திமுகவிற்கு சரி நிகர் போட்டியா தவெக?

-சாவித்திரி கண்ணன்

2026  சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், தவெகவிற்கும் இடையே தான் போட்டி என்று விஜய் கூறி இருக்கிறார். இது விவாதிக்கவே தகுதியற்ற பேச்சு என்ற போதிலும், திமுகவின் பலமான நிர்வாக கட்டமைப்பையும், ஸ்டாலினின் கட்டுக் கோப்பான கட்சி நிர்வாக ஆளுமையையும் ஒப்பிடும் போது விஜய்யின் தவெக எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை பார்ப்போம்;

இதைவிட சிறுபிள்ளைத்தனமான பேச்சு இருக்க முடியுமா?

வரும் தேர்தலில் திமுகவிற்கும், தவெகவிற்கும் இடையே மட்டுமே போட்டி என்று விஜய் சொல்லியதைத் தான் சொல்கிறேன்.

கடந்த இரண்டு நாட்களாக அறம் வாசகர்கள் சிலர், விஜய்யின் இந்த ஓப்பிட்டலை எப்படி பார்க்கிறீர்கள்..? என கேட்டனர், அதற்குத் தான் மேற்படி பதிலைச் சொன்னேன்.

இங்கே அது குறித்து சற்று விரிவாகவே எழுதலாம் என நினைக்கிறேன்.

விஜய்க்கு கூடிய கூட்டம் பிரம்மாண்டமானது, எழுச்சியானது அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இந்த கூட்டம் மற்றும் எழுச்சியை வைத்து திமுகவுக்கு நிகரான போட்டியாளராக தன்னை கட்டமைப்பதும், அதிமுகவை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் பேசுவதும் அறியாமை.

திமுகவின் நிர்வாக கட்டமைப்பு பலத்தில் பத்தில் ஒரு பங்கு கூட தவெகவில் இல்லை என்பதே யதார்த்தம். கட்சி நிர்வாக கட்டமைப்பு விவகாரங்களில் கலைஞரை போலவே ஸ்டாலினும் அதி திறமைசாலி.

திமுகவின் இளைஞர் அணித் தலைவர் கால கட்டம் தொடங்கி, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டாலின் பட்டிதொட்டியெங்கும் சுற்றி  தமிழகம் முழுமையும் உள்ள கட்சி நிர்வாகிகளோடு நேரடித் தொடர்பில் இருப்பவர்.

ஸ்டாலின் அவர்களின் ஆட்சி நிர்வாகம் குறித்து எனக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. அதை நான் தொடர்ந்து எழுதியும் வருகிறேன். அதே சமயம் கட்சி நிர்வாகத்தில் அவரை அடிச்சிக்க தற்போதைக்கு யாருமே இல்லை.

அதற்கு காரணம், அவரது அயராத உழைப்பு. 1980 கள் தொடங்கி அதைக் கண்கூடாக கண்டு வருகிறேன். அந்த காலகட்டங்களில் சென்னையில் கட்சியின் சிறிய நிர்வாகிகள், தொண்டர்களின் வீட்டு சுக துக்கங்களில் கூட அவரது ‘பிரசன்ஸ்’ தவறாமல் இருக்கும். அப்போது ஒரு ‘போட்டோ ஜர்னலிஸ்டாக’ அவரது பல நிகழ்வை புகைப்படம் எடுத்துள்ளேன்.

இப்படி இது வரை அவர் பங்கெடுத்த இது போன்ற நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இவை எல்லாம் அவருக்கு கட்சி குடும்பங்களிடம் எத்தகையை பிணைப்பை உருவாக்கி வலுப்படுத்தி வருகிறது… என்று எண்ணி ஆச்சரியப்பட்டுள்ளேன். இப்போதும் கூட மாவட்டவாரியாக விசிட் செய்து கட்சி நிர்வாகிகளிடம் பேசி வருகிறார்.

விஜய் நிலைமை என்ன..?

