இசைத் துறையில் இணையற்ற சாதனையாளராக இளையராஜா போற்றப்படுகிறார். இசைத்துறையில் ஒரு மகத்தான ஆளுமையே இளையராஜா. ஆனால், அவர் மட்டுமே சாதனையாளரல்ல! அத்துடன் அவரது சாதனைக்கு அடித்தளமிட்ட இசைமேதைகள் பற்பலர். அந்த குருமார்களை நினைவு கூர்வதும் ஒர் கடமையல்லவா?:
இளையராஜா பண்ணைபுரம் என்ற கிராமத்தில் பிறந்து, வறுமையின் காரணமாக எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டவர். ஆனால், அவர் ஒரு கற்பூர புத்தி கொண்டவர். அதனால் தன்னைச் சுற்றிலும் உள்ள கிராமத்து மக்களிடமிருந்தும், தன் காலத்திய இசை மேதைகளிடமிருந்தும் வெளிப்பட்ட இசையை அவர் மிகச் சிறப்பாக கிரகித்துக் கொண்டு, தன்னை செழுமைப்படுத்திக் கொண்டார்.
உருவாக்கப்படும் எந்த ஒரு இசையும், எந்த ஒரு தனி மனிதனின் கண்டுபிடிப்பல்ல. ஏற்கனவே இந்த சமூகத்தில் இருப்பதை தன் தேவைக்கேற்ப கண்டடைவதேயாகும்.
இளையராஜாவின் இசை பல காலமாக, பல தலைமுறைகளாக நாட்டுப்புற மக்கள் தங்கள் பாடுகளுக்காக பாடி வந்ததே! அவர்களிடமிருந்து உள் வாங்கியதைத் தான் அவர் மெருகேற்றி வெற்றிகரமாக திரை இசையில் வெளிப்படுத்தினார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பிரச்சாரங்களுக்காக சினிமா பாடல்களின் மெட்டுக்களில் பாட்டெழுதி அவர் அண்ணன் நடத்திய இசை கச்சேரிகளில் தான் இளையராஜவின் இசைப் பயிற்சி தொடங்கியது. ஏற்கனவே தன் அண்ணன் பாவலர் வரதராஜன் வழியில் சினிமா இசையமைப்பாளர்கள் சி.எஸ். ஜெயரமன், ஏ.எம்.ராஜா, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றவர்கள் போட்ட இசையை உள்வாங்கி, ஆர்மோனியத்தில் வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
அடுத்ததாக சென்னை வந்து ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராக இருந்த போது அவரிடமிருந்தும், சக இசைக் கலைஞர்களிடமிருந்தும் இசையை உள்வாங்கினார்.

தன்ராஜ் மாஸ்டரின் சீடரே இளையராஜா!
எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய மேற்கத்திய இசையான சிம்பொனியில் சாதனை செய்ய அவருக்கு அடித்தளம் போட்டவர் தன்ராஜ் மாஸ்டர் தான். மயிலாப்பூர் தன்ராஜ் மாஸ்டரின் அறை எண் 13 தான் அவருக்கு மேற்கத்திய இசை உலகை திறந்து காண்பித்த இடமாகும். வறுமையில் உழன்ற இளையராஜவிற்கு இலவசமாகவே அவர் மேற்கத்திய இசையை கற்பித்தார்.
முதலில் பியானோ மட்டுமே கற்கச் சென்ற இளையராஜாவிற்கு டிரம்ஸ், கிடார் உள்ளிட்ட அனைத்து இசைக் கருவிகளையும் கையாளும் நுட்பத்தை தன்ராஜ் மாஸ்டர் தான் கற்பித்தார். தன்ராஜ் மஸ்டர் தான் மேற்கத்திய இசை மேதைகளான பீத்தோவனையும், மோசார்ட்டையும், மேண்டல்சனையும், பாஹுகுவையும், ஷீபர்டுவையும், சைக்கோவ்ஸ்கீயையும் இளையராஜாவிற்கு அறிமுகப்படுத்தினார். இந்த இசை மேதைகளின் மேற்கத்திய இசையை தன் திரைப் பாடல்களில் நிறையேவே பயன்படுத்தி உள்ளார் இளையராஜா.

