அரசாங்களின் அநீதி, அலட்சியத்தால் போராட்டங்கள் உருவாகின்றன. அதை ஒடுக்க தொடர்ந்து நீதிமன்றங்கள் தலையிடுகின்றன. மராத்திய சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் நீதிமன்றம் கெடு விதித்தது. பாதிக்கப்படுவோர் போராடினால் அரசாங்கம் பேசித் தீர்வு காண வேண்டும். மாறாக, தொடர்ந்து நீதிமன்றத்தின் தலையீட்டை கோருவது குறித்த அலசல்;
மராத்திய சமூகமே ஒன்று பட்டு எழுந்து நின்றது போன்ற ஒரு தோற்றம் உருவானதென்னவோ, உண்மை.
ஆகஸ்ட்-29 தொடங்கி ஐந்து நாட்களாக 42 வயதே நிரம்பிய ஒரு எளிய மனிதன் மனோஜ் ஜராங்கேயின் ஐந்து நாட்கள் உண்ணாவிரதம் தெற்கு மும்பையையே முடங்கச் செய்தது. மக்கள் சாரிசாரியாக கிராமங்களில் இருந்து புறப்பட்டு வந்து ஆதரவளித்தனர்.
இத்தகைய போராட்டம் பொது மக்களுக்கு இடையூறு செய்வதாக ஊடகங்கள் கதறின. பக்கம், பக்கமாக எழுதின, பேசின. ஆனால், நாளுக்கு நாள் போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்தது. மகாராஷ்டிர அரசோ, காவல் துறையை குவித்தது. கூடவே துணை ராணுவத்தையும் அழைத்து களம் இறக்கியது.
அவரது முக்கிய கோரிக்கை மராத்திய மண்ணில் மண்ணின் மைந்தர்களின் வாய்ப்புகள் குடியேறிய மற்றவர்களால் பெரிதும் ஆக்கிரமிக்கப்படுவதால் மராத்திய சமூகம் கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கிவிட்டது. ஆகவே, 10 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்பதாகும்.
மகாராஷ்டிர அரசாங்கம் நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரியது.

“மக்கள் பாதிக்கபடுகின்றனர். இதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. பொது சொத்துக்களுக்கு பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டது. அதற்கு யார் பணம் செலுத்துவார்கள்” என்று போராட்டக்காரர்களின் வழக்கறிஞர்களிடம் நீதிமன்ற பெஞ்ச் கேட்டது.
மக்கள் நடமாட்டத்திற்கு சிரமம் ஏற்பட்டதே தவிர, அத்தகைய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று வழக்கறிஞர்கள் அழுத்தமாக எடுத்துரைத்தனர்.
பொது மக்கள் சிரமப்படுவதை தவிர்க்க போராட்டக்காரர்களும் விரும்புகிறோம். அரசாங்கம் உடனே கோரிக்கைகளை பரிசீலித்து உரையாடலின் வழியாக சில முக்கிய அம்சங்களை பரிசீலித்து முடிவெடுக்க நீதிமன்றம் அவகாசம் தர வேண்டும் என்றனர்.
ஜராங்கே-பாட்டீலும் அமைப்புகளும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று பெஞ்ச் கூறியது.
இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு மேலும் ஒரு நாள் போராட்டம் தொடர இசைவு தெரிவித்தது. அரசும் இணங்கி வந்தது.
மனோஜ் ஜராங்கேவின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான ஐதராபாத் நிஜாம் அரசிதழ் அடிப்படையில் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு குன்பி சாதி சான்றிதழ் வழங்கவும், ஒபிசிக்குள்ளேயே 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கவும் சம்மதித்தது.

அவருக்கு அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், மற்றும் தலைவர்கள் பழரசம் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தனர்.
சமீபத்தில் நடக்கும் போராட்டங்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை தெரிகிறது. மக்கள் தாங்கள் பாதிப்பு அடையும் போது, அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள். அரசு அசைந்து தருவதில்லை. அடையாளமாக ஒரு போராட்டம் நடத்துகிறார்கள். அதையும் பொருட்படுத்துவதில்லை. பிறகு தொடர்ந்து போராட்டங்களை அங்குமிங்குமாக நடத்துகிறார்கள். எல்லாவற்றையும் அரசு வேடிக்கை பார்த்து கடந்து போகிறது.
