காஷ்மீர் பிரச்சினை உருவான வரலாறு ( பாகம்– 5 )
1990கள் முழுமையுமே ஆசாதி(azadi) கோஷமும், வன்முறை கிளர்ச்சியும், அதை எதிர்த்த அரசின் கொடூரமும் ஜம்மு காஷ்மீரை வன்முறை நிறைந்த ஆபத்தான பகுதியாக மாற்றியது.
வி.பி. சிங் (1989 டிசம்பர் – நவம்பர் 1990)
1990ம் ஆண்டு ஜனவரி 21ல் காவலரின் வன்கொடுமை மற்றும் கற்பழிப்பை எதிர்த்து அமைதியான பேரணி நடந்தது. ஊர்வலத்தினர் காக்கடல் பாலத்தில் வரும் பொழுது மத்திய ரிசர்வ் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். காக்கடல் படுகொலை என்றழைக்கப்பட்ட இந்த கொடூரத்தில் 100க்கும்மேற்பட்டோர் பலியாயானர். தொடர்ந்து ஹண்ட்வாரா படுகொலை, ஜகூரா படுகொலை என இந்திய படைகளின் துப்பாக்கி சூடுகளும் காட்டுமிராண்டிதனமும் உச்சத்தை தொட்டன.. இவையெல்லாம் வி.பி. சிங் பிரதமராக இருந்த போது நடந்த துயரங்கள்!

நரசிம்ம ராவ் (1991-1996)
அடக்குமுறையால் மனித உரிமைகள் காஷ்மீரில் மறுக்கப்படுவது ஐநா.சபை வரை சென்றது. ஒருபுறம் உள்நாட்டில் முஸ்லீம்களுக்கெதிராக இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என கூச்சலிட்டே வளர்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சியையும் , மறுபுறம் காஷ்மீரில் இஸ்லாமிய இளைஞர்களின் எழுச்சியையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது நரசிம்ம ராவ் அரசு.
காஷ்மீரில் ஜனநாயகம் செத்துவிடவில்லை என்றும் , இந்திய அரசு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள நாடு என்பதையும் உலகிற்கு காட்ட வேண்டிய அவசியத்தில் இருந்தார் நரசிம்ம ராவ் .
காஷ்மீர் விவகாரங்களுக்கான ஒரு புதிய துறை துவக்கப்பட்டு அதற்கு தனது நம்பிக்கைகுரிய ராஜேஷ் பைலட்டை (இணை அமைச்சர்- உள் துறை) நியமித்தார். அவர் காஷ்மீர் சென்று அனைத்து பிரிவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவும் பணித்தார்.
காஷ்மீரில் இந்தியாவின் அடக்குமுறையை கண்டித்து ஐ.நா பொதுச் சபையில் பாக்கித்தான் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து பேச பாஜ க தலைவர் வாஜ்பாயை அனுப்பினார்.ஆனால் காஷ்மீரில் இந்திய ராணுவத்தினரின் அட்டூழியம், 1993 மார்ச்சில் சோப்போர் படுகொலை 1993 அக்டோபரில் பிஜ்பேரா படுகொலை ,. ஜனவரி 1994ல் குப்வாராவில் படுகொலை என தொடர்ந்தது.’
அரை விதவைகள் (Half Widows)
இந்திய ராணுவத்தினரின் அடக்குமுறையால் ‘காணாமல் போன’ ஏராளமான முஸ்லீம்களின் மனைவியரை “அரை விதவைகள் “ என்று குறிக்கின்ற புதிய சொல்லாடலே ஏற்பட்டது. காணாமல் போன கணவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பது மனைவியருக்கு தெரியாத்தால் இப்பெண்கள் அரை விதவைகள் என அழைக்கப்பட்டனர்!

காஷ்மீருக்கு வழங்கும் சுயாட்சிக்கு வானம் தான் எல்லை‘ என்று நரசிம்மராவ் பிரகடனம் செய்தார். மேலும், இந்திரா–சேக் அப்துல்லா ஒப்பந்த அடிப்படையில் காஷ்மீருக்கு பல சலுகைகளை அறிவித்தார். சிறப்பு தகுதியும், அரசியல் பிரிவு 370ம் ரத்து செய்யப்படாது என உறுதி மொழிகளை கொடுத்தார். அவர் உறுதி அளித்த படி தேர்தல் 1996ல் நடந்தது, ஆனால் தேர்தல் முடிந்து பரூக் அப்துல்லா பதவியேற்ற பொழுது (அக்டோபர் 1996ல்) நரசிம்ம ராவ் பதவிக் காலம் முடிந்திருந்தது!
