இந்தியாவில் பத்து கோடிக்கு மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். ஆதிவாசிகளின் சம்மதமின்றி எங்களை இந்துக்களாக அரசாங்கம் பதிவு செய்வதை ஏற்கமாட்டோம். இந்து மதம் பற்றி எதுவும் எங்களுக்கு தெரியாது. எங்கள் தொன்மை அடையாளத்தை ஏன் அழிக்கத் துடிக்கிறீர்கள்..? என அரசாங்கத்தை எதிர்த்து ஆதிவாசிகள் போராடி வருவது குறித்த அலசல்;
மத்திய பிரதேசத்தில், ‘பில்’ என்கிற மிகப் பெரிய பழங்குடி இனத்தினர் உள்ளனர். இச் சமூகத்தைச் சேர்ந்த உமாங் சிங்கர், பழங்குடியினர் கூட்டம் ஒன்றில் சமீபத்தில் பேசியது அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
”நாங்கள் ஆதிவாசிகள். இந்து மதத்தினர் அல்ல. எங்களுக்கென்று பாரம்பரியமான தனித்த மரபு, கலாசாரம், பழக்கவழக்கங்கள் உள்ளன…” என்று என்றார். மேலும், தங்களை தனி மதமாக அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்?’’ என்றும் முழங்கினார்.
இது இந்துத்துவ தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எதிர்ப்பு தெரிவித்தனர். உமாங் சிங்கர், “எங்கள் தனித்த அடையாளத்தை இந்து மதத்தின் கீழ் கொண்டு வர பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கின்றன. அதை அனுமதிக்கமாட்டோம்” என்றார்.
இந்தியாவில் மிகப் பெரிய பழங்குடி இனக்குழுக்களில் ‘பில்’ முக்கியமானது. சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இவர்களின்” நாங்கள் இந்துக்கள் அல்ல” என்று அந்தக் காலத்தில் இருந்தே சொல்லிக் கொண்டுள்ளனர். எனினும் சமீபமாக இந்தக் குரல் ஓங்கி ஒலிப்பதனால் கவனத்தை ஈர்த்துள்ளது.

இவர்கள் மட்டுமல்ல…
ஜார்கண்ட், ஒடிசா, அஸ்ஸாம், நாகலாந்து, அருணாசலபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்..மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் பழங்குடி இனத்தவர்களான கோண்டா, பியார், சந்தாலா, நாகசியா போன்றவர்களும், தமிழ்நாட்டில் வாழும் பழங்குடிகளான இருளர்களும், தோடர்களும் “நாங்கள் இந்துக்கள் அல்ல. எங்கள் மதம் இயற்கையை வழிபடும் ‘சர்னா’. இதை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும்” என தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இவர்களும் சில கோடி பேர் இருக்கிறார்கள். தங்களது ‘சர்னா’ மதத்தை அங்கீகரிக்கக் கோரி கடந்த 2022-ல் தேசிய ஆதிவாசி பூர்வீக மத ஒருங்கிணைப்பு குழு முன்னெடுப்பில் டில்லியில் பெரும் போராட்டம் நடத்தினர்.
பழங்குடியினர் வழிபாடு எப்படிப்பட்டது?
பில், கோண்டா, பியார், சந்தாலா, நாகசியா ‘சர்னா’ உள்ளிட்ட அனைத்து பழங்குடியினருக்கும் உள்ள மத ஒற்றுமை… இயற்கை வழிபாடு.
இயற்கையை.. மரங்களை உயிராக நேசிக்கிறார்கள். அவற்றின் மீது செலுத்தும் அன்பு பழங்குடியினரின் வாழ்க்கை முறையாகவே – மதக் கோட்பாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது.

ஒவ்வொரு பழங்குடி இனக் குழுவுக்கும், (அப்பகுதியில் இருக்கும்) ஒரு மரம் முக்கியமானதாக இருக்கிறது. உதாரணமாக, சர்னா பழங்குடியினர் சால மரங்களை புனிதமாக கருதுகிறார்கள்.
அதே போல வேப்ப மரம், ஆல மரத்தடிகளில் தங்கள் தேவதைகளை நினைத்து வழிபாடு செய்கிறார்கள். நீத்தார் வழிபாடும் உண்டு.
மத ஊர்வலம், தேர் பவனி, விதவித விருந்துகள் என பெரு தெய்வ வழிபாடு எதுவும் கிடையாது. உருவ வழிபாடுமில்லை. பூசாரிகளை தங்களுக்குள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு கிடையாது.
வேதம், உபநிசதம், யாகம், ஆகமம், பகவத்கீதை, ராமாயணம்.. எதுவும் இவர்களுக்குத் தெரியாது.
ஆனால் அரசுக் குறிப்பேடுகளில் இவர்கள் இந்து மதத்தவர் என்றே குறிப்பிடப்படுகின்றனர்.
ஆகவே தான் அவர்கள் தங்களது உண்மையான மதத்தை அங்கீகரிக்க வேண்டும் என தொடர்ந்து போராடுகிறார்கள்.
இவர்களில் கணிசமானோர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறி இருக்கிறார்கள். ஆனால் சமீப வருடங்களாக இவர்களும், தங்களது பூர்வீக மதத்துக்காக போராடுகிறார்கள்.
தவிர, மக்கள்தொகை கணக்கெடுப்பில் தங்களது பழங்குடி மதத்தையே குறிப்பிட வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 2020-இல் பதவி ஏற்றது. அப்போது, “சர்னா சமயம் என தனி சமயம்” என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
ஆனால் ஒன்றிய அரசு ஏற்கவில்லை.
கர்நாடகத்திலும் எழும் தனிக்குரல்!
பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டத்தை வழக்கம்போல, “காங்கிரஸ் கட்சியின் சதி” என்றன பா.ஜ.கவும் சங் பரிவாரங்களும்.
இன்னொரு விசயத்தை கவனித்தால், பாஜக சொல்வது சரியல்ல என்பது புரியும்.
கர்நாடக மாநிலத்தல் பெரும்பான்மை இனமாக வாழும் லிங்காயத்துகள், தங்களை வீரசைவ லிங்காயத்துகள் என தனி மதமாகவே அங்கீகரிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதை ஏற்று கடந்த 2018-ல், கர்நாடக அரசு, லிங்காயத் பிரிவினரை தனி மதமாக அறிவிக்கும்படி ஒன்றிய அரசுக்கு கர்நாடக மாநில அரசு பரிந்துரை செய்தது.
இதையும் ஒன்றிய பாஜக அரசு ஏற்கவில்லை.
கடந்த 2023-ல் கூட, கர்நாடகாவின் தாவன்கரே பகுதியில், லிங்காயத்துகள் கூடி, தனி மத கோரிக்கையை வலியுறுத்தினர். அதில் பாஜக, காங் என பல கட்சியிலும் இருக்கும் லிங்காயத் சமூக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
”லிங்காயத்திசம் – ஒரு தனி மதம்” என்ற புத்தகத்தை எழுதிய முனைவர் என்.ஜி. மகாதேவப்பா, “மூடநம் பிக்கைகளைப் பெரிதும் எதிர்க்கும் மதமாக 12ஆம் நூற்றாண்டில் பசவண்ணா லிங்காயத்து மதத்தை உருவாக்கினார். வேதங்கள், புராணங்கள், ஆகமங்கள், யாகங்கள் ஆகியவற்றை நிராகரிக்கும் மதம் இது. தற்போது இந்து மதம் என்ற அறியப்படும் வழிபாட்டு முறையில் இருந்து லிங்காயத்து சமூகம் முற்றிலும் வேறுபடுகிறது. நடைபெற இருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பில், எங்களை தனி மதமாக பதிவு செய்ய வேண்டும்” என்றார். இதை அங்கு கூடிய அனைவரும் ஏற்றனர்.
தமிழ்நாட்டில் மதங்கள்!
தமிழ்நாட்டில் பழங்குடிகள் இருளர்கள், தோடர்கள் என சில பிரிவினர் உள்ளனர். இவர்கள் இயற்கையை வழிபடுகின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் எழுத்தாளர் வள்ளிநாயகம் முன்னெடுப்பில் நாங்கள் இந்துக்கள் அல்ல என்று கோஷமிட்டு சென்னையில் ஊர்வலம் நடத்தினார்கள்.

சாதி மத இழிவுகளுக்கு எதிராக தோன்றிய அய்யா வழி, மெய்வழி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர்களும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை.
அய்யா வழி தலைவர் பால பிரஜாபதி அடிகளா், தங்களை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.
மேலும், தமிழ்நாட்டில் சைவ சித்தாந்த வழி வந்தவர்கள், தங்களை இந்துக்கள் அல்லர் என்பதைப் பார்த்திருக்கிறோம்.
இப்போதும் கூட, வைணவர் ( அய்யங்கார்) – சைவைர் ( ஐயர்) ஆகியோரிடையே இந்த முரண்களைப் பார்க்கலாம்.
ஒரு முறை ஐயங்கார் நண்பரிடம், “ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்.. சிவராத்திரிக்காக கண் விழித்தீர்களா” எனக் கேட்டேன்.
“ஒரு வைணவனைப் பார்த்து இப்படி கேட்கலாமா” என கொதித்துவிட்டார்.
சைவம், வைணம் மட்டுமில்லை… சௌரம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம் என பல மதங்கள் தமிழ்நாட்டில் இருந்ததை வரலாறு சொல்கிறது.
ஆனால், இந்து என்ற மதம் எங்குமே இல்லை.
ஆம்.. ‘இந்து’ என்கிற சொல், வேத, புராண, இலக்கியங்கள் எதிலும் இல்லை. ‘திராவிடம், ஆரியம்’ என்கிற சொல்லாடல்கள்தான் காலம் காலமாக இருக்கின்றன.
இந்து மதத்தை உருவாக்கிய வெள்ளையர்கள்!
வெள்ளையர்கள் இந்தப் பகுதிகளை பிடித்து ஒரே அமைப்பாக உருவாக்கினார்கள். அவர்களுக்குத் தெரிந்தது, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள். இங்கு வந்ததும் பார்சி மதம் பற்றி தெரிந்துகொண்டனர். மற்றபடி, இங்கே ஆயிரக்கணக்கான மதங்கள் இருந்தன.
இங்கிருந்த பல மதங்கள் வெள்ளையருக்குப் புரியவில்லை. ஆகவே, “சிந்து நதிக்கு இந்தப் பக்கம் வாழும் மக்கள்” என்கிற அர்த்தத்தில் “இந்து” என குறிப்பிட்டனர்.
“சிந்து” என்று உச்சரிப்பதைவிட “இந்து” என உச்சரிப்பது அவர்களுக்கு எளிதாக இருந்திருக்கலாம். உதாரணமாக, எழும்பூர் என்பதை எக்மோர் என்பார்கள்.. தரங்கம்பாடி என்பதை டிரங்குபார் என்பார்கள். அப்படி இருக்கலாம்.
குறிப்பாகச் சொன்னால், “1787 ல் தான் ஆங்கிலேயர்கள் இந்து என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினர்” என்கிறார்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.
இப்படி வெள்ளையர் உருவாக்கிய இந்து என்கிற சொல்… பல மதங்களின் கூட்டு… 1799ல்தான் சட்ட அங்கீகாரம் பெற்றது.
வெள்ளையர் வரும் முன் இங்கே முறையான சட்டதிட்டங்கள் இல்லை. சட்டங்களை தொகுத்தது 1799-ல். தொகுத்தவர் சர்.வில்லியம் ஜோன்ஸ். அவர் தான் முதன் முதலில், ஹிந்து என்கிற பெயரை சட்டப் பூர்வமாக்கினார். அதாவது, “ஹிந்து லா” என குறிப்பிட்டார்.
இப்படி ஏற்கெனவே இருந்த மதங்களை – மக்களின் தனித்தனி பாரம்பரிய பழக்கவழக்கங்களை இணைத்து இந்து என்று ஒரே கூட்டில் அடைத்தனர் வெள்ளையர்கள். சுதந்திரம் பெற்ற காலத்தில் கூட பிராமணர்கள் தங்கள் மதத்தை சனாதன மதம் அல்லது ஆரிய மதம் என்றே அழைத்தனர். மற்ற வழிபாட்ட்டாளர்களை இவர்கள் ஏற்க மறுத்தனர். சுதந்திரத்திற்கு பிறகு பிராமணர்கள் அரசியல், சமூக தளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிட எண்ணிக்கை பலம் தேவைப்பட்டதால் இஸ்லாமியர்கள், கிறிஸ்த்துவர்கள், பெளத்தர்கள் அல்லாதவர்களை இந்துக்களாக அடையாளப்படுத்திவிட்டனர்.
கட்டுரையாளர்; டி.வி.சோமு
மூத்த பத்திரிகையாளர்
















Leave a Reply