ஒருவர் நேர்மையானவர் சமரசமற்றவர் பொது நலனை பாதுகாப்பவர் என்றால்…, அவரை தலையில் வைத்துக் கொண்டாடுவதில் நமக்கு எந்த தயக்கமும் இல்லை!
’’நேர்மையானவர், கறாரானவர், ஊழலுக்கு அப்பாற்பட்டவர் ஆகவே, தான் துணைவேந்தர் சூரப்பாவை அண்ணா பல்கலையில் இருந்து தூக்கியடிக்க துடிக்கிறார்கள்…’’ கமலஹாசன் உள்ளிட்ட மேட்டுக்குடி மேதாவிகள் அனைவரும் இப்படித்தான் சொல்கிறார்கள்!
அவர் நேர்மையானவர் என்பது உண்மையா? என்று பார்த்துவிடுவோம்!
கொரனா வந்தது! பல்கலைக் கழகம் மூடப்பட்டது.படிப்பு தடைபட்டுள்ளது, என்ஞினியரிங் கல்வியை ஆன்லைன் மூலம் முழுமையாகவோ,முறையாகவோ கற்றுத் தரமுடியாது. ஆனால், ’’நீ வராவிட்டால் என்ன? படிக்காவிட்டால் என்ன? முழுக் கட்டணத்தையும் கட்ட வேண்டும்’’ என்று கட்டளையிடுகிறார் சூரப்பா! பேரிடர் காலத்தில் கட்டணம் வசூலிப்பது மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்பதை விளக்கி துணைவேந்தர் அவர்களுக்கு சி.இ.ஜி மாணவர்கள் பலர் தனித்தனியாகவும் வகுப்புவாரியாகவும் மின்னஞ்சல்கள் அனுப்பினார்கள். யாருக்கும் பதில் கிடைக்கவில்லை.
பல்கலையின் மொத்த மாணவர்களில் சரிபாதிக்கும் அதிகமான மாணவர்கள் எளிய குடும்ப பின்னணி கொண்டவர்கள்! முதல் தலைமுறையாக தங்கள் கடின உழைப்பில் அண்ணா பல்கலைக்குள் நுழைந்தவர்கள்.கொரானா காலத்தில் இவர்களின் பெற்றோர்கள் பலருக்கு வேலை பறிபோயிருந்தது. இன்னும் சிலரின் பெற்றோர்கள் சம்பளக் குறைப்பில் தகித்துக் கொண்டிருந்தனர்.
பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களின் முயற்சியால் change.org இணையதளத்தில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
பேரிடர் காலத்தில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்னும் தமிழக உயர்கல்வித் துறையின் அறிவுறுத்தலை மேற்கோள் காட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் கட்டண சுற்றறிக்கை தவறானது என்றும் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கை என்றும் பல மின்னஞ்சல்கள் துணைவேந்தருக்கு அனுப்பட்டது. அவரை சந்திக்க மாணவர்களும்,பெற்றோர்களும் கடுமையாக முயற்சித்தனர். அவர் எதற்கும் மனம் இரங்கவில்லை. சூரப்பா என்ற தன்னை தெய்வத்திற்கு நிகராக கருதிக் கொண்டிருக்கும் மனிதரை இந்த எளிய மாணவர்களோ, அவர்களின் பெற்றோர்களோ ஒரு போதும் சந்திக்கக் முடியாத உயரத்தில் தன்னை அவர் நிறுத்திக் கொண்டார்.
சரி, கல்விகட்டணத்தை குறைக்காவிட்டால் கூட பரவாயில்லை. பல்கலைக் கழகத்திற்கே வராத மாணவர்களிடம் ஆய்வகக் கட்டணம், விளையாட்டு கட்டணம், கணினி கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்கள் வசூலிப்பதில் நியாயமில்லை என மாணவர்கள் கெஞ்சி கதறினர்.ஆனால், ஒரு பேராசைக்கார தனியார் நிறுவன முதலாளி மனநிலை கொண்ட சூரப்பா எந்த வகையிலும்,துளியளவும் கட்டணத்தை கடைசி வரை குறைக்கவில்லை!.இது நேர்மையான அணுகுமுறை தானா?
அடுத்தகட்ட நடவடிக்கையாக, தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளருக்கு மாணவர் குழு மின்னஞ்சல் அனுப்பியது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் துணைவேந்தரிடம் மாணவர்களின் கட்டண விவகாரத்தில் கரிசனத்தோடு நடக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர் தான் தமிழக அரசுக்கும் மேலான அதிகாரம் கொண்டவராயிற்றே..!
