இளைஞர்கள் போர்க் கோலம்! வீழ்ந்தது ஊழல் ஆட்சி!

-சாவித்திரி கண்ணன்

திகுதிகுக்கிறது நேபாளம்!  மட்டுமீறிய ஊழல், சொத்துக் குவிப்பு, ஆட்சியாளர் வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை, பெருகி வந்த வேலையின்மை… இத்துடன்  இவையெல்லாம் சமூக ஊடகங்களில் அம்பலமானதையடுத்து அதற்கு போடப்பட்ட தடை… ஆகியவற்றால் கொந்தளித்த இளைஞர்களின் அறச்சீற்றத்தால் ஆட்சியாளர்கள் ஓட்டம்;

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள அழகிய நாடான நேபாளத்தில் இளைஞர்களிடையே ஏற்பட்ட அறச் சீற்றம் காரணமாக ஆட்சி கவிழ்ந்துள்ளது. ”எங்களை ஆட்ட முடியாது, அசைக்க முடியாது, சட்டத்தை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுப்போம், போராட்டங்களை ஒடுக்கி விடுவோம்…” என காவல்துறையையும், இராணுவத்தையும் களத்தில் இறக்கினர் ஆட்சியாளர்கள்.

போ​ராட்​டக்​காரர்​களுக்​கும், பாது​காப்பு படை​யினருக்​கும் இடையே மோதல் மூண்​டது. பாது​காப்பு படை​யினர் கண்​ணீர் புகை குண்​டு​களை வீசி​யும், ரப்​பர் தோட்​டாக்​களால் சுட்​டும், தண்​ணீரை பீய்ச்​சி​யடித்​தும் போ​ராட்​டக்​காரர்​களை கலைக்க முயன்​றும் முடியாததால் துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

அதிமோசமான அடக்குமுறைகள், அரச பயங்கரவாதத்தை நிகழ்த்திய போதும், துப்பாக்கி சூட்டில் கண்மூடித்தனமாக 20க்கு மேற்பட்டோரின் உயிர்பலிகள் நடந்த போதும், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகாயமுற்ற போதும் இளைஞர்கள் பின் வாங்கவில்லை. ஒரு கட்டத்தில் ராணுவமும், காவல் துறையும் மக்களை எதிர்க்க முடியாமல் பின் வாங்கிவிட்டனர்.

இதன் பிறகு அமைச்சர்களின் வீடுகள், பிரதமரின் இல்லம்.. அனைத்திற்குள்ளும் இளைஞர் கூட்டம் நுழைந்தது. சிலரது வீடுகள் தீக்கிறையானது. அமைச்சர்கள் அடி, உதை வாங்கியபடி சாலைகளில் ஓட்டம் பிடித்த நிகழ்வுகள் அங்குமிங்கும் நடந்ததை அடுத்து அனைத்து அமைச்சர்களும் அரண்டு போயினர். அதிகாரமும், ஆணவமும் மக்கள் எழுச்சி வெடித்ததும் போன இடம் தெரியவில்லை.

அதன் பிறகு ஆட்சியாளர்களின் பேசும் தொனியே மாறிப் போனது. ”இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். உங்கள் உயிர் முக்கியமானது. உங்கள் எதிர்காலத்தை எண்ணி கலங்குகிறோம். …” என சாத்தான் வேதம் ஓதிய கதையாக அறிக்கை வெளியிட்டு பார்த்தும் ஒன்றும் பயனில்லை. ஆகவே, அடுத்தடுத்து என அமைச்சர்கள் அதிரடி ராஜுனாமா செய்து நாட்டை விட்டே ஓட முடியுமா? என திட்டமிட்டனர். பிரதமரும் ராஜுனாமா செய்ய ஆட்சி கவிழ்ந்தது.

இத்தகைய புரட்சியை எந்த அரசியல் கட்சியும் முன்னெடுக்கவில்லை. இன்னும் சொல்வதென்றால், ஆட்சித் தலைவரே கம்யூனிஸ்ட் பிரதமர் தான். ஊழல் அவர்களையும் விடவில்லை. இவர்களோடு நேபாள காங்கிரசும் கூட்டாளிகள். ஆக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என இரண்டுமே மக்கள் கோபத்திற்கு ஆளாகினர்.

இந்தச் சூழ்நிலையில் இளைஞர்களின் “நெபோ கிட்” என்ற ஆன் லைன் இயக்கம் சமூக வலைதளங்களின் வழியே விழிப்புணர்வு பதிவுகளை வெளியிட்டது. அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பயன்படுத்தும் ஆடம்பர வெளிநாட்டு கார்கள், சொகுசான பண்ணை வீடுகள், படாடோப வாழ்க்கை போன்றவற்றை தொடர்ந்து அம்பலப்படுத்தியது. ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் நேபாள இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறுவது விவாதிக்கப்பட்டது.

நெபோ கிட்ஸின் பிரச்சாரம் முக நூலிலும், யூ டியூப், எக்ஸ் தளத்திலும், இன்ஸ்டாகிராமிலும் டிக்-டாக்கிலும் தொடர்ந்து வெளிப்பட்டதையடுத்து சமூக ஊடகங்களை  ஆட்சியாளர்கள் தடை செய்தனர்.  இந்தத் தடையே போராட்டத்திற்கு வித்திட்டுவிட்டது.