வாஜ்பாய் (1998-2004)
1992ல் பாபர் மசூதியை இடித்து வட மாநிலங்களில் தவிர்க்க முடியா சக்தியாக வளர்ந்த பாஜக, 1998ல் ஆட்சியில் அமர்ந்தது. கூட்டணி ஆட்சியானதால், அரசியல் பிரிவு 370 ஐ ரத்து செய்யும் கோரிக்கையை – ஒத்தி வைத்திருந்தனர் பாஜ க வினர்.
வாஜ்பாய் ஆட்சிக்கு வந்தவுடன் லாஹூர் சென்று பாக் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் அணு ஆயுதங்கள் பயன்பாடு அணு ஆயுத போட்டி ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி லாகூர் பிரகடனம் வெளியானது. இரு நாடுகளுக்குமிடையே இது ஒரு நல்ல துவக்கம் என கருதப்பட்ட வேளையில், கார்கில் போர் நடந்தது. அமெரிக்க அதிபர் கிளிண்டனின் தலையீட்டால் போர் முடிவுக்கு வந்தது.

2001 ஜூலையில் பாக் அதிபர் முஷாரப் இந்தியா வருகை தந்து இரு நாடுகளுக்கு இடையில் உள்ள பிரச்சினைகளை -காஷ்மீர் பிணக்கு உட்பட அனைத்து பிரச்சினைகளையும் – பேசிநிரந்த தீர்வை எட்டலாம் என்று கூறினார் .
பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தது. இரு தலைவர்களும் காஷ்மீரின் அனைத்து கட்சி ஹூரியத் மாநாட்டு (All Parties’ Hurriyat Conference) தலைவர்களையும் அழைத்துபேச்சு வார்த்தைகள் நடத்தினர். உடன்பாடுகள் எட்டபட்டதாக தகவல்கள் கசிந்தன.
இரு தலைவர்களும் ஆக்ராவில் உச்சி மாநாடு நடத்தி உடன்பாட்டில் கையொப்பமிட இருப்பதாக அறிவிப்பும் வந்தது!
ஆனால் திடீரென்று, எட்டப்பட்ட உடன்பாட்டிலிருந்து இந்தியா விலகுவதாகவும் பிரதமர் வாஜ்பாய் கையெழுத்திட போவதில்லை என அறிவிக்கப்பட்டது. அதற்கு காரணமாக முஷரப் மீதும், பாக்கித்தானின் உறுதிமொழி மீதும் இந்தியாவிற்கு நம்பிக்கையில்லை என்பன போன்ற
கவைக்குதவாத “காரணங்கள்” இந்திய ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டன.
உண்மையில், அன்று துணை பிரதமராக இருந்த எல் கே. அத்வானிக்கு இந்த உடன்பாட்டில் விருப்பம் இல்லாது தான் இப் பேச்சுவார்த்தை முறிவடைந்ததற்கான காரணம் என்பது வெட்ட வெளிச்சமானது.பல ஆண்டுகள் கழித்து , ஜூலை6,2015ல் இந்திய புலனாய்வு துறையின் முன்னாள் (RA&W.) தலைவர் ஏ.எஸ். துலாத் வெளிப்படையாக அறிவித்தார்..
எனவே, இந்தியா – பாக்கித்தான் இடையே அமைதி ஏற்படுவதோ, காஷ்மீர் பிரச்சினை்க்கு முடிவு கட்டுவதோ சில சக்திகளுக்கு பிடிக்கவில்லை. காரணம், அது அவர்களின் அரசியல் நலனுக்கு எதிராக இருக்கிறது என்பது தான். இத்தகைய “சக்திகள்” இரு நாடுகளிலும் இருக்கின்றன.
அகண்ட பாரதமும் , இந்து ராஷ்டிராவும் இங்கு ஏற்படுத்த விரும்பும் சக்திகள் , பாக்கித்தானுடன் நட்புறவையோ, காஷ்மீரின் பெரும்பான்மை முஸ்லீம் மக்களுடன் (முஸ்லீம்களின் ) சமரசத்தையோ, விரும்பவில்லை!.
