இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் காஷ்மீர்!

-ச.அருணாசலம்

காஷ்மீர் பிரச்சினை உருவான வரலாறு ( பாகம்– 6 )

காஷ்மீரின் தனித் தன்மையை அழித்து, அதை முழுக்க இந்துத்துவ அடையாளம் கலந்த பிரதேசமாக்க கடந்த 11 ஆண்டுகளாக பாஜக அரசு செய்து வரும் சூழ்ச்சிகள், அதில் அடையும் வெற்றிகளை பட்டியலிட்டால் பிரமிக்க வைக்கிறது. காஷ்மீரை இராணுவமயமாக்கி, இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருவதை கவனப்படுத்துகிறது இந்தக் கட்டுரை;

இந்தியா முழுவதும் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. மன்மோகன் சிங் ஆட்சி மட்டுமின்றி, அவராட்சி காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் வீட்டுக்கு அனுப்பப்பட்டன.

2014 டிசம்பரில் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல் நடந்தது. அதில் மப்டி முகமது சயீது கட்சி ( பி டி பி) 28 இடங்களையும், பாஜ க 25 இடங்களையும், தேசிய மாநாடு கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றது.

எதிரும் புதிருமான கட்சிகளான பிடிபியும், பாஜகவும் இரண்டு மாத பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு கூட்டணிக்கான திட்டத்தை வரையறுத்தனர்.

2015 மார்ச்சில் முப்டி முகமது சயீது முதல்வரானார். இதை சந்தர்ப்பவாத கூட்டணியாகவே கட்சிகள் மட்டுமின்றி, மாநில மக்களும் பார்த்தனர். முப்டியின் மறைவிற்கு பின் சிறிய இடைவெளிக்கு பிறகு அவரது மகள் மஹ்பூபா முதல்வர் பதவியில் அமர்ந்தார்.

இந்த நிலையில் , 2016, ஜூலை 8ல் , 22 வயது நிரம்பிய புர்ஹான் வானி என்ற இளைஞரை பாதுகாப்பு படையினர் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.

ஹிஸ்புல் முஜைகுதீன் அமைப்பை சார்ந்த அந்த இளைஞர் ‘கமாண்டர்’ என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார் . இவரை சுட்டு கொன்றதில் மாநில முதல்வரான மஹபூபிற்கும் பாஜ க தலைமைக்கும் ஒருமித்த கருத்து இல்லை.

மாநிலமெங்கும் பதட்டம் பரவியது. ஆர்ப்பாட்டங்களும்,கல்வீச்சும் கண்டனங்களும் பெருகின , மக்கள் வீதியில் இறங்கி இந்த படுகொலையை கண்டித்தனர். இதில் பாதுகாப்பு படையினர் தாக்கியதால் 100க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

புர்ஹான் வானி அடக்கம் செய்யப்பட்ட அன்று காஷ்மீரில் இதுவரை கண்டிராத கூட்டம் (3,00,000) கூடி இறுதி அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும், கண்டனங்களும் மாநிலம் முழுவதும் பரவின. கடையடைப் பிற்கு அழைப்பு விடப்பட்டன. ஓராண்டுக்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்தது.

புர்ஹான் வாணியின் இறுதி அஞ்சலிக்கு கூடிய மக்கள் பெருந்திரள் கூட்டம்

பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் புர்ஹான் வானியை “இளந்தலைவர்” என்று குறிப்பிட்டு ஐ.நா சபையில் பேசினார். காஷ்மீர் எழுச்சியின் புதுமுகம் புர்ஹான் வானி என்று புகழாரம் சூட்டினார் . இந்திய பிரதமர் மோடியோ, ‘தீவிரவாதியை’ பாக். அரசு தலை மேல் வைத்து கொண்டாடுகிறது என்று சாடினார்.

புர்ஹான் வானியை சுட்டுக் கொன்றது காஷ்மீர் இளைஞர்கள் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்தியது. போராட்டங்களும், கல்லெறிதலும் தொடர தொடர ராணுவம், துணை ராணுவத்தினரின் அடக்கு முறைகளும் அதிகரித்தன.

