வரம்பு மீறும் தேர்தல் ஆணையம்! வருடிக் கொடுக்கும் உச்சநீதிமன்றம்!

ச.அருணாசலம்

எந்தக் குற்றச்சாட்டையும் பொருட்படுத்தாமல் – அனைத்து அட்டூழியங்களையும் தொடர்கிறது தேர்தல் ஆணையம். உயிராக போற்ற வேண்டிய ஜனநாயக மாண்புகளை, மயிராக கருதி செயல்படும் தேர்தல் ஆணையம், பீகாரைக் கடந்து அடுத்து தமிழகத்திலும் தகிடுதத்தங்களை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது! இதற்கு உச்ச நீதிமன்றம் பச்சை கொடி காட்டுவதா?

பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தங்கள் மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் “ சட்டத்திற்கு புறம்பான” வை என அறிவிக்க கூறி ADR ( Association for Democratic Reforms) அமைப்பும், அரசியல் கட்சி தலைவர்களும் ( மனோஜ் ஜா, மகுவா மொய்த்ரா, மற்றும் யோகேந்திர யாதவ் போன்றோர்) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

உச்ச நீதிமன்றம், SIR நடவடிக்கை என்பது அரசியல் சாசன வழி முறைகளை மீறிய செயலா? இல்லையா? என்பதை தீர்மானிக்க இன்று வரை முயற்சிக்கவில்லை. மாறாக, தேர்தல் ஆணையம் எடுக்கும் இந்த திருத்த நடவடிக்கைகள் – அவை சட்டரீதியானது தானா? என்பதை தீர்மானிக்கு முன்னரே – எத்தகைய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதில் பொதுவான ஆலோசனைகளை வழங்குவதில் முனைப்பு காட்டியதை என்னவென்று சொல்வது?

2003 முதல் வாக்காளர் பட்டியலில் இணைந்த வாக்காளர்களை – இது வரை பல தேர்தல்களில் வாக்களித்தவர்களை- பட்டியலிலிருந்து அதிரடியாக நீக்கி அவர்களிடம் ஆவணங்கள் கேட்கும் முறைகேட்டை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்கவில்லை!

மாறாக, தேர்தல் ஆணையம் சான்றாக கேட்கின்ற ஆவணங்களில் ஆதார் அட்டையோ, ரேஷன் அட்டையோ, வாக்காளர் அடையாள அட்டையோ இல்லாமல் இருப்பது தவறு என்று அறிவிக்காமல் ஆதார் அட்டையை சான்று ஆவணங்களில் ஒன்றாக -12வது- ஆவணமாக சேர்த்துக்கொள்ள கோரிக்கை விடுத்தது உச்ச நீதிமன்றம். இது நடந்த நாள் ஜூலை 10,2025.

ஆனால் ஜூலை 21 அன்று தே. ஆணையம் உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், ஆதார் அட்டை குடியுரிமையை நிரூபிக்கும் சான்றல்ல என்பதால் ஆதார் அட்டையை சான்றாக ஏற்க முடியாது என்று கூறியுள்ளது. எதிர் மனுதார்ர்களான ADR அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், உச்ச நீதிமன்றம் உத்திரவு ஏதும் போடாமல் வாய்மொழியாக தேர்தல் ஆணையத்திடம் ஆதார் அடையாள அட்டையை பத்தோடு ஒன்றாக இணைக்க கெஞ்சியது!

வழக்கு ஜூலை 28-ல் மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது கூட உச்ச நீதிமன்றம் உறுதியான உத்திரவை போடாமல் திருத்தம் என்பது ஒட்டுமொத்த நீக்கமாக இருக்க கூடாது. திருத்தத்தின் நோக்கம் அதிக வாக்காளர்களை இணைப்பதாக இருக்க வேண்டும் என தேர்தல் ஆணயத்திடம் கூறியது.

ஏகப்பட்ட குளறுபடிகளுடன், பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் – களத்தில் நடக்கும் மோசடிகள் இணையதளங்களில் அம்பலமான பிறகு –

ஆகஸ்டு முதல் தேதி வெளியான வரைவு அறிக்கையில் (Draft roll), 65 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதை நாடு அறிந்தது.

