ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸின் ஒரு இலக்கிய கைக்கூலி! –யமுனா ராஜேந்திரன்

பீட்டர் துரைராஜ்

இலக்கியம்,அரசியல்,தத்துவம், திரைப்பட ஆய்வுகள், மொழிபெயர்ப்பு என சர்வதேச தளத்தில் இயங்கி வருபவர் யமுனா ராஜேந்திரன். ஜெயமோகனின் துவேஷ இலக்கியச் செயல்பாடுகள், பெண் புரட்சியாளர் ரோசா லுக்சம்பர்க், உலக அளவில் இன்றைய கம்யூனிச செயல்பாடுகள், ரஷ்யாவில் நடப்பது என்ன..? இலங்கை நிலவரம் ஆகியவை பற்றி யமுனா ராஜேந்திரன் பீட்டர் துரைராஜிடம் பேசியவை!

ஜெயமோகனுக்கு ஆர்எஸ்எஸ் தந்திருக்கும் புராஜக்ட்தான் கம்யூனிஸ்டுகளை அவமானகரமாக விமர்சித்துக்  கொண்டேயிருப்பது என்று சொல்கிறீர்கள். அவரை  பொன்னீலன், கோவை ஞானி, பவா.செல்லதுரை போன்ற மார்க்சியர்களே தாங்கிப் பிடிக்கிறார்களே?

ஜெயமோகன் எழுதிய  பின் தொடரும் நிழலின் குரல் நாவல் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க ஊழியர்களின் வரலாற்றைப்  பேசுகிறது. முன்னுரையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த தொழிற்சங்க அனுபவங்களைத் தான் இந்த நாவலில் எழுதியிருப்பதாக ஜெயமோகன் சொல்கிறார். நாவல் முழுக்க முழுக்க கம்யூனிசத்தை கொச்சைப்படுத்தும் எழுத்து. மார்க்சியப் பிதாமகர்களை, அவர்களது பெண் உறவுகளை, தொழிற்சங்க இயக்கத்தை, ரஷயப் புரட்சி அனுபவத்தை முழுமையாக இழிவுபடுத்தும் நாவல் அது. உலகில் இதுவரை அதிகம் கொலை செய்தவர்கள் இஸ்லாமியர்கள், அடுத்து கம்யூனிஸ்ட்டுகள் என்பது அந்த நாவலில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.   கம்யூனிசம் என்றாலே அழிவு, வன்முறை, கொலைகள், இழிவு என்பதுதான் அந்த நாவலில் இடம்பெறும் வாதம்.

பெண்கள் பற்றிய பரிவுணர்வற்ற, வறட்டு மனிதர்களான மார்க்சியப் பிதாமகன்களால் நடத்தப்பட்ட புரட்சியாக ரஷ்யப் புரட்சியை மதிப்பிடுகிறார். ரஷ்யப் புரட்சி, அதனைத் தொடரும் மாரக்சியமரபு பற்றிய எந்த அறிவும் இல்லாத ஒருவரின் பிதற்றல் இது. மார்க்ஸ் காலத்தில் அவரது மகளான எலியனார் மாக்ஸ், லெனின் காலத்தில் ரோசா லுக்சம்பர்க், குருப்ஸ்க்கயா, ஆர்மோன்ட், கிளாரா ஜெட்கின், லூயிஷா காவுட்ஸ்க்கி, அதன்பின் ஆப்ரிக்கர்களான கிளாடியா ஜோன்ஸ், ஆஞ்சலா டேவிஸ், கியூபப் புரட்சியில் தான்யா, ஜூலியா சாஞ்சஸ், இந்தியாவில்  கல்பனா ஜோஷி, பார்வதி கிருஷ்ணன், கௌரி கோபாலன் என பெண் போராளிகளைக் கொண்டது கம்யூனிஸ மரபு.  இவர்களின் குழந்தைகள் கட்சி அலுவலகங்களிலேயே வளர்ந்தவர்கள். இப்படியான இந்த மரபை, பெண்களை உதாசீனப்படுத்திய  வன்முறை கொண்ட ஆண் மரபு என ஜெயமோகன் சித்தரிக்கிறார்.

