முக்கிய சேவையான மருத்துவ துறையில் கூட ஒப்பந்தக் கூலிகளாகவே மருத்துவர்களும், செவிலியர்களும் பல்லாண்டுகள் வேலை வாங்கப்படுவது அரசு நிர்வாகத்தின் அராஜக போக்கை அம்பலப்படுத்துகிறது. மருத்துவத் துறையையே மரணப்படுக்கையில் கிடத்தியுள்ள தமிழக அரசின் அளப்பரிய சாதனைகள் குறித்த ஒரு அலசல்;
கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் மருத்துவர்களும், செவிலியர்களும் எத்தனை முறை தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதற்கு கணக்கு வழக்கே இல்லை. சுகாதாரத் துறையின் அடிநாதமாகத் திகழ்பவர்கள் செவிலியர்கள். உண்மையான சேவையை வழங்கியும் – பல்லாண்டுகளுக்கு பிறகும் – பணி நிரந்தரம் செய்யாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தின் செவிலியர்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது.
தமிழக அரசு மருத்துவர்களும் கடந்த 18 ஆண்டுகளாக சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளதால் மனச் சோர்வு அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டிலுள்ள 1,370 ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒரு நிரந்தர செவிலியர் பணியிடம் கூட இல்லை. அதுவும், நேரம் கால நிர்ணயமின்றி 12 மணி நேரம் 14 மணி நேரம் கசக்கி வேலை வாங்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நிரந்தர தன்மையுடைய பணியாளர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று பல உச்சநீதிமன்ற உத்தரவுகள் இருக்கின்றன. ஆயினும், தற்போது தமிழ்நாடு அரசு செவிலியர்களை ஒப்பந்த முறையில் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக பணியமர்த்தி உழைப்பை சுரண்டலை அரங்கேற்றி வருகிறது.

மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் தேர்வு வைத்து தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் 15 ஆயிரம் பேர் தற்போது ஒப்பந்த முறையில் பணியாற்றுகின்றனர். பணியில் சேர்ந்த போது ரூ.7,500 சம்பளம் வழங்கப்பட்டது. 2014 ல் போராட்டத்திற்கு பின் ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 2021 ல் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு பிறகு ரூ.18 ஆயிரம் ஆனது.
இவர்களை பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே நியாயமான ஊதியமான ரூ.54 ஆயிரம் கிடைக்கும். எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பும், ஊதியம் கிடைக்கும். தற்போது ஒரே வேலை செய்யும் செவிலியர்களுக்கு நிரந்தரம், தற்காலிகம் எனப் பாகுபடுத்தி இருவேறு சம்பளம் தரப்படுவது மன உளைச்சலை உருவாக்கி உள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை பல ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எம்.ஆர்.பி எனப்படும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித் தேர்வில் வென்று பணி பெற்றவர்கள் தான். