காஷ்மீர் பிரச்சினை உருவான வரலாறு ( பாகம்– 4 )
காஷ்மீரின் தனித்துவத்தை காப்பாற்றிக் கொண்டு இந்திய அரசோடு இணைந்து செயல்பட விரும்பினார் சேக் அப்துல்லா. ஆனால், காங்கிரஸ் அரசு காஷ்மீரை இந்தியமயமாக்க நிர்பந்தங்கள் தந்தது. சேக் அப்துல்லாவின் மரணத்திற்கு பிறகு காஷ்மீரில் பல தலைகீழ் மாற்றங்கள் நிகழத் தொடங்கியதை அலசுகிறது இந்த அத்தியாயம்;
சட்ட சபையில் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத நிலையில் சேக் அப்துல்லா சேக் அப்துல்லா முதல்வரானதை ஏற்றுக் கொண்டார்களா? சேக் அப்துல்லாவிற்கும் இந்திராவிற்கும் இடையில் உருவான ஒப்பந்தங்கள் மக்கள் வரவேற்பை பெற்றனவா?
காஷ்மீரின் அரசியல் கட்சிகளும் பார்வையாளர்களும், சேக் அப்துல்லா பதவிக்காக வாக்கெடுப்பு , சுய நிர்ணய உரிமை என்ற கொள்கைகளை கைவிட்டு விட்டார், அழுத்தத்தின் பேரால் சமரசம் செய்து கொண்டார், காஷ்மீர் மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டார், தனது குடும்ப நலன்களுக்காக இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.. என பலவாறு விமர்சனங்கள் செய்தனர். அவற்றில் உண்மை இல்லாமல் இல்லை.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியும், ஐமாத் இ இஸ்லாமி இயக்கமும் , ஜனசங்கமும் இந்த ஒப்பந்தம் மோசமானது என்று பிரச்சாரத்தை மேற்கொண்டனர். நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் இந்த ஒப்பந்தம் சேக் அப்துல்லாவிடம் இந்திரா சரண்டைந்தை காட்டுகிறது என்றார்.

காங்கிரஸ் கட்சியினரோ இந்தியாவுடன் காஷ்மீரை இப்பொழுது தான் உண்மையில் ஒருங்கிணைத்து உள்ளோம் என்று பதிலடி கொடுத்தனர்.
சேக் அப்துல்லாவிற்கு முதல்வர் பதவி கிடைத்தாலும், அவரது சுதந்திர வேட்கை குறைந்ததா?
1975 முதல் ஒன்றரை ஆண்டுகள் மத்திய அரசுடன் மோதல் போக்கையே கடைபிடித்த சேக் அப்துல்லா , 1976ல் இந்திராவின் தோல்விக்கு பின்னர் தேர்தலை தனித்து சந்திக்க தயாரானார்.
1977 தேர்தலில் அவருக்கெதிராக காங்கிரஸ் கட்சியும் , தில்லியில் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியும் போட்டியிட்டன. ஜனதா கட்சி சார்பில் சேக் அப்துல்லா மீது பகைமை பாராட்டும் காஷ்மீர் தலைவர்கள் மௌலானா மசூலி, மிர்வாய்ஸ் பரூக் போன்ற அனைவரும் ஜனதா அணியில் நின்றனர். வாக்கெடுப்பு முன்னணியாக இருந்த சேக் அப்துல்லாவின் கட்சி இப்பொழுது தேசிய மாநாட்டு கட்சியாக பெயரை மாற்றிக் கொண்டு தேர்தலை சந்தித்தது. 1953ல் இருந்த தேசிய மாநாட்டு கட்சியோ பின்னாளில் காங்கிரசுடன் இணைந்ததால் இது சாத்தியமாயிற்று.
ஜம்மு காஷ்மீரின் வரலாற்றிலேயே நேர்மையான சுதந்திரமான தேர்தல் என்றால் அது 1977ல் நடந்த பொது தேர்தல் தான் என அனைவரும் கூறுவர். அதற்கு மூல காரணம் மத்தியில் மொரார்ஜி தலைமையில் அமைந்த ஜனதா ஆட்சி தான் . தேர்தல் தில்லுமுல்லுகளை நடத்தும் மாநில தேர்தல் அதிகாரிகளும் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நடுநிலையோடு தேர்தலை நடத்தினர்.

இந்த தேர்தலில் சேக் அப்துல்லா உடல் நலம் குன்றியிருந்தாலும் 46 % வாக்குகளை பெற்று 47 இடங்களில் (காஷ்மீர் பள்ளத்தாக்கில் 40 இடங்களையும் ஜம்மு பகுதியில் 7 இடங்களையும்) பெற்று வென்றார். காங்கிரஸ் கட்சி 1953க்கு பின் தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும் 11 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி மூன்றாவது இடத்திலும் ஜனதாகட்சி (ஜனசங்கம் உட்பட) 13 இடங்களில் வென்றது.
மாநில சுயாட்சியை, 1953-க்கு முன் உள்ள நிலையை ஏற்படுத்துவேன் என்று வீதியெல்லாம் முழங்கி சேக் அப்துல்லா வெற்றி பெற்றார். ஆனால், அவரால் மத்திய மாநில உறவுகளில் விரும்பிய மாற்றத்தை கொண்டுவர இயலவில்லை. ஆட்சியில் இருந்த ஐந்தாண்டுகளில் அவர் மீண்டும் இந்திரா பிரதமராவதை கண்ணுற்றார் என்றாலும் 1953க்கு முந்தைய நிலை என்பதுகானல் நீராகவே மாறிப் போனது.

உடல்நலம் குன்றிய சேக் அப்துல்லா 1982ல் மரணமடைந்தார். காஷ்மீரின் மைந்தனாக பிறந்து ,இந்திய நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம்,சோசலிசம் என்ற கொள்கைகள் நனவாகும் என்ற எண்ணத்தில் நேரு, காந்தி மீது கொண்ட அளப்பரிய பற்றால் இந்தியாவோடு இயைந்தவர் , இந்தியனாக வாழ்ந்து, இந்தியனாக இறந்தார். ஆனால், அவரை ‘இந்தியன்’ என்று இந்தியர்கள் எண்ணவில்லை, காஷ்மீரி என காஷ்மீர் மக்களும் நினைக்கவில்லை என்பது சோகமானது!
காஷ்மீரின் சிங்கம் என அழைக்கப்பட்டவர் மறைந்தார், அவர் புதல்வர் பரூக் அப்துல்லா முதல்வரானார்.
ஆப்கனில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்க்க அமெரிக்கா இஸ்லாமிய ஜிகாடிஸ்டுகளை பாக்கித்தான் துணையுடன் “உற்பத்தி” செய்தனர் . அவ்வாறு உருவாக்கப்பட்ட முஜாஹுதீன் படை , தனது பார்வையை காஷ்மீர் பக்கம் திருப்பியதும் இந்த காலத்தில் நடந்தது.
காஷ்மீரில் சேக் அப்துல்லா போன்ற பெரிய ஆளுமை மறைந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப உள்ளூர் போராளிகள் பெரு முயற்சி செய்தனர், பாக்கித்தான் அதிபரான ஜியா உல் ஹக்
இதற்காக பெரும் பொருளை செலவழிக்கவும், ஆயுதங்களை மற்றும் ஆயுத பயிற்சியி தரவும் விழைந்தார். ஆசாத் காஷ்மீரில் உள்ள ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை இந்த வேலையில் முடுக்கிவிட காஷ்மீரில் சுயாட்சியை ஒதுக்கி வைத்து விட்டு, சுதந்திரம் கோரும் கோஷங்கள் பெருக ஆரம்பித்தன.
சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமானதை தொடர்ந்து ஜக் மோகன் கவர்னராக்கப்பட்டார். கூடவே காவல் துறையின் அத்து மீறலும் அட்ட காசமும் காஷ்மீரில் வாடிக்கையானது. ஜம்மு காஷமீர் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் பர்மிங்காம் நகரில் இந்திய தூதரக அதிகாரியை கடத்தியதால், காஷ்மீரில் ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்கள்காவல் துறையின் அடக்குமுறைக்கு ஆளாயினர். வன்முறை , எதிர் வன்முறை என்ற வட்டம் சழல ஆரம்பித்தது.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் மக்பூல்பட்டை தூக்கிலிட்டதும், அவரை திகார் சிறையிலேயே புதைத்ததும் காஷ்மீர் தேசியவாத எழுச்சிக்கு மேலும் உரமூட்டியது.