இதன் பிறகு தங்கள் வாழ்க்கையையும், உயிரையும் பணயம் வைத்து பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் போது தான் அரசாங்கம் ஓரளவேனும் இறங்கி வருகிறது.
ஆனால், மக்கள் போராட்டங்களை ஒடுக்க தொடர்ந்து நீதிமன்றத்தின் உதவியை ஆட்சியாளர்கள் நாடுகிறார்கள்! நீதிமன்றங்களின் வழியே ஆர்டர் பெற்று செய்வதின் மூலம் நீதிமன்றத்தின் கட்டளையை நிறைவேற்றுகிறோம் நாங்களே இதை செய்யவில்லை என மக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்க காரணம் சொல்லி விடுகின்றனர்.
நீதிமன்றத்தின் ஆர்டர் பெற்று போராட்டங்களை ஒடுக்கும் குறுக்கு வழி முறையை தொடர்ந்து அரசாங்கங்கள் கடை பிடிக்கின்றன. மக்களுக்கு இடையூறு ஏற்படத்தக்க வகையில் போராட்டத்தை வளரச் செய்ததற்கு அரசும் பொறுப்பில்லையா? அரசாங்கம் என்ன அநீதி இழைத்தாலும், அதை திருத்திக் கொள்ள மறுத்து பிடிவாதம் பிடித்தாலும் மக்கள் ஏதோ அமைதியாக யாரும் பார்க்காத இடத்தில் போராட்டம் நடத்தி புலம்பிவிட்டுச் செல்ல வேண்டும் என்று விரும்புவதை எப்படி புரிந்து கொள்வது?
பொதுமக்களின் சிரமத்திற்கு கோரிக்கை தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு உடன்படாத – வந்தாலும் அதற்கு தீர்வு காண முன்வராத – சுய நலமே குறிக்கோளாக செயல்படும் ஆட்சியாளர்களும் தானே பொறுப்பு. இதை ஏன் நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்வதில்லை. மேலும் அரசாங்கம் என்பது வலிமையானது. மக்களோ அதிகாரபலமற்றவர்கள். மக்களை ஒடுக்க நினைத்தால் அதை அரசே செய்துவிட முடியும் தானே! அரசே சமாளிக்க முடியாத நிலையிலோ அல்லது மக்கள் மிகவும் பாதிப்படையும் நிலையிலோ நீதிமன்றத்தின் அவசியம் நேரும் போது வரலாமே.
இது மிகவும் துர் அதிர்ஷ்டவசமானது.

நிராதரவாக ஆட்சியாளர்களால் கைவிடப்பட்ட மக்கள் தங்கள் உரிமையைப் பெற போராடுவதைத் தவிர, வேறென்ன வழி இருக்கிறது..? போராடும் மக்களை எச்சரித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உடனே கெடு வைத்து, காவல்துறையின் அராஜக பலத்தை களத்திலிறக்கி போராட்டக்காரர்களை ஒடுக்க நீதிமன்றம் தொடர்ந்து துணை போய்க் கொண்டுள்ளதோ…, என்ற அச்சம் மக்கள் மனதில் ஏற்பட்டு வருகிறது, பலவித சம்பவங்களால்!
2019 டிசம்பரில் மத்திய பாஜக அரசு சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்தது. டெல்லி ஷாகின்பாத் பகுதியில் அமைதியான வழிமுறையில் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி போராடி வந்தனர் இஸ்லாமியர்கள். அந்த போராட்டமும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் தான் அராஜகமாக முடித்து வைக்கப்பட்டது.
விவசாய நலன்களை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் மூன்று வேளாண் சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்த போது, தலை நகர் டெல்லியில் விவசாயிகள் காலவரையின்றி தங்களை வருத்திக் கொண்டு போராடினார்கள். இதில் 700 விவசாயிகள் உயிர் இழந்தனர். அப்போதும் நீதிமன்றம் தலையிட்டது.
சென்னையில் தூய்மை பணியாளர்கள் அமைதியான முறையில் பொது மக்களுக்கு இடையூறு இன்றி பிளாட்பாரத்தில் இரவு பகலாக தங்களை வருத்தி போராடினார்கள். அப்போதும் நீதிமன்றத்தின் வழியே உண்மைக்கு புறம்பாக போக்குவரத்திற்கு, இடையூறு எனக் காரணத்தை கற்பித்து அராஜக வழியில் போராட்டம் ஒடுக்கப்பட்டது. அதற்கு பிறகு நீதிமன்றம் சொல்லியபடி போராடுவதற்கு மாற்று இடம் தராமல் இழுத்தடித்து போராட்டத்தை ஒடுக்கிவிட்டனர்.
