சூழ்ச்சி அரசியலில் உச்சம் தொட்டவர் செங்கோட்டையன்!

செங்கோட்டையனைப் பற்றி மீடியாக்கள் சொல்வதில் உண்மையில்லை. இவரைப் பற்றிய உண்மைகள் பல வெளியுலகுக்கு வருவதில்லை.  சுயநலத்திற்கும், ரவுடித்தனத்திற்கும்  பேர் போனவர். சொந்தக் கட்சியிலேயே இவரது சூழ்ச்சியால் அழிந்தவர்கள் பலர்! செங்கோட்டையனைப் பற்றி ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் தருகிறார் கோபிசெட்டி பாளையம் குமணன்;

கோபியின் முன்னாள் எம்.எல்.ஏ  மறைந்த பெரியவர் பெட்டிக் கடை  ஜி.பி. வெங்கிடு தன் எளிமையாலும், பொதுத் தொண்டுகளாலும் மக்களின் பேரபிமானம் பெற்றவர். பணபலமின்றி செங்கோட்டையனை தேர்தலில் வென்றவர். அவரது மகன் குமணன்  மூத்த பத்திரிகையாளர் கா.சு.வேலாயுதத்திற்கு தந்த நேர்காணல்;

இந்த செங்கோட்டையன் என்பது யாருக்குத் தெரிகிறதோ, இல்லையோ கோபி செட்டிபாளையம் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த பிறகு இதுவரை கோபிசெட்டிபாளையத்திற்கு நடந்த பல சட்டபேரவைத் தேர்தல்களில்  வெற்றி பெற்றாலும்  செங்கோட்டையன் தோல்வி அடைந்தது ஒரே ஒரு முறை தான்.  (1996 இல்) அவர் தோற்றது கோபியில் பெட்டிக் கடை நடத்தி வந்த ஜி.பி. வெங்கிடு என்ற என் அப்பாவிடம் தான்.

அடிப்படையில் திராவிட இயக்கக்குடும்பம் எங்களுடையது. பெரியார், அண்ணா காலத்திலேயே திராவிட இயக்க மேடைகளில் அப்பா பாரதிதாசன் பாடல்களைப் பாடி துவக்கி வைப்பார். திமுக தொடங்கப்பட்ட பொழுது கோபி வட்டத்திற்கு செயலாளராக இருந்தார்.  என்னுடைய அப்பா கட்சி வேலைகளில் தீவிர ஆர்வம் காட்டியதால் ஹோட்டல், துணிக்கடை போன்ற வணிகத்தில் கவனம் செலுத்த முடியாமல் நிறைய இழந்துள்ளார். அவர் 1989-90 இல் தான் பெட்டிக் கடையைத் தொடங்கினார். அப்போது நான் கல்லூரியை முடித்துக் கொண்டு வந்து பெட்டிக் கடையை நானே கவனிக்க ஆரம்பித்தேன்.

என் அப்பா  திமுகவில் இப்பகுதியில் இரண்டாம் தலைமுறைத் தலைவர் என்பதால் கட்சியில் நல்ல செல்வாக்கு இருந்தது. அவரும், பு.க. பழனியப்பன் என்பவரும் இப்பகுதியில் நடந்தும், சைக்கிளிலும் ஊர் ஊராகச் சென்றும் தான் கட்சியை வளர்த்தினார்கள்.

குள்ளம்பாளையத்தில் செங்கோட்டையன் சொந்த சித்தப்பா கே.எம்.சுப்பிரமணியம் ஊராட்சி மன்றத் தலைவராக காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குடன் விளங்கினார்.

அப்போது  செங்கோட்டையனை திமுகவில் சேர்த்து ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக்கி, ஜெயிக்க வைத்து தலைவராக்கினார்கள், என் அப்பாவும், பு.க.பழனியப்பனும்.  தன் வளர்ச்சிக்காக தன் சொந்த சித்தப்பாவையே காலி செய்து அரசியலுக்கு வந்தவர் செங்கோட்டையன் என்பதே பல பேருக்குத் தெரியாது. தெரிந்தவர்களும் வெளியே சொல்வதில்லை.