இந்திய மண்ணில் சிறு பான்மையினரை நிந்தித்து, இந்துக்களை திரட்டும் சக்திகள் வலுப் பெறுவது காஷ்மீரில் உள்ளவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதோடன்றி, இந்திய அரசின் செயல்பாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு மிகுந்திருப்பது காஷ்மீரில் வெளிப்பட்டது. இந்திய அரசு என்பது இந்துக்களின் அரசாக காஷ்மீர் மக்களுக்கு தோன்றியது. இதனுடன் அரசின் அட்க்குமுறையும் ராணுவ மற்றும் பாதுகாப்பு சக்திகளின் வன்முறையும், முஸ்லீம் மக்களின் மீது இவர்கள் காட்டும் வெறுப்பும், ஆத்திரமும் காஷ்மீர் மக்களிடையே பலத்த எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது.
1987-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசும் இணைந்து கூட்டாக தேர்தலை சந்தித்தார்கள். காஷ்மீரின் சுயாட்சி என்பதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டு காங்கிரசோடு கைகோர்த்த பரூக் அப்துல்லாவின் கூட்டணிக்கெதிராக முஸ்லீம் ஐக்கிய முன்னணி (Muslim United Front) என்ற அணி உருவாக்கப்பட்டது. இதில் பிரிவினைவாதிகள், வாக்கெடுப்பு கோருபவர்கள், இஸலாமிஸ்டுகள், என காஷ்மீரின் அனைத்து அரசியல் நீரோட்டங்களும் ஓரணியில் திரண்டன. சையது அலி ஷா ஜிலானி, முகமது அப்பாஸ் அன்சாரி, அப்துல் கனி லோன் , யாசின் மாலிக் மற்றும் முகமது யூசுப் ஷா ஆகியோர் இந்த அணியின் தலைவர்கள் ஆவர்.
1987-ல் இந்த அணிக்கு ஆதரவாக அலை வீசியதாக காஷ்மீர் பண்டிட்டுகள் கூட கூறுகின்றனர். ஆனால் ‘தேர்தல்கள் திருடப்பட்டதால் ‘ முஸ்லீம் ஐக்கிய முன்னணி (MLM ) 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றதாகவும், பரூக் அப்துல்லா கூட்டணி 66 இடங்களில் வென்றதாகவும் அறிவிக்கப்பட்டது. பரூக் அப்துல்லா மீண்டும் முதல்வரானார் .
புனிதப் போர், அடக்குமுறை மனிதப் படுகொலை

1987-ல் நடத்தப்பட்ட தேர்தல் மோசடி காஷ்மீரை, காஷ்மீர் இளைஞர்களை, தேர்தல் பாதையில் நம்பிக்கை இழக்க வைத்தது. இந்திய (இந்து) அரசின் நேர்மையை, நம்பகத்தன்மையை கேள்வி கேட்டது. வன்முறை கிளர்ச்சிக்கு வழி அமைத்தது. இத்துடன் ஆப்கன் முஜைஹுதீன் படையினரும் காஷ்மீரில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தனர்.
இந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்ட முகமது யூசுப் ஷாதான் பின்னாளில் ஹிஜ்புல் முஜைகுதீன் கட்சி தலைவரான ‘சையது சலாவுதீன் ‘ ஆவார்.
இந்த சுழற்சியில் இந்திரா காந்தியா, ராஜீவ் காந்தியா, வி.பி. சிங்கா, மப்டி முகமது சயீதா, பரூக் அப்துல்லாவா என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் காஷ்மீரின் அரசியலில் இஸ்லாமிய தாக்கம் மேலோங்க காரணமாயினர்.
இதற்கு சிறந்த உதாரணங்களாக, அனந்தநாக் கலவரமும், காகடல் துப்பாக்கி சூட்டையும் கூறலாம் . அச்ச உணர்வை தூண்டி சமூக நல்லிணக்கத்தை கூறு போட்டதும், நியாயம் கேட்கும் அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை ஏவி அதை நசுக்கியதும் ‘தில்லி தர்பாரின்’ கோர முகத்தை காட்டியது, அந்த முகம் மக்களை அரசிடமிருந்து விலக்கி வைத்தது.