அரசியல் சட்டத்தில் குடிமக்களுக்கு தாங்கள் பாதிக்கும் போது போராடுவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை காப்பாற்றுவதற்கு மாற்றாக மறுப்பதை நீதிமன்றங்களே தொடர்ந்து செய்வது ஏற்புடையதாகாது.
மராத்திய போராட்டத்தில் என்ன நடந்தது…? தெற்கு மும்பை பகுதியில் பல்லாயிரம் மக்கள் கூடி போராட்டத்தை ஆதரித்தனர். அது அந்த இடத்தில் போக்குவரத்திற்கு பாதிப்பு தந்தது. ஒட்டு மொத்த மும்பை மக்களுக்கும் அல்ல. அடுத்து பொதுச் சொத்துக்களுக்கும் பாதிப்பில்லை. முதலில் நீதிமன்றம் அரசு தரப்பில் சொல்லப்பட்ட பொய் காரணத்தை நிஜமாக பாவித்தது. பிறகு திருத்திக் கொண்டதோடு, அரசு உரிய முறையில் பேசி உடன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் கூறியது.
நீதிமன்றம் சென்னையைப் போல அராஜகமாக போராட்டத்தை ஒடுக்க ஆணையிட்டு இருந்தால், மராத்தியர்கள் பெரும் வன்முறையை கையில் எடுத்திருப்பார்கள். அவர்களின் வீரமும், போராட்ட குணமும் உலகம் அறிந்ததே. ஆகவே, நீதிமன்றம் கொஞ்சம் நிதானம் காட்டியது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தகுதி தேர்வு எழுதி வேலையில் சேர்ந்து ஐந்து வருட கற்பித்தல் அனுபவமும் பெற்ற ஆசிரியர்களை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க மறுக்கும் சதியாக மீண்டும் தகுதி தேர்வு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்பந்திக்கப்படுகிறது. இதற்கு நீதிமன்றமும் துணை செய்கிறது.
Also read
இதனால் நாம் மாறியுள்ள ஒரு சூழலை அவதானிக்க வேண்டும். இன்றைய சூழலில் இட ஒதுக்கீடு தருவது ஒன்றே பின் தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்கு உதவாது. ஏனெனில், அரசு துறைகளில் நிரந்தரப் பணியிடம் என்பது கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டுள்ளது. அத்துக் கூலி முறை – பாதுகாப்பற்ற பணிச் சூழல் அனைத்து துறைகளிலும் அறிமுகமாகி வருகிறது.
பணி பாதுகாப்பு இல்லாத நிலையை அரசாங்கமே உருவாக்குகிறது. சகல விதங்களிலும் வசதியானவர்கள், தனியார்கள் பலம் பெற அரசும், நீதிமன்றமும் சட்டங்களை கட்டமைக்கின்றன. இதை எதிர்த்து எல்லோரும் ஒன்றுபட்டு உறுதியோடு போராடினால் தான் எளியோர் அனைவரும் பலன் பெற முடியும்.
சாவித்திரி கண்ணன்















அண்ணன் சாவித்திரி கண்ணனின் இந்தக் கட்டுரை சரியான நேரத்தில் வந்திருக்கிறது. கட்டுரையை சரியான முறையில் முடித்திருக்கிறார். மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு போராடினால் தான் எளியோர் பயன் பெற முடியும் என்று கூறியிருக்கிறார். மக்கள் அனைவரும் ஜாதியால்,மதத்தால், அரசியல் கட்சிகளால், ஆன்மீகத்தால், ஆத்திகத்தால் மட்டுமல்லாமல் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இருப்போர் இல்லாதோர் என சிதறி கிடக்கிறார்கள்.. இவர்கள் எந்த காலகட்டத்திலும் ஒன்று சேர மாட்டார்கள் என்ற தைரியத்தில் அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள்.
காலம் கனியும் அப்போது இதயம் எரிந்து கொண்டிருப்போர் ஒன்று சேரும்போது எல்லாம் தூள் தூளாகும்.