இதற்குப் பிறகு தான் இவர் அதிமுக சென்று விடுகிறார். திமுகவில் இருக்கும் போதே இவர் ஒன்றியப் பெருந் தலைவராக இருந்த திமுக வக்கீல் வெங்கடாசலத்தை காங்கிரஸ்காரர்களுடன் சேர்ந்து கொண்டு,  உள்ளடி வேலைகள் செய்து பதவியை விட்டுத் தூக்கினார். ஆரம்பத்திலிருந்தே செங்கோட்டையனின் இயக்க வரலாறே நல்ல ஆட்களைக் காலி செய்வது தான்.

சரி, எம்.ஜி.ஆரிடம் போன பிறகு மட்டும் சும்மாயிருந்தாரா?

கோபியில் அதிமுக சந்தித்த முதல் தேர்தல் 1977. அப்போது கே.என்.கே ராமசாமி கோவை மாவட்டஅதிமுக செயலாளர். அவரின் சொந்த ஊர் கோபி. அவர் எம்.ஏ படித்தவர். அன்றைக்கு படித்தவர்கள் அதிமுகவில் குறைவு. அவர் கோபி சீட்டைக் கேட்க, எம்.ஜி.ஆர் அவருக்கே அளிக்க வேண்டிய சூழல். எனவே, செங்கோட்டையனுக்கு சத்தியமங்கலத்தில் சீட் அளித்தார்.

அந்த தேர்தலில் வென்ற ராமசாமியை தனக்கு போட்டியாக கருதி எம்.ஜி.ஆரிடம் இல்லாதையும், பொல்லாதையும் சொல்லி கருத்து வேறுபாடு  உருவாக்கி அதிமுகவில் இருந்து வெளியேற வைத்தார். இப்படி தன் வளர்ச்சிக்காக கோவை மாவட்ட அதிமுக செயலாளரை காலி செய்தார் செங்கோட்டையன்.

இதனால் கோபியிலேயே செங்கோட்டையனுக்கு சீட் தொடர்ந்து கிடைக்க ஏதுவானது. 1980 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி. கோபி தொகுதி கூட்டணிக்கு சென்று விட, செங்கோட்டையன் சித்தப்பாவே காங்கிரஸ் வேட்பாளர். செங்கோட்டையன் அதிமுக வேட்பாளர். சித்தப்பாவுக்கும் மகனுக்குமே  போட்டி. செங்கோட்டையன் வெற்றி. அதன் பின்னே இருந்தது எம்.ஜிஆர் அலை, இவருடைய சூழ்ச்சி அரசியல்.

1984 தேர்தலில் திமுக சார்பில் சிறுவலூர் கு.ம. ஆண்டமுத்து, சமூக ரீதியாக ஆண்டமுத்து வேட்டுவக் கவுண்டர் என்பதால் அதிமுக வேட்பாளர் செங்கோட்டையனுக்கு ஜாதி அரசியல் செய்ய வசதியாகப் போய் விட்டது. இதைச் சொல்லியே அவரை தனிமைப்படுத்தி சுலபமாக வென்று விட்டார்.

1989 தேர்தல். கூட்டணியில் ஜனதா தளத்தில் ஏர் உழவன் சின்னத்திற்கு திமுக சீட்டை கொடுத்து விடுகிறது. அதில் போட்டியிட கோயமுத்தூரிலிருந்து  நல்ல சமூக செயற்பாட்டாளரான கீதா என்ற பெண்மணி இங்கே வந்தார். பம்பரமாக வேலை செய்தார். செங்கோட்டையனின் வெற்றிக்குத் தண்ணி காட்டினார் அப்பெண்மணி.

ஆனால், அவர் நாயுடு சமூகம் , நான் தான் கவுண்டர்களின் பிரதிநிதி என ஜாதி அரசியல் செய்தும், வெளியூர் என்ற துஷ்ட பிரச்சாரத்தை கையில் எடுத்து செங்கோட்டையன் வெற்றி பெற்றார்.