ஆகஸ்டு 6 அன்று, ADR அமைப்பு நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களையும் அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களையும் தேர்தல் ஆணையம் தர மறுப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டது. இம்மனுவிற்கு -ஆகஸ்டு9ல் – பதிலளித்த தேர்தல் ஆணையம்,

“நீக்கப்பட்டவர்களின் பெயர்களையோ, அதற்கான காரணங்களையோ வெளியிடுமாறு ஆணையத்தை எந்த சட்டமும் வற்புறுத்தவில்லை, எனவே, அவற்றை வெளியிட முடியாது என்று கூறியது. ஆகஸடு 14ல் கூடிய உச்சநீதிமன்றம், நீக்கப்பட்டவர்களின் பெயர்களை , அதற்கான காரணங்களுடன் தே. ஆணைய இணைய தளத்தில் வெளியிடுமாறு அறிவுறுத்தியது. அத்துடன் ஆதார் அட்டையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் தே. ஆணையத்திடம் மீண்டும் மன்றாடியது, உச்ச நீதிமன்றம்.

இதற்கு பிறகே தேர்தல் ஆணையம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை வெளியிட்டது.

இதனால், ஏழை, பாளைகளும் (புலம் பெயர்ந்தவர்கள் ) தலித்துகளும் சிறு பான்மையினரும், மகளிரும் பெறுமளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தகவல்கள் அம்பலமாயின. இறந்தவர்கள் எண்ணிக்கை 22 லட்சங்களாக இருந்தது!

இத்தகைய வாக்குத் திருட்டை எதிர்த்த மக்கள் எழுச்சி பீகாரில் வாக்கு அதிகார யாத்திரையாக பரிணமித்தது. ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் மக்களை அணி திரட்டி அநீதியை உரைத்தனர்.

யாரையும் கலந்து ஆலோசிக்காமல், எத்தகைய முன்னறிவிப்பும் இன்றி, ஒரு தலைபட்சமாக அறிவிக்கப்பட்ட தேர்தல் சிறப்பு திருத்த SIR நடவடிக்கை தட்டி கேட்பார் யாருமின்றி தனது

பயணத்தை நடத்துகிறது. நாளை இது அனைத்து மாநிலங்களிலும் நடக்கப் போகும் அலங்கோலங்களுக்கு கட்டியங்கூறும் வகையில் பீகாரில் இன்று நடைபெறுகிறது எனலாம்.

முன்னாள் தேர்தல் ஆணையர்கள் ஓ.பி. ராவத், எஸ். குரேஷி, மற்றும் அசோக் லாவசா போன்றோர் மட்டுமின்றி, ஏராளமான முன்னாள் உயர் அரசு அதிகாரிகளும், சிவில் அமைப்புகளும், அறிவார்ந்த மக்களும் இம்முயற்சியை கேள்வி கேட்கும் பொழுது, ஆளுங்கட்சியான பாஜ க மட்டுமே இம்முயற்சியை ஆதரிக்கிறது என்பதே இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை படம்பிடித்து காட்டுகிறது.

நடு நிலைமை, வெளிப்படைத்  தன்மை போன்ற குணநலன்கள் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொண்டனர். சட்டத்தை திருத்தி, உச்சநீதிமன்ற வழிகாட்டலை மறுத்து, மோடி அரசு நியமிக்கும் தேர்தல் ஆணையர்கள் தாங்கள் அரசமைப்பு சட்டத்திற்கு விசுவாசமாக இருப்பதை விட, ஆட்சியாளர்களுக்கு – தங்களை நியமித்தவர்களுக்கு – விசுவாசமாக இருப்பதையே கொள்கையாக கொண்டுள்ளனர் என்பது, அவர்கள் நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் உலகம் அறிந்து கொண்டது.

ஆனால், இந்த உண்மை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு வரவில்லை என்பது எதைக் காட்டுகிறது?

