இரண்டு வருடம் சிறைவாசத்திற்குப் பிறகு “நிரபராதியாக” விடுதலை ஆனதும், இந்த காலத்தில் தான்.

அஸ்ஸாம் முதல்வர், ஹிமந்தா பிஸ்வா, மே.வங்க பாஜக தலைவர் – முன்னாள் திரிணாமுல் கட்சி தலைவர்- சுவேந்து அதிகாரி, மகாராஷ்டிர துணை முதல்வர்அஜீத் பவார் போன்றோர் மீதான வழக்குகள் நீர்த்து போக வைப்பதும் மோடி அரசின் மகிமை தான்,

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்ட பின்னரும் பதவியில் நீடித்தனர் என்பது சட்டங்கள் நேர்மையாக பிரயோகிக்காதனால் ஏற்பட்ட சிக்கலே ஒழிய, அதற்கான (அவர்களை பதவியிறக்குவதற்கு) வடிகால் இத்தகைய பாரபட்சமான அதிகார குவிப்பு அல்ல.

இத்தனை அட்டூழியங்களையும் அரங்கேற்றி இன்று அம்பலப்பட்டு நிற்கும் மோடி கும்பல் இப்பொழுது “அரசியல்வாதிகளுக்கான நன்னெறிகளை” போதிக்க முன் வருவது வேடிக்கை தான்.

படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பதை போல அரசியலில் நன்னெறி போதனை செய்யும் இந்த யோக்கியர்கள் குற்றங்கள் நிரூபிக்க பட வேண்டும் என்ற குற்றவியல் சட்ட அடிப்படை விதியை மறந்து போனதில் வியப்பில்லை!

இத்தகைய அரசியல் சட்ட திருத்தம் இந்திய அரசை ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றுகிறது என்ற குற்றச்சாட்டை யாரால் மறுக்க இயலும்?

பாராளுமன்ற ஜனநாயக முறையை சிதைத்து, மன்னராட்சியில் நடைபெறுவது போல் ஆளுங்கும்பலுக்கு பிடிக்காத முதல்வர்களை , அமைச்சர்களை அப்புறப்படுத்த இச்சட்டதிருத்தம் வழி செய்கிறது என்பது ராகுலின் குற்றச்சாட்டு மட்டுமல்ல, நாட்டு மக்களின் குற்றச்சாட்டும் அது தான்.

அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள மோடி தனது ஹிட்லரிய முகத்தை காட்டி உள்ளார், அரசியல் சாசனத்தை பலி கொடுத்து மோடி-ஷா கும்பலின் அதிகாரத்தை வலுப்படுத்துவதே இச் சட்டத்தின் நோக்கம் என மே.வங்க முதல்வர் ம்மதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை இச்சட்ட திருத்தத்தின் மூலம் பொய் வழக்குகள் புனைந்து முடக்க பாஜக முயலுகிறது என்று தி மு க தலைவரும் முதல்வருமான மு.க. ஸடாலின் கண்டித்துள்ளார்.

ஓவைசி உட்பட அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் இந்த மோசமான சட்ட திருத்தத்தை கண்டித்து உள்ளனர்.

இந்த புதிய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்கட்சியினர் கடுமையாக பேசினர். இதில் பேசிய ஏஐஎம்ஐஎம் உறுப்பினர் அசாதுதின் ஓவைசி, “ இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன். இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசுக்கு உள்ள அதிகாரத்தை குறை மதிப்புக்கு உள்ளாக்குகிறது.அற்பமான குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில், நிர்வாக அமைப்புகள் நீதிபதியாகவும். தண்டிப்பவராகவும் மாற இது வழிவகை செய்கிறது. காவல் அரசை உருவாக்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது அடிக்கப்படும் மரண ஆணி. இந்த நாட்டை காவல் அரசாக மாற்றுவதற்காக, இந்திய அரசியலமைப்பு திருத்தப்படுகிறது” என்றார்.

ஆளுங்கும்பலின் கூட்டாளிகளான தெலுகு தேச கட்சியும், ஐக்கிய ஜனதா தள் கட்சியும் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் மழுப்பலான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

எதிர்கட்சிகளை விட இச்சட்ட திருத்தம் கூட்டாளிகளான தெலுகு தேசம் , ஐக்கிய தனதா தள், சிராக் பஸ்வானின் கட்சி , ஷிண்டே மற்றும் அஜீத் பவாரின் கட்சியினரை மறைமுகமாக அல்ல அப்பட்டமாகவே மிரட்டுகிறது எனலாம்.

குடியரசு துணை தலைவர் தேர்தலில் மோடி கும்பலின் வேட்பாளருக்கெதிராக ஆளுங்கட்சியினரோ அல்லது கூட்டணி கட்சியினரோ அல்லது ஞான ஸ்நானம் பெற்ற உத்தமர்களோ யார் வாக்களித்தாலும் நடப்பதே வேறு என்பது தான் இச்சட்ட திருத்தத்தின் செய்தி !

முப்பது நாட்கள் சிறையிலடைக்கப்பட்ட அமைச்சர்களை , முதல்வர்களை கவர்னர் நீக்கலாம் என்று கூறும் இந்த சட்டம், பிரதமர் மீதும் இது போன்று குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறுகிறது.

