கேட்கவே பிரமிப்பாக உள்ளது…!
இது சாதாரணத் தொகையல்ல!
அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடியை முதலீடு செய்யுமாம்…!
இது தொடர்பான பத்திரிகை செய்திகளையும், வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையையும் பார்க்கும் போது, இந்தியாவில் அதானி, அம்பானிக்கு அடுத்தபடியாக ஜப்பான் கோலோச்ச உள்ளதோ..என நினைக்கத் தோன்றுகிறது.
முதலில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் 13 ம் இந்திய அரசுக்கும் – ஜப்பானிய அரசுக்குமானது தான் என்று இயல்பாக நான் நம்பிவிட்டேன். பிறகு அதில் அதானி, அம்பானிகளின் தொழில் வளர்ச்சிக்கான ஜப்பான் உதவிகள் கணிசமாக உள்ளன.. என அறிந்தேன்.
அதுவும், இவற்றில் குஜராத்தை மையப்படுத்தியவை கணிசமானவை.
இதில் தமிழகமும் வருகிறது. எப்படியென்றால், அரிய கனிமங்கள் வெட்டியெடுப்பதில் கூட்டு முதலீடு மற்றும் தொழில் நுட்ப மேம்பாடு மூலம் தடையின்றி தமிழ்நாட்டின் கனிம வளங்களை ஜப்பானிய நிறுவனங்கள் தடையின்றி அள்ளி விநியோகம் செய்வதற்கான கட்டமைப்பு வலுப்படுத்தப்படுமாம்.
குறைக்கடத்தி தொழில் உட்பட வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ்நாடு அரசு நிறுவிய நிதியை ஆதரிப்பதற்காக, தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டம் (கட்டம் 3) என்ற ஜப்பானின் யென் கடன் திட்டம் குறித்து இந்தியாவும் ஜப்பானும் கையெழுத்திட்டுள்ளன.
அதுவும் குறிப்பாக முக்கியமான கனிமங்கள் எனும் தலைப்பில் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சி ரகம்;
முக்கியமான கனிமங்கள்
# கனிம பாதுகாப்பு கூட்டாண்மை மற்றும் இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு மூலம் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்த இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்படுகின்றன.
# ஆகஸ்ட் 2025 இல் கனிம வளத் துறையில் இந்திய சுரங்க அமைச்சகமும் ஜப்பானின் METIயும் ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
.# அரிய மண் பொருட்களுக்கான நிலையான விநியோகச் சங்கிலியை நிறுவ டொயோட்டா சுஷோவின் அரிய மண் சுத்திகரிப்புத் திட்டத்தின் மூலம் இந்தியாவும் ஜப்பானும் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்தின..என்கிறது அந்தக் குறிப்பு.

ஆக, இனி அரிய வகை தாதுமணல்கள், கனிமங்களை ஜப்பான்காரன் வந்து அள்ளிச் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மற்றொரு பக்கம் தன் பங்கிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஜெர்மன், பிரிட்டன் நாடுகளுக்கு சென்று பல கம்பெனிகளை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைக்க உள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் இரண்டின் செய்கையுமே வேலியில் போகிற ஓணானை எடுத்து சட்டைக்குள் போட்ட கதையாகத் தான் உள்ளது.
இந்தியாவில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களையும், ஆகச் சிறந்த திறமையாளர்களையும் அலட்சியபடுத்தி, நலிவு நிலைக்கு தள்ளிவிட்டுள்ள இந்த ஆட்சியாளர்கள் வெளிநாட்டுக்காரன் இங்கு வந்து முதலீடு செய்து, சுரண்டிச் செல்ல ஒப்பந்தங்கள் போடுவது வருத்தமளிக்கிறது.
இத்துடன் இந்தியாவில் உள்ள சுமார் 50,000 தொழிலாளர்களை ஜப்பானில் வேலைக்கு அனுப்ப உள்ளார்களாம். பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்தில் மலேசிய, சிங்கப்பூர், பிஜு தீவுகள் தென்னாப்ரிக்கா போன்றவற்றுக்கு இப்படித்தான் உழைப்பாளிகளை தூக்கிச் சென்றது பிரிட்டிஷ் ஆட்சி.
ஆக, பிரிட்டிஷ் காலணியாதிக்க காலம் தான் நினைவுக்கு வருகிறது…!
அன்று, இந்தியாவை சுரண்டிக் கொழுத்தது, ஒரே பிரிட்டிஷ் அரசு தான். ஒரே கிழக்கத்திய நிறுவனம் தான்.
சுதந்திர இந்திய ஆட்சியாளர்களோ.. அகில உலகத்தின் ஆதிக்கக் கரங்களும் இந்தியாவை சுரண்ட துணை போகின்றார்கள்!
வாழ்க ஜனநாயகம்! திருடப்பட்டு வரும் நம் தாய் திருநாட்டை சிரம் தாழ்த்தி வணங்கி, வாய்மூடிக் கிடப்போமாக!
சாவித்திரி கண்ணன்.
















மீண்டும் ஒரு சுதந்திரத்திற்கு போராட வேண்டுமா? அந்நிய முதலீடு,அந்நிய முதலீடு என்று சொல்கிறார்கள். வரவேற்கிறோம்.
ஆனால் அந்த அந்நிய முதலீடு யாருக்காக என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஆட்சியாளர்கள் இதனையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் தினம் தினம் வரி. எப்படி சமாளிக்க போகிறோம் தெரியவில்லை. இதுவரையிலான மாநில அரசின் அந்நிய முதலீடு வெற்றி என்றால் அதன் லாபம் எங்கே? இப்போது மத்திய அரசின் அந்நிய முதலீடு. நம்மிடம் உள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்க. இவர்களுக்கும் நம்மை கொள்ளையடித்துச் சென்ற பல தேசத்து மன்னர்களுக்கும் என்ன வித்தியாசம்? வாழ்க ஜனநாயகம்!!