இத்தகைய சக்திகளைத் தவிர Deep State எனப்படும் மற்றொரு சக்திக்கும், காஷ்மீரில் அமைதி ஏற்படுவதோ, இரு நாடுகளுக்குமிடையில் நட்புறவு ஏற்படுவதோ உகந்தது அல்ல.

கவுண்டர் இன்சர்ஜன்சியில் மூழ்கியுள்ள இந்திய ராணுவத் தலைமை, புலனாய்வு மற்றும் உளவுத் துறைகளின் உயர் அதிகார வர்க்கம், மற்றும் அரசு அதிகாரமட்டத்தின் உயர்நிலையிலிருக்கும் அதிகாரிகள் அடங்கிய Deep State என்ற “சக்தி வட்டத்திற்கு” நட்புறவிலோ, அரசியல் சமரசத்திலோ, அல்லது அமைதி திரும்புவதிலோ விருப்பம் இல்லை, ஏனெனில், அது அவர்களது நலன்களுக்கு எதிரானது என்பது தான்!
இந்திய பாராளுமன்றத்தின்மீது லஷ்கர்– இ – தாய்பா தீவிரவாதிகள் டிசம்பர் 2001 ல் நடத்திய தாக்குதல் அமைதியை விரும்பாதவர்களின் செயலே ஆகும்.
இத்தாக்குதலுக்கு ஒரு மாதம் முன்பு காஷ்மீர் சட்டமன்றம் ஒரு தற்கொலை படை தாக்குதலை சந்தித்தது. இதில் 35 பேர் பலியாயினர். இதனை தொடர்ந்து காஷ்மீர் சட்ட அமைச்சர் தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு பலியானார்.
ஜம்மு காஷ்மீரில் ,எதிர் கிளர்ச்சி (counter insurgency) நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ராணுவம் ஆபரேஷன் சர்ப்ப வினாஷ் என்ற எதிர் தாக்குதலை தொடங்கியது. ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று ராணுவம் கூறியது!!
பொன்னான வாய்ப்பு கிடைத்தும் அமைதியை ஏற்படுத்தாமலே வாஜ்பாய் அரசு விடைபெற்றது. ‘காஷ்மீரியத் -இன்ஸானியத்’ என்பவை வெறும் முழக்கங்களாகவே இருந்தன.
மன் மோகன் சிங் (2004-2014)
2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்தது. இந்தியா பாக் இடையே உறவுகளை சீராக்கவும் காஷ்மீர் பிரச்சினைக்கு முடிவு கட்ட இரு தலைவர்களும் – மன் மோகன் சிங் மற்றும் முஷாரஃப் – முயற்சித்தனர். பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் – 2004முதல் 2007 வரை நடந்தன.
மன்மோகன் சிங் தனது, ‘புதிய காஷ்மீர் ‘ என்ற முன்னெடுப்பிற்காக ,அரசிற்கு வெளியிலும் ஆலோசனைகளை கேட்டறிந்தார்.
பத்திரிக்கையாளர் பிரேம் சங்கர் ஜா, பி. ஜி. வர்கீஸ் வல்லுனர் கே. சுப்ரமணியம், முனாள் கவர்னர் என். என்.வோரா, பொருளாதார அறிஞர் ஹசீப் திரபு மற்றும் சிலருடன் கலந்துரையாடினார், அதனை தொடர்ந்து காஷ்மீரில் உள்ள அனைத்து கட்சிகளையும் கூட்டி வட்ட மேசை மாநாடு நடத்தி தீர்வுக்கான ஆலோசனைகளை கேட்டார்.
இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் அரசு அதிகாரிகள் பலரின் மறைமுக எதிர்ப்பும் குறிப்பாக தேசீய பாதுகாப்பு ஆலோசகர் நராயணனின் “முகஞ் சுளிப்பும்”(miffed) இருந்ததை, பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த திரு சஞ்சய் பாரு ,
தனது புத்தகமான ‘Accidental Prime minister’ என்ற நூலில் சஞ்சய் பாரு பதிவு செய்துள்ளார்.