இந்த இடத்தில் தன்ராஜ் மாஸ்டரின் மூலத்தை நாம் பின்னோக்கி பார்த்தால், அவர் மேற்கத்திய இசையைக் கற்றது மைசூர் மகாராஜாவின் இசைக் குழுவை நிர்வகித்த ஜெர்மானிய இசை மேதை ஒருவரிடமிருந்து தான். அந்த இசைக் குழுவில் தன்ராஜ் மாஸ்டரும் இருந்துள்ளார்.
அடுத்ததாக தன்ராஜ் மாஸ்டரின் மற்றொரு குரு தமிழ் இசைப் பேரறிஞர் ஆப்ரஹாம் பண்டிதரின் மகன் ஜோதி பாண்டியனாவார். இந்த ஆப்ரஹாம் பண்டிதர் தான் இசை உலகிற்கு கர்ணாமிருத சாகரம் என்ற இசை பொக்கிஷ நூலை தந்தவர். கர்நாடக இசை என்பது தமிழிசையிலிருந்து உள்வாங்கப்பட்டு உருவான ஒன்றே என்பதை தன் நீண்ட நெடிய ஆராய்ச்சியின் மூலம் உலகிற்கு அறிவித்தவர் ‘இசை சாகரம்’ எனப் போற்றப்படும் ஆப்ரகாம் பண்டிதரே.

ஆக, இப்படிப்பட்ட பின்னணி கொண்ட தன்ராஜ் மாஸ்டர் தான் தன்னிடம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் இசை பயில வந்த ராசையாவை, ”தினசரி வாடா தம்பி” என அழைத்து அனைத்து சங்கீத நுணுக்கங்களையும் ஒளிவுமறைவின்றி கற்பித்தவர். பேருந்தில் செல்ல காசில்லாத நிலையில் தினசரி வடபழனியில் இருந்து மயிலாப்பூருக்கு நடந்தே சென்று இசை பயின்றுள்ளார் இளையராஜா. மாபெரும் இந்த சிம்பொனி சாதனையை நிகழ்த்திய தருணத்தில் இளையராஜா தன் குருவான தன்ராஜ் மாஸ்டரை நினைவு கூர்ந்து வணங்கி இருக்க வேண்டும். ஆப்ரகாம் பண்டிதர் வழியில் வந்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஏனோ, அது நடைபெறவில்லை.
மேலும், தன் எண்ணற்ற திரை இசை உருவாக்கத்திற்கு இளையராஜா எத்தனை, எத்தனையோ இசை மேதைகளிடமிருந்து இசையை எடுத்துள்ளார். அதில் தமிழ் இசை மூம்மூர்த்திகளான முத்து தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை ஆகியோருக்கும் நிச்சயம் பங்குள்ளது. கர்நாடக சாஸ்த்திர மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்த்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோருக்கும் பங்குள்ளது.

இது மட்டுமல்ல, அவரது திரையிசை முன்னோடிகளான சி ஆர் சுப்பராமன், ஜீ ராமநாதன், எம் எஸ் விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், ஆர் டி பர்மன்..என எண்ணற்றவர்களுக்கும் தொடர்பிருக்கிறது. இளையராஜாவின் ஒவ்வொரு பாடலின் மூலத்தையும் ஆராய்ச்சி செய்யப் போனால்.. அதில் பால முரளிகிருஷ்ணா, விணை மேதை எஸ் பாலச்சந்தர், எம் எஸ் தண்டபாணி தேசிகர்.. உள்ளிட்ட மேதைகளிடமிருந்தெல்லாம் அவர் எவ்வளவு எடுத்துள்ளார் என்பதை இசை ஆர்வலர்களால் பட்டியலிட்டுச் சொல்ல முடியும். ஆக, இந்த சமூகத்திடமிருந்து எடுத்ததைத் தான் அவர் திருப்பித் தந்துள்ளார்! யார் ஒருவருமே அப்படித் தான் தர முடியும்.
சிகரமும் தொட்டார், சீரழிவிற்கும் வித்திட்டார்!
