அதிமுக ஒன்றுபட வேண்டுமாம்!
பிரிந்து சென்றவர்கள் ஒன்றானால் தான் பலம் பெறுமாம்!
அடடா! என்னே ஒரு அக்கறை…!
இப்படிச் சொல்வது யார்? அதிமுகவில் இருந்து தனக்கு ஆதரவானவர்களை உருவி எடுத்துக் கொண்டிருக்கும் பாஜக!
சாத்தான் வேதம் ஓதுகிறது. அதற்கு பார்ப்பனிய சக்திகள் பலம் சேர்க்கின்றன.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற பாஜகவிற்கு இரவல் குரல் கொடுக்க இன்னும் ஒருவர் கிடைத்துவிட்டார். அவரது திருப்பெயர் செங்கோட்டையன்.
தற்போது அதிமுக அனுபவிக்கும் சிக்கல்கள் அனைத்திற்கும் காரணகர்த்தாவே பாஜக தான்.
அதிமுகவில் இருந்து ஒபிஎஸ்சை உருவி எடுத்து, வழக்கு போட வைத்து அந்த கட்சியின் சின்னத்தையே தேர்தல் ஆணையத்தை வைத்து முடக்கி மூன்றாண்டுகளாக சித்து விளையாட்டுக் காட்டிக் கொண்டுள்ளது பாஜக.
இது தான் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் வித்தையாகும். தற்போது செல்வாக்கில்லாத செங்கோட்டையனை தூண்டிவிட்டு எடப்பாடியை பலவீனப்படுத்த துடிக்கிறது பாஜக.
ஆக, அதிமுகவில் அடுத்தடுத்து உருவாகும் சிக்கல்கள், பிரச்சினைகள் அனைத்திற்கும் அடிநாதமாகத் திகழ்வது பாஜக தான்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒ.பி.எஸ்சை கையில் எடுத்தது பாஜக.
ஐயோ பாவம்! இன்று ஒபிஎஸ்சின் நிலை, அரசனை நம்பி புருஷனை இழந்த கதையாகிவிட்டது.
ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்த போதே, தான் அடுத்த முதலமைச்சராக காய் நகர்த்திய சசிகலா அன்றே அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி கமிஷனின் அறிக்கை சசிகலா மீதான சந்தேகத்திற்கு இன்னும் வலு சேர்த்துள்ளதால் அவர் மேலும் தனிமைப்பட்டுவிட்டார்.
இதுமட்டுமின்றி, அதிமுக ஆட்சியை பயன்படுத்தி அந்த குடும்பம் பெரும் சொத்துக்களை ஈட்டிய வகையில் தற்போதும் வழக்கில் சிக்கியுள்ளது.
ஜெயலலிதாவினாலேயே ஒதுக்கி வைக்கப்பட்டவர் டி.டி.வி தினகரன். அவரது அதிகாரத் தோரணைகளும், ஆணவச் செயல்பாடுகளும் அவரை அதிமுக தலைவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திவிட்டது. இப்போதும் அவர் மாறவில்லை. ”எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்க முடியாது. அதிமுக தொண்டர்களும், அமமக தொண்டர்களும் ஒன்று சேர்ந்து எப்படி வேலை செய்ய முடியும்?” என்கிறார். இப்படிப்பட்டவர் எப்படி கூட்டணியில் தொடர முடியும்?
செங்கோட்டையன் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக டெல்லி பாஜக தலைவர்களை சந்தித்து சதி திட்டம் தீட்டியும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது முதலாக அதிமுகவில் அவர் தனிமைப்பட்டுவிட்டார். எடப்பாடியும் அவரது கட்சிப் பதவிகளை பிடுங்காமல் தான் இத்தனை நாள் வைத்திருந்தார். காரணம், அவரது சீனியாரிட்டி கருதி.
கிட்டத்தட்ட 80 வயதுள்ள செங்கோட்டையன் 53 வருடங்களாக தன்னை அடையாளப்படுத்தி, அந்தஸ்த்து ஏற்படுத்திய இயக்கத்தை டெல்லி சுல்தான்களின் தூண்டுதலில் அழிக்க துணிந்த போதே அம்பலப்பட்டு போனார்.