பிரதமரின் முயற்சியின் விளைவாக நான்கு அம்சங்கள் அடங்கிய மன்மோகன்– முஷாரப் திட்டம் (Manmohan-Musharraf Formula ) வரையறுக்கப்பட்டது.

# காஷ்மீரை ஆசாத் காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் என பிரிக்கும் எல்லையை (Loc) வெறும் கோடாக பாவித்து தடையற்ற வணிகத்தை இரண்டு புறமிருந்தும் ஊக்குவித்தல்,
# எல்லையின் இரு பறங்களிலும் உள்ள உள்ளாட்சி அரசமைப்புகளை உறுதிபடுத்துதல்
# இரு புறமும் உள்ள மக்களிடையே கூட்டுறவை மேம்படுத்தி , எல்லையின் இருபுறமும்உள்ள மக்களின் பொதுநலனை முன்னிட்டு அதற்கான அமைப்புகளை உள்ளூர் மக்களை கொண்டே நிர்வகித்தல்
# அமைதியை ஏற்படுத்திய பிறகு படிப்படியாக , இரு நாடுகளும் படைகளை பின்வாங்குதல்
என்ற நான்கு அம்சங்களை கொண்ட திட்டம் வகுக்கபட்டது.
மன் மோகன் சிங் , கியூபா தலைநகர் ஹவானாவில், மீண்டும் பாக் அதிபர் முஷாரப்புடன் நடந்திய பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு முக்கியமான வளர்ச்சி ஏற்பட்டது. தீவிரவாத செயல்களை , எல்லைதாண்டிய பயங்கரவாத செயல்களை , கட்டுக்குள் கொண்டுவர Joint Anti Terrorism Institutional Mechanism – JATIM தீவிரவாத செயல்களுக்கெதிரான இரு நாடுகளின் கூட்டு அமைப்பை நிறுவ இரு தலைவர்களும் ஒத்துக்கொண்டனர். பாக்கித்தான் தீவிரவாத்த்தை ஊட்டி வளர்க்கிறது, ஆதரவு கொடுக்கிறது என்ற வாதங்களை கணக்கில் கொண்டு பாக்கித்தான் அரசும் தீவிரவாத செயல்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தை இந்த முயற்சி முன்வைக்கிறது.
இதற்கு இந்திய அரசியல் கட்சி (பா ஜ க) எதிர்ப்பு தெரிவித்தது கவனிக்கதக்கது.
இந்தியாவில் எழும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள மன்மோகன் சிங் முயற்சிக்கையில்
பாக்கித்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் படுகொலை (2007) நடந்தது.
முஷாரப்பிற்கு தீவிரவாதிகள் விடுத்த பெரும் சவாலாக இப்படுகொலை இருந்தது. பாக்கித்தான் ராணுவத்தை சார்ந்த ஐ எஸ் ஐ யின் அரவணைப்பில் வளர்ந்த தீவிரவாதிகள்
ஐ எஸ் ஐ யின் கட்டுப்பாட்டை மீறி பாக் அரசை, பாக அரசியல்வாதிகளை பதம் பார்க்க தொடங்கிய வேளையில் முஷாரப்பினால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கவும், இந்தியாவுடன் அமைதிவழி காணவும் இதுவரை தான் எடுத்த முயற்சிகளை மேற்கொண்டு நகர்த்தவும் முடியவில்லை.
மும்பை தாக்குதல்
இந்த பின்னணியில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்பாக்கித்தானை சார்ந்த லஷ்கர இ தாய்பா வின் கைவரிசை எனத்தெரிந்தபின் இந்திய பாக் உறவுகள் மோசமடைந்தன.
ஜம்மு காஷ்மீரிலோ, இந்திய ராணுவத்துக்கு எதிராக ஆயதமெடுத்த காஷ்மீர் இளைஞர்கள் இப்பொழுது ஆயதங்களை வீசிவிட்டு சாதாரண கற்களை கையில் எடுத்து இந்திய அரசுக்கும்,ராணுவத்திற்கும் எதிராக தெருக்களில் இறங்கினர்.