போலி என்கவுண்டர்களும், கூண்டோடு கைது செய்து சித்திரவதை செய்வதும் பெருகின. ஏராளமான இளைஞர்கள் காணாமல் போயினர், இளம் பெண்கள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். இளம்பெண்களை கற்பழிப்பது ஒரு தண்டனையாகவே கருதப்பட்டது, இதனால் மன உளைச்சலும் தற்கொலைகளும் காஷ்மீர் பெண்களிடையே பெருகின. இது குறித்த ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை கவுன்சில் நீண்ட பட்டியலையே வெளியிட்டது. ஆனால் மோடி அரசு இதை ஏற்க மறுத்து ஐநா சபைக்கு உள் நோக்கம் கற்பித்தது.

புர்ஹான்வானி கொலையில் பாதுகாப்பு படை யினர் ‘உரிய நடைமுறைகளை’ (due process) கடைபிடிக்கவில்லை என்று முதல்வர் மஹபூபா குற்றஞ்சாட்ட , பாஜக அதை மறுக்க, பொருந்தா கூட்டணி இறுதியில் உடைந்தது. கவர்னர் ஆட்சி அமலாக்கபட்டது.

ஊரி முகாம் மீதான தாக்குதலும் அதை தொடர்ந்த சர்ஜிகல் ஸ்டிரைக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்குகளை வட மாநிலங்களில் அள்ளி கொடுத்தது.

காஷ்மீர் மக்களின் போராட்டத்தை மட்டுமின்றி, அவர்களது கோரிக்கைகளையும் பாக்கித்தான் லென்ஸ் மூலமாகவே மோடி அரசு பார்த்தது. இதில் முந்தைய அரசுகளுக்கும், மோடி அரசுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், முந்தைய ஆட்சியாளர்கள் மாநில கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டு, ராணுவத்தின் மூலம் ஆட்சியை நடத்தி வந்தனர்.

மோடியோ, நேரடியாகவே ராணுவத்தின் மூலமாக ஆதிக்கத்தை நடத்துகிறார் என்பது தான். இத்துடன் பேச்சுவார்த்தை, சலுகைகள் என்ற பாசாங்குதனம் ஏதும் இன்றி, இந்தியாவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதில் மோடி அரசு முரட்டுதனமான தீவிரம் காட்டியது அதிர்வுகளை ஏற்படுத்தியது. இத்தகைய முரட்டு ஆதிக்கத்தால், அவர் இழக்கப் போவது ஏதுமில்லை. முரட்டுத்தனம் அவருக்கு வாக்குகளை, இந்துத்துவ வெறியாளர்களிடம் பாராட்டுகளை அள்ளித் தருகிறது என்பதை அவர் உணர்ந்துள்ளார்.

2019-ல் மீண்டும் அதிக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்த மோடி அரசு, ஆகஸ்டு 5-ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு தகுதியை ரத்து செய்தது. அதை உறுதி செய்யும் அரசியல் பிரிவு 370 , மற்றும் அரசியல் பிரிவு 35A ஆகியவற்றையும் ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மாநிலத்தை உடைத்தது .

அரசமைப்பு பிரிவு 370 என்பது மாநிலத்தின் சுயாட்சி தன்மையை, தனித் தகுதியை குறிக்கும் ஒரு பொதுவான குறியீடாக கருதப்படுகிறது . இந்த பிரிவு அளிக்கும், மாநிலத்தின் தனித்துவ சுயாட்சியை இந்திய அரசு ஒரு நாளும் நிறைவேற்ற முயன்றதில்லை. வாக்கெடுப்பு நடத்துவோம் என்ற உறுதி மொழியை எப்படி குழி தோண்டி புதைத்தார்களோ, அதே நிலைமை தான் பிரிவு 370 -க்கும் நடந்துள்ளது. 1954 -க்கு பிறகு (சேக் அப்துல்லாவின் கைதுக்கு பிறகு) இந்திய அரசால் 47 ஆணைகள் (Presidential Orders) பிறப்பிக்கப்பட்டு, இந்திய அரசியல் சாசனத்தில் மொத்தமுள்ள 395 பிரிவுகளில் 260 பிரிவுகளை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் திணிக்கப்பட்டது.