1991 ஜா, ஜெ அணி ஒன்றாகி பலமானது.  அத்துடன் ராஜீவ்காந்தி கொலை அலை எல்லாம் ஒன்றாகி, செங்கோட்டையனுக்கே வெற்றியில் முடிகிறது. அப்போது இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்  திமுகவில் வி.பி.சண்முகசுந்தரம்.

அப்போது முதன்முதலாக அமைச்சரான செங்கோட்டையன் பதவி ஏற்பு விழாவிலேயே ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கினார். அது நாள் வரை அமைச்சரவை பதவியேற்பில் தமிழகம் கண்டிராத நிகழ்ச்சி இது. இவரைப் பார்த்து தான் மற்ற அமைச்சர்களும் காலில் விழ ஆரம்பித்தனர். அந்த முதல் நிகழ்வை காணொளியில் பார்த்தாலே தெரியும். இவருக்கு முன் சென்ற அமைச்சர்கள் எல்லாம் ஜெயலலிதாவைக் கும்பிட்டு விட்டு அவரவர் இருக்கையில் சென்று அமர்வார்கள். இவர் மட்டும் தான் காலில் விழுவார். பிறகு வந்த அமைச்சர்கள் எல்லாம் காலில் பொத் பொத்தென்று விழ ஆரம்பித்து விடுவார்கள். இவர் அமைச்சர் ஆன அந்தக் காலகட்டத்தில் தொகுதி மக்களுக்கோ, கட்சிக்காரர்களுக்கோ பெரிதாக எந்த நன்மையும் செய்யவில்லை. ஒரு ரோடு போட்டதை மட்டும் பெரிதாக விளம்பரப்படுத்தினார்.

1990 காலகட்டத்தில் நக்கீரன் பத்திரிகையில் எந்தந்த மந்திரிகள் எப்படியெல்லாம் ஊழல் செய்கிறார்கள் என்பதை புள்ளி விவரமாக எழுதினர். அதில் செங்கோட்டையனின் ஊழல்களை அக்குவேறு ஆணிவேராக எழுதி நக்கீரன் அம்பலபடுத்த  அந்தப் பத்திரிகையை கடைகடையாய் சென்று எடுத்து தீயிட்டுக் கொளுத்த ஆரம்பித்தனர் செங்கோட்டையனின் அடியாட்கள்.

குமணன்

அப்போது ஒரு நாள் இரவு பத்து மணிக்கு எங்கள் பெட்டிக்கடையும் அடித்து நொறுக்கப்பட்டது.. நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன்.. அதைக் கண்டித்து ஈரோடு மாவட்ட திமுகவே போராட்டத்தில் இறங்கியது. சாலை மறியல் கடை அடைப்பு எல்லாம் நடந்தது.

அப்போது இருந்த இன்ஸ்பெக்டரை  செங்கோட்டையன் தனக்கு ஏவலாளியாக செயல்பட வைத்து பாதிக்கப்பட்ட எங்கள் மீதே வழக்குப் போட்டார். அந்த வழக்கு 1996 -2001 வரைக்கும் கூட நிறைய பேர் மீது இருந்தது. அந்த வழக்கில் உண்மைகள் வெளிவரவே  தான் தப்பித்துக் கொள்ள எங்களிடம் சமாதானம் பேசி, ஒரு தொகையை அளிக்க வந்தார் செங்கோட்டையன். என் பெற்றோர் அதை வாங்க மறுத்ததோடு, அவரை எச்சரித்து அனுப்பினர்.