சினிமா இசையில் சிகரம் தொட்டதைப் போலவே அதை சீரழித்ததிலும் சிகரம் தொட்டவர் தான் இளையராஜா. இளையராஜா காலத்திற்கு முன்பு வரையிலும் திரை இசை பாடல்களில் இருந்த மொழி உச்சரிப்பு அழகையும், இசை அமைதியையும் குலைத்தவர் இளையராஜா தான். அதிகமான இசைக் கருவிகளை அலற விட்டு, பாடல் வரிகளை கேட்க முடியாத வகையில் இசையமைக்கும் வழி முறைகளை ஆரம்பித்து வைத்தவரும் இளையராஜா தான்.
திரையிசைப் பாடல்கள் என்பவை ஒரு குறிப்பிட்ட கதையோட்டத்திற்கும், கதாபாத்திரத்தின் உணர்ச்சிக்கும் உரம் சேர்க்கவே உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வ நாதன் போன்றோர் பெரும்பாலும் கவிஞர்கள் எழுதித் தரும் பாடல்களுக்கு மெட்டுப் போட்டனர். மெட்டுக்கு பாட்டு என்பதிலும் கூட பாட்டு வரிகளுக்கும், அந்த வரிகளில் பொதிந்துள்ள அர்த்தங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றை வெளிப்படுத்தவுமே அக்கறை காட்டினர். பாடகர்களும் பாவங்களை உணர்ச்சிகளை பாடல்களில் கொண்டு வந்தனர். அதனால் தான் அன்றைக்கு கண்ணதாசன், பட்டுக்கோட்டை, மருதகாசி ஆகியோர் பாடல்கள் வாழ்க்கைப் பாடமாகவும் மக்களால் உணரப்பட்டன.
இந்த அழகான திரையிசை சூழலை இசை ஆதிக்கம் மிகுந்ததாக மாற்றியவர் இளையராஜா. இசை கருவிகளின் தொழில் நுட்பங்களை இசை அமைப்பாளர்கள் போடும் பாடல்களுக்கு ஏற்ப பயன்படுத்திய காலத்தை மாற்றி, நவீன இசை தொழில் நுட்பங்கள் இசை அமைப்பாளரை ஆட்டுவித்து , ஆட்சி செய்யும் காலமாயிற்று இளையராஜாவின் காலகட்டம். இது இன்றைக்கு மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டது. மேலும், வக்கிரமான பாலியல் உணர்ச்சிகளுக்கு தீனி போடும் நாரசமான முக்கல், முனகல் பாடல்களை தந்தவரும் இளையராஜா தான்.

இளையராஜா தன்னுடைய கர்வ மிகுதியால் பெரும்பாலும் மாபெரும் கவிஞர் கண்ணதாசனை தவிர்த்தார். அடுத்து தமிழ் திரை இசைப் பாடல்களில் சிகரம் தொட்ட டி.எம்.செளந்திரராஜனை தவிர்த்தார். பிறகு பி.சுசீலாவையும் தவிர்த்தார். அடுத்து அவராலேயே அறிமுகமான கவிஞர் வைரமுத்துவையும் விலக்கினார்.
இளையராஜாவும், வைரமுத்துவும் இணைந்து செயல்பட்ட காலங்களில் திரையிசையில் தமிழ் செழிப்படைந்தது. வைரமுத்துவின் மீதான வன்மத்தால் தன் திரையிசைப் பயணத்தில் பேரிழப்பை சந்திக்க நேர்ந்ததை இன்று வரை இளையராஜா ஏனோ உணரவில்லை.
இளையராஜாவுக்கு முன்பு வரை திரையிசைப் பாடல்களை ரசிகர்கள் கண்ணதாசன் பாடல்களாகவும், பட்டுக் கோட்டையார் பாடல்களாகவும், டி எம் எஸ், பி.சுசிலா, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்களாகவும், எம் ஜி ஆர், சிவாஜி பாடல்களாகவும் தான் அறிந்திருந்தனர். ஆனால், இளையராஜாவோ அதில் கவிஞர்கள், பாடகர்கள், நடிகர்கள் போன்ற அடையாளங்களைக் கடந்து தன்னை மட்டுமே பிரதானமாக்கி நிலைப்படுத்திக் கொண்டார்.