தான் தோன்றிதனமான நீக்கங்கள், கேள்விக்குரிய விடுதல்கள், ஆகியவற்றினூடே தேர்தல் ஆணையம் வெளியிடும் முரண்பட்ட அறிவிப்புக்கள், மறைத்தல்கள் பீகார் வாக்கு திருத்தங்களில் நீக்கமற நிறைந்துள்ளதை அனைத்து ஊடகங்களும் பொது வெளியில் பகிரங்கமாக வெளிப்படுத்துகின்ற வேளையில், ஆட்சேபனைகள் தெரிவிக்க வேண்டிய இறுதி நாளான செப்டம்பர் முதல் தேதியும் வந்தது. தேர்தல் ஆணையம் தனது ஜூன் 24 உத்திரவில் , ஆட்சேபனைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் செப்டம்பர் முதல் நாளே இறுதி நாள் என அறிவித்து இருந்தது.

பீகாரில் உள்ள அனைத்து கட்சிகளும் – பா ஜ க தவிர்த்த – தேர்தல் ஆணைய அலுவலர்களின் (BLO) நடவடிக்கைகள் குறித்தும், ஆணையத்தின் மோசடி நிறைந்த பொய்யான அறிவிப்புகள் குறித்தும் பல கேள்விகளை எழுப்புகின்றனர்.

‘அரசியல் கட்சிகள் பூத் ஏஜெண்டுகளை நியமிக்கவில்லை, அவர்கள் வாக்காளர்களுக்கு உதவவில்லை, அவர்கள் ஆணையத்தை குறை கூறுவதில் தான் அக்கறையுடன் திகழ்கின்றனர், வாக்காளர்களை பாதுகாப்பது அவர்களது நோக்கமல்ல’ என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞர் திவிவேதி உச்சநீதிமன்றத்தில் அரசியல் கட்சிகளை சாடியுள்ளதை கண்டோம்.

வாக்காளர் பட்டியலை தயாரிப்பதும், அனைத்து மக்களையும் வாக்களார்களாக சேர்பதும் தேர்தல் ஆணையத்தின் பணி அல்லவா? இதில் பூத் ஏஜெண்டுகளின் பங்கு எங்கு வருகிறது? வாக்கு பதிவின் போது அந்த சாவடியியில் உள்ள வாக்காளர்கள் தான் வாக்களிக்கின்றனரா? என்பதை சரிபார்க்கும் ஒருநாள் பணியை தவிர, மற்ற விவரங்கள் பற்றி தமிழக பூத் ஏஜெண்டுகளுக்கே தெரியாத போது பீகார் மக்கள் என்ன செய்வர். சுமையை பூத் ஏஜெண்டுகள் மீதும், அரசியல் கட்சிகள் மீதும் ஏற்றும் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் எழுப்பும் ஆட்சேபனைகளை குற்றச்சாட்டுகளை, ஆலோசனைகளை புறந்தள்ளுவதேன்?

இவ்வளவு குளறுபடிகளுக்கு பிறகும் உச்சநீதிமன்றம் விசாரணையை நீட்டித்து கொண்டே போவது ஒரு புரியாத புதிராக பலருக்கும் தோன்றுவதில் வியப்பில்லை.

இந்தச்சூழலில் செப்டம்பர் 1 க்கு பிறகும், ஆட்சேபனைகள் மற்றும் இணப்பிற்கான மனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளும் என ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. இப்பொழுதும் உச்சநீதிமன்றம் இந்த தீவிர சிறப்பு திருத்தத்தை நிறுத்தி வைக்காமல், தேர்தல் ஆணையத்தின் கால அவகாச நீட்டிப்பை ஏற்றுக் கொண்டுள்ளது நமக்கு வியப்பை தருகிறது.

இவ்வழக்கை விசாரிக்கும் சூர்யகாந்த் மற்றும் ஜோயமாலா பாக்சி அமர்வு ஒரு அழுத்தத்தின் கீழ் தான் இவ்வழக்கை விசாரிக்கிறது என்றும் சூர்யகாந்த் அவர்கள் மீது பணி விதிகளை மீறுதல், முறைகேடான சொத்து குவிப்பு, சட்டவிதிகளை மீறுதல் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்னாள் உச்சதீதிமன்ற நீதிபதி கோயல் 2018-ல் அளித்துள்ளார். அந்த புகார் மனு “நிலுவையில்” உள்ளது என்றும் கூறப்படுகிறது.