பொதுவாகவே செங்கோட்டையன் கேரக்டர் இதுதான். உள்ளூர ரவுடியிஸம். வெளியே அப்பாவித்தனமான வேஷம். ஆனால், செய்யும் செயல்களில் எல்லாம் விஷம் தூவப்பட்டிருக்கும். அது அவரிடம் நெருங்கிப் பழகின அத்தனை அரசியல்வாதிகளுக்கும் தெரியும். இவர் தன்னை மீறி அதிமுகவிலேயே யாரையும் வளர்த்தெடுத்ததில்லை. நிறைய முன்னணி ஆட்களையே அழித்தொழித்திருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் அதிமுகவில் வாரணவாசி என்று ஒரு நகரச் செயலாளர் இருந்தார். இவரின் நிழலாகவே இருந்தவர். அவரும், அவர் குடும்பமும் இப்போது எங்கே இருக்குதுன்னே தெரியவில்லை. அவரைப் போலவே தமிழ்மணி ராமசாமி, வி.எம்.பழனிசாமி, தவுசியப்பன், பூக்கடை ஜான், திருநாவுக்கரசு. இப்படி நூற்றுக்கணக்கானவர்கள் செங்கோட்டையன் பின்னால் கட்சிக்காக வெறியுடன் பாடுபட்டவர்கள். அவர்களில் ஒருவர் கூட இப்போது வெளிச்சத்தில் இல்லை. பிறகு வந்த அடுத்த தலைமுறை அதிமுக தலைகளையாவது உருப்படியாக வைத்துள்ளார்களா? என்றால், அதுவும் இல்லை. அது தான் அவரது அரசியல் அவரை மட்டுமே தான் ஃபோகஸ் பண்ணிக்குவார்.

‘செங்கோட்டையன் பொட்டி பொட்டியாய் பணம் வைத்திருக்கிறார். நம்ம பொட்டிக்கடை வெங்கிடுவைப் போய் நிறுத்துகிறீர்களே. ஜெயிக்க முடியுமா?’ என்று கூட கலைஞரிடம் மூத்தவர்கள் சிலர் கேட்க, அவர் சொன்னாராம். ‘வெங்கிடு மட்டும் தான்யா கடைசி வரைக்கும் உறுதியோட எதிர்த்து நிற்பான்!’ என்று.

அப்பாவைத் தோற்கடிக்க என்னவெல்லாமோ செய்து பார்த்தார் செங்கோட்டையன். ஒன்றுமே நடக்கவில்லை.

அந்த தேர்தலில்  வென்று காட்டினார் அப்பா ஜி.பி.வெங்கிடு. அவர் எம்.எல்.ஏவாக நிறைய பணிகள் செய்தார். யார் வந்து பொதுப் பிரச்சனை என்று கூப்பிட்டாலும் சென்று விடுவார். கார் பைக் எதுவும் கேட்க மாட்டார். நடை தான். சைக்கிள் தான். தூரமாகப் போக கார் வேண்டுமா என்று கேட்டால், எதுக்கு அது, என்கிட்ட பஸ் பாஸ் இருக்கு. அதுல நானும், கூட ஒருத்தரும் போகலாம். நம்ம ரெண்டு பேர்தானே. பஸ்ஸிற்கு கூட காசு செலவில்லை. வா போகலாம்!’ என்று அழைத்துப் போய் விடுவார். தன் எம்.எல்.ஏ பதவி முடிந்தவுடன் வழக்கம் போல் வந்து பொட்டிக் கடையில் அமர்ந்து விட்டார்.

தன் அப்பா ஜி.பி.வெங்கிடு மற்றும் அம்மாவுடன் குமணன்

அந்த நற்பெயர் இன்று வரை அப்பாவுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. அதை கட்சித் தலைமையும் மறக்கவில்லை. இரண்டு முறை என் தம்பிக்கே சீட் கொடுத்தது தலைமை. அதில் செங்கோட்டையனின் பெரும் பணபலத்தால் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தது எல்லாம் பெரிய கதை. செங்கோட்டையன் சூழ்ச்சி அரசியலுக்கு முன்னால் நாங்கள் வெற்றி பெற முடியவில்லை என்பதே உண்மை.