இப்படியாக பிரிவு 370 தன் சாரத்தை இழந்து மாநில சுயாட்சி என்ற கனவை நினைவூட்டும் வெறும் வடிவமாக தேய்ந்து கிடந்தது. ஆனால் தனித்தன்மையை காப்பாற்றும் பிரிவான 35A , முந்தைய அரசுகளால் சிதைக்கப்படாமல் இது வரை உயிருடன் இருந்தது.

பிரிவு 35A தான் உண்மையில் காஷ்மீரத்தின் தனித் தன்மையை நிலை நாட்டும், காஷ்மீரின் தனி அடையாளத்தை நிலைநாட்டும் பிரிவாகும்.

இந்த பிரிவு தான் காஷ்மீரின் நிரந்தர குடிகள் (permanent residents) யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை காஷ்மீர் மாநிலத்தின் சட்ட மன்றத்திற்கு மட்டும் கொடுக்கின்ற பிரிவு ஆகும். மாநில சட்டமன்றம் நிரந்தர குடிகள் யார் யார் என வரையறுத்து அவர்களுக்கு சில உரிமைகளை -காஷ்மீரில் நிலம் வாங்கும் உரிமைகளை – கொடுத்துள்ளது.

இதன் விளைவாக ‘இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக’ கூறப்படும் காஷ்மீரத்தில், காஷ்மீரிகள் மட்டுமே நிலம் வாங்க முடியும், என்ற நிலை இருந்தது. அவர்களது தனித்தன்மையை பாதுகாக்க முடியும் என்ற நிலை இந்த பிரிவு மூலம் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதை நீக்குவதன் மூலம் காஷ்மீரின் தனி அடையாளத்திற்கு மோடி அரசு வேட்டு வைத்தது. இந்திய அரசு பிற மாநில மக்களை காஷ்மீரில் புதிதாக குடியமர்த்துவதன் மூலம் காஷமீரின் தனித்தன்மையை, அதன் இன, மத கலவை நிலையை (demography) மாற்றியமைக்க துணிந்தது.

காஷ்மீரை காலனியாக்குதல்

காஷ்மீரத்தின் தனி அடையாளத்தை சிதைக்கும் எண்ணம் ஆகஸ்டு 5ல் தோன்றியதல்ல, அது

நெடுங்காலமாக, காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைத்தல் (integration) என்ற போர்வையில் – காஷ்மீரத்தை தனதாக்க வேண்டும் என்ற பேராசையில் தொடங்கியது எனலாம்.

“மானுட ஆசைகளுக்கு அப்பாற்பட்ட , ஆளுமைக்குட்படாத அழகிய நங்கையே காஷ்மீர்” என்று ஜவகர்லால் நேரு காஷ்மீரை வர்ணித்தார் அல்லவா?

அந்த நங்கையை தனதாக்கி கொள்ள வேண்டும் என்ற இந்தியாவின் பேராசையிலிருந்தே ஆதிக்க எண்ணம் முகிழ்ந்து குடியேறிகளின் கானியாதிக்கமாக (settler colonialism) உருப்பெற்றுள்ளது.

கலாச்சார ஆதிக்கம்

காஷ்மீரத்தின் இயற்கை வனப்பையும், கண் கொள்ளா மலையழகையும் ஒருதலை பட்சமாக இந்து சமயச் சடங்குடன் பிணைத்து, காஷ்மீரத்தை பூர்வீக இந்து பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக இந்திய அரசு சித்தரிக்கிறது. அமர்நாத் யாத்திரைக்கு தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுப்பது, அரசே உதவிகள் மற்றும் ஆதரவளித்து வளர்ப்பதன் மூலம் (காஷ்மீரை சாராத ) இந்துக்கள் மத்தியில் காஷ்மீர் மாநிலம் ‘ நமது பூமி , நமது உரிமை’ என கொண்டாடவும், அதற்காக ஆசைப்படவும் ஊக்குவிக்கிறது.

