உயிருக்கு போராடும் உயர் கல்வித் துறை!

-சாவித்திரி கண்ணன்

கல்வித் துறையில் இந்தியாவிற்கே கலங்கரை விளக்கமாக திகழ்ந்தது தமிழ்நாடு!

தலை சிறந்து விளங்கிய தமிழ்நாட்டை தலை குப்புற வீழ்த்தியே தீருவது என முடிவெடுத்து விட்டார்கள்!

அதற்குத் தான் தற்போது செயல் வடிவம் தந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவிலேயே உயர் கல்வித் துறையில் அதிக மாணவர்கள் படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதாவது, வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் பள்ளி படிப்பு படித்த மாணவர்களில் 10 முதல் 15 சதவிகிதமானவர்களே உயர்கல்வி படிக்க வருகின்றனர். ஆனால், தமிழகத்திலோ சுமார் 70 சதவிகித மாணவர்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர்.

அவர்களுக்கு நெஞ்சம் பொறுக்குமா?

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி ஒளியே கிடைக்காமல் இருளில்  மூழ்க வைக்கப்பட்ட சமூகம் இன்று முகிழ்த்து எழுவதா? அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போமா..? என்று இறங்கினர்.

உயர்கல்வித் துறையில் புதிய இளம் தலைமுறை வெள்ளமென திரண்டு வந்து படிக்கையில், வெண்ணை திரண்டு வருகையில் தாழியை உடைத்தது போல, சதித் திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேற்றி வருகின்றனர்.

அதன் விளைவைத் தான் இன்றைய தமிழகம் சந்தித்துக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறையை நிர்வகிக்கும் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் துணைவேந்தர்கள் இல்லாத நிலைமை  கல்வித் துறையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மொத்தமுள்ள 21 பல்கலைக் கழகங்களில் 14 பல்கலை கழகங்களுக்கு துணைவேந்தர்கள் இல்லை என்பது சாதாரண விஷயமில்லை.

துணைவேந்தர்களை இனம் காணும் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழுவைச் சேர்ந்தவரையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு தேவையில்லாத பிரச்சினையை ஆரம்பித்து வைத்தார்.

உயர் கல்வித் துறைக்கு யுசிஜி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழுஎந்த நிதி உதவியும் செய்வதில்லை. மாநில அரசு தான் செய்து கொண்டுள்ளது.  உயர் கல்வி தொடர்பான சட்டங்களிலும் யுசிஜி உறுப்பினராக சேர்க்க வேண்டும் எனக் கூறப்படவில்லை. எனினும், ஆளுநர் பிடிவாதமாக  தமிழக அரசு பரிந்துரைத்த துணைவேந்தர் நியமனங்களில் முடிவெடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.  தமிழக மக்களின் நெடுங்கால விருப்பமான சித்த மருத்துவத்திற்கான பல்கலைக் கழகம் உருவாக்கும் மசோதாவையும் நிறுத்தி வைத்தார். இது போன்ற செயல்பாடுகள் உயர் கல்வித் துறையை மிகவும் சிக்கலில் ஆழ்த்தி ஸ்தம்பிக்க வைத்தது.

இதனால் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து  ஆளுநரை நீக்கும் மசோதாவை தமிழக அரசு சட்ட சபையில் நிறைவேற்றியது. இந்த மசோதாவையும் ஆளுநர் கிடப்பில் போட்டார். தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் ஆளுநர் செயலை கண்டித்ததோடு, அந்த மசோதாவுக்கு தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.

அந்த வகையில் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து தானாகவே வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநர் விடுவிக்கப்பட்டுவிட்டார். சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி  இனி  தமிழக அரசே, பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் என்பதே புரிதலாகும். ஆனால், ஆளுநரே வேந்தராக தொடர்வதாக சொல்லப்பட்டாலும், துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து அரசுக்கு தரப்பட்டுவிட்டது.

இந்த நிலையில். உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்கு பிறகு துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக இரு பல்கலைக்கு தேடுதல் குழுவை தமிழக அரசு அதிரடியாக அமைத்து தேடுதல் வேட்டையும் நடந்தது.

அதன்படி தமிழ்நாட்டரசால் நியமிக்கப்பட்ட தேடுதல் குழுவின் பரிந்துரைகளும் பெறப்பட்டதாக தெரிகிறது. ஆயினும், இன்று வரை இதற்கு தீர்வு கிடைத்தபாடில்லை.

காரணம், பாஜகவை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத் தீர்புக்கு தடைகோரி வழக்கு தாக்கல்  செய்ததில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துவிட்டது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதனும், லட்சுமி நாராயணனும் தமிழக  அரசின் துணைவேந்தர் நியமனத்திற்கு தடை போட்டு விட்டதால், தற்போது தமிழக உயர் கல்வித் துறையின் உயிரே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

மிக முக்கிய தலைமை பதவியான துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல்! இதனால், உயர்கல்வி கற்ற மாணவர்களால் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ்களைக் கூட பெற முடியாத அவலங்கள் தொடர்கின்றன!

தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் காலியாக உள்ள பல்கலைக் கழகங்கள்;

சென்னை பல்கலைக்கழகம்,

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,

கோவை பாரதியார் பல்கலைக்கழகம்,

அண்ணா பல்கலைக்கழகம்,

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம்,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம்,

தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் ,

அம்பேத்கார் சட்ட பல்கலைக் கழகம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்,

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகம்,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்

துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்கள் கேப்டன் இல்லாத கப்பலைப் போன்றது. இன்று உயர்கல்வித் துறை எனும் கப்பல் திசை அறியாமல் திணறிக் கொண்டுள்ளது.

இதனால் பல்கலைக்கழகங்களில் நிலையான அவசியமான அளவுக்கு கூட பேராசிரியர்கள் கிடையாது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், நிதி அலுவலர்கள் கூட இல்லாத அவல நிலை உள்ளது.

துணைவேந்தர்கள் இல்லாதால் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் இல்லை. சில பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தி துணைவேந்தர்களின் கையெழுத்து இல்லாமல் சான்றிதழ் தரப்பட்ட கூத்துகளும் அரங்கேறி உள்ளன. இப்படி வழங்கப்பட்டுள்ள பட்டச் சான்றுகளுக்கு எந்த மதிப்பில்லை. இந்த சான்றிதழ் வேலை உள்ளிட்ட எதற்கும் உதவாது.

ஆக, தமிழ்நாட்டில் தான் அதிக மாணவர்கள் உயர்கல்வி படிக்க வருகிறார்கள். அதை உதவாக்கரையாக்க வேண்டும் என்ற மத்திய அதிகார மையத்தின் கொடூர ஆசை எப்படியோ நிறைவேறிக் கொண்டுள்ளது. பல விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்த ஒரு விளையாட்டு வீரனை வீழ்த்தி, படுக்கையில் கிடத்தி, இன்று உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவல நிலைக்கு தள்ளிவிட்டனர், ஆதிக்க சக்திகள்!

சாவித்திரி கண்ணன்

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time