கல்லெறிதல் (stone pelting) என்பது இந்திய அரசுக்கெதிரான காஷ்மீர் இளைஞர்களின் ஒருவகை எதிர்ப்பே ஆகும் . கல்லெறிந்து போராடுபவர்களில் ஆகப்பெரும்பான்மையினர் பள்ளி மாணவர்களும், இளைஞர்களும், கல்லூரியில் பயிலுபவர்களுமாவர். இவர்களை எதிர்க்க இந்திய ராணுவத்தினர் பெல்லட் குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் சில சமயங்களில் கவட்டைகளையும் பயன்படுத்தினர். இதனால் ஏராளமான இளைஞர்கள் கண்ணில் சுடப்பட்டு பார்வையோ, அல்லது ஒரு கண்ணோ இழந்தனர். தலைக்காயங்களும் பெருகின.

அமர்நாத் நில ஒப்படைப்பை எதிர்த்து 2008ல் தோன்றிய கிளர்ச்சியில் இத்தகைய போராட்ட வடிவம் உரு பெற்றது. இதை தொடர்ந்து 2010 ல் நடந்த கிளர்ச்சியிலும் கல்லெறிந்து
போராடுவது அன்றாட நிகழ்வாக காஷ்மீரில் தொடர்ந்தது.
உலகிலேயே அதிக ராணுவமயமாக்கப்பட்ட பகுதியான காஷ்மீரில் பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் இந்திய அரசுக்கெதிராக, ராணுவத்திற்கெதிராக ஆயுதங்களை கையிலெடுக்காமல் சாதாரண கற்களை கையில் எடுத்து போராட தொடங்கியது இதுவரை உலகம் கண்டிராத புதுவித போராட்ட முறையாக உருவெடுத்தது. காஷ்மீர் போராளிகளின் மேல் குத்தப்பட்ட முத்திரைகளான “பயங்கரவாதிகள்”, “பாக்கித்தான் கைக்கூலிகள் “ போன்ற முத்திரைகளை இப்போராட்டங்கள் துடைத்து எறிந்தன. மக்கள் எதிர்ப்பின் வடிவமாக திகழ்ந்த இந்த போராட்டம் ராணுவத்தை குவித்து வைத்திருக்கும் இந்திய அரசுக்கு ஒரு தார்மீக சவாலை வெளிப்படுத்தியது என்று காஷ்மீரை சார்ந்த மூத்த பத்திரிக்கையாளர் திரு. பரவேஸ் புகாரி குறிப்பிடுகிறார்.
தமிழகத்தை சார்ந்த பத்திரிகையாளர மாலினி பார்த்தசாரதியோ, “காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய கொடூரமான கொலைகளே , காஷ்மீர் இளைஞர்களின் இந்த கல்லெறி போராட்டத்தை இயக்குகிறது” என்று கூறியுள்ளார்.(The Hindu 2016)
அடக்குமுறைகளுக்கும், துப்பாக்கி சூட்டிற்கும் , கொலைகளுக்கும் மத்தியில் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறை, இன்று கல்லெறி போராட்டத்தில் இறங்கி உள்ளது.
ஜம்முவிற்கும் காஷ்மீருக்கும் இடையே ஏற்பட்ட விரிசலை அமர்நாத் யாத்ரீகர்களுக்கான நிலம் ஒதுக்கீடு மேலும் விரிவாக்கியது. இந்த போராட்டத்தை தங்களது வாக்கு வங்கியை
அதிகரிக்க ஜம்முவில் பா ஜ க பயன்படுத்தி கொண்டது. இதன் விளைவாக ஜம்மு கலவரம், காஷ்மீர் முற்றுகை, எல்லை கோடு நோக்கிய பேரணி , துப்பாக்கி சூடு, படுகொலை என
பிரச்சினைகள் கொதிநிலையை அடைந்தன. மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த அரசுகள்
கையை பிசைந்து கொண்டு ராணுவத்தினரை காஷ்மீரில் குவித்து அமைதிக்காக ‘ஜபம்‘ செய்தனர்.
எந்த கட்டுக்கும் அடங்காத ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லை பாதுகாப்பு படை, துணை ராணுவப்படை மற்றும் காஷ்மீர் காவல்துறை இவை போதாதென்று சிறப்பு படை என போலீஸ் ராஜ்ஜியமாக மாறிய காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்பட்டன.
