அமெரிக்க வரி விதிப்பால் ஆடிப் போயுள்ள இந்தியப் பொருளாதாரம்!

-சாவித்திரி கண்ணன்

பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து கொண்டுள்ளனர். சில லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் தடைபட்டு உற்பத்தி பொருட்கள் தேங்கி உள்ளன. உற்பத்தி நிறுவனங்கள் இழுத்து மூடப்படுகின்றன. அமெரிக்காவை எதிர் கொள்வதில் மோடி காட்டும் கோழைத்தனமா? அம்பானியின் நலனுக்காக மக்கள் இந்த பேரிழப்பை தாங்க வேண்டுமா? இன்னும் என்னென்ன இழப்புகளை சந்திக்க உள்ளோம்? ஒரு அலசல்;;

உலகத் தலைவர்,  சர்வதேச நாடுகளில் போற்றப்படுபவர் போன்ற தோற்றங்களை மோடிக்கு கட்டமைத்து, விஸ்வ குருவென்ற பிம்பத்தை ஏற்படுத்துவதில் எடுக்கப்பட்ட அனைத்து முன்னெடுப்புகளையும் டிரம்ப் பஸ்பமாக்கிவிட்டார்.  நமது பிரதமர் மக்கள் நலனை விட, கார்ப்பரேட்கள் நலனுக்கு முக்கியத்துவம் தந்ததன் விளைவை இன்று இந்தியா சந்திக்கிறது; சீனாவிற்கு 125 சதவிகித வரியை டிரம்ப் விதித்தவுடன் திருப்பி சரியான பதிலடி தந்து நிமிர்ந்து நின்றது. ஆனால், நமது பிரதமர் மோடியாலோ டிரம்பிற்கு எதிராக பேசவும் முடியவில்லை. முனகல் சத்தத்தை கூட வெளிப்படுத்தவும் துணிவில்லை. என்னே ஒரு சோதனை இந்தியாவிற்கு! தன்மானம் தொலைத்த தலைமை ஒரு சாபக்கேடு.

அமெரிக்காவின் உடனான உறவுகளில் சம நிலையை பேணாமல், சார்பு நிலையை பேணி வந்தார் மோடி. உலக நாடுகளின் நட்பை இந்திய மக்களுக்கு பணி செய்யக் கிடைத்த வாய்ப்பாக பார்க்காமல் அதானி, அம்பானிகளுக்கு பணி செய்ய கிடைத்த வாய்ப்பாக கருதி செயல்பட்டார், அதன் விளைவால் இன்று பல கோடிப் பேரின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது.

இந்தியா உண்மையிலேயே ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது. அமெரிக்காவை நம்பி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதியாகும் வர்த்தகத்தைச் சார்ந்து சில கோடி இந்தியர்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. குறிப்பாக ஜவுளித் தொழில், வைரம் மற்றும் ரத்தின கற்கள் உற்பத்தி, கடல் உணவுகளான மீன் மற்றும் இறால், ஆட்டோமொபைல் துறை ஆகிய நான்கும் பிரதானமானவை. மேலும் கம்பளங்கள், கை வினைப் பொருட்கள், தோல் பொருட்கள், விவசாய உற்பத்தி பொருட்கள்.. ஆகியவையும் அதிரடி 50 சதவிகித வரி விதிப்பால் அடிபடுகின்றன.

இந்தியாவை ஆளும் பாஜக அரசின் பாசங்குத்தனமான, துணிவில்லாத வெளியுறவு  மற்றும்  பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக ஏற்றுமதியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் இன்று மிகப் பெரும் பாதிப்பை சந்திக்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்தியா தன் தேவைக்காக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை கொள் முதல் செய்து அதில் இந்திய மக்கள் பலன் பெற்று இருந்தால் கூட, அமெரிக்காவின் கோபத்தை ஒட்டு மொத்த இந்திய மக்களும் துணிவுடன் எதிர் கொள்வார்கள். ஆனால். ஒரு தனிப்பட்ட அம்பானி பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்க ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அமெரிக்க உறவை கெடுத்துக் கொண்டு, அதன் கடும் விளைவை பல கோடி மக்கள் எதிர் கொள்ள வேண்டிய அவசியம் தான் என்ன?

பரபரப்பாக காணப்படும் திருப்பூர், கோவை, கரூர் பகுதிகளின் உள்ளாடை உற்பத்தி நிறுவனங்கள் உயிர்ப்பிழந்து உள்ளன. அமெரிக்காவின் அதிரடி 50 சதவிகித வரி விதிப்பால் இந்த நகரங்களே ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வழக்கமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் ஜவுளிப்  பொருட்களுக்கு 16 சதவிகிதம் தான் வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது இதில் 50 சதவிகிதத்தை கூடுதலாக்கி விட்டார், அமெரிக்க அதிபர் டிரம்ப். இந்த விலையேற்றத்தால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு தரும் ஏற்றுமதி ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளன.

ஜவுளி உற்பத்தி என்பது – குறிப்பாக பின்னலாடைகள் உற்பத்தி என்பது – சங்கிலித் தொடர் போன்றது. ஒவ்வொரு நிறுவனங்களும் அவர்களுக்குரிய பங்களிப்பை செய்வார்கள்.

15 நாட்களுக்கு முன்பு வரை பரபரப்பாக காணப்பட்ட திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள்

முதன்மைத் தேவையான பருத்தியை விவசாயிகள் உற்பத்தி செய்து தருவார்கள். அதில் இருந்து பஞ்சை உற்பத்தி  செய்வது அடுத்த கட்டமாகும். எடுக்கப்பட்ட பஞ்சை நூல்களாக்குவது அடுத்த கட்டமாகும். அதன் அடுத்த கட்டம் தான் ஆடைகள் தயாரிப்பாகும்.

நிட்டிங் துணி தயாரிப்பு நிறுவனங்கள், அதற்கு சாயமேற்றித் தரும் டையிங் நிறுவனங்கள், ஆடையை ஆர்டருக்கு ஏற்ப கட் செய்து தைத்து தரும் உற்பத்தி நிறுவனங்கள், இதில் டிசைனுக்காக எம்பிராய்டரி செய்து தரும் நிறுவனங்கள், கபேக்டிங் நிறுவனங்கள்..என பலதரப்பட்ட ஜாப்  வோர்க் சங்கிலி என்பது ஒருவரைச் சார்ந்து இன்னொருவர் என்பதானதாகும்.

ஆகஸ்ட் 27 முதல் டிரம்பின் வரி விதிப்பு அமலுக்கு வந்து விட்டதால், ஏற்கனவே தந்த ஆர்டர்படி தயாரிக்கப்பட்டு தயாரான தயாரிப்புகள் சுமார் 4,000 கோடி மதிப்புள்ள உற்பத்தியான பின்னலாடைகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கி விட்டது தான் சோகத்திலும் சோகமாகும்.

அமெரிக்காவிற்கு உள்ளாடைகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், தற்போதைய வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அடுக்கி வைக்கபட்ட நிலையில் தேங்கி கிடக்கும் பண்டல் பண்டலான உள்ளாடைகள் இந்த பரிதாபங்களுக்கு சாட்சியாகின்றன. உற்பத்தி ஸ்தலங்கள் வேலை முடங்கி வெறிச்சோடிக் கிடக்கின்றன.

வெறிச்சோடிய பின்னலாடை உற்பத்தி நிறுவனம்

ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில் சரிபாதி முடங்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது, அமெரிக்க வரி விதிப்பு. அமெரிக்க சந்தைக்கான ஆயத்த ஆடைகள் , துணிமணிகள், வீட்டில் பயன்படுத்தப்படும் துணிகள் என ஆண்டுதோறும் 73,000 கோடி மதிப்பிலான ஜவுளி அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதில் திருப்பூரின் பங்களிப்பு மட்டுமே  40,000 கோடிகளாகும்.  திருப்பூரில் தயாரிக்கப்படும் ஜவுளியில்  கணிசமானவை அமெரிக்காவுக்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளான கடும் முன்னெடுப்புக்கு பிறகு தான் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவைத் தவிர்த்து, இந்தியாவை நோக்கி வந்தன.ஆனால், இந்தியாவிற்கு வரியை அதிகப்படுத்தி வங்கதேசம், வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளுக்கு நம்மைக் காட்டிலும் குறைவாக வரி விதித்திருப்பதால் அங்குள்ள நிறுவனங்களுக்கு அதிர்ஷ்ட காற்று அடிக்கத் தொடங்கியுள்ளது.

தற்போதே திருப்பூரில் ஒரு லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும், ஒரு மாதத்தில் இன்னும் ஒரு லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என சொல்லப்படுகிறது.

சூரத்தில் வைர நகை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

இதே போல சூரத் மற்றும் மும்பையில் இருந்து அமெரிக்காவிற்கு வைரக்  நகைகள், நவரத்தின கற்கள் செய்து ஏற்றுமதி செய்து சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். அவர்களும் வேலை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மீன் மற்றும் இறால் அமெரிக்க ஏற்றுமதி நிறுத்தப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அமெரிக்காவின் ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் இந்தியாவில் 4.2 லட்சம் கோடிகள் வணிகம் பாதிக்கப்படுகிறது.

இதை ஈடு செய்ய அதானி, அம்பானிகளிடம் உள்ள சொத்துக்களில் சிலவற்றை நாட்டுக்கு எடுத்தால் மட்டுமே ஈடுகட்ட முடியும். ஆனால், அப்படி ஒன்றை பாஜக அரசு செய்யும் என்பதை நாம் நினைத்தே பார்க்க முடியாது.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time