இரண்டாயிரம் ஆண்டு கால மதநிறுவன அடக்குமுறை, முடியாட்சி,  காலனியாதிக்கம், அடிமை முறை போன்றவற்றை எதிர்த்துதான் சோவியத் புரட்சி உருவானது. இந்த புரட்சியால்தான் பெண்களுக்குச் சம உரிமை, கருக்கலைப்பு உரிமை, முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்டங்கள் உருவாயின.  இந்தச் சாதனைகளை முழுமையாக நிராகரித்துதுவிட்டு, எழுபது ஆண்டுகால சோவியத் ஆட்சியில் நடந்தது எல்லாமே  படுகொலைகள், வன்முறைதான் என்று சொல்வது நாணயமற்ற செயல். இதைத்தான் பொன்னீலன் புனைவுக்கும் வரலாற்றுக்கும் வித்தியாசம் தெரியாமல்  விதந்தோதுகிறார்.  ஞானி இதனைத்தான் மார்க்சியத்திற்கு பங்களிப்பு என்கிறார். இப்படிப்பட்ட நாவல் எழுதியவரிடம்தான் பவா செல்லத்துரை ஈ.எம்.எஸ்.பற்றி நூல் எழுதுமாறு பணிக்கிறார்.   இவர்களுக்கு ஜெயமோகனிடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இடது மரபுக்கே இது அவமானம். இந்துத்துவ பாசிஸ்ட் ஒருவரிடம் இருந்துதானா இவர்கள் தொழிற்சங்கவாதம், ஸ்டாலினியம் பற்றிக் கற்க வேண்டும்;? சொந்த வாசிப்பு அவசியம் இல்லையா?

இதனால்தான் கடந்த கடந்த மூன்று தசாப்தங்களாக இடதுசாரிகள் போதுமான அளவு முனைப்பாகப் பணியாற்றவில்லை என்று சொல்லுகிறீர்களா

1989 இல் சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நிலவிய சோசலிசம் வீழ்ந்தது.  நம் நாட்டிலேயே கூட மேற்குவங்கத்தில் என்ன நடந்தது? கேரளாவைத் தவிர்த்த மற்ற மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ், மாநில கட்சிகளுக்கு பிறகுதானே கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளன. இதை நாம் ஆய்வு செய்ய வேண்டாமா ?

உலக அளவில் திரைப்படம், கலை, இலக்கியம் குறித்து படைப்பு, கோட்பாடு எனத் தங்கள் கருத்துக்களை தெளிவாக வெளியிட்டு வந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்திய மக்கள் நாடக மன்றம் எமது மரபு. ரித்விக் கடக், சப்தர் ஹாஸ்மி, ஷாப்னா ஆஸ்மி போன்ற கலைஞர்களைக் கொண்டது எமது மரபு.

சேகுவேரா தன்காலத்தின் முழுமனிதனாக வாழ்ந்தார். அவருக்கு இணையாக பெண்களில் ரோசா லுக்சம்பர்க்கைச் சொல்லலாம் என்கிறீர்கள். ரோசா லுக்சம்பர்க்கிற்கு கொடுக்க வேண்டிய உரிய இடத்தை நாம் தரவில்லை என. ஏன் சொன்னீர்கள்?

 ரோசா லுக்சம்பர்க் ஒரு புரட்சிகரமான பெண் போராளி! ரோசா லுக்சம்பர்க் குறித்து சர்வதேச அளவில் நிறைய நூல்கள் வந்துள்ளன. அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் அவரது வாழ்வும் எழுத்துக்களும் செலுத்திய தாக்கங்கள் இந்த ஆய்வு அமைப்பிலிருந்து நூல்களாக வருகின்றன. தமிழ்ச்சூழலில் சேகுவேரா அளவுக்கு ரோசா லுக்சம்பர்க் பேசப்படுவதில்லை.

சோசலிச சமூகத்தில் கருத்துரிமைகள், ரஷ்யப் புரட்சி, எல்லை கடக்கும் மூலதனம், வேலைநிறுத்தம், தேசியம் போன்றவை குறித்து நல்ல கருத்துக்களை வெளியிட்டவர். தான் வரித்த கொள்கைக்காகவே வாழ்ந்து மரித்தவர் . தெருச் சமரை அடுத்துக் கடத்திச் சென்று அவரும்  சக தோழரான லீப்னெக்ட்டும் கொல்லப்பட்டனர். அவர் கைது செய்யப்பட்டு, மண்டை உடைக்கப்பட்டு, அவரது சடலம் பெர்லின் லான்ட்வாயர் கால்வாயில்  வீசப்பட்டது. கிடைத்த உடல்கூட அவருடையதுதானா என்று இன்றுவரை உறுதியாகச் சொல்லமுடியாதுள்ளது. கட்சிக்குள்ளேயே ஆண் ஆளுமைகளுக்கு நிகராகப் பணியாற்றியவர்; அவர். லெனினுடன் விவாதம் புரிந்தவர். அவர் வாழ்ந்த விதம், அவரது எழுத்துக்கள், வன்முறையை எதிர்கொண்ட விதம், மரணம் நிகழ்ந்தவிதம் என அனைத்திலும் சேகுவேராவிற்கு நிகராக வாழ்ந்து, போராடி மரணித்தவர் ரோசா லுக்சம்பர்க். தமிழ்ச் சூழலில் சேகுவேராவின் வாழ்வும் எழுத்துக்களும் அனுபவங்களும் எழுத்துக்களாக முன்வைக்கப்பட்ட அளவு ரோசா பற்றிய பதிவுகள் இல்லை என்பதாலேயே நான் ஒரு ஒப்பீட்டை நிகழ்த்த வேண்டியிருந்தது