செங்கோட்டையன் எப்பவுமே நியாயமாக மக்களை சந்தித்து நான் இதை செய்திருக்கேன். இது எல்லாம் எதிர்காலத்தில் செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்து ஓட்டுக் கேட்டு ஜெயித்ததில்லை. எதிர்கட்சியில் உள்ள வேட்பாளருக்கு எதிரிகள் யார்? அவருக்கு துணை நிற்கும் கூட்டணிக் கட்சிகள் யார்? ஜாதி ரீதியான தொடர்புகள். மறைமுகமாக தனிப்பட்ட காரியம் அவரிடம் வாங்கியவர்களை எல்லாம் தெளிந்து தேர்ந்தெடுத்துக் கொள்வார். அவர்களை எந்த வகையில் மடக்க முடியுமோ, மடக்கி விடுவார். அதை சரி கட்டுவதற்கென்றே ஆட்களை வைத்திருக்கிறார்.

அவருடைய இலக்கு பத்தாயிரம் வாக்குகளில் தான் ஜெயிக்கணும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாகச் செய்து விடுவார். அதற்கு ஜாதிரீதியாக நிலவுடமையாளர்களை வசப்படுத்துவதோடு, பண்ணைக்கூலிகள், குடிசைவாழ் மக்களை ஒட்டு மொத்தமாக விலைபேசி விடுவார். இதுதான் அவரது ஸ்டைல். கடைசியாக அவர் கல்வி அமைச்சராக இருந்தபோது செய்தது கோபியில் செயல்பட்ட எங்கள் தாய்த்தமிழ் பள்ளியை மூட சூழ்ச்சி செய்தது தான்.

செங்கோட்டையன் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது உதிரி பாகங்கள் வாங்கியதில் ஊழல், புதிய பஸ் வாங்கியதில் லஞ்சம், போலி பஸ் டிக்கட் அச்சடித்து விநியோகித்து மோசடி செய்தது உள்ளிட்ட ஏழு வழக்குகள் செங்கோட்டையன் மீது 1996- 97 காலகட்டத்தில் போடப்பட்டது. இவற்றில் ஒரு வழக்கில் நான்கு வருடங்கள். அடுத்ததில் மூன்று வருடங்கள். இன்னொன்றில் இரண்டு வருடங்கள் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு 1999 இல் வந்தது. 2000 இல் சிறை சென்று விடுகிறார். அதனால் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இப்படி ஊழலில் சரித்திரம் படைத்தவர் தான் செங்கோட்டையன்.

உண்மையிலேயே தமிழ் மீதான ஆர்வத்தில் 1995 இல் பல்வேறு இடங்களில் தாய்த்தமிழ் பள்ளி தொடங்கப்படுகிறது. நாங்களும் கோபியில் 1997 இல் ஒரு பள்ளியை தொடங்கி நடத்தி வந்தோம். அதற்கு மூடப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிக்கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தோம் அதே சமயம் சொந்தக்கட்டிடம் கட்ட நிலம் விலைக்கு வாங்க இடம் தேடிக் கொண்டிருந்தோம். நகராட்சியிலேயே இடம் கொடுப்பதாக நெருங்கி வருவார்கள். அதை கிடைக்கவிடாமல் சில சக்திகள் தடுத்து விடும்.

ஜெயலலிதா இறந்தபோது கூட அந்தப் பள்ளியில் 200 குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தார்கள்.  இப்படியான சூழலில் நாங்கள் வாடகைக்கு இருந்த பள்ளிக்கூட இடத்துக்காரர்கள் மூலம் எங்களை காலி செய்யச் சொல்லி நெருக்கடி தந்து  தாய் தமிழ் பள்ளியை அங்கிருந்து காலி செய்தார்.

இந்த சூழலில் உள்ளூரிலேயே ஒரு பள்ளி மூடப்பட்டு காலியாக இருந்தது. அதைத் தாருங்கள் என்று நகராட்சிக்கு நாங்களும், பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களும் மனு செய்தார்கள். ஆனால் செங்கோட்டையனோ எங்கள் பள்ளியை மூடச் சொல்லி ஆர்டர் போட்டதோடு, நாங்கள் இடம் கேட்ட பள்ளியில் நகராட்சி குப்பைகளைக் கொட்ட ஏற்பாடு செய்து விட்டார்.