இதை இயற்றியவர்கள் இந்திய மக்களை மூடர்கள் என எண்ணுகின்றனரா? இவர்கள் போடும் நன்னடத்தை நாடகமெல்லாம் இன்னும் எடுபடும் என்று எண்ணுகிறார்களா இந்த அறிவாளிகள்?

இதற்கு பதிலுரைப்பது போல் இன்னொரு செய்தி இன்றைய நாளிதழ்களில் வந்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஆளுனரின் தயவில் தான் நீடிக்க வேண்டுமா? என உச்சநீதி மன்றம் மத்திய அரசைப் பார்த்து கேள்வி எழுப்பி உள்ளது என்ற செய்தி தான் அது!

இதன் மூலம் எவ்வாறு அதிகாரங்களை தங்கள் கையில் குவித்து , மிரட்டியும், அச்சுறுத்தியும் காரியங்களை சாதிக்கும் சதிகாரக் கும்பலாக மோடி அரசு மாறியுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . ஜனநாயக நடைமுறைக்கும், சட்டத்தின் ஆட்சி முறைக்கும் இத் திருத்தம் சாவுமணி அடிப்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் .

ஆளுனர்களும், காவல் துறையினரும் ஏன் சபாநாயகர்களும் கூட நடுநிலையாகவே நடக்க வேண்டும் என சட்டம் எதிர்பார்த்தாலும் நடைமுறையில் அவர்கள் அவ்வாறில்லை என்பது கண்கூடு என்று நேற்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது .

ஆளுனர்கள், காவலர்கள், சபாநாயகர்களின் நடத்தையின் மீது, உச்ச நீதிமன்றத்தை போலவே, நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை வெகுவாக குறைந்து போயுள்ளதை யாரும் மறுக்க முடியுமா?

இந்த நிலையில் , தனக்கு எதிராக விசாரணை குழு முன்னர் சாட்சி அளித்த காரணத்திற்காக பொய் வழக்கு போட்டு ஆயுள் முழுமைக்கும் சிறையிலடைக்கப்பட்ட  பி எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்,

ரஃபேல் வழக்கை விசாரிக்க துணிவார் என்ற நினைப்பில் சிபிஐ ன் தலைமை இயக்குனர் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்ட அலோக் வர்மா, அடிமை என நினைத்து பதவியில் அமர்த்தப்பட்ட ஜெகதீப் தங்கர் லேசாக முணுமுணுத்ததால் துணை குடியரசு தலைவர் என்ற உயர்ந்த அரசியல் சாசன பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டது,

கொல்ல சதி செய்தனர் என இர்ஷத் ஜகான், பிரனேஷ் பிள்ளைஜீஷன் ஜோஹர், அம்ஐத் அலி ராணா, ஆகியோரை என் கவுண்டர் செய்தது,

குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹிரேண் பாண்டியாவை கொலை செய்த மர்மம்அதை தொடர்ந்த சொராபுதீன், பிரஜாபதி எண்கவுண்டர் படுகொலை,

அதை தொடர்ந்த அமீத் ஷாவின் கைதுஅவரது வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் , மற்றொரு நீதிபதி முன் வழக்கிலிருந்து அமீத் ஷா விடுவிப்பு போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் பிரதமர் மோடி மீது ஏன் அவர் முதல்வராக இருந்த போதே அவர் மீது ‘கை நீட்ட’ முடியாது என்ற யதார்த்த சூழலை வெளிபடுத்துகிறது அல்லவா? இந்த நிலைமையில் எந்த காவல் அதிகாரிக்கு பிரதமரை கைது செய்ய தைரியம் வரும் ?

அவரை விமர்சனம் செய்தாலே, கார்ட்டூன் வரைந்தாலே, கருத்து தெரிவித்தாலே கைது செயது சிறையிலடைக்க அரசு முயலும் பொழுது, இணைய தளத்தில் ஏவப்பட்ட ட்ரோல் ஓநாய்கள் கடித்து குதறும் பொழுது, நீதி மன்றங்களும் கூட விமர்சிப்பவரின் தேசபக்தி ஜாதகத்தை அலசும் பொழுது,

எந்த காவல் அதிகாரி கைது செய்வார்? சட்ட திருத்தம் என்பது கண்ணா மூச்சி ஆட்டமா?என அமீத் ஷாவை நோக்கி நீங்கள் கேள்வி எழுப்பலாம் , தவறில்லை .

ஆனால், பிரதமரை கைது செய்வது என்ற நடைமுறை சாத்தியமில்லாத ஒரு கூறையும், மோடி கும்பலால் முதல்வர் மற்றும் அமைச்சர்களை கைது செய்யப்பட முடியும் என்ற நிலையுடன் இணைத்து , இரண்டையும் சம்மாக பாவித்து சட்டமியற்றுவதே மிகப் பெரிய மோசடி அல்லவா?

இத்தகைய மோசடி சட்ட திருத்தத்திற்கு , மோடியின் பக்த கோடிகள் வேண்டுமானால் ஆதரவு கொடுக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். உண்மையில் இந்த திருத்தம் மோடி பக்தர்களுக்கு புது தெம்பை கொடுப்பதற்காகவே இயற்றப்படுகிறது. இதோடுகூட மோடி தலைமையை சகிக்க முடியாத கட்சியினருக்கும், கூட்டாளிகளுக்கும் விடப்படும் எச்சரிக்கையாகவே இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பது மிகையல்ல.

ஏமாறாதே, ஏமாறாதே!

ஏமாற்றதே ஏமாற்றாதே…!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time