கவிதை மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம், அரசியல் கோட்பாட்டுக் கட்டுரைகள் என்று தொடர்ந்து பண்பாட்டுத் தளத்தில் செயல்பட்டு வருபவர் யமுனா ராஜேந்திரன்.
உத்தமவில்லன், ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், அரசியல் சினிமா: 16 இயக்குநர்கள் போன்ற 45க்கும் மேலான நூல்களை இவர் எழுதியிருக்கிறார். தமிழகத்தின் கோயமுத்தூரைச் சார்ந்த இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இடதுசாரி நிலையில் இருந்து நிகழ்வுகளைக் கறாராக மதிப்பீடு செய்யும் இவரை நேர்காணல் செய்தோம். சர்வதேசப் பண்பாட்டு நிலமைகள், ஜெயமோகன், மணிரத்தினம், கமலஹாசன் ஆகியோரது கருத்தியல், கம்யூனிசத்தின் இன்றைய நிலை போன்றவை குறித்துப் பேசினோம். தொலைபேசி வழியாக எழுப்பப்பட்ட எந்தக் கேள்விகளுக்கும் தயங்காமல், கூர்மையாக பதில் அளித்தார் யமுனா ராஜேந்திரன். அவருடன் பீட்டர் துரைராஜ் நிகழ்த்திய உரையாடாலின் முதல் பகுதி.
ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களை எடுத்த பின்பு தான் மணிரத்தினம் உலக அளவில் புகழ்பெற்றார் என்று சொல்கிறீர்கள்..மணிரத்தினம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?
யமுனா: மௌனராகம், அலைபாயுதே, ஓகே கண்மணி போன்ற படங்கள் மத்தியதர வர்க்கத்தை மையமாகக் கொண்டு, பெருநகரம் சார்ந்து எடுக்கப்பட்டவை.
இதில் ஆண்-பெண் உறவில் பெண் விருப்பம், தாலி இல்லாமல் வாழ்வது, லிவிங் டுகெதர், போன்றவைகள் சித்தரிக்கப்பட்டன. இவைகள் வரவேற்கத்தக்கன.
நாயகன், தளபதி, செக்க சிவந்த வானம் போன்றவை கேங்க்ஸ்டர் படங்கள். இதில் நாயகன், தளபதி படங்களில் வரும் கதாநாயகன் காவல்துறையால் அடி வாங்கியிருப்பான்; அரசு அதிகாரிகளால் பாதிக்கப்பட்டிருப்பான். இதை நாம் ஓரளவு அனுதாபத்தோடு பார்க்க வேண்டும். செக்க சிவந்த வானத்தில் இந்தப் பண்புகள் கூட இல்லை.
மணிரத்னம் எடுத்த ரோஜாதான் காஷ்மீரை அரசியல்படுத்திய முதல் இந்தியப்படம். அதுவரை வந்த காஷ்மீரை மையப்படுத்திய ராமன் தேடிய சீதை, ஆராதனா, தேன் மழை போன்ற இந்தியப் படங்களில்; ரத்தம் என்பது இல்லை.
ரோஜா படம்தான் இந்திய சினிமாவில் தங்கள் உரிமைகளுக்காக போராடும் காஷ்மீர் மக்களை முதன் முதலாகப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்தது.
கன்னடப்படமான பல்லவி அனுபல்லவியை அடுத்து மலையாளத்தில் மணி எடுத்த அவரது இரண்டாவது படமான உணருவில் தொழிற் சங்க இயக்கத்தை மோசமாகச் சித்தரித்து இருப்பார்.
உயிரே படத்தில் வட கிழக்கு மாநிலம் பற்றியும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஈழம் பற்றியும் பேசியிருப்பார். இவற்றில் வெளிப்படுவது பெருந்தேசிய உணர்வுதானே ஒழிய மக்கள் உரிமை சார்ந்து அவர் ஏதும் சொல்லவில்லை.