இந்து கோவில்களையும் இந்து மத சடங்குகளையும் முன்னிலை படுத்துவதன் மூலம் இந்திய அரசு, அங்கு காலங்காலமாக வாழும் காஷ்மீர் முஸ்லீம்களை அன்னியர்களாக, இடையில் வந்தவர்களாக சித்தரிக்கிறது. ‘ஆபரேஷன் சிவா’ என்று அமர்நாத் யாத்திரையை ஆண்டு தோறும் இந்திய அரசே நடத்துவதும், அதை ராணுவத்தினர் புடைசூழ நடக்கும் யாத்திரையாக காண்பிப்பதும் , ராணுவத்தினரை ‘இந்துக்களின் நண்பர்களாக’ முன்னிறுத்துவதும் தற்செயலாக நடைபெறுவன அல்ல. இந்திய நாட்டை , பாரத மாதாவாக உருவகித்து காஷ்மீரை அந்த அன்னையின் தலையாக சித்தரிப்பது போன்றவை ஆதிக்க மனோபாவத்தின் கலாசார வெளிப்பாடே ஆகும் என காஷ்மீர் மக்கள் எண்ணுகின்றனர்.

காஷ்மீரத்தை காஷ்மீர் முஸ்லீம்கள் இல்லாத பூர்வீக சமூகமாக சித்தரிப்பதற்கு அரசே முயற்சி எடுப்பதை தொடர்ந்து , காஷ்மீர் முஸ்லீம் அடையாளங்களை வரலாற்று சித்தரிப்பிலிருந்து அகற்ற முயலுகிறது அரசு. இத்தகைய பண்பு, ஆதிக்கத்தின் ( குடியேறி காலனியாதிக்கத்தின் ) அடையாளம் என்பதில் சந்தேகமே இல்லை. காஷ்மீரிகள், இந்திய அரசின் இத்தகைய ‘பாவனைகளை’ அனுதினமும் உணர்ந்து வெதும்புகின்றனர்.

காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வாழ்த்து பலகை “காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம்” என்றும் இந்தியாவின் மகுடம் என்றும், காஷ்மீரை நேசிப்பது என்றால் இந்தியாவை நேசிப்பதாகும் என்று இயம்பும் இவ்வாசகங்கள் இந்திய அரசின் எண்ண ஓட்டத்தை விளக்கும் எடுத்து காட்டுகளே ஒழிய காஷ்மீரிகள் குறித்த வாசகங்கள் அல்ல.

ஆதிக்க மனோபாவத்தின் முக்கியமான வெளிப்பாடு நிலங்களின் உடமை பற்றியது தான். காலனியவாதிகள் “ நீ எங்களுக்காக உழைக்க வேண்டும்” என்பார்கள்.  குடியேறி காலனியவாதிகளோ,” நீ இங்கிருந்து சென்றுவிடு” என்பார்களாம்.

காஷ்மீரில் இந்திய ராணுவத்தினரின் கைவசமுள்ள நிலங்கள் 2018-ல் சுமார் 54,000 ஏக்கர்களாகும்.

காஷ்மீரில் அதிகரித்து வரும் ராணுவக் குடியிருப்புகள்

ஜம்மு காஷ்மீர் சிவில் சொசைட்டி கூட்டமைப்பு (JkCCS) , தனது அறிக்கையில் சுட்டிகாட்டியபடி தற்பொழுது ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை சுமார் 8,00,000/- (எட்டு லட்சமாகும்) உலகிலேயே அதிக ராணுவம் குவிக்கப்ட்ட பகுதியாக காஷ்மீர் இருப்பதால், இத்தனை பெரிய ராணுவத்தினரின் தேவைகளும் அதிகமே .இவர்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் பல வகைப்படும். காட்டு நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், விளை நிலங்கள்,நீர்ப்பிடி, ஏரிப்படுகை, பனிப்பாறை ஓடைகள் என பல வகை நிலங்களை ராணுவத்தினர் தங்களது பயன்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

