அரசியல் ஆதாயத்திற்காக ஸ்தம்பித்துள்ள டிஜிபி நியமனம்!

-சாவித்திரி கண்ணன்

தமிழ்நாட்டரசின் நிர்வாகம் ஒரு ஸ்திரத் தன்மையின்றி, குழப்ப நிலையிலேயே ஸ்தம்பித்து கிடப்பதை நிர்வாகத்தின் பல மட்டங்களில் பார்க்க முடிகிறது. ஆட்சித் தலைமையில் இருப்பவர் சுயமாக முடிவெடுக்க முடியாதவராக ஆகும் போது, அதிகாரிகள் எப்படி அவர் கண்களைக் கட்டிவிட்டு கண்ணாமூச்சி விளையாடுவார்கள் என்பதற்கு தமிழகமே சாட்சியாகும்;

தமிழகத்தின் மிக முக்கிய பதவியான டிஜிபி நியமனத்தில் ஒரு முடிவை எட்ட முடியாமல் உச்சநீதிமன்றத்தின் கண்டணத்தை பெற்றும் கவலையின்றி, காலம் கடத்துகின்றது ஸ்டாலின் அரசு.

தமிழகத்தின் புதிய காவல் தலைமை இயக்குனர் பதவிக்கு தகுதி வாய்ந்த உயரதிகாரியைத் தேர்வு செய்வதில் ஏன் இத்தனை தடுமாற்றங்கள்..? தயக்கங்கள்? என்று பார்த்தால், முதலமைச்சர் தன் சுய அறிவில், சொந்த அனுபவத்தில் ஒரு முடிவை எட்ட முடியாமல் பல சக்திகள் அவரை வழி நடத்துவதால் ஏற்படும் விளைவே எனச் சொல்லப்படுகிறது.

சட்டம், ஒழுங்கை நிர்வகிப்பவருக்கு திறமை உண்டா? நேர்மை உண்டா? அனுபவஸ்தரா? என்ற முறையில் தேர்வு செய்யும் அணுகுமுறை நடக்குமானால், இந்த தடுமாற்றங்கள் இருந்திருக்காது. தேக்க நிலை தொடர்ந்திருக்காது. எளிதில் முடிவெடுத்துவிட முடியும்.

ஆனால், நமக்கு பரம விசுவாசம் கொண்டவரா? நாம் எதைச் சொன்னாலும் செய்து தருபவரா? சட்டங்களை புறக்கணித்து சகாயம் செய்பவரா? என்ற  கண்ணோட்டத்திலேயே இந்த நியமனத்தை அணுகுவதால் தான் இந்த குளறுபடிகள் அரங்கேறுகின்றன.

செப்டம்பர் 8 ஆம் தேதி மதுரை பீப்பிள்ஸ் வாட்ச் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய டிஜிபி தொடர்பாகத் தமிழக அரசு விரைந்து மத்திய பணியாளர்த் தேர்வாணையத்திற்கு பட்டியலை தர வேண்டும். அவர்களும் விரைந்து செயல்பட வேண்டும் எனக் கூறி இருந்தது. upsc ஐ பொறுத்த அளவில் நாங்கள் காலக்கெடு குறிப்பிட விரும்பவில்லை. விரைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்துகிறோம் என்றனர். ஆனாலும் இந்த அறிவுறுத்தல் கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டது.

காவல் துறையின் தலைமை இயக்குனர் பதவிக்கு டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை மூன்று மாதங்களுக்கு முன்பே மாநில அரசின் மூலம் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், இயலவில்லை.

உச்சநீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், யுபிஎஸ்சி விதிமுறைகளின் அடிப்படையிலும் டிஜிபியாக நியமிக்கப்படும் அதிகாரி குறைந்தது 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருக்க வேண்டும், அவர்ப் பதவி ஓய்வு பெற குறைந்தபட்சம் 6 மாதங்களாவது இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுவது கூட சிரமமல்ல.

விதிமுறைகளின் படி மாநில அரசு முன்மொழியும் தகுதிப் பட்டியலை வைத்து யுபிஎஸ்சி தேர்வுக் குழு நடத்தும் பரிசீலனைக் கூட்டத்தில் யுபிஎஸ்சி தலைவர், மாநிலத்தின் தலைமைச் செயலாளர், உள் துறைச் செயலாளர், தற்போதய டிஜிபி ஆகியோர் பங்கேற்று தகுதி வாய்ந்த மூவரைத் தேர்ந்தெடுத்து தருவார்கள். அதில் ஒருவரை டிஜிபியாகத் தமிழக முதல்வர் அறிவித்திருந்தால் விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும்.

