ஆர்.எஸ்.எஸ்சின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள், மூன்று நாட்கள் தொடர் சொற்பொழிவுகள் டெல்லியில் நடந்துள்ளன. அதன் இறுதி சொற்பொழிவில் பல அதிர்ச்சி குண்டுகளை வீசியுள்ளார் மோகன் பாகவத். நய வஞ்சகம், கலவர நெருப்பு, அடுத்தகட்ட நகர்வுகள் போன்றவற்றை புதை குழியில் இருந்து வெளியில் எடுத்து காண்பித்தார் மோகன் பாகவத்;
மேலும் பேச்சிற்கும், செயல்பாட்டிற்குமான நினைத்தே பார்க்க முடியாத மிகப் பெரிய இடைவெளியை கொண்ட ஒரு உரை எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக மோகன் பாகவத் பேசிய உரை அமைந்திருந்தது.
இது நாள் வரை, ”75 வயதிற்கு மேல் யாரும் பொது வாழ்வில் பதவியில் தொடர்ந்திராமல் அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு விலகிச் செல்ல வேண்டும்” என்று பேசி வந்தவர். தற்போது, ”நானோ, யாரோ 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என நான் கூறவேயில்லை” என அப்பட்டமாக பொய் சொல்லி, பின் வாங்கினார். கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது கூட”75 வயது ஆகிவிட்டது என்றால் நீங்கள் ஒதுங்கிவிட வேண்டும். மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்” என்று கறார் காட்டி பேசிய பிறகு என்ன நடந்ததோ…?

அடுத்து பாஜகவிற்கு தலைவரை தேர்ந்தெடுப்பது உட்பட அனைத்தையும் சங்கம் தான் செய்கிறது என்பது முற்றிலும் தவறு என்றார். மோடியை பாஜகவின் அசைக்க முடியாத அதிகார தலைவராக்கிய பிறகு, அங்கு தன் அதிகாரங்கள் செல்லுபடியாகாமல் இருப்பதை மறைக்கும் விதமாக மோகன் பாகவத் இவ்வாறு பேசி இருப்பதகாகவே அரசியல் பார்வையாளர்கள் இந்த பேச்சை எடுத்துக் கொள்ள முடியும்.
”அகண்ட பாரதம் என்பது அசைக்க முடியாத உண்மை” எனப் பேசி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தொண்டர்களை தொடர்ந்து அடி முட்டாளாகவே வைத்திருக்க விரும்பியதை வெளிப்படுத்தினார்.
”இட ஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ் ஆதரிக்கிறது,- அது தேவைப்படும் வரை” என்றார். இட ஒதுக்கீட்டை சுதந்திர இந்தியாவில் அமல்படுத்தவிடாமல் பல தசாப்தங்களாக அரசியல் அழுத்தங்கள் தந்து தடுத்து வைத்திருந்த சக்தியே ஆர்.எஸ்.எஸ் தான்! அதையும் மீறி ஐயா வி.பி.சிங் அவர்கள் அதை அமல்படுத்திய போது, வட இந்தியா முழுமையும் மாணவர்களை தூண்டிவிட்டு கடுமையாக போராட்டங்கள் நடத்தியதோடு, வி.பி.சிங்கின் ஆட்சியை கவிழ்த்தது ஆர்.எஸ்.எஸ் தான்.
இட ஒதுக்கீட்டிற்கு பிறகு இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு மற்றும் எழுச்சிக்கு பிறகு இட ஒதுக்கீட்டை எதிர்த்தால் ஆர்.எஸ்.எஸ் இயங்குதளமே செயல் இழந்து ஆட்டம் கண்டு விடும் என்பதால், தற்போது அடக்கி வசிக்கிறது ஆர்.எஸ்.எஸ். உண்மையில் இட ஒதுக்கீட்டை இம்மியளவும் ஏற்காத மன நிலை படைத்தவர்களே ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான பார்ப்பனர்கள்.
இந்த நிகழ்வில் இஸ்லாமியர்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசி இருப்பது தான் ஹைலைட்டானது; ”இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் எப்போதும் ஓர் இடம் இருக்கும்…” என்று பேசி விட்டு, அதற்கு முன் நிபந்தனை விதிப்பதை போல,
”அயோத்தி, மதுரா, காசி ஆகிய 3 கோயில்களும் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானவை. அயோத்தி கோயிலுக்காக ஆர்.எஸ்.எஸ். நேரடியாக களத்தில் இறங்கியது. எனினும், மதுரா மற்றும் காசி கோயில்களுக்கான இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ். நேரடியாக பங்கேற்காது. அதேநேரத்தில், சுவயம்சேவகர்கள் இத்தகைய இயக்கங்களில் பங்கேற்பதை ஆர்.எஸ்.எஸ். தடுக்காது. இந்த விஷயத்தில் அவர்கள் (முஸ்லிம்கள்) விட்டுக்கொடுத்து அவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு இந்த விவகாரம் வெறும் 3 கோயில்கள் சம்பந்தப்பட்டது மட்டுமே. இது சகோதரத்துவத்தை நோக்கிய பெரிய படியாக இருக்கும்…” என்று பேசியுள்ளார்.
அயோத்தியை வைத்து இந்தியாவில் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடாத ஆட்டங்கள் ஆடி, ஏராளமான உயிர்களை பலி வாங்கி, ரத்த ஆறுகளை ஓட விட்டு, கடைசியில் அரசியல் ரீதியாக அது சாத்தியபடாத நேரத்தில் நீதிமன்றத்திற்கு நெருக்கடி தந்து தீர்ப்பை பெற்று அயோத்தியில் பாபர் மசூதி இடத்தை அபகரித்தது பாஜக. ஆனால், அந்தோ பரிதாபம்! அப்படி அகற்றப்பட்ட இடத்தில் ராமருக்கு கோவில் எழுப்பவில்லை. சற்றே தள்ளி வேறு பகுதியில் தான் பெரிய அளவு நில மோசடிகளை அரங்கேற்றி ராமர் கோவில் எழுந்தது. இந்த பித்தலாட்டத்திற்கு அடி தருவதற்கே அயோத்தி மக்கள் பாஜகவுக்கு அந்த தொகுதியில் தோல்வியை பரிசளித்தனர்…என்பது வரலாறாகும்.
அதே சமயம் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு காங்கிரஸ் அரசு 1947க்கு முன்பு இருந்த எந்த ஒரு மத வழிபாட்டுத் தளங்களையும் மாற்றி அமைப்பதை தடை செய்யும் சட்டத்தை நாடளுமன்றத்தில் வைத்து நிறைவேற்றி, இதர இஸ்லாமிய மத வழிபாட்டுத் தளங்களுக்கு ஒரு சட்ட பூர்வமான பாதுகாப்பை தந்துள்ளதால், இப்படி தந்திரமாக ஆர்.எஸ்.எஸ் தலைமை விலகி நின்று, தொண்டர்களை தூண்டி விடுகிறது. அத்துடன் இஸ்லாமியர்களுக்கு ‘தானாக விட்டுக் கொடுத்துவிட்டால் பிரச்சினை இல்லை’ என அன்பான முறையில் எச்சரிக்கை தருகிறது. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் இத்தனை நாட்களாக தங்கள் இதயத்தில் மறைத்து வைத்திருந்த விஷத்தை வெளிப்படுத்தி உள்ளது.