உமர் அப்துல்லா முதல்வராக இருந்த போது (2009-2014) ராணுவத்தினரின் வசம் 10,54721 கனால் நிலங்கள் இருந்ததாகத் தெரிகிறது. மஹபூபா ம்ப்டி (2015-2018) காலத்தில் 4.5 லட்சம் கனால் நிலங்கள் சட்டவிரோதமாக ( மாநில அரசு அனுமதியின்றி) ராணுவம் தனது கைவசம் வைத்துள்ளது என சட்டசபையில் கூறியுள்ளார். 2023 தொடக்கத்தில் சட்டத்திற்கு புறம்பான குடிய்ருப்புகள் என்று சொல்லி ஒரு மிகப் பெரிய ஆபரேஷன் புல்டோஷர் துணையுடன் அரங்கேறி இஸ்லாமியர்கள் குடியிருப்புகளை கணக்கு வழக்கின்றி இடித்து தள்ளி, அப்பகுதிகள் அரசின் வசமாயின. இவை கிட்டத்தட்ட 1112.8 சதுர கி.மீ பகுதியாகும். அதாவது. காஷ்மீர் தலை நகரான ஸ்ரீநகரைக் காட்டிலும் ஐந்து மடங்கு நிலப்பரப்பாகும்.

ராணுவத்தினர் நிலங்களை மட்டுமின்றி, 1,856 கட்டிடங்களையும் தங்கள் பயன்பாட்டிற்கு ஆக்கிரமித்துள்ளனர். நிலங்களிலிருந்து அகற்றப்பட்ட ஏழை மக்களோ, கையறு நிலையில் உள்ளனர். இது வெளியில் பேசப்படாத ராணுவத்தின் நில அபகரிப்பு என்றும், இதனால் புலம் பெயர்ந்தவர்கள் அதிகம் என்றும், ஆனால், அது பற்றி யாரும் பேசுவதில்லை என சிவில் கூட்டமைப்பு கூறுகிறது.

காஷ்மீரை இரண்டாக பிரிக்கும் எல்லைக் கோட்டின் வழியே வர்த்தகம் 2008 முதல் அதிகரித்து 2015-ல், 5000 கோடியை எட்டியது. 2019 ல் இந்த எல்லை தாண்டிய வணிகத்துக்கு தடை விதிக்கப்பட்டு ஏராளமான வணிகர்களும், எண்ணற்ற மக்களும் தொப்புள் கொடி அறுபட்டு அல்லலுற்றனர்.

இராணுவக் குவிப்பால் அடக்கு முறையால் ஏற்படும் உயிரிழப்புகளை தொடர்ந்து, இந்திய அரசு காஷ்மீரின் நீராதாரங்களை கட்டுப்படுத்தி, நிலங்களை அபகரித்து, மாநில நிதி ஆதாரங்களை கைபற்றியும் இந்திய அரசு தனது ஆதிக்கத்தை நீக்கமற நிறைத்துள்ளது.

மோடி அரசின் ஆகஸ்டு 5 நடவடிக்கையை அறிவார்ந்த மக்களும், சான்றோர்களும் காஷ்மீரின் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பு முனையாக பார்க்கவில்லை!

இந்நடவடிக்கைகள், கடந்த எழுபது ஆண்டுகளாக காஷ்மீரில் நடந்து வரும் அதிகார முறைகேட்டின் தொடர்ச்சியாக,

முறை தவறிய ராணுவத்தினருக்கு சட்டரீதியாக பாதுகாப்பு கொடுப்பதின் தொடர்ச்சியாக, (Abuse and Impunity), கேள்வி கேட்பாரின்றி கைது செய்வதன் (Detention) தொடர்ச்சியாகவே அதை பார்க்கின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாகவே , காஷ்மீரின் தனி அடையாளத்தை நொறுக்கி அங்கு இந்திய அரசின் ஆதிக்கத்தை (காங்கிரஸ், ஜனதா , பா ஜ க) அனைத்து ஆட்சியாளர்களும் நிலைநாட்டுகின்றனர்.

ராணுவக் குவிப்பு 1948 முதல் நெடுங்காலமாக நடந்து வருகிறது, எந்த ஆட்சியாளரும் அதை குறைக்க முயற்சிக்கவில்லை.