தமிழகத்தில் டிஜிபி அந்தஸ்தில் சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார்ச் சிங், வன்னியப் பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் தேவ் வான்கடே மற்றும் சஞ்சய் மாத்தூர் ஆகிய ஒன்பது பேர் உள்ளனர். இந்த ஒன்பது பேரில் முதல் மூன்று பேரில் ஒருவரைத் தான் பொதுவாக தேர்வு செய்வார்கள்.

ஆனால், தேர்தல் நெருங்குவதால் நேர்மையான நிர்வாகத்திற்கு பேர் போனவரும், சீனியாரிட்டிப்படி முதலாவதாக இருப்பவருமான சீமா அகர்வாலை நியமிக்க அச்சப்படுகிறது ஆட்சித் தலைமை!  இவர் தற்போது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் டிஜிபியாக இருக்கிறார். பொதுவாக பணம் கொட்டும் பொறுப்பாக இந்த பதவி காவல் துறையினரால் பார்க்கப்படுகிறது. ஆனால், அதில் மனம் நிறைவாக பணியாற்றுவதே லட்சியம் என முறைகேட்டிற்கு இடம் தராமல் செயல்பட்டு வருகிறார் சீமா அகர்வால்.

சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர்

இவர் காவல்துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக 2006ஆம் ஆண்டு (PMMS) குடியரசு தலைவர் பதக்கம் வென்றவர் என்பதும், 2014ஆம் ஆண்டு தலைசிறந்த சேவைக்கான குடியரசு தலைவர் பதக்கம் (PPMDS) வென்றவர் என்பதும் கவனத்திற்கு உரியது. இவ்வளவு தகுதிகள் இருந்தும் இவருக்கு கிடைத்திருக்க வேண்டிய தலைமைப் பொறுப்பு தவிர்க்கப்பட்டதற்கான காரணம், இவரது நேர்மை என்பது தான் சோகமாகும். சீமா அகர்வால் தமிழக டிஜிபியாக பதவியேற்றால் லத்திகா சரணிற்கு பின், தமிழகத்தின் இரண்டாவது பெண் டிஜிபி என்ற சிறப்பை பெற்று இருப்பார்.

அடுத்த நிலையில் இருக்கும் ராஜிவ்குமாரும் ஆட்சியாளர்களின் அபிலாசைகளுக்கு இணங்கமாட்டார் என்று சொல்லி நிராகரிப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மூன்றாம் இடத்தில் இருக்கும் சந்தீப்ராய் ரத்தோர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆளும் தரப்பின் இரு தரப்பினர் அடிதடியில் இறங்கிய போது பிரபல ஊடக நிறுவன முதலாளியின் வாரிசுக்கு ஆதரவாக செயல்பட மறுத்த காரணத்தால், அவரும் தவிர்க்கப்படுகிறாராம்.

எனவே, பிரச்சினை இல்லாமல் சொல்வதை செய்யக் கூடிய ரப்பர் ஸ்டாம்பாக டிஜிபி ஒருவர் இருந்தால் தான் சட்டமன்றத் தேர்தலுக்கு வசதியாக இருக்கும் என ஆட்சித் தலைமை, பொறுப்பு டிஜிபியாக சீனியாரிட்டிப்படி மிகப் பின்னால் இருக்கும் ஒருவரை நியமித்துள்ளது.

இப்படித்தான் தமிழக அரசு கலைக் கல்லூரிகள் நூற்றுக்கு மேற்பட்டவற்றில் கல்லூரி முதல்வர் பணியிடங்களை நிரப்பாமல் பொறுப்பு முதல்வர் போட்டுள்ளனர். பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் துணைவேந்தர்களை நியமிக்காமல் பொறுப்பு வேந்தர்கள் என பொம்மைகளை வைத்து உயர் கல்வித் துறையையே ஊசலாட்டத்தில் வைத்துள்ளது ஸ்டாலினின் திறமையற்ற ஆட்சி நிர்வாகம்.

ஒரு மாநிலத்திற்கு உறுதி வாய்ந்த காவல்துறை தலைவர் மிக அவசியமாகும். அப்படி இல்லாவிட்டால், மக்களின் புகார்கள் மீது நடவடிக்கைகள் மிகத் தாமதமாகும். நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் அடிக்கடி நீதிமன்றங்களின் கண்டணங்களை சந்திக்க நேரும். இது குற்றவாளிகளுக்கு கொண்டாட்டமான காலகட்டமாகிவிடும். தற்போது தமிழ்நாடு இந்த நிலைமையில் தான் உள்ளது.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time