மதுராவில் இப்போது கிருஷ்ணன் கோவில் இருக்கிறது. அருகே மசூதியும் இருக்கிறது. அதே போல காசியில் சிவன் கோவில் இருகிகிறது. அதன் அருகே மிகத் தொன்மையான மசூதியும் உள்ளது. பல்லாண்டுகளாக இவை இந்த இரு மதங்களின் சகோதரத்துவ உணர்வுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. பக்தர்கள் அவரவர் கடவுளர்களை ஆத்மார்த்தமாக வணங்கி செல்வதற்கு எந்தத் தடையுமில்லை. இதில் ஆர்.எஸ்.எஸ்சுக்கு என்ன பிரச்சினை? மீண்டும் கலவரங்களை தூண்டி குளிர்காயத் துடிக்கிறது.
Also read
இத்துடன் விட்டாரா? மோகன் பாகவத்? ”கோயில்களை பக்தர்களிடம் திருப்பி ஒப்படைக்க தேசிய மனம் தயாராக உள்ளது. ஆனால், கோயில்களை நடத்துவதற்கான சரியான அமைப்பு நடைமுறையில் இருக்க வேண்டும். உள்ளூர் மட்டத்தில் இருந்து தேசிய மட்டம் வரை சடங்குகள், நிதி, பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில் நீதிமன்றங்கள் ஒரு முடிவை வழங்கினால் நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ எனப் பேசியுள்ளார்.
சுதந்திர இந்தியாவில் கோவில்கள் ஓரளவேனும் ஜனநாயகமயம் ஆக்கப்பட்டுள்ளது. அதில் ஓங்கியிருந்த பார்ப்பனியத்தின் ஆதிக்கம் ஓரளவேனும் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. அதன் சொத்துக்களை, வளங்களை, வருமானங்களை அதன் அர்ச்சகர்களான பார்ப்பன குடும்பங்கள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் ரகசியமாக வைத்து அனுபவித்து வந்த வழக்கத்திற்கு தடை போடப்பட்டு அரசு நிர்வாகத்தில் உள்ளது. இதை பொறுத்துக் கொள்ளமாட்டாமல் அதை மறுபடியும் பார்ப்பனீயத்தின் கையில் சேர்க்க துடிக்கிறது, மோகன் பாகவத் தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.
சாவித்திரி கண்ணன்















சமூகநீதி இட ஒதுக்கீடு முறைக்கு எதிரானவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க என தரவுகளோடு பதிவு செய்திருப்பது சிறப்பு. எல்லோர்க்கும் கொண்டு சேர்ப்போம்.