நான் இந்தப் பள்ளியை நடத்துவதால் தானே பிரச்சனை? அதை முழுக்க அரசிடமே ஒப்படைக்கிறேன். பள்ளி நடந்தால் சரி என்று எழுத்துப் பூர்வமாகவே அமைச்சர் செங்கோட்டையனுக்கு மனு அளித்தேன். அதை அவர் கண்டுகொள்ளவேயில்லை. அதனால் தாய்த்தமிழ் பள்ளி மூடப்பட்டது. அப்படி தமிழ் வளர்க்கும் பள்ளியையே மூடக் காரணமானவர்தான் இந்த செங்கோட்டையன்.

அவரின் சூழ்ச்சியை கடைசி காலத்தில் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார் ஜெயலலிதா என்பதை கோபிசெட்டிபாளையம் அரசியல்வாதிகள் யாரிடம் கேட்டாலும் சொல்லுவார்கள்.

இவரிடம் அமைச்சர் பதவியை பிடுங்கிய ஜெயலலிதா, தான் இறக்கும் வரை இவருக்கு அதைத் தரவேயில்லை. சொல்லப் போனால் கட்சி நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கக்கூடாது என்று நெருக்கடி கொடுத்திருந்தார்.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கண்டிப்பாக  சிறை சென்று விடுவார். அப்போது முதல்வர் யார் என்ற திரைமறைவு வேலைகளை செய்தது இவர்தான். அதை  ஜெயலலிதா கண்டு பிடித்து விட்டார். அதற்காகத்தான் அந்த நடவடிக்கை என்பது அரசியல் தளத்தில் அனைவருக்கும் தெரியும்.

ஜெயலலிதா இறந்த பிறகும் கூட, மா.பா. பாண்டியராஜன் வெளியே போனதனால் தான் கல்வி அமைச்சர் பதவியே கிடைத்தது. எடப்பாடி ஏன் இந்த நிலையை எடுக்கிறார் என்றால்,  ஜெயலலிதாவின் முதல்வர் பதவியையே பறிக்கத் திட்டமிட்ட செங்கோட்டையன்  தன்னை காலி செய்வதற்கு முன்பு சுதாரித்துக் கொண்டார்.  இது அதிமுகவில் எல்லோருக்குமே தெரியும். ஆனால் சொல்ல மாட்டார்கள்.

என்று தன் பேட்டியை முடித்துக் கொண்ட குமணன் கடைசியாக வாச்சாத்தி சம்பவம் பற்றி பேசும் போது இப்படிக் குறிப்பிட்டார்:

வீரப்பன் தேடுதலில் பழங்குடி கிராமங்களில் என்ன நடந்ததோ அதே தான் இதிலும் நடந்தது. அதிகாரிகளே சந்தனக்கட்டைகள் கடத்தி விட்டு கிராம மக்கள் மீது பழியைப் போட்டனர். 18 பெண்களை  மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரமும் செய்தனர். இது சிபிஐ விசாரணைக்குப் பின் உறுதி செய்யப்பட்டு குற்றவாளிகள்  வனத்துறையினர் , காவலர்கள் உள்ளிட்ட 215 பேருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

ஆனால், அப்போது வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் குற்றம் இழைத்த அதிகாரிகள் பக்கம் நின்று பேசி, பாதிக்கப்பட்ட எளிய மனிதர்களையே  ஈவு இரக்கமின்றி குற்றவாளியாக்கப் பார்த்தார்.  இவர் பேச்சை உண்மை என நம்பும் மக்கள்தான் இங்கே பாவப்பட்டவர்கள்.

சந்திப்பு, பேட்டி: கா.சு.வேலாயுதன், கோவை.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time