”ஆகா, நல்ல முயற்சி வரவேற்கலாமே” என்று தான் முதல் பார்வையில் பார்க்கும் போது தோன்றும்.
குறைந்த கட்டணம்!
நல்ல தொழில் நுட்ப வசதிகள்!
சர்வதேச தரத்திலான ஊடகப் பயிற்சி!
ஆகிய சிறப்பம்சங்கள்…!
தமிழ்நாடு அரசு இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் சென்னையில் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் ( Institute of Journalism and Media Studies) ஒன்றைத் தொடங்கியுள்ளது. இதில் ஓர் ஆண்டு இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பை (Post Graduate Diploma in Journalism) கற்க வகை செய்யப்பட்டுள்ள விஷயத்தை நாம் மேம்போக்காக பார்க்க விரும்பவில்லை.
இதன் தொடக்க நிகழ்வு சமீபத்தில் நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் சென்னையின் மிக முக்கிய பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஊடகத் துறையில் அரசு மற்றும் கட்சிகளின் ஆதிக்கம் ஒரு போதும் ஊடுருவக் கூடாது. அப்படி ஊடுருவ அனுமதிப்பது அந்தக் கட்சியின் அரசுக்கு சார்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதற்கும், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை, அதிருப்திகளை மறைக்கவுமான பயிற்சியாகத் தான் முடியும்.
”இல்லையில்லை, ஊடக அறத்துடன் நேர்மையாகத் தான் இயங்குவோம்” எனப் பொதுத் தளத்தில் சொல்லிக் கொள்ளலமே ஒழிய, இது வேறு எந்த வகையிலும் செயல்பட வாய்ப்பே இல்லை என்பதை மிக உறுதியாக நம்மால் சொல்ல முடியும்.
இப்படி, ‘ஊடகக் கல்வியை கற்றுத் தருகிறேன்’ என எந்த ஒரு அரசு களம் இறங்கினாலுமே – அது அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எந்த அரசாக இருந்தாலுமே கூட – அங்கு மக்கள் நலன் சார்ந்த ஊடகக் கல்வி என்பது வெறும் பாசாங்காக இருக்குமே தவிர, அநீதிகளை தட்டிக் கேட்கும் தார்மீகக் கல்வியாக அது இருக்கவே முடியாது.
ஏன் எனில், அரசு என்பது அதன் கட்டமைப்பு வழிமுறைகளில் இயல்பிலேயே ஆதிக்கமும், அராஜகமும் கலந்த ஒரு அமைப்பாகத் தான் இயங்கிக் கொண்டுள்ளது. இது போன்ற ஒரு ஊடகக் கல்வியை இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநில அரசும் தொடங்கவில்லை என்பது கவனத்திற்கு உரியது.
அரசுத் துறையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை என்ற ஒன்றை உருவாக்கியது திமுக அரசு தான். அதில் உதவி மக்கள் செய்தி தொடர்பாளர் என்ற பதவியை உருவாக்கி, அதை கட்சிக்காரர்களைக் கொண்டு நிரப்பி, அரசு சம்பளம் வழங்கி, ஆட்சிக்கு ஆதரவான செய்தி பரப்பல்களை செய்து வருகின்றன திமுக, அதிமுக அரசுகள். அந்த அரசுக்கு வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்கு இந்த ஊடக கல்வி நிறுவன சான்றிதழ் ஒரு தகுதியாக கருதுவதற்கு உதவிகரமாக இருக்கும். மேலும், ஆட்சியில் இருக்கும் கட்சியின் ஐ.டி.விங்கிற்கும் இந்த கல்வி நிறுவனத்தில் உருவாகி வருபவர்கள் உதவிகரமாக இருக்க வாய்ப்புள்ளது.
தற்போதைய திமுக அரசு தொடங்கிய இந்த ஊடகக் கல்வி நிறுவனத்தின் தலைவர் ‘இந்து நாளிதழ்’ உரிமையாளர் ரவி. இந்து நிறுவனமே ஒரு ஊடக கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறது. அதில் இருந்து மக்களுக்கான ஊடகவியலாளர்கள் எத்தனை பேரை அவர்கள் இந்த சமூகத்திற்கு உருவாக்கித் தந்துள்ளனர்..?