முறை தவறிய ராணுவத்திற்கு சட்டத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும் ‘ ராணுவத்தின் சிறப்பு அதிகார சட்டம் ( Armed Forces Special Power Act 1990) காஷ்மீரில் 1990 லிருந்து அமலில் உள்ளது. இதன் மூலம் ராணுவத்தினரின் முறைகேட்டிற்கு சட்ட மரியாதையை இந்திய அரசு கொடுக்கிறது. 1978 -ல் காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட பொது பாதுகாப்பு சட்டம் Public Safety Act யாரை வேண்டுமானாலும், தான்தோன்றிதனமாக கைது செய்வதை சட்டமாகவே ஆக்கியதும் மோடிக்கு முந்தைய ஆட்சியாளர்களே!

மக்களை கொல்வதோடன்றி, அவர்தம் நிலங்களையும் ராணுவத்தினர் அபகரிப்பதும் நெடுங்காலமாக நடந்து வருகிறது. இதனுடைய தொடர்ச்சியாகவே, மோடி , அரசியல் பிரிவு 35Aஐ நீக்கி காஷ்மீரில் , காஷ்மீரல்லாதோர் நிலம் வாங்குவதை சட்டமாக்கியுள்ளார்.

‘காஷ்மீரின் நிரந்தர குடிகள்’ என்ற கருத்தை நிராகரித்து காஷ்மீரின் மீதான இந்திய (குடியேறிகளின்) ஆதிக்கத்தை சட்ட பூர்வமாக்கினார்.

காஷ்மீர் மக்கள் தங்களது அடையாளத்தை பறி கொடுத்தவர்களாக மட்டுமின்றி, சொந்த மாநிலம் என்ற தகுதியையும் பறி கொடுத்த அடிமைகளாக இன்று உள்ளனர்மாநில சுயாட்சி, காஷ்மீரின் சுய நிர்ணயம், காஷ்மீர் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்துவது என்பன போன்ற கருத்துக்களை, முயற்சிகளை, முறியடித்த பெருமை மோடியை மட்டும் சேராது. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு முதல், சாஸ்திரி, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் வரை அனைவருக்கும் இந்த பெருமையில் பங்குண்டு.

 இந்திய நாடு ஜனநாயம் மற்றும் மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கங்களை அடித்தளமாக கொண்ட நாடு , பாக்கித்தானை போல மதத்தை அடிப்படையாக கொண்ட நாடல்ல, என்பதால்

சேக் அப்துல்லா இந்தியாவுடன் ‘காஷ்மீரை இணைக்கும்’ (மன்னர் ஹரி சிங்கின் ) தற்காலிக முடிவை ஏற்றுக் கொண்டார் . இம்முடிவு “காஷ்மீர் மக்களின் “ முடிவல்ல!

வாக்கெடுப்பு நடத்தி “இறுதி முடிவு” எடுக்கப்படும் என்ற நிபந்தனையில் இந்த இணைப்பு நடை முறைக்கு வந்தது.

வாக்கெடுப்பு நடத்தாமல் , சேக் அப்துல்லாவை கைது செய்து , காஷ்மீரில் ஜனநாயகத்திற்கு விடுமுறை கொடுத்தது, ஜவகர்லால் நேருவின் அரசு என்பதை மறுக்க முடியாது.

இந்து மகா சபை தலைவரான சியாமா பிரசாத் முகர்ஜியும், ஜனசங்கமும்,” காஷ்மீருக்கு சுயாட்சி எல்லாம் தர கூடாது, முஸ்லீம்கள் அவ்வாறு விரும்பினால், அவர்கள் பாக்கித்தானுக்கு செல்லலாம், எங்களுக்கு காஷ்மீர் நிலப்பரப்பு வேண்டும் “ என்று வெளிப்படையாக கோரினர், தீர்மானம் நிறைவேற்றினர் . தொடர்ந்து “ஆதிக்கத்திற்காக” குரல் எழுப்பினர் , அதை அவர்களது அடிநாதமாக வைத்துள்ளனர்.