ஆய்த எழுத்து படத்தில் திராவிட அரசியலை, கட்சிகளை விமர்சனம் செய்து இருப்பார். மணிரத்தினம் முன் வைப்பது இந்தியப், பெருந்தேசியப் பார்வை. இடதுசாரி எதிர்ப்புப் பார்வை. திராவிட மரபுக்கும், இந்திய விமோசன மரபுக்கும் எதிரான பார்வை.
கமலஹாசன் குறித்து உத்தமவில்லன் என்ற நூலை எழுதியிருக்கிறீர்கள்..
யமுனா: வட நாட்டில் வங்காளம், பஞ்சாப் மாநிலங்களில்தான் இந்து முஸ்லிம் மோதல்கள் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டில் நடைபெற்றதே இல்லை. இந்து முஸ்லிம் முரண்பாட்டை வைத்து ஹே ராம் படத்தை கமல்ஹாசன் எடுக்கிறார். அதன் முதல் காட்சியிலேயே முஸ்லிம்கள் ஒரு இந்துப் பெண்ணை வன்புணர்வு செய்வதாக சித்தரித்திருப்பார்.
பிரிவினை நாட்கள் பற்றி இந்திய அளவில் 25 படங்கள் வரை வந்திருக்கின்றன. அவற்றில் கம்யூனிஸ்டுகள் எப்படி பாதிப்புற்ற முஸ்லிம்களை, இந்துக்களைக் காப்பாற்றினார்கள், எப்படி நடுநிலையோடு நடந்து கொண்டார்கள் என்று இருக்கும்.
’ஹே ராம்’ படத்தை காந்தியைக் கொன்ற நாதுராமின் சகோதரர் கோபால் கோட்சே பாராட்டுகிறார்.
விஸ்வரூபம் படத்தில் ஆப்கானிஸ்தானைக் காட்டி, தமிழக முஸ்லிம்களை அதில் தொடர்புபடுத்தி, அவர்களை வன்முறையாளர்கள் என்று படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன ? இதில் கடுகளவும் உண்மை இல்லையே! தங்களைத் தவறாகச் சித்தரிப்பதை எதிர்த்து முஸ்லிம்கள் இங்கு போராடினார்கள். இது அவர்களது ஜனநாயக உரிமைதானே? இதனை கமல்ஹாசன், ‘கலாச்சார பயங்கரவாதம்’ என்று சொன்னார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பாருங்கள். எவ்வளவு கொடுமையான பார்வை என்று பாருங்கள்…!
Also read
கோயமுத்தூரில் கலவரம் நிகழ்வதற்கு அத்வானியின் வெறித்தனமான பேச்சு காரணம் இல்லையா? கோயமுத்தூரில் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்படவில்லையா? இது குறித்து ஏதாவது உன்னைப் போல் ஒருவன் படத்தில் வருகிறதா பாருங்கள்.
உலக மக்களின் விரோதியாக அமெரிக்கா இருக்கிறது. பேரழிவு ஆயுதம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை சுமத்தி சதாம் ஹூசேனை, ஈராக்கை அழித்த புஷ், தசாவதாரத்தில் உலக நாயகனாகச் சித்தரிக்கப்படுகிறார். கமல்ஹாசன் தயாரித்த இந்த ஐந்து படங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையைத்தான் கமல்ஹாசன் கட்டமைக்கிறார். அவருடைய வைணவத் தன்னிலையின் ; சிந்தனைதான் இப்படங்கள். இப்படங்கள் அனைத்திலும் அவரே கதாநாயகன்; அவரே வில்லன்; அதனால்தான் உத்தம வில்லன்-த ஏன்ட்டி ஹூரோ எனும் அந்த நூலை எழுதினேன்.
ஜெயமோகன், கம்யூனிசம் …ஆகியவை குறித்த யமுனா ராஜேந்திரனின் பேட்டி தொடரும்….
Leave a Reply