அடுத்தாக, அண்ணா பல்கலைக் கழகத்தின் பலதுறைகளுக்கு பேராசிரியர்கள் கிடையாது.காலி இடங்களுக்கு முறையாக, நேர்மையாக பேராசிரியர்களை தேர்வு செய்யாமல், அடிமாட்டு கூலிக்கு தற்காலிக பேராசிரியர்களைக் கொண்டு பல்கலையை நடத்தி வருகிறார். இதனால்,தகுதியான பேராசிரியர்கள் பலதுறைகளுக்கு இல்லாமல் மாணவர்கள் திணறிக் கொண்டுள்ளனர்.
காரணம் என்னவென்றால்,பேராசிரியர்களை தேர்வு செய்யும் போது இடஒதுக்கீடு முறை பின்பற்றப் பட வேண்டும்.அதில் சூரப்பாவிற்கு விருப்பமில்லை. அதனால் எவ்வளவு விரைவில் பல்கலைக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வாங்கமுடியுமோ அப்படி வாங்கிவிட்டால், இடஒதுக்கிடு இல்லாமல் தன் விருப்படி மற்ற மாநில மற்றும் வட இந்திய பல்கலை பேராசிரியர்களை தேர்வு செய்யலாம் என்பதே அவர் திட்டமாகத் தெரிகிறது. அத்துடன் மாணவர்களையும் இடஒதுக்கீடு இல்லாத வகையில் வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் எடுக்கலாம். அதிலும் முப்பது சதம் வெளி நாட்டு மாணவர்களை அனுமதிக்க முடியும் என்பதால் அதிக காசு பார்க்கலாம்!
இது குறித்து நமது அறம் இதழில், ’அண்ணா பல்கலையை பணம் காய்க்கும் மரமாக்க முயற்சி’ என ஏற்கனவே கவனப்படுத்தியுள்ளோம்.
இந்த சதிதிட்டத்தின் அங்கமாகத் தான் அவர் பாஜக அரசுக்கு மாநில அரசுக்கே தெரியாமல் கள்ளத்தனமாக கடிதம் எழுதி,உயர்கல்வி அந்தஸ்துக்கு உடனே அனுமதி கோரினார். அதில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணமாக ஆண்டுக்கு 314 கோடி திரட்டமுடியும் என்று அவர் சொன்னதை கவனப்படுத்த விரும்புகிறேன்.
ஆகா எவ்வளவு நேர்மையானவர்? எவ்வளவு சமரசமற்றவர்? உண்மைதான்! ஆனால், அந்த நேர்மையும், சமரசமற்ற தன்மையும் எப்படிப்பட்டது, பொது நலனுக்கு எதிரானது என்பதை நாம் உணர்ந்து கொள்வதற்கு மேற்படி விவகாரங்களைக் கூறினேன்!
எந்த ஒரு நேர்மையாளரும், தன்னிச்சையாக தான் உயர் அதிகாரத்தில் இருக்கும் இடத்தில் தன் மகளுக்கு முக்கிய வேலை போட்டுக் கொடுக்க துணியமாட்டார். அண்ணா பல்கலையை தன் வீட்டுச் சொத்து போலவும்,தான் அதன் முதலாளி போலவும் கருதுவது தான் சூரப்பாவின் பிரச்சினையே! இதற்கு தமிழக அரசு இசைந்து கொடுக்க மறுத்துள்ளது!
Also read
கல்வித்துறையில் எளியவர்கள் ஏற்றம் பெற்று வருவதை தடுக்க வேண்டும்! அதன் மூலம் எளியவர்களை எப்போதுமே அதிகாரமற்றவர்களாக வைத்திருந்து அடக்கியாள வேண்டும். என்ற பாஜக அரசின் கொள்கை திட்டப்படி துணை வேந்தராக அண்ணா பல்கலைகழகத்திற்குள் நுழைக்கப்பட்டவர் தான் சூரப்பா! அந்த திட்டப்படி அவர் சமரசமின்றி செயல்படுவதைத் தான் கமலஹாசன் புகழ்கிறார்! ”சூரப்பாவிற்கு ஒன்று என்றால் சும்மா இருக்க மாட்டேன்…’’ என சூளுரைக்கிறார்!
Leave a Reply