திரையிசைக்கு பொதுச் சந்தையில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார பலாபலன்களால் தயார்ப்பாளர்கள் இளையராஜாவை கொண்டாடத் தொடங்கினார். காலப் போக்கில் அவரது பிரம்மாண்ட மார்க்கெட் மதிப்பை கண்டு திரையுலகினர் இளையராஜாவின் தாழ்பணியும் எஜமானத்துவ போக்குகளும் வளர்ந்தன.

இளையராஜா தன் திறமைக்கும் அதிகமாக செல்வ வளம் பெற்றுள்ளார். தன் தகுதிக்கும் அதிகமாக கொண்டாடப்படுகிறார். அவர் காலத்திற்கு முன்பு ஜி.ராமநாதனும், எம்.எஸ்.விஸ்வநாதனும், கே.விமகாதேவனும் சாதித்தவை எல்லாம் ஒன்றும் இல்லை போலவும், அவரது சமகாலத்திலேயே சங்கர்-கணேஷும், ஏ.ஆர்.ரகுமானும், தேவாவும் ஏற்படுத்திய அதிர்வுகளை பொருட்படுத்தாமலும், ’இளையராஜா ஒருவரே சகலமும்’ என்பதாக பார்க்கும் போக்கு, குறுகிய கண்ணோட்டம் கொண்டதாகும்.
Also read
ஏ.ஆர்.ரகுமான் பல புதிய பாடகர்களை, பாடகிகளை அறிமுகப்படுத்தினர். இளம் தலைமுறை இசை கலைஞர்கள் உருவாக்கத்தில் பெரும் ஈடுபாடு காட்டி எண்ணற்றவர்களை உருவாக்கி வருகிறார். அது போன்ற முயற்சிகள் இளையராஜாவிடம் இல்லை. தன் காலத்தில் இந்த சமூகம் சந்தித்த எந்தப் பேரிழப்புகளிலும், துயரத்திலும் அவர் பங்கெடுக்க முன் வந்ததில்லை.
இளையராஜா அரசாங்கம் தனக்கு எடுத்த மிகப் பெரும் பாராட்டு விழாவின் போது, தன் குருநாதர்களை நினைவு கூறவில்லை. தன்னோடு இசைத் துறையில் பயணித்த முன்னோடிகளில் உயிருடன் இருக்கும் மூத்த இசை முன்னோடியான கே.ஜே.யேசுதாசையோ, ஒப்பற்ற இசையரசிகளான பி.சுசிலாவையோ, எஸ்.ஜானகியையோ அழைக்க வைத்து மேடையை பகிர்ந்து கொள்ளவில்லை. தன் இசைக்கு பாட்டால் உயிரோட்டம் தந்த எந்த ஒரு கவிஞரையும் மேடை ஏற்றவோ, நினைவு கூறவோ இல்லை…என்பதும் வருத்தத்திற்கு உரியதாகும்.
சாவித்திரி கண்ணன்
















இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானுங் கெடும். நமது திறமையில் பெருமை கொள்ளலாம் தவறில்லை. ஆனால் ஆணவம் கூடாது. இதைத் தெளிவுடன் காட்டும் கட்டுரை இது. ஒரு நபரையோ அல்லது இயக்கத்தையோ உருவாக்கிய தலைவர்களை அந்த நபர் அல்லது இயக்கம் மறக்குமானால் வரலாறு மன்னிக்காது புகழ் சேர்க்காது. நக்கீரனாக அறம் பணியாற்றுகிறது.
உண்மையான உன்னதமான கட்டுரை.