ரோசா  எழுதிய  கடிதங்கள், கட்டுரைகள் தொகுக்கப்பட்டு சிறுநூலாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.  சிந்தன் பதிப்பகம் கொற்றவையின் மொழிபெயர்ப்பில் பாலி பிராலிச் எழுதிய ரோசா லுக்சம்பர்க்-வாழ்வும் பணிகளும்  நூலை வெளியிட்டுள்ளது

திரைப்படங்களில் இடதுசாரிகளின் சாதனைகளைச்  சொல்ல முடியுமா?

பல கலைஞர்களைச் சொல்ல முடியும். கோட்பாட்டு ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியிலும் எத்தனையோ சாதனைகளை அவர்கள் செய்திருக்கிறார்கள். மோன்டேஜ் கோட்பாட்டுக்காக செர்ஜி ஐசன்ஸ்டீன், காமெரா நுட்பத்திற்காக சிகாவெட்டோவ், இந்தியாவைச் சார்ந்த  ரித்விக் கட்டக்   என இவர்களை உலக சினிமாவின் அசலான கலைஞர்கள் என்று சொல்லுவார்கள்..

ரஷ்யாவில் கம்யூனிசத்தின் நிலைமை இப்போது எப்படி இருக்கிறது ?

 தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தி அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தான்தான் தலைவர் என்பதற்கான ஒப்புதலைப் பெற்று  யதேச்சாதிகாரியாக புதின் சட்டத்தைத் திருத்திவிட்டார். அமெரிக்கா, சீனா ரஷ்யா, மேற்கு உலக நாடுகள் என அனைத்தும் முடிந்த அளவில் சந்தைப் பொருளாதாரத்தில் தமக்குள் போட்டியிடுவது  எனும் நிலைபாட்டுக்கு வந்துவிட்டன..   ஸ்பெயினில் இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றுள்ளார்கள்.  இங்கிலாந்தில் தொழிற்கட்சி சார்ந்த இடதுசாரியான ஜெரமி கோர்பின் இஸ்ரேலிய ஆதரவு யூதர்களாலும், கார்ப்பரேட் ஊடகங்களாலும்  வஞ்சகமாகத்  தோற்கடிக்கப்பட்டுப் பழமைவாதக் கட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. ஸ்பெயினில் தனியார் மருத்துவமனைகளை அரசுடமையாக்கியுள்ளனர்.   தனியார் மருத்துவமனைகள் கொரானா காலத்தில் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது. கிரேட்டா தென்பர்க் என்ற இளம்பெண்ணின் சூழலியல் அலை ஒரு எழுச்சியாக இருக்கிறது. எண்ணற்ற மாணவர்கள், இளைஞர்கள் இயற்கையைப் பாதுகாப்பது, தூய்மையான சூழல் போன்றவைகளுக்காக  போராடி வருவதை நல்ல விஷயமாகத்தான் பார்க்கவேண்டும்.

இலங்கை குறித்து நூலை நான்கு நூல்கள் எழுதியிருக்கிறீர்கள். அங்குள்ள நிலமை பற்றி ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா

அறுபதுகளில் கியூபா, நிகராகுவா, எல் சால்வடார்  போன்ற நாடுகள் ஆயுதப் போராட்டம் நடத்தியபோது இருந்த நிலமை வேறு. 1989 ஆம் ஆண்டு வரை தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு ஆயுத, தார்மீக, பொருளாதார உதவிகளை சோவியத் யூனியன் செய்தது. செப்டம்பர் 2001 க்குப் பிறகு எல்லாப் போராட்டங்களையும் உலக நாடுகள் அனைத்துமே பயங்கரவாதம் என்று வகைப்படுத்தி விட்டனர். இந்தியா, சீனா, கியூபா, அமெரிக்கா, ரஷ்யா என எல்லா நாடுகளும் ஓரணியில் நின்று இலங்கையை ஆதரித்தனர். இன்று விடுதலைப் புலிகள் இடைநிலைத் தீர்வாக எதனையேனும் ஏற்று அழிவைத் தவிர்த்து இருக்க முடியுமா என்று ஈழத்தின் உள்ளும் புறமும் விவாதம் நடத்தி வருகிறார்கள். புறநிலை யதார்த்தம் என்னவென்பதை அங்குள்ளவர்கள்தான் சொல்ல முடியும். 2009க்கு பிறகு என்ன அரசியல் வேண்டும் என்பதை அங்குள்ள மக்கள்தான் சொல்ல வேண்டும்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time