சில நேரங்களில் எதிரிகளின் அவதூறுகளே ஆகச் சிறந்த அடையாளங்களை நல்லோருக்கு பெற்றுத் தந்துவிடுகின்றன. அந்த வகையில் ஆதிக்க சக்தியான அமித்ஷா துணை குடியரசுத் துணைத் தலைவருக்கு போட்டியிடும் சுதர்சன் ரெட்டி மீது வைத்துள்ள குற்றச்சாட்டை பார்க்கும் போது, இதை விட நல்ல பாராட்டுச் சான்றிதழ் தர முடியுமா? எனத் தோன்றியது;
இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘நக்சல் – மாவோயிஸ்டுகளின்’ ஆதரவாளர், நக்சல் சித்தாங்களால் ஈர்க்கப்பட்டவர்’’ என விமர்சித்துள்ளார்.
இப்போதெல்லாம் யாருக்கு இந்தப் பெயர் சூட்டப்படுகிறது..?
மனிதநேயச் செயற்பாட்டாளர்கள், பிறர் நலனுக்காக தங்களை அர்ப்பணிப்பவர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களின் நலனில் அக்கறை கொண்டோர்.. போன்றவர்களுக்கு தானே இந்த முத்திரையை குத்துகிறது, ஆதிக்க சமூகமும், அதிகார வர்க்கமும்!
அப்படித் தானே ஆந்திரப் பேராசிரியர் சாய்பாபா அவர்களையும், தமிழக பாதர் ஸ்டேன்சாமி அவர்களையும் பழங்குடிகளை அதிகார அத்துமீறல்களில் இருந்து அரவணைத்து காப்பாற்றிய மனித நேயச் செயல்பாட்டிற்காக நக்சல்கள் என முத்திரை குத்தி சிறையில் அடைத்து சிறுகச் சிறுக கொன்றீர்கள்!
சரி, சுதர்ஷன் ரெட்டிக்கு ஏன் இந்த முத்திரையை குத்தினார் அமித்ஷா?
சத்தீஸ்கரின் இயற்கை எழில் செழித்தோங்கும் மலை பிரதேசங்களில் கார்ப்பரேட்டுகள் காலூன்றுவதற்காக பழங்குடிகளை அப்புறப்படுத்த திட்டமிட்டது அதிகார வர்க்கம்.
அதற்காக அரசு சம்பளத்தில் உண்டு கொழுத்த காவல்துறையை பயன்படுத்தி படுதோல்வி கண்ட அதிகார வர்க்கம் பழங்குடியினர் சிலருக்கு ஆசைகாட்டி பணத்தையும், ஆயுதங்களையும் அள்ளித் தந்து மக்களுக்கான போராளிகளை எதிர்க்கவும், அழிக்கவும் அந்த மக்களில் சிலரையே கூலிப் படையாக்கியது. அந்தக் கூலிபடைக்கு சல்வா ஜூடும் எனப் பெயரிட்டது.
சல்வா சூடும் என்பதன் அர்த்தம் அமைதி பேரணி. அவர்கள் செய்யும் கொலைகள் ஊடகங்களாலும், அரசாலும் புனித வேட்டை என கொண்டாடப்பட்டது. அதாவது அழித்தொழிப்பு செய்யும் படைக்கு அரசே உதவுவதால் அதன் பெயர் அமைதிப் படையானது. அவர்கள் செய்யும் கொலைகள் புனிதப்படுத்தப்பட்டது. இந்த கொலைகார சல்வாஜூடும் வேட்டையாடி 400க்கு மேற்பட்ட போராளிகளை கொன்று குவித்தது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்களும் பலியாயினர். சல்வா ஜூடுமின் சொந்த சகோதர வேட்டையால் மலைப் பிரதேசம் முழுமையும் ரத்தக்களரியாகி அமைதி இழந்தது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தன.
இதை இந்தியா முழுமையும் இருந்த இதயம் படைத்தோர் அனைவரும் எதிர்த்தனர். ஆனால், அரச அதிகாரம் அடங்க மறுத்தது.
![]()
இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் சென்றது. அதற்கு காரணமானவ்ர் சமூக செயற்பாட்டாளர், பேராசிரியர் நந்தினி சுந்தர். இவர் தொடர்ந்த வழக்கில் 2007 தொடங்கி மூன்றாண்டுகள் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து சூலை 2011-இல் உச்ச நீதிமன்றம் மாவோயிஸ்டு போராளிகளுக்கு எதிரான சால்வா ஜுடும் இயக்கம் சட்டவிரோதமானது.உடனடியாக தடை செய்யப்பட்டு கலைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதன் பிறகு வன்முறை சத்தம் கேட்டுக் கொண்டிருந்த சத்தீஸ்கரில் அமைதி திரும்பியது. அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் இருவர் ஒருவர் சுதர்சன் ரெட்டி, மற்றொருவர் எஸ்.எஸ். நிஜ்ஜார்.
ஆக, இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கிய மனித நேய நீதிபதி துணை குடியரசுத் தலைவருக்காக நிறுத்தப்படுவதே பெருமை அல்லவா? அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது அருமையிலும் அருமை அல்லவா?
Also read
ஆக, இன்றைய பாஜக அரசு அரசியல் சட்டத்தை சிதைத்து, தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரங்களை சிதைத்து ஜன நாயகத்தை நாட்டில் கேள்விக்குறியாக்கி உள்ள சூழலில், இந்தியா கூட்டணியின் ஆதரவு பெற்ற சுதர்சன் ரெட்டி துணை குடியரசுத் தலைவராவது தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்களின் அத்து மீறல்களுக்கு தடை போட உதவும் என்பது திண்ணம்.
சாவித்திரி கண்ணன்















Leave a Reply