இது போன்ற, ”கழிக்க வேண்டிய கழிசடைகளை சேர்த்துக் கொள். அது தான் அதிமுகவிற்கு பலம் சேர்க்கும்” என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். முதலில் ஒபிஎஸ் சசிகலா, தினகரன் மூவரும் ஒன்று சேரட்டும். அதுவே அவர்களால் முடியாது. இத்தனைக்கும் ஒரே சாதி. தங்களுக்கு தாங்களே ஒன்றுபட முடியாத இந்த மும்மூர்த்திகள் எப்படி அதிமுகவிற்குள் ஒத்திசைந்து செயல்படுவார்கள்.
எந்த ஒரு நல்ல மருத்துவரும் நோயாளிக்கு தரும் முக்கிய ‘அட்வைஸ்’ என்னெவென்றால், ”உடம்பில் உள்ள கழிவுகளை முறையாக வெளியேற்ற வேண்டும். மல ஜல வெளியேற்றம் சரியாக இருக்கும்படி உடம்பை பேணுங்கள்” என்பது தான்.
‘இப்படி மலஜலமாக வெளியேறிய கழிவுகளை மீண்டும் எடுத்து உணவில் சேர்த்தால் தான் உடல் பலம் பெறும்’ என்று எவ்வளவு தான் கூமுட்டையாக இருக்கும் மருத்துவரும் சொல்லமாட்டார்.
இதற்கு மேல் அதிமுக விவகாரத்தை விவரித்து பேசி புரிய வைப்பது வேஸ்ட்.
எடப்பாடி பழனிச்சாமி உண்மையிலேயே அதிமுகவை காப்பாற்ற விரும்பினால், அதிமுகவுடன் ஒட்டி உறவாடி குடி கெடுக்கும் கோடாலிக் காம்பான பாஜகவை வெட்டி தூக்கி எறிந்து, ‘நடப்பது நடக்கட்டும்’ எனத் துணிய வேண்டும். இல்லாவிட்டால், அதிமுகவிற்கு விமோசனமே இல்லை.
சாவித்திரி கண்ணன்


















ஆமாம். எடப்பாடி பழனிச்சாமி அதனை செய்வார் என்று நம்புகிறேன். தற்போது கட்சியிலிருந்து நீக்கப்படாமல் அமைச்சர் செங்கோட்டையனின் பொறுப்புகளை மட்டும் எடப்பாடி பழனிச்சாமி பறித்திருக்கிறார்.
செங்கோட்டையன் தனது பேட்டியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி மூன்று பேரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறுகிறார்.
முதலில் சசிகலாவிற்கு வருவோம். ஜெயலலிதாவை பார்க்க செல்பவர்களுக்கு ஒரு பாலமாக இருந்தவர். இவரை மீறி யாரும் ஜெயலலிதாவை பார்க்க முடியாது. தற்போது இவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
அடுத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இவர் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து பூட்டை உடைத்து களவாடியவர். சென்னை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்றும் புகார் உள்ளது. ஆனால் நடவடிக்கை இல்லை.
அடுத்தது டிடிவி தினகரன். ஆர் கே நகரில் கட்சியை எதிர்த்து நின்று அன்று ஜெயித்தவர். அதன் பிறகு வந்த தேர்தலில் எல்லாம் தோல்வியை கண்டவர். இன்றளவும் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று பகிரங்கமாக கூறி வருகிறார்.
இந்த மூவரையும் தான் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் இன்று செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் அவ்வாறு இவர்களை சேர்ப்பதற்கு கெடு விதித்தார். ஆனால் மறு நாளே அவர் மீது எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கை பாய்ந்தது.
இது அனைத்திற்கும் காரணம் பாஜக. ஒன்று மட்டும் பாஜக தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். பாஜகவால் வடநாட்டில் காட்டிய பிரித்தாளும் கைங்கரியம் இங்கு தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது.
உண்மையில் எடப்பாடி உண்மையில் எடப்பாடி அதிமுக வை காப்பாற்ற உளப்பூர்வமாக நினைத்தால் அதிமுக பிளவுக்கு காரணம் பாஜக தான் என்று வெளிப்படையாக அறிவித்து பாஜக வை கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும்.
அதனால் எடப்பாடி சிறைக்கு கூட செல்லலாம்.ஆனால் அதிமுக தொண்டர்கள்
எடப்பாடி யின் தலைமையை உறுதியாக
ஏற்றுக் கொள்வார்கள்.
தமிழ்நாட்டின் ஆட்சியிலும் எதிர்க்கட்சியாகவும் திராவிட இயக்கங்களே இருக்க வேண்டும்