இது ஆதிக்கவாதிகளின் குரல் . இந்த ‘இந்து’ ஆதிக்கவாதிகள் , இப்பொழுது இந்திய ஆட்சி பீடத்தில் நிலைகொண்ட ஆதிக்கவாதிகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், “ஜனநாயகவாதியான” நேருவும் , “மதச்சார்பின்மை” பேசும் காங்கிரசும், தங்களுக்கு இருந்த மாபெரும் ஆதரவு மற்றும் செல்வாக்கின் மூலம் காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கவில்லை. பெரும்பான்மை மக்களான காஷ்மீர் முஸ்லீம்களின் உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கவில்லை. அவர்களது செயல்களெல்லாம் காஷ்மீர் நிலப்பரப்பை எதை செய்தாகிலும் தக்கவைத்து கொள்வதில் தொடங்கி, ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் முடிந்தது. ஆக, நடைமுறையில் காங்கிரஸின் அணுகுமுறைக்கும் ஐன சங்கம் -பா ஜ க வின் அணுகு முறைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

இந்தியாவும், பாக்கித்தானும் தங்களிடையே உள்ள பிரச்சினைகளை- காஷ்மீர் விவகாரம் உட்பட – மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லாமல் இரு நாடுகளுமே பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சிம்லா ஒப்பந்தம் கூறுகிறது.

ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தில் லடாக்கை (சீனா வசமுள்ள அக்ஸாய் சின் உட்பட) தனி யூனியன் பிரதேசமாக இந்தியா அறிவித்ததை சீனா ஏற்க மறுத்ததுடன், அதை “கார்ட்டோகிராபிக் அக்ரெஷன் “ என கண்டனமும் தெரிவித்தது. எனவே, இப்பொழுது சீனாவும் இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட நாடாக இருக்கிறது.

பெகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா, சிந்து நதி நீர் திட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்த நிலையில், அதற்கு பதிலடியாக ,பாக்கித்தான் “சிம்லா ஒப்பந்தத்தை” தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

தெற்காசியாவில் அமைதி நிலவ வேண்டுமென்றால், இந்தியா பாக்கித்தான் இடையே உறவுகள் சீராக வேண்டும்.

உறவுகள் சீராகி அமைதி நிலவினால் இரு நாடுகளுக்கிடையில் அணுஆயுதப்போட்டியும், மோதலும் குறைந்து, பாதுகாப்பு செலவினங்கள் மட்டுப்படும்.

இரு நாடுகளிலும் வறுமை ஒழிக்கப்பட்டு வளர்ச்சி ஏற்படும், மக்கள் வாழ்வுத்தரம் மேலோங்கும் . இதற்கு முட்டு கட்டையாக கடந்த எழுபது ஆண்டுகளாக இருப்பது காஷ்மீர் பிரச்சினை தான்.

காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வு , காஷ்மீர் மக்களின் பங்களிப்பு இல்லாமல் அவர்களது சம்மதமின்றி நடக்காது என்ற உண்மையை இந்திய மக்களாகிய நாம் உணர வேண்டும்.

ஆதிக்க மனப் போக்கை விடுத்து, இரு நாடுகளும் காஷ்மீர் மக்களின் உரிமைகளை மதிப்பதோடன்றி, அதற்கு வடிகால்களை உருவாக்கி, அதை பாதுகாக்க முன்வருவதால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

நம்மை மாற்றிக் கொள்ள, நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள நாம் தயங்கினால், மாறி வரும் புவி அரசியல் சூழல்கள் நம்மிடம் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்.

கேள்வி என்னவென்றால், நாம் அதற்கு தயாரா? என்பது தான்!

——முற்றும்——-

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

நழுவிய சமாதான முயற்சிகள் அமைதி இழந்த காஷ்மீர் ( பாகம் 5)

காஷ்மீர் வன்முறை கலாச்சாரத்தில் கால் பதித்த வரலாறு ( பாகம்- 4)

காஷ்மீர் பிரச்சினை நேருவுக்கு முன்னரும், பின்னரும் ( பாகம் 3)

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time