சிறுநீரக மாற்று முறை கேட்டை 30 ஆண்டுகளாக செய்யும் இந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கவே முடியவில்லை. இதற்கு அரசு நிர்வாக ஒத்துழைப்புகள் தொடர்ந்து கிடைப்பது எப்படி? ஆயிரக்கணக்கில் ஏழைகள் ஏமாந்து கொண்டே உள்ளனர். புரோக்கர்களை நெருக்க முடியவில்லை! அரசியல் செல்வாக்கால் அநீதிகள் தொடர்கின்றன;
தமிழகத்தில் உழைத்து வாழும் நெசவாளிகளின் வாழ்க்கை நிலை படுமோசமாக உள்ளது. கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து கொண்டுள்ளது. அரை வயிற்று கஞ்சியுடன் வாழ்க்கை அல்லாடுகிறது. திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் கொடுமையில் உழலும் இவர்களை உறுப்பு தானம் செய்தால் ஐந்து லட்சம், ஆறு லட்சம் தருவதாகவும், இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் நயந்து பேசி அழைத்துச் சென்று பேசிய தொகையைத் தராமல் ஏமாற்றி வருவது சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறக்கிறது.
தானம் பெறுபவர்களிடம் 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை பெறுகின்ற இந்தக் கூட்டம் தானம் தருபவருக்கு இரண்டு லட்சம் மூன்று லட்சம் எனத் தந்து ஏமாற்றியுள்ளது. வலுவான அரசியல் செல்வாக்குடன் பல கோடி ரூபாய் உறுப்பு மாற்று முறைகேடுகள் நடந்து வருகின்றன என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகளே சாட்சியாகின்றன.

ஏமாற்றப்பட்டவர்கள் வெளியில் வந்து துணிச்சலுடன் பேசுவது அரிது. அப்படி பேசியவுடன் அது அந்த நேரத்து பரபரப்பாகி மெதுவாக அமுக்கப்பட்டுவிடும். இதுவே இது நாள் வரை நடந்துள்ளது. ஆனால், தற்போது சோஷியல் மீடியா உள்ளதால், இந்த விவகாரம் கூடுதல் கவனம் பெற்று அரசு சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையிலான குழு விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன் பேரில், வினீத் தலைமையிலான அதிகாரிகள் குழு கடந்த ஜூலை 22 ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டது. இந்த குழுவில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மாரிமுத்து, துறை இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழு விரிவான அறிக்கையை ஆகஸ்ட் -10 ஆம் தேதி வெளியிட்டது.
இதில், மனித உறுப்பு மாற்று விவகாரத்தில் பெரிய முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை அந்தக் குழு உறுதிபடுத்தி இருந்தது.

சிறுநீரகங்களை பெறுவதற்காக தனியார் மருத்துவமனைகள் தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பித்துள்ளனர். பணமே குறிக்கோளாக தரகர்கள் மூலம் உறுப்புகளை பெற்று மனித உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனையில் Transplant Coordinator மூலம் சில ஆவணங்கள் முறைகேடாக தயார் செய்யப்பட்டுள்ளன… போன்றவை விசாரணையில் தெரிய வந்தது.
இதனால், இதில் சம்பந்தப்பட்ட 2 தனியார் மருத்துவமனைகளுக்கும், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்தது அந்த மருத்துவ அதிகாரிகள் குழு. இதில் மாநில அதிகார நியமன அலுவலர் (State Appropriate Authority), மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ஆகியோருக்கும் பங்குள்ளது என அந்தக் குழு கூறி இருந்தது. இத்துடன் ஆனந்தன் மற்றும் ஸ்டான்லி மோகன் என்ற இரண்டு தரகர்கள் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே, BNS 2023 சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது அந்தக் குழு.
சும்மா ஒரு குழுவை போட்டு விசாரணை நடத்திவிட்டு, அறிக்கையை கிடப்பில் போடலாம் என அரசு நினைத்தது போலும். ஆனால், அந்தக் குழ்வின் அறிக்கை பொதுவெளிக்கு வந்துவிட்டதால் இந்த சிறு நீரக மாற்று முறைகேட்டில் சம்பந்தப்பட்ட திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை போன்றவற்றில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் வழியே நடவடிக்கை எடுக்கப்படும்…என விவகாரத்தை முடித்துக் கொண்டது தமிழக அரசு. யார் மீதும் எப்.ஐ.ஆர் கூட பதியவில்லை. கைது நடவடிக்கைகள் ஏதுமில்லை.

