‘TET’ தேர்வு கட்டாயம் என்பதற்கு பின்னணியில் இத்தனை சூழ்ச்சியா?

சாவித்திரி கண்ணன்

முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருந்திரளான ஆசிரியர் சமூகத்திடம் ஒரு அச்ச உணர்வும், ஆற்றாமையும், நிராதரவாக நிற்கும் மனநிலையும் தென்படுகிறது. சுமார் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி  உள்ள – தர்மத்திற்கே தலை குனிவை தரும் – ஒரவஞ்சனையான இந்த தேர்வின் பின்னுள்ள சூழ்ச்சிகள் குறித்த ஒரு அலசல்;

தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேரின் வாழ்க்கையை ஊசலாட்டதிற்கு தள்ளிவிட்டது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET )  கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதானது, ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.

இதில் ஒரு சிறு சலுகையாக, ”ஆசிரியர்கள் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் இந்த டெட் தேர்வு எழுத வேண்டியதில்லை” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபான்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு குறிப்பிட்டுள்ளது.

மேலும், ‘தற்போது ‘டெட்’ தேர்வு எழுதி பணியில் சேர்ந்திருந்தாலுமே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியில் தொடர ‘டெட்’ தேர்வில் தகுதி பெற வேண்டும்…’ என்கிறது தீர்ப்பு.

‘ஆசிரியர்கள் டெட் எனும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில், வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம்’ என கறார் காட்டியுள்ளது நீதிமன்றம்.

‘அடடா தரமான கல்வியை வழங்குவதில் நீதிமன்றத்திற்கு தான் என்னே ஒரு அக்கறை…!’ என புல்லரிக்கிறது.

‘கல்வியை வழங்கும் அரசு நிறுவனங்களுக்கு, சீரான கற்பித்தல் தரத்தை உறுதி செய்வதே நோக்கம். தகுதித் தேர்வு என்பது கட்டாய கல்வித் தகுதி மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ஏ படி தரமான கல்வி உரிமைக்கான தேவையும் ஆகும்’ என்கிறது உச்ச நீதிமன்றம்.

நம்முடைய கேள்வி எல்லாம் சட்டம் என்பது எல்லோருக்குமானதாக இருக்க வேண்டாமா? அதென்ன சீரான கற்பித்தல் தரத்தை உறுதி செய்வது என்பதை அரசு பள்ளிகளுக்கு மட்டுமானதாக சொல்கிறீர்கள்?

அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ஏ என்பது தனியார் பள்ளிகளுக்கு ஏன் செல்லுபடியாகமல் போய்விட்டது? அவர்களும் இந்த நாட்டின் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டவர்கள் தானே!

பணம் படைத்தவன் என்றால், எந்த பாவத்தையும் செய்ய அரசும், நீதிமன்றமும் அனுமதிக்குமா?

அரசு பள்ளி ஆசிரியர்களாவது B.Ed, D.T.Ed படித்துள்ளார்கள். டி.ஆர்.பி எக்ஸாம் எழுதி தேர்வாகிறார்கள். தனியார் பள்ளிகளோ, ஆசிரியராவதற்கு வெறும் பட்டபடிப்பே போதும் என்கிறார்களே!

தனியார் பள்ளிகள் ஆசிரியர்களின் தகுதியாக கருதுவதெல்லாம் என்ன?

# குறைந்த சம்பளத்தை ஏற்கும் தகுதி.

# கொத்தடிமையாக அதிக நேரத்திற்கு உழைப்பை தரும் தகுதி.

# பள்ளி நிர்வாகத்தின் அடியாளாக மாணவர்களை, பெற்றோர்களையும் ஆட்டுவிக்கும் தகுதி.

இப்படிப்பட்ட தனியார்கள் நடத்தும் பள்ளிகளில் தான் இந்த நாட்டின் 40 முதல் 45 சதவிகித மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களின் கல்வி உரிமை குறித்து அரசுக்கோ, நீதிமன்றத்திற்கோ எந்த அக்கறையுமில்லை.

அரசு பள்ளி ஆசிரியர்களின் 10 வருட, 20 வருட  கற்பித்தல் அனுபவத்தில் அவர்களுக்கு வராத தகுதியை ‘டெட்’ தேர்வு தந்து விடுமா? ஏன் இவர்கள் மட்டும் தங்கள் தகுதியை நிரூபிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்..?

ஏனென்றால், இவர்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று சேர்பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் அனுபவத்தை கொண்டு பதவி உயர்வு, சம்பள உயர்வு, ஓய்வூதியம் ஆகியவற்றை நிர்பந்திக்கும் தகுதியை கொண்டுள்ளார்கள். அதனால், அந்த தகுதிகளை அவர்களிடம் இருந்து பறித்து விட்டால் அதை கேட்கவே வாய்ப்பில்லை.