தற்போது வந்து கொண்டிருக்கும் இந்து ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களின் யோக்கியதையை குறித்து மக்களிடம் என்ன அபிப்பிராயங்கள் நிலவுகின்றது என்பதை நாம் சொல்லி யாரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதுவும் கடந்த 20 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் கால்களைக் கழுவிக் குடித்து, அதிகபட்ச விளம்பரங்களை வாங்கி ஆதாயம் பார்க்கும் பிழைப்புவாத ஊடகமே தி இந்து.

மேலும், தமிழ்நாட்டரசின் இந்த ஊடக கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் பொதுவெளியில் மிக பகிரங்கமாக தீவிர திமுக ஆதரவாளராக பேசியும், இயங்கியும் வருபவர். இதில் சம்பந்தப்பட்டுள்ள இதர பத்திரிகையாளர்களையும் அவதானிக்கும் போது, திராவிட இயக்க சித்தாந்த பின்புலத்தில் பத்திரிகையாளர்களை உருவாக்கும் முயற்சியாக இது ஆரம்பிக்கப்பட்டு இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் சென்னையின் பிரபல கல்லூரியான லயோலா கல்லூரியுடன் இணைந்து ஊடகத்துறைக்கான 2 சான்றிதழ் படிப்பு நடந்து வருவது கவனத்திற்கு உரியதாகும்.

எந்த ஒரு சித்தாந்தமும் அது எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், அதை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல், நடைமுறை யதார்த்தங்கள் சார்ந்து அணுகி மக்கள் நலன் சார்ந்து பார்க்கும் அணுகுமுறையே ஊடகக் கல்வியும், தற்கான பயிற்சியாகவும் இருக்க முடியும்.
ஏனெனில், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் உயர்ந்த சித்தாந்தத்தை பேசிக் கொண்டே, தீமைகளை அரங்கேற்ற வல்லவர்கள்! ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருந்து விலகி நிற்கும் பக்குவம் இருந்தால் ஒழிய, இதை அறிந்து கொள்ள ஒரு பத்திரிகையாளருக்கு வாய்ப்பில்லை. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருந்து விலகி நின்று இயங்குவதை கடந்த 40 ஆண்டுகளாக ஒரு தவமாகவே நான் செய்து வருகிறேன்.
காட்சி ஊடகத் துறையில் சன் குழுமம் மாறன் சகோதரர்கள் எம்.எஸ்.ஒவான ’சுமங்கலி கேபிள் விஷன்’ என்ற நிறுவனத்தை நடத்தி ஊடக சர்வாதிகாரத்தை அரங்கேற்றினார்கள். குடும்ப பிரச்சினையில், அவர்களை ஒடுக்க அரசு கேபிள் நிறுவனம் உருவாக்கினார் கருணாநிதி. அரசு கேபிள் நிறுவனம் தொடங்கப்பட்டற்கான நோக்கம் உயர்வானதாக சொல்லப்பட்டாலும், அது நடைமுறையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக காட்சி ஊடகங்கள் செய்தி போடாதவாறு அனைத்து சேனல்களையும் அராஜகமாக கட்டுப்படுத்தி வருகிறது. ‘ஊடகத் துறைக்குள் அரசு அதிகாரங்கள் என்ன செய்யும்?’ என்பதற்கு அரசு கேபிள் நிறுவனமே சான்றாகும்.
Also read
தேர்தலுக்கு பிறகு ஒரு வேளை இந்த ஆட்சி மாறி அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி வருமானால், அப்போது இந்துத்துவ சித்தாந்தத்தை புகுத்துவார்கள். ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இதில் ஊடுருவுவார்கள். அப்போது ரங்கராஜ் பாண்டே, தினமலர் ரமேஷ், மாரிதாஸ், சவுக்கு சங்கர் போன்றவர்களிடம் இந்த ஊடக கல்வி பொறுப்புகள் செல்வதற்கான வாய்ப்புகள் இயல்பாக அமைந்து விடும். அத்தகைய தீமைக்கு வித்திட்ட பழிச் சொல்லை இன்றைய திமுக அரசு தான் எதிர்கொள்ள வேண்டும்.