வாழ்வின் வெற்றி அடைந்த ஒரு மாமனிதன் தன்னுடைய செயல்களால் அவ்வப்போது முகம் சுளிக்க வைக்கப்படுகிறார் என்பதற்கு மதிப்பிற்குரிய இளையராஜா ஒரு உதாரணம்
தமிழ் சினிமாவில் கறுப்பு வெள்ளை காலத்தை சேர்ந்த பல பாடல்கள் மிக சிறந்தவை. நேர்த்தியானவை. இசை அமைதி உள்ளவை. இளையராஜாவின் பல பாடல்கள் மிக சிறந்த இசை அமைப்பை கொண்டவை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இவரின் பெரும்பாலான பாடல்களில் Tempo என்பதே கிடையாது. இதை ஏன் யாரும் கண்டு கொள்ளவில்லை என தெரியவில்லை. Tempo உடன் பாடப்படும் மென்மையான பாடல்கள் தான் காலத்தை வென்று நிற்கும். வடக்கில் இருந்து வரும் கஸல், பல வங்காள மற்றும் பக்கத்தில் உள்ள இலங்கையின் பல சிங்கள பாடல்கள் மெதுவாக ஆனால் வலுவாக கால் ஊன்றி நின்று உலக மக்களின் மனதை உருக்க வல்லவை. இப்போது தமிழ் சினிமாவில் தலித் இசை, கானா பாட்டு என்னும் பெயரில் டப்பாங்குத்தாக அடித்து தள்ளுகிறார்கள். எங்கும் எதிலும் இரைச்சல். தமிழ் மொழியை ‘அரவம்’ என இழிவாக ஆந்திராவில் குறிப்பிடுவார்கள். இப்போது இதுவும் சேர்ந்து விட்டது.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஜேம்ஸ் வசந்தன் இசையில் “தமிழுக்கு அமுதென்று பேர்” என்னும் பாரதிதாசன் பாட்டை சேர்ந்திசையாக பார்க்க நேர்ந்தது. பத்து பதினைந்து பேர் சேர்ந்து கொண்டு வாய்ப்பாட்டை ராகத்தோடு ஒப்பிப்பது மாதிரி படித்தார்கள். படு கேவலம். இவர் தான் பிரதமர் கலந்து கொண்ட விழாவில் தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து ஆகியவற்றுக்கு இசை அமைத்தார் என்பது அவமானம்.
இசை வடிவங்களிலேயே மிகச்சிறந்த இசை வடிவம் ஹிந்துஸ்தானி தான். ஏனெனில் அது கலப்பு இசை. உருது, ஹிந்தி, வங்காளம் ஆகிய வட இந்திய மொழிகளும் சிங்களமும் கொடுத்து வைத்தவை.
மேலும் தமிழில் சேர்ந்திசை பாடல்கள் அனேகமாக இல்லை என்றே சொல்லி விடலாம். இருப்பதெல்லாம் ஜேம்ஸ் வசந்தன் மாதிரியான ஆட்களின் வாய்ப்பாடு ரகம் தான். எல்லாமே அரசியல்.
தமிழ் நாட்டில் இருப்பவர்களில் பெரும்பான்மையினர் தமிழ் சினிமா பாடல்களை தவிர வேறு மொழி பாடல்களையோ இசை வடிவங்களையோ கவனிப்பது இல்லை. கவனித்தவர்களுக்கு தான் இங்கே இருக்கும் தரக் குறைவும் போதாமைகளும் தெரியும்.
தெள்ள தெளிவாக செதுக்கிய உண்மை கட்டுரை. இதில் மறுப்பதற்கு இடமே இல்லை
இந்த கட்டுரையை முழுவதுமாக புறம் தள்ளி விடவேண்டும் என்று நினைக்கின்றேன்.இது ஒரு ஆளுமையை அதன் வழி நின்று போற்றாமல் பிழைகளை மட்டுமே அறுவடை செய்ய நினைக்கின்றது.அவ் விழாவில் கலந்து கொண்டவன் என்ற நிலையில் எனக்கும் சிறு சிறு வருத்தங்கள் உண்டு… (குறிப்பாக தன்னை அடையாளம் கண்டு கொண்டவர்களையும், தன் குருமார்களையும்,தன் சினிமா நண்பர்களையும்,அதன் வழி நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு இருக்கலாம்.)
ஆனால் இவ்விழா தன் சிம்பொனி வெற்றிக்காக கொண்டாடப்படுகிறது என்ற சிந்தனையின் அடிப்படையில் அவர் உரை இருந்தது என்று நினைக்கின்றேன்.
இன் நிகழ்வை இவ்வாறு தான் பார்க்கலாமே! குறை கூற வேண்டும் என்று நினைத்தால்?
ஒரு கடைக்கோடி தமிழனின் பெருமையை வெற்றியை கொண்டாடுங்கள்…எதாவது சாக்கு, போக்கு வைத்து வழக்கம் போல் வசை படாதீர்கள்.நன்றி.
மிக அருமையாகச் சொன்னீர்கள்