தெரு நாய்கள் விவகாரத்தில் மறைக்கப்படும் மர்மங்கள்…!

-சாவித்திரி கண்ணன்

தெரு நாய்கள் விவகாரத்தில் ஏன் எந்த முன்னேற்றமும் இல்லை. அரசின் தோல்விகள் எதைக் காட்டுகிறது? இதை ஏன் ஆட்சியாளர்கள் வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குகிறார்கள். பொறுப்பேற்க மறுக்கிறார்கள்? இதன் பின்னணியில் இயங்கும் மாபியாக்களுக்கும், அதிகாரத்தில் உள்ளோருக்குமான தொடர்புகள் என்ன?

தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது, நாய்க்கடி பிரச்சினைகளில் இருந்து மக்களுக்கு பாதுகாப்புத் தருவது ஆகியவற்றில் நமது அரசுகள் படு தோல்வி அடைந்துள்ளன. மீண்டும், மீண்டும் இந்தப் பிரச்சினை உரக்க விவாதிக்கப்பட்டாலும், மக்கள் தங்களுக்குள் விலங்கின ஆதரவாளர்கள், பாதிப்புக்கு உள்ளானோர் என இருதரப்பாக மோதி ஓய்ந்து போவதில் தான் முடிகின்றது.

நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் எல்லாம் வெறும் பேப்பர் அளவில் தான் உள்ளன. ஏன் இவற்றை அமல்படுத்துவதில் ஒரு உறுதிப்பாடில்லை.

பெருகி வரும் நாய்களுக்கு மிக முக்கிய காரணம் நாய்களுக்கு இனப் பெருக்க தடை ஊசி போடுவதில் நடக்கும் மிகப் பெரிய ஊழல் தான். இதற்காக ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய்கள் உள்ளாட்ச்சி அமைப்புகளின் அதிகாரிகள், ஆட்சியாளர்கள், இந்த பொறுப்பை கையாளும் தனியார் நிறுவனங்கள் ஆகியோரின் முக்கூட்டுக் கொள்ளையில் ஜீரணமாகிவிடுகிறது. இதன் பின்னணியில் நாய்க்கடிக்கான மிக பிரம்மாண்டமான மருத்துவ வணிகம் ஒளிந்துள்ளது.

நாய்களுக்கு இன்ப் பெருக்க தடை ஊசிகள் முறையாக செலுத்தப்பட்டு இருந்தால், நாய்களின் எண்ணிக்கை காலப் போக்கில் அருகி குறைந்து போய்விட்டிருக்கும்.

இந்த இனப் பெருக்க தடுப்பூசிகளின் மூலம் ஆண்டுக்கு எத்தனை சதவிகிதம் நாய்கள் குறைந்தன? என்பதற்கு மாறாக அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன.

சென்னை மாநகராட்சியின் புள்ளிவிவரப்படி,

2018ம் ஆண்டில் சென்னையில் இருந்த தெரு நாய்களின் எண்ணிக்கை 57,366.

2024 ஆம் ஆண்டு கணக்குபடி தெரு நாய்களின் எண்ணிக்கை 1.81 லட்சங்கள்.

6 ஆண்டுகளில் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது எனில், தற்போது இந்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி இருக்கலாம். எனில், இதில் கண்டிப்பாக ஏதோ சதிதிட்டம் மறைந்து இருக்கிறது என்றே பொருளாகும்.

ஒரு சில குறிப்பிட்ட நாய்கள் பல பேரை கடித்து வருகிறது என்றால், அந்த தகவல்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு புகாராக செல்லும் போது, அந்த நாயை பொது இடத்தில் இருந்து அப்புறப்படுத்துவது என்பது மிக அரிதாகத் தான் நடக்கின்றன.

”எங்க தெரு நாயால் எட்டு பேர் கடிபட்டு இருக்காங்க”

”அந்த தெரு நாயால் 14 பேர் கடிபட்டு இருக்காங்க”

என்ற சொல்லாடல்களைக் கேட்கும் போது.., இது எந்த அளவுக்கு நாதியற்ற தேசமாக உள்ளது என்ற ஆற்றாமையே ஏற்படுகிறது.

ஏன் இதற்கு அந்த தெருவுக்கு பொறுப்பான கவுன்சிலருக்கு இதில் பொறுப்பில்லையா? உள்ளாட்சி அதிகாரிக்கு பொறுப்பில்லையா? என்ற கேள்வி எழுகிறது. பதில் தான் இல்லை.

சென்னையில் தினசரி சுமார் அறுபது பேர் தெரு நாய்களால் கடிபடுகிறார்கள் எனும் போது, ஒரு மாதத்தில், ஒரு வருடத்தில் அது எத்தனை பெரும் எண்ணிக்கையாகிறது? சென்னையின் எம்.எல்.ஏக்கள், மாநகராட்சி மேயர் ஆணையர் ஆகியோர் இதற்கு பொறுப்பில்லையா?

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்திற்குள் 2.80 லட்சம் பேர் நாய்களால் கடிபட்டுள்ளனர் என்றால், ஆட்சியாளர்கள் இதில் தீவிரம் காட்ட வேண்டாமா? சுகாதாரத் துறை அமைச்சர், முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக மே-2 ஆம் தேதி செய்தி வெளியானது. அந்த ஆலோசனைக்கு பிறகு, எந்த ஆரோக்கியமான மாற்றமும் சிறிதளவும் ஏற்படவேயில்லை. ஆக, திட்டவட்டமான செயல் திட்டங்கள் இவர்களிடம் இல்லையா? அல்லது விருப்பமில்லையா?