1989-ல் தொடங்கிய ஆயுத எழுச்சி அடுத்த பத்து ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரை புரட்டி போட்டது. இந்தியாவை காஷ்மீரை விட்டு வெளியேறச்சொல்லி வெடித்த இந்த கிளர்ச்சி மூன்றாண்டுகளுக்கு உள்ளாகவே பாக்கித்தான் ஆதரவு ஜிகாடிசவாதிகளின் கைகளுக்கு சென்றது. அரசியலோடு இஸ்லாமிய தீவிரவாதமும் கைகோர்த்து நடந்தது. ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற உள்ளூர் தீவிரவாதிகளிடமிருந்து கிளர்ச்சியின் தலைமை
ஆசாத் காஷ்மீரில் உள்ள ஜமாத்-இ- இஸ்லாமி அமைப்பு, ஹிஸ்புல் முஜைதீன் போன்ற அமைப்புகளின் கைகளுக்கு மாறியது. இந்த கிளர்ச்சியால் பத்தாயிரத்துக்கும் மேலானோர் பலியாயினர் . அப்பாவி மக்களும் தீவிரவாத அமைப்பை சார்ந்தவர்களும் இதில் பலியாயினர்.
காஷ்மீர் பண்டிட்கள், இஸலாமிய தீவிரவாதிகளின் தாக்குதலால் காஷமீரைவிட்டு வெளியேற் வேண்டியதாயிற்று. இதை பாஜக மிகப் பெரிய அரசியலாக்கியது.
காஷ்மீருக்கு அளித்துள்ள தனி சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், அரசியல் பிரிவு 370ஐ நீக்க வேண்டும் , இஸ்லாமியர்களால் இந்துக்களுக்கு ஆபத்து என்றும் தனது குரலை உயர்த்திக் கொண்டே போனது.
இந்த கிளர்ச்சியை எதிர்த்து இந்திய அரசு எதிர் நடவடிக்கையாக, பயங்கரமான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. இதனால் ராணுவம் காவல்துறை, துணை ராணுவம் என பிராந்தியம் முழுவதும் காக்கி சட்டைகளால் நிரப்பப்பட்டன.
தாக்குதலும் ஆர்ப்பாட்டமும், எதிர் தாக்குதலும் போலி என கவுண்டர்களும் , சித்திரவதைகளும் பெருகத் தொடங்கியது.
Also read
காஷ்மீர் பத்திரிக்கைகளும், மனித உரிமையை மதிப்போரும் ஆம்னஸ்டி இண்டர்நேஷனலும் காஷ்மீரில் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவ அமைப்புகள், கற்பழிப்பு, கொலை, என்கவுண்டர் கொலை, கொலை செய்து மூடி மறைத்தல் என பல்வேறு அட்டூழியங்களை-மனித உரிமை மீறல்களை- நிகழ்த்தி வருகின்றனர் என்று கூறினர். அவர்களை எந்த சிவில் கோர்ட்டும் விசாரிக்காது என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.
1947-48-ல் காஷ்மீர் பிரச்சினை வெடித்த பிறகு, நேருவின் தலைமையிலான இந்திய அரசு காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை பிரச்சினையை இந்திய நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட பிரச்சினையாக பாவித்து, பாக்கித்தானுடன் போட்டியில் இறங்கியது.
பிரச்சினையை தீர்த்து ஒரு சுமுகமான முடிவுக்கு வர சந்தர்ப்பங்கள் வந்த போதும் அவற்றை முறையாக பயன்படுத்தாமல் , ஒருங்கிணைப்பு (Integration) என்ற பெயரில் மதவாத சக்திகள் விரும்பிய ஆதிக்கத்தையே நிலை நாட்டியது.
இந்திரா காந்தியின் முயற்சியும், அன்று நிலவிய நிலைமைக்கு (prevailing realities) சேக் அப்துல்லாவின் ஒப்புதலை பெறுவதில் இருந்ததே ஒழிய, காஷ்மீர் பிரச்சினையை அம்முயற்சி தீர்க்கவில்லை. அவருக்கு பின்னர் வந்த ராஜீவ் அரசோ, வி.பி.சிங் அரசோ, ஐக்கிய முன்னணி அரசோ இப்பிரச்சினை பற்றிய புரிதலோ அக்கறையோ இல்லாதவர்களாக இருந்தார்கள்.
இந்திய நாடு, ஆண்டு இரண்டாயிரத்தை நோக்கி நகர தொடங்கியது.
புதிய நூற்றாண்டு புதிய சிந்தனைகளை இந்திய அரசுக்கு கொடுத்ததா? என்று பார்ப்போம்.
சா.அருணாசலம்.


















Leave a Reply