கால அவகாச நீட்டிப்பு உண்மையில் ஒரு நிவாரணமா? என்று உச்சநீதிமன்றத்தை தான் கேட்க வேண்டும்.

இத்துடன் ஆட்சேபனை மனுக்களை, ஆதார் அடையாள அட்டையுடன் இணைய தளத்திலோ, நேரடியாகவோ சம்பந்தபட்டவர்கள் சமர்ப்பிக்கலாம், தேர்தல் ஆணையம் அம் மனுக்களின் உண்மைத் தன்மையை பரிசோதித்து மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உடனே இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என வரவேற்று சில ஊடகங்கள் கொண்டாடுவதை பார்க்கிறோம் .

வேறு சில ஊடகங்களோ, உச்சநீதிமன்றம் SIR நடவடிக்கைக்கு தடை விதிக்கவில்லை, தேர்தல் ஆணையத்தின் முயற்சி சரியானது தான், எதிர்கட்சிகளின் கோரிக்கைகள் அரசியல் நோக்கம் கொண்டவை என செய்திகளை வெளியிடுகின்றன.

எது உண்மை?

ஏற்கனவே 2019 பொது தேர்தலின் போது நடந்த தில்லு முல்லுகள் பற்றி விசாரணை இல்லாமல் வாக்கு எண்ணிக்கை விகிதத்தை தாமதமாகவும், தாறுமாறாக அதிகரித்தும் அறிவிக்கும் மர்மத்தை விளக்காமல்,

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் நடந்த அதீத வாக்காளர் சேர்ப்பின் மர்மத்தை அவிழ்க்காமல், விசாரிக்காமல், பெங்களூரு மகாதேவ்புரா தொகுதியில் நடந்த போலி வாக்காளர் சேர்ப்பின் மர்மத்தை விளக்காமல், விசாரிக்காமல் …

பீகாரில் SIR ஐ திணிக்கும் தேர்தல் ஆணையத்தின் நடைமுறை , வாக்கு திருட்டை சட்டபூர்வமாக நடத்தும் முயற்சி தான். இதை தட்டி கேட்க முன் வராத உச்ச நீதிமன்றம்!

ஆதார் அடையாளத்தை – மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 23(4) ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆதாரை- ஏற்றுக் கொள்ளும்படி ஆணையத்தை மன்றாடுவதும், 77 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் செப்டம்பர் 9 அன்று ஆதாரை 12வது ஆவணமாக சேர்த்து கொள்ளப்படும் என அறிவிப்பதும் எதை காட்டுகிறது?

அப்படியானால், தேர்தல் தேதி அறிவிக்கபடும் வரை திருத்தங்கள் தொடருமா? தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் பட்டியல் இறுதி செய் யப்பட வேண்டும் – சேர்க்கைகளோ, நீக்கங்களோ

தடை செய்யப்பட வேண்டும்- என்ற சட்டத்தின் நிலை இப்பொழுது என்ன? என்ற கேள்விகளுக்கு யார் விடை கூறுவார்கள்.

மொத்தத்தில் வழக்கின் மூல கோரிக்கையில் நீதிமன்றம் தீர்மானமான முடிவு ஏதும் எடுக்காமல் வழக்கை இழுத்தடிப்பது, ஏற்கனவே உள்ள சட்ட முறைகளை, ஏதோ தேர்தல் ஆணையம் பல நாட்கள் கழித்து ஏற்றுக் கொண்டு இருப்பதை, சலுகையாக, வெற்றியாக கொண்டாடுவது கயமைத் தனமாகும். உச்சநீதிமன்றம் அ நீதியை தடுத்து நிறுத்தும் தன் கடமையை தவிர்ப்பதான தோற்றமே ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் என்ற மாபெரும் மரியாதைக்குரிய அமைப்பின் மீதான மக்களது நம்பிக்கையை உச்சநீதிமன்றமே குலைப்பது இந்தியாவில் நடக்கும் அதிசயமாகும்.

ச.அருணாசலம்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time