இதே போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் ஐதராபாத்தின் சருர் நகர் பகுதியில் அப்பாவி ஏழைகளை ஏமாற்றி சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட நிகழ்வில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், ஆஸ்பத்திரி நிர்வாகிகள், இடைத்தரகர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர், தெலுங்கானா காங்கிரஸ் அரசாங்கத்தால்.
இங்கு ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற கேள்வியுடன் இந்த விவகாரத்தை அணுகும் போது தான் தெரிய வருகிறது. இந்த சிறுநீரக மாற்று முறைகேட்டில் சம்பந்தப்பட்ட நாமக்கல் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை தற்போது மணச்ச நல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருக்கும் கதிரவனின் தந்தை சீனிவாசனுக்குரியது. திருச்சியின் சிதார் மருத்துவமனை, திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமான டாக்டர் ராஜமாணிக்கம் நடத்தும் மருத்துவமனையாகும். சம்பந்தப்பட்ட புரோக்கர்கள் இருவரும் திமுகவினர் என்பது.
ஆக, உண்மை மறைக்கபடுவதையடுத்து நீதிமன்றக் கதவு தட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தபோது, ‘முறைகேடுகள் நடந்தது அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டும், ஏன் இன்னும் அந்த மருத்துவமனைகள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவில்லை?’ போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டதும், புரோக்கர்கள் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மனித உறுப்புகளின் வர்த்தகம் பெரிய அளவில், சட்டவிரோதமாக நடக்கிறது என்ற அறிக்கையின் கண்டுபிடிப்புகள் கவலை அளிக்கின்றன… என, நீதிபதிகள் கூறினர். மேலும் இந்த விஷயத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் செயல்தன்மையற்ற போக்குகளை கடுமையாக சாடினர் நீதிபதிகள்.
அரசு வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட உயர்நீதிமன்றம், இந்த வழக்கில், இதுவரை எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாத காவல் துறையினரை இந்நீதிமன்றம் கண்டிக்கிறது. இவ்வழக்கில் முதன்மை மருத்துவ அதிகாரி, முறைகேடு தொடர்பாக பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை. புகாரின் தன்மை காரணமாகவும், முறைகேடுகளை களையவும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றது, நீதிமன்றம்.
மேலும், இதுகுறித்து விசாரிக்க, ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் தலைமையில் உறுப்பு மாற்று சிகிச்சையில் அனுபவம் மிக்க இரு டாக்டர்கள் அடங்கிய எஸ்.ஐ.டி., குழு அமைக்க வேண்டும்.என்றனர் நீதிபதிகள். இந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற அரசின் நிலைபாடு ஆச்சரியமளிக்கிறது. இதன் மூலம் பெரிய அளவிலான மனித உறுப்பு கடத்தல் பிரச்சினையை விசாரிக்கும் பொறுப்பை தட்டிக் கழிக்க அரசு முயற்சிப்பதாகத் தெரிகிறது. இது ஏமாற்றம் அளிக்கிறது…என்றனர்.
இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையே ஐந்து ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட விசாரணை குழுவை அமைக்கிறது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இக்குழுவிற்கு அரசு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றனர்.
Also read
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு தமிழகம் முழுதும் உறுப்பு மாற்று சிகிச்சை முறைகேடுகள் குறித்து இக்குழு நடத்தும் விசாரணையை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும். முதற்கட்ட விசாரணை அறிக்கையை செப்., 24க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சகிக்க முடியாத கொடுங் குற்றங்களை திமுக அரசு எப்படி அணுகுகிறது என்பதற்கும், இதை செய்யும் அதி பயங்கர குற்றவாளிகளை எப்படி அரவணைத்து பாதுகாக்கிறது என்பதும் சிறுநீரக தானம் தந்த ஏழை எளியவர்களை கொடூரமாக ஏமாற்றிய கூட்டத்தின் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்து காப்பாற்றியதில் உறுதியாகி உள்ளது!
சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்பு தான சட்டத்தை கர்ண கொடூரமாக வடிவமைத்தது குற்றங்களை தடுக்கவா? பின் வாசல் வழியே குற்றங்கள் அரங்கேறுவதற்கு ஒத்தாசை புரியவா? ஏன் உறுப்பு தானம் செய்வோருக்கும், பெறுவோருக்கும் இடையில் இத்தனை இடைத்தரகர்கள்? இந்த விவகாரத்தை எளிமைபடுத்தி அரசே பொறுப்பெடுத்தால் தான் என்ன?
சாவித்திரி கண்ணன்
















Leave a Reply