ஆகவே, ஒரு அரசே, ‘ஊடகக் கல்வியை கற்றுத் தருகிறேன்’ என்பது ஊடக சுதந்திரத்தை நிச்சயம் ஊனப்படுத்துவதாகவே முடியும். இது தவிர்த்திருக்க வேண்டிய முன்னெடுப்பு என்பதை தற்போது வலுவாக பதிவு செய்கிறோம்.
சாவித்திரி கண்ணன்

















அரசியல் இல்லாத ஒன்று என்பதும் ஒரு அரசியல் தான்.
தகவல் பரிமாற்றம்!
“தகவல் சேகரம் மக்களிடை
பகிர்மானம் தனிநபர் துணிவுதிறன் உடைத்து”
“ஆளும் வர்க்கத்திற்கும் ஆளப்படும் மக்களுக்கும் பாலமாவுது தகவல் பரிமாற்றம்”
“ஆள்வோர் அமைப்பாக தகவல் பரிமாற்றம் வாழ அறியாமைஇருள் சூழும்”
அரசுக்கு ஆதரவான எதிர்கால ஊடகத்துறையை நளினமாக கட்டமைக்கப்பட்ட திமுகவின் முயற்சிதான், ஆர்எஸ்எஸ், கம்யூனிஸ்ட்டுகள் தோற்றார்கள் போங்கள்
எதிர்காலத்திலும் திமுக ஆதரவு ஊடகத்துறையை கவனமாக கட்டமைக்கிறார்கள் தேசசேவைக்காக தியாகங்கள் செய்த அன்றைய காங்கிரஸ் காரனுக்கு இந்த வித்தை தெரியவில்லை
அரசியல் வித்தை மட்டும் அல்லாமல் பத்திரிகையின் விதையை முழுவதுமாக அறிந்தவர் கலைஞர் கருணாநிதி. ஆங்கிலத்தில் “Master of all subject”என்று பெருமைப்பட பலர் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.
கட்சி சாராதவர்கள் கூட அவரை பாராட்டி இருக்கிறார்கள். இவையெல்லாம் 1995 வரை. அவர் குடும்ப சூழலில் சிக்காத காலம் அது. அதன் பின் அவரது பிள்ளை, மருமகன், பெயரன், பெயர்த்தி என அவரது வாரிசுகள் கட்சிக்குள் கோலோச்ச தொடங்கினார்கள். அவர் இருந்தவரை செய்தித்தாள் ஊடகம் ஆகியவற்றின் முதலாளிகளாக இருந்த வாரிசுகள் இப்போது படர்ந்து கீழே ஊடுருவதற்கு என்ன செய்வது? என யோசித்து கொண்டு வந்ததுதான் இந்த ஊடக கல்வி.
இதில் பெயரளவிற்கு கூட மாற்றுக் கட்சியினரை பார்க்க முடியாது. அனைத்தும் திமுக அல்லது ஆதரவு. மையம். அதிர்ஷ்டத்தில் வந்த அதிகாரம் மாற்றுக் கட்சியினருக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகவே இது தொடங்கப்பட்டிருக்கிறது. அடுத்த தேர்தலில் அதிமுக வந்தால் இதில் உள்ள கட்டமைப்பு அப்படியே அதிமுகனராராக
இருப்பார்கள் என்பதில் ஊசிமுனை அளவு கூட சந்தேகம் கிடையாது. அதன் தாக்கம் நன்றாகவே தெரிகிறது. கண்டிப்பாக கட்சி சார்பற்று இருக்க வேண்டிய இதுபோன்ற கல்வியில் திமுக நுழைந்து விட்டது. நடுநிலையை எவ்வாறு காப்பாற்றுவது என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக தற்போது உள்ளது. இந்த சூழ்நிலையை கட்டுரை நன்கு அலசி ஆராயப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது,
அவர்களின் உலகமே தனி, அதில் அவர்கள் மட்டுமே நீச்சல் அடிப்பார்கள் அதை பராமரிக்க மட்டும் மக்களின் வரிப்பணம் தேவைப்படும் மற்றபடி மக்கள் நலன் எதோ ஊறுகாய் அளவுக்கு கூட இருக்காது.
பல்வேறு ஊடகத்தின் வேலை செய்யும் பலர் எப்படி அரசு நிறுவனத்தில் வேலை செய்ய முடியும்? அவர்களின் நிறுவனங்கள் எப்படி அனுமதி தரும்?