காணாமல் போன கணவர்களின் “தலைவிதி” குறித்த சந்தேகம் அம்மனைவியருக்கு மட்டுமின்றி முஸ்லீம் அறிஞர்களிடமும் தலைவலியை ஏற்படுத்தியது.ஒருமித்த கருத்து தோன்றவில்லை. காஷ்மீரில் பல ஆண்டுகாலமாக உழன்று வரும் இந்த “உளவியல் பிரச்சினைக்கு “ முடிவுகட்டும் வகையில் முஸ்லீம் மத அறிஞர்கள் குழு டிச.26,2013. அன்று ஒரு ‘ஃபத்வா’ வெளியிட்டது. அதன்படி நான்கு வருட காத்திருப்பு காலத்திற்கு பிறகு அரை அல்லது பாதி விதவை பெண்கள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
பாரமுல்லா மாவட்டத்தில் மூன்று இளைஞர்களை , சி ஆர் பி எஃப் படை கொன்றது. “மச்சில் போலி என்கவுண்டர்” எனப்படும் இந்த படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில்17 வயது நிரம்பிய துபெய்ல் மத்தூ என்ற இளைஞர் காவலர்களால் சுட்டு கொல்லப்பட்டது மேலும் கிளர்ச்சியை தூண்டியது. இதில் 11வயதே நிரம்பிய சிறுவன் உட்பட 117 பேர் காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஆர்ப்பாட்டங்களும், அரசு வன்முறையும் சுழல்வட்டமாக மேலும் மேலும் பெருகின, அரசோ ராணுவத்திற்கு அதிகார்த்தை கொடுத்துவிட்டு, பேந்த பேந்த விழித்தது.
‘ஆம்னெஸ்டி அமைப்பு’ இந்திய துணை ராணுவத்தினர் , போராடும் இளைஞர்களை நோக்கி சுடுவதை தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தது. ராணுவத்தினருக்கு சிறப்பு படை சட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பை – immunityயை- விலக்க வேண்டும் என்றும், காஷ்மீரில் படையினர் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்தன. பிரதமர் மன்மோகன் சிங் ,ராணுவம் தனது வழிமுறைகளில் (procedures) மாற்றத்தை கொண்டுவரவேண்டுமென்று பரிந்துரைத்தார்.
Also read
ஆனால், ராணுவத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பை விலக்க கூடாது, அவர்கள் நாட்டை காப்பவர்கள் என காஷ்மீர் பண்டிட்டுகள் அமைப்பு அன்றைய அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடம் மனு கொடுத்தனர். பாஜகவும் இக் கோரிக்கையை வலியுறுத்தியது.
மத்திய அரசு நிலைமையை “சமாளிக்க” 39 பேர் அடங்கிய அனைத்து கட்சி எம். பிக்கள் குழுவை ஜம்மு – காஷ்மீருக்கு அனுப்பியது. ப.சிதம்பரம் தலைமையில், அருண் ஜெய்டலி, சுஷ்மா சுவராஜ், பாசுதேப் ஆச்சார்யா, குருதாஸ் தாஸ்குப்தா, ராம்விலாஸ் பாஸ்வான், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் அடங்கிய குழு விரைந்தது, ஆலோசனைகள் நடத்தியது.
தொடர்ந்து மத்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாதிக்கப்பட்வர்களுக்கு இழப்பீடு, கைது செய்யபட்ட மாணவர்கள் விடுதலை, கல்வி நிறுவனங்கள் திறப்பு, காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரை குறைக்க ஆலோசனைக்குழு, காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாட குழுவை அமைத்தல் போன்றவை அறிவிக்க பட்டன.
இவை யாவையுமே நிலைமையை சமாளிக்க எடுக்கப்பட்ட அரைகுறை முயற்சிகளாக இருந்தன. “தீவிரவாதிகளின் “ எண்ணிக்கை இந்திய ராணுவத்தின் கணக்கில் குறைந்தாலும், காஷ்மீர் மக்கள் தமது அன்றாட வாழ்வில் எந்த மாற்றத்தையும் உணரவில்லை.
காஷ்மீரிலிருந்து ராணுவமும் குறைக்கப்படவில்லை. ராணுவத்தினருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு கவசம் நீக்கப்படவில்லை. இந்த நிலைமையில் 2014 தேர்தல் வந்தது.
(தொடரும்)
கட்டுரையாளர்; ச.அருணாசலம்














Leave a Reply