தெரு நாய்களை பிடித்து தடுப்பூசி போடும் பணியில் சென்னை மாநகராட்சியில் 16 குழுக்கள் மட்டுமே உள்ளன. உண்மையில் இதை காட்டிலும் பத்து மடங்கு இருந்தாலும் பத்தாது. இந்த 16 குழுக்கள் முறையாக வேலை செய்யும் நாட்களில் ஒரு நாளைக்கு 300 நாய்களை மட்டுமே பிடிக்க முடிகிறது. மாநகராட்சிகளில் கால் நடை மருத்துவர்களின் எண்ணிக்கை, உதவியாளர், கட்டமைப்பு வசதிகள் அனைத்திலும் பற்றாக்குறை மட்டுமல்ல, இருப்பவர்களும் அவர்கள் பணியை செய்வதே இல்லை.

சென்னையில் தெரு நாய்கள் இரண்டு லட்சம், வீட்டு நாய்கள் ஒரு லட்சம் ஆக, மூன்று லட்சம் நாய்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை எப்படி இவர்களால் எட்ட முடியும்? இது தவிர, மூன்று லட்சம் நாய்களுக்கு இனப் பெருக்க தடுப்பூசியும் போட வேண்டும் எனும் போது, வாய்ப்பே இல்லை.

ஆக, இந்த பிரச்சினைக்கு அரசின் முயற்சி யானைப் பசிக்கு  சோளப் பொரி தந்ததை போலத் தான் அரசாங்கத்தின் செயல்கள் உள்ளன.

இதே போல தெருவில் திரியும் மாடுகள் மனிதர்களை தீடீரென்று எதிர்பாராத வகையில் முட்டித் தள்ளுவதும் அடிக்கடி நடக்கின்றன. இதற்கும் தீர்வில்லை.

வீடு புகுந்து தொட்டிலில் தூங்கும் கைக் குழந்தையை நாய் தூக்கிச் சென்று கடித்து குதறுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் நாள் தோறும் கடிபடுகிறார்கள். பெண்கள், வயதானவர்கள், டெலிவரி பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்.. என பற்பலரும் கடிபட்டுக் கொண்டே இருக்கிறார்கள்! எனினும், இதற்கு தீர்வே தொடர்வதை எப்படி புரிந்து கொள்வது? அதுவும் எளிய மனிதர்கள், நடுத்தர வர்க்கத்தாரே அதிகம் கடிபடுகிறார்கள். பணக்காரர்கள், வி.ஐ.பிக்கள் தெரு நாய்களால் கடிபடுவதில்லை. அவர்கள் வாழும் உயர் குடியிருப்பு பகுதிகளில் ஏன் தெரு நாய்கள் இல்லை.

தெருநாய் கழிவுகளால் மட்டுமல்ல, வீட்டு செல்லப் பிராணிகளை வெளியில் கொண்டு வந்து நடு ரோட்டில் மலம் கழிக்க வைக்கும்  பொறுப்பில்லாதவர்களின் போக்கால் பரவும் நோய்கள் மற்றும் பொதுச் சுகாதார சீர்கேடுகள் கொஞ்சமா? நஞ்சமா?

நாய் கடிகள், வெறி நோய், இனப் பெருக்க தடுப் பூசிகள், ரேபிஸ் தடுப்பூசிகள் உள்ளாட்சி அமைப்புகளின் செயல் திட்டங்கள்.. இவை பற்றிய வெளிப்படையான விவாதங்களை உள்ளாட்சிகளில் நடத்தி, அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒருங்கிணைந்த தீர்வு வேண்டும். பிறப்புக் கட்டுப்பாடு என்ற ஒற்றைத் தீர்வு மட்டும் போதாது. மனித நடமாட்டத்திற்கு ஆபத்தான நாய்கள் என அறிய வரும் போது அவற்றை மட்டுமாவது கொல்லத் தயக்கம் காட்டக் கூடாது. இதை விரைந்து செய்ய வேண்டும். இதற்காக தனி சட்டம் கூட இயற்றலாம்.

முக்கியமாக மிக அடங்க மறுக்கும் ஆபத்தான வெளிநாட்டு நாய்கள் எப்படி நம் நாட்டுக்கு அதிக அளவில் வருகின்றன. இவற்றை ஏன் தடுப்பதில்லை. தண்டிப்பதில்லை? அவை எப்படி கொண்டு வந்தவர்களால் பராமரிக்கப்படாமல் தெரு நாய்களாகின்றன என்பது தீவீரமாக புலன் விசாரணை செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இதை ஆட்சியாளர்கள் சுலபத்தில் செய்யமட்டார்கள். மக்கள் போராட்டங்கள் வெடித்து, அழுத்தம் ஏற்பட்டால் சாத்தியப்படலாம்.

நிச்சயம் இதன் பின்னணியில் நாய்க்கடி ஊசிகளின் வியக்கத்தக்க விற்பனை இலக்கு இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.  நாய்க் கடித்த ஒருவர்  ரூ12,000 முதல் 20,000 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகின்றார்கள் எனும் போது, இப்படி பல்லாயிரம் கோடிகள் புரளும் வர்த்தகத்தின் பின்னால், பெரும் சூது கண்டிப்பாக இருக்க வேண்டும். இதில் மத்திய, மாநில, ஆட்சியாளர்களுக்கு ஆதாயம் இல்லாமல் போக வாய்ப்பு மிகக் குறைவு.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time