மாநாடு நடந்த அன்றே நான் அறத்தில் எழுதிய கட்டுரையின் ஒரு சில பகுதிகளை இங்கு தருகிறேன்;

விஜய்யின் தவெக கட்சி பற்றி சமீப காலமாக அவரது கட்சியினரும், அந்தக் கட்சியில்  இருந்து வேகமாக வெளியேறி வருபவர்களும் சொல்லும் கசப்பு அனுபவங்கள் விஜய் மீது பல கேள்விகளை எழுப்புகிறது.

# முக்கிய நிர்வாகிகளே விஜய்யை சந்திக்கவே முடிவதில்லை.

# புஸ்ஸி ஆனந்த் ஒருவரோடு மட்டுமே விஜய் தொடர்பில் உள்ளார்.

# மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் கட்சி பொறுப்புக்கு வருபவர்கள் புஸ்ஸி ஆனந்திற்கு லட்சங்களில் லஞ்சம் கொடுத்தே கட்சி பொறுப்புகளை பெற முடிகிறது.

# பொறுப்புக்கு வருபவர்கள் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை. சந்திக்கவே முடியாத விஜய்யை நம்புவதா? ‘நானே சகலமும்’ என்பதாக உள்ள புஸ்லி ஆனந்தை நம்புவதா? என்ற குழப்பம் அடிமட்ட நிர்வாகிகளிடம் பரவலாக காணப்படுகிறது என எழுதி இருந்தேன்.

ஆக, கட்சி அமைப்பையே கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியாமல், அதில் பெரிய தோல்வியை பெற்றுள்ள விஜய், திமுகவிற்கு நிகராகவும், அதிமுகவிற்கு மேலாகவும் தன் இயக்கத்தை கருதுவது அறியாமையன்றி வேறல்ல.

எம்ஜிஆர் ஆட்சியில் இந்த தமிழகம் அடைந்த பின்னடைவுகளை, ஜனநாயக மீறல்களை பலமுறை நான் கவனப்படுத்தி உள்ளேன். தமிழகத்தை முதன் முதலாக ஒரு போலீஸ் ஸ்டேட்டாக உருவாக்கி காட்டியவர் எம்.ஜி.ஆர் தான். மக்கள் தலைவராகவும், கருணை வள்ளலாகவும் பார்க்கப்பட்ட அவர், ஒரு பாசிஸ்டாகவும் இருந்தை தமிழகம் கண்டது.

நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வருபவர்கள் தங்கள் மீது மக்கள் வைக்கும் அபரிமிதமான, கண்மூடித்தனமான நம்பிக்கையைக் கொண்டு, பற்பல அற மீறல்களை தயங்காது அரங்கேற்றிச் செல்வார்கள் என்பதற்கு கடந்தகால உதாரணங்கள்  தமிழகத்தில் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் என்.டி.ஆரும்.

விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறேன் என்று கூறிய பிறகும், தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஏன் அவரை சீண்டவில்லை? என்பதை விஜய் யோசித்து பார்க்க வேண்டும். இன்னும் தவெகவை ஒரு அரசியல் சக்தியாக மதிக்கும் அளவுக்கு விஜயின் ‘பெர்பாமன்ஸ்’ இல்லை என்பதே உண்மை.

அதே சமயம் இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் பல அதிருப்திகளைக் கடந்தும் ஸ்டாலின் கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். ஸ்டாலின் அழைக்கமாலே அவரை எதிர்த்த கமலஹாசன் அவரிடம் சென்று ஒட்டிக் கொண்டதையும், இன்னும் பிரேமலதாவும், ராமதாஸும் திமுக கூட்டணியில் தங்களுக்கு கதவு திறக்காதா? என்று காத்துக் கொண்டிருப்பதும் இன்றைய யதார்த்தமாக உள்ளது.

ஆக, தவெக தன்னை ஒருபோதும் திமுகவிற்கு நிகராக கருத இயலாது என்பதே உண்மை.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time