கேட்கும் போதே இன்பத்தேன் வந்து பாய்வது போலத் தான் இருக்கிறது!
”தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது” என அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையைத் தான் சொல்கிறேன்.
”இதற்கும் மேலாக அவர் இது முதல்வர் ஸ்டாலினின் உறுதியான கொள்கை முடிவாகும்…”என்று கூறியுள்ளது மகிழ்ச்சியில் நம்மை திக்குமுக்காடச் செய்கிறது…!
ஆனால், கொஞ்சம் நிதானித்து, இது வரை நடந்தவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, அச்சம் ஏற்படுகிறது.
ஏழு மாதங்களில் தேர்தல் நெருங்கி வருகையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது நாள் வரை தமிழகம் முழுமையும் ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகள் கனஜோராக நடந்துள்ளன. அதுவும் எந்தெந்த இடங்களெல்லாம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மணடலம் என அறிவிக்கப்பட்டதோ, அந்த இடங்கள் அனைத்திலும் நீக்கமற நடந்து கொண்டிருந்தன. தற்போதும் நடந்து கொண்டுள்ளன.
இதே பாணியில் தான் 2021 தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவித்து பலத்த வரவேற்பை பெற்றார்.

உண்மையில் அந்த அறிவிப்பு ஒரு தேன் தடவப்பட்ட விசமே. காரணம், காவேரி டெல்டாவின் சில பகுதிகளைத் தான் எடப்பாடி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இப்படி அறிவிக்கும் முன்பே பல பகுதிகளில் ஹைட்ரோ கார்ப்பன் திட்டங்களுக்கு அனுமதி தந்துவிட்டார். ‘ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் அந்த பணிகள் நடைபெறத் தடையில்லை’ என விலக்கும் அந்த சட்டத்தில் தந்துவிட்டார். ஆயினும், இந்த யதார்த்தங்களை மறைத்து அவர் கொண்டாடப்பட்டார்.
2019 ஆம் ஆண்டே கடலூர் மாவட்டம் தியாகவல்லியிலிருந்து நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வரை 731சதுர கிலோமீட்டர் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. மரக்காணம் முதல் குள்ளஞ்சாவடி வரையில் 1,794 சதுர கிலோமீட்டர், பரங்கிப் பேட்டையிலிருந்து நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையுள்ள 3,674 சதுர கிலோமீட்டர் பகுதிகளை வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட மத்திய அரசு அனுமதி வழங்கியதை அதிமுக அரசு அனுமதித்து இருந்தது.
இதன் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 489 கிணறுகள் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் இறுதிசெய்யப்பட்டு வேதாந்தா நிறுவனத்திற்கும் ஓஎன்ஜிசி க்கும் ஒப்பந்தமாகிவுள்ளன. இந்த புதிய கிணறுகளுடன் சேர்த்து ஏற்கனவே இருக்கின்ற 700 கிணறுகளையும் செயல்பட அனுமதித்ததால் பழைய கிணறுகள் பாதுகாப்பட்டு, இந்த திமுக ஆட்சியில், அவை ஆழமாகவும், அகலமாகவும் தோண்டப்பட்டு பணிகள் நடந்தன. இதற்கு எதிராக பேராசிரியர் த.ஜெயராமன் தலைமையில் பல போரட்டங்கள் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பால் நடத்தப்பட்டு வந்தன. திமுக அரசின் காவல்துறை அந்த போராட்டங்களை ஒடுக்கியது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் – 2020 இயற்றிய பிறகும் காவிரிப் படுகையில் புதிய எண்ணெய் எரிவாயு கிணறு சட்ட விரோதமாக செயல்பட்டவண்ணம் இருந்தன.
இத்துடன் விட்டார்களா?

இராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஒ.என்.ஜி நிறுவனம் கடந்த 31.10.2023 ல் அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. இதை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாட்டின் அனைத்து எதிர்கட்சிகள் மட்டுமின்றி, திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் முதல்வரை மன்றாடி கேட்டுக் கொண்டன. ஆனால், இந்த கோரிக்கைகளுக்கு எல்லாம் நீண்ட மெளனத்தையே பரிசளித்து வந்தார், முதல்வர் ஸ்டாலின்.
பின்னர் யாரும் ஒரு சிறிதும் எதிர்பார்க்காதபடி ஆகஸ்ட் 24, 2024-ல் இராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. இது இராமநாதபுரத்தை முற்றிலும் பாலைவனமாக்கி விடக் கூடிய திட்டமாகும்.கடந்த ஓராண்டாக இதை எதிர்த்த அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டன. போராடுவோர் துன்புறுத்தப்பட்டனர். புதிய கிணறு தோண்டவும், குழாய்கள் அமைக்கவும் பல பணிகள் ஜரூராக நடைபெற்றன.
இது போராடும் மக்களையும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களையும் பேரதிர்ச்சியில் தள்ளியது.
இதே ஸ்டாலின் தான் அதிமுக ஆட்சிகாலத்தில் ஹைட்ரோகார்பனுக்கு எதிராக போர் முழக்கமிட்டார். ”ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்த முடியாமல், நடுங்கி ஒடுங்கி மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பயந்து நிற்கும் ஊழல் அ.தி.மு.க. ஆட்சியை –முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை – வீட்டுக்கு அனுப்பி, இவர்களை அரசியலை விட்டே துறவறம் போக வைப்போம்…’’ என்றார்
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஜூன் 2021ல் கூட, ”தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம்” எனவும், ”விவசாயிகளை கண்ணை இமை காப்பதுபோல காப்போம்” என்றும் தெரிவித்து இருந்தார், முதல்வர் ஸ்டாலின்.

ஆனால், இந்த ஆட்சியில் நடைபெற்ற அனைத்தும் அவரது வார்த்தைகளை பொய்யாக்கிவிட்டன.
திமுக ஆட்சியில் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி தரக் கூடாது என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், 2020 காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில் திருத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆனால், அந்த அறிக்கையைக் கூட பொதுவெளியில் வைக்காமலு, எதை ஒன்றையும் செயல்படுத்தாமலும் கிடப்பில் போட்டது தான் இந்த ஆட்சி. தமிழகம் முழுமையும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் முழு வீச்சில் நடந்தன.
Also read
இவ்வளவுக்கு பிறகு, தற்போது தேர்தல் நெருக்கத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழ் நாட்டில் எங்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முதாலாக 2010-ஆம் ஆண்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதித்ததும் திமுக அரசே என்பது கவனத்திற்குரியது!
நமது நாட்டில் மக்களுக்கு ஒரே பிரச்சினை மத்திய, மாநில அரசாங்கங்களிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வது ஒன்று தான்.
நிலத்தை சூறையாடி விவசாயத்தையே அழித்துவிடும். மக்களுக்கு புற்று நோயை உள்ளிட்ட பல மோசமான நோய்களை தோற்றுவிக்கக் கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்ந்து மக்களின் எதிர்ப்புகளை மீறி தற்போதும் அமலாகிக் கொண்டே இருப்பது தான்.
சாவித்திரி கண்ணன்
















கடந்த நூற்றாண்டின் 1967 ஆம் ஆண்டு முதல் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கலைஞர் கருணாநிதியும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் இருந்தவரை திருட்டுத்தனமாக அவரது தொண்டர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அரசியல் லாபம் பெற்று வந்தனர்.(பணம்) தாத்தா பாட்டிகள் இல்லாத ஒரு வீடு இப்போது எப்படி சீரழிகிறதோ அதுபோல் அவர்கள் போன பிறகு பயம் எள் முனையும் இல்லாத அளவிற்கு தங்கள் அரசியல் லாபத்தை ஒருவருக்கு ஒருவர் பெற்றுக் கொள்கிறார்கள். இலை மறைவு காய் மறைவு என்று சொல்வார்கள் அது போல் இருந்த இவர்களுடைய இந்த உறவும் இப்போது பட்டவர்த்தனமாக தெரிய தொடங்கி விட்டது. வரக்கூடிய தேர்தலை முன்னிட்டு ஆளுங்க கட்சியின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் தெரிகிறது. மக்களை கடித்து குதறிய புலி பசு தோல் போர்த்தியுள்ளது. அதுதான் அதிமுகவும். தேர்தல் முடிந்து அதன் முடிவு தெரிந்தவுடன் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் மீண்டும் இதே திமுக ஆட்சிக்கு வந்தாலும் நேற்றைய நிலை கண்டிப்பாக தொடரும். மக்களைப் பற்றி சிறிதும் யோசிக்க மாட்டார்கள். மக்களுக்கு கெடுதல் விளைவிக்கும் இந்த திட்டம் கண்டிப்பாக ஆயிரம் சதவீதம் அடுத்த ஆட்சியில் தொடரும்.
துணிச்சலான உடனடி எதிர் வினை! பாராட்டுக்கள்.
அரசை ஆஹா ஓஹோ என புகழும் ஊடகங்களுக்கு மத்தியில் அறத்துடன் அணுகியிருப்பது மக்களின் பக்கம் நிற்பதை காட்டுகிறது.
நேர்மையற்று வெற்று அறிவிப்புகளை விட்டு திமுக அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது.
கூட்டணி கட்சியினரும் பொதுவெளியில் பேசினாலும் திமுக தலைமையிடமோ சட்டமன்றத்திலோ இது பற்றி வாய் திறப்பதில்லை.
ஓஎன்ஜிசி நிறுவனம் மக்கள் கண் அசந்த நேரத்தில் பராமரிப்பு பணி என பாழடைந்த பழுதடைந்த பழைய கிணறுகளை மீண்டும் தோண்டும் அராஜகத்தை காவிரி படுகையில் அரங்கேற்றி வருகிறது.