நேபாளம் 2008 ஆம் ஆண்டு ஜனநாயக நாடாகி 17 ஆண்டுகளைக் கடந்துள்ளது. ஆனால், அரசியலமைப்பு செயல் பாட்டுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது.. இந்த காலகட்டத்தில் நேபாளத்தில் பதவியேற்ற எந்த அரசும் நிலைக்கவில்லை. இதனால் இந்த மிகக் குறுகிய காலத்தில் 14 அரசுகள் மாறியுள்ளன. இதனால், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையும், குழப்பங்களும் மேலோங்கின. ”மீண்டும் மன்னராட்சிக்கு திரும்ப வேண்டும்” என்றெல்லாம் கூட குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கின.

நேபாளம் பெரும்பாலும், அரச குடும்பத்தின் மன்னராட்சியிலேயே இருந்திருக்கிறது.   1846 முதல் 1951 பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஆட்டுவிக்கப்பட்ட  ராணா குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரதமராக இருந்துள்ளனர்.

நேபாளத்தை ஜனநாயக நாடாக்குவதற்கான முதல் முயற்சி 1951-இல் மாவோயிஸ்ட்கள் மற்றும் நேபாளி காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்டது. ராணாவின் குடும்பத்தினர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டனர்.

1959-இல் நேபாளத்தில் முதன் முறையாக நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு பிபி கொய்ராலா முதல் பிரதமரானார். இந்த ஜனநாயக முன்னெடுப்பு வெகு சீக்கிரம் தோல்வியுற்றது. 1960-இல் திரிபுவனின் மகன் மகேந்திர பீர் விக்ரம் ஷா தேவ் ஆட்சியைக் கைப்பற்றினார். அனைத்து ஜனநாயக செயல்பாடுகளையும் ஒடுக்கினார். 1960 முதல் 1990 வரை நேபாளத்தில் மன்னராட்சி கொடிகட்டிப் பறந்தது.  அரசியல் கட்சிகள் செயல்பட தடை இருந்தது.

மன்னராட்சிக்கு எதிரான மக்கள் இயக்கங்கள் பலம் பெற்றன. 1990 இல் சிறிய முயற்சியாக மன்னராட்சிக்கு அரசியலமைப்புக்குள் கொண்டுவரப்பட்டது.  எனினும், குடியரசு நாடாக்குவதற்கான கிளர்ச்சிகள், போராட்டங்கள்  தொடர்ந்தன. 1990 முதல் 2006 வரை நாட்டில் உள்நாட்டுப் கலவரங்கள் நடந்த வண்ணம் இருந்தன. இந்த காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் உயிர் தியாகங்கள் அரங்கேறின. இந்த வகையில் 2008 ஆம் ஆண்டு நேபாளம் ஜனநாயகத்திற்கு திரும்பியது.

நேபாள நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை 275 உறுப்பினர்கள் கொண்டதாகும். இதில், 165 பேர் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், மற்றுமுள்ள 110 பேர் விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

2015 முதல் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (ஒன்றிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கேபி ஷர்மா ஒலி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) புஷ்ப கமல் தஹல் அகா பிரசந்தா, நேபாளி காங்கிரஸ் கட்சியின் ஷேர் பகதூர் தேவ்பா ஆகியோர்  பிரதமர்களாக இருந்தும் நாடு பெரும் பின்னடவையே கண்டது.

தற்போது கம்யூனிஸ்ட் தலைவர் கேபி ஷர்மா ஒலி பிரதமராக இருந்தார். இவர் கடந்தாண்டு ஜூலை மாதம் ஆட்சிக்கு வந்தாலும், ஏற்கனவே மூன்று முறை ஆட்சியில் இருந்தவர் தான். இவர் மீது ஊழல் பேர்வழி, சீனக் கைக்கூலி போன்ற குற்றச்சாட்டுகளை மக்கள் வைக்கிறார்கள்.  நேபாளி காங்கிரஸ் தலைவர்களும் ஊழல்களில் சளைத்தவர்கள் அல்லர்.  இந்த கூட்டணி அரசாங்கத்தை தான் மக்கள் தற்போது தூக்கி எறிந்துள்ளனர்.  ஜனநாயகத்தையும் , மக்கள் தீர்ப்பையும் துஷ்பிரயோகம் செய்த வண்ணமே இவர்கள் ஆட்சி இருந்தது. அதன் விளைவே இளைஞர்கள் எழுச்சியால் இன்று ஆட்சி கவிழ்ந்துள்ளது.

இந்தியாவை சுற்றியுள்ள இலங்கை, வங்க தேசத்தையடுத்து தற்போது நேபாளிலும் மக்கள் புரட்சி வெடித்து ஆட்சியாளர்கள் ஓட்டம் பிடிக்கும் நிலை தோன்றியுள்ளது. அடுத்து இந்தியாவில் எப்போது..? என்பது தான் மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time