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தேர்வு நடத்தி இவர்களை தகுதியற்றவர்கள் என வீட்டுக்கு அனுப்பி விடலாம். அல்லது 10 வது வருடத்தில் அனுப்பி விடலாம். அடுத்த எக்ஸாமில் தகுதி பெறுவோமோ..? இல்லையோ…? என்ற பதட்டத்திலேயே ஆசிரியர் சமூகத்தை வைத்திருந்தால், உரிமைக்கு குரல் கொடுக்கும் தைரியம் வராது.

அரசு பள்ளியில் இப்படி தொடர்ந்து வேலை இழந்த ஆசிரியர்களின் பெரிய எண்ணிக்கை தனியார் பள்ளிகளில் வேலை தேடும். ஆக, இது தனியார் பள்ளிகளுக்கு குறைந்த கூலியில் அனுபவம் மிக்க ஆசிரியர்களை அனுப்பி வைக்க செய்யப்படும் சூழ்ச்சியாகத் தான் தெரிகிறது.

”ஆசிரியர்கள் மட்டும் தான் தங்கள் தகுதியை அடிக்கடி தேர்வு எழுதி நிரூபிக்க வேண்டுமா? இது ஏன் மருத்துவர், பொறியாளர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதிபதி என மற்றவர்களுக்கு விதிவிலக்கா..?” என்ற குரல்கள் ஆசிரியர் சமுகங்களிடம் வெளிப்படுகிறது. நியாயமான கேள்வி!

கல்வியாளர் ஜவகர்நேசன் அவர்களிடம் இது பற்றி கேட்ட போது, ”முதலில் இந்த தேர்வு முறையே சரியில்லை. ஆசிரியர் பணி என்பது வெறும் சம்பளத்திற்கான வேலையல்ல. அடுத்த தலைமுறையை கட்டி எழுப்பும் பணி. ஒரு போட்டித் தேர்வில் ஒரு தகுதியான ஆசிரியரை அடையாளம் காட்டி விட முடியாது. அது அவரது மனப்பாடத் திறமைக்கு சான்றாகலாம் அவ்வளவே. பின்லாந்து போன்ற நாடுகளில் ஒன்பதாம் வகுப்பு முதலே ஆசிரியராக விருப்பமுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ஆசிரியர் பணிக்கு மாணவர்களை சரியாக வழி நடத்தும் குணாதிசியம் தான் அடிப்படைத் தகுதி என்றார். தேர்வு வைத்து கற்பித்தல் அனுபவம் பெற்ற ஆசிரியர்களை இழப்பது மாணவர் நலனுக்கு தீங்கானது” என்றார்.

தேசிய கல்வி ஆசிரியர் கவுன்சிலின் (NCTE) 2011 அறிவிப்பு, கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டம் (RTE Act, 2009) பிரிவு 23-ஐ அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதிகளை நிர்ணயித்தது தவறில்லை. ஆனால், அதை முன் தேதியிட்டு அமல்படுத்துவதும், தொடர்ந்து தகுதியை நிரூபிக்க தேர்வு கட்டாயமாக்கபடுவதும் ஏற்புடையதல்ல.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கும், கல்வித் தரம் சில இடங்களில் குறைந்து காணப்படுவதற்கும் முக்கிய போதுமான ஆசிரியர்கள் இல்லாமை, அடிப்படை வசதிகள் இல்லாமை, ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து விலக்கி எமீஸ் பதிவேற்றம் போன்ற நிர்வாக செயல்பாடுகளில் ஈடுபடுத்துதல்… போன்ற பல காரணங்கள் உள்ளன. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்தி அவர்களை மெருகேற்றினாலே போதுமானது.

மத்திய பாஜக அரசு தான் ஆசிரியர்களை பாடாய்படுத்துகிறது என்றால், கஷ்டப்பட்டு படித்து , ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்ற பின்னரும் இன்னொரு தேர்வு வைக்கும் அணுகுமுறை நமது தமிழக அரசிடமும் வெளிப்பட்டதே.

ஆசிரியர் தகுதி தேர்வின் வெற்றி  போதாது மறுபடியும் நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்று 2018-ல் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 149 அரசாணை தற்போதைய திமுக ஆட்சியில் ரத்தானதா?  ஆனால், ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியை  தந்து தான் அரியணைக்கு வந்தார்கள்.

தற்போது தமிழக ஆசிரியர்களை பாதுகாக்க போர்க்கால வேகத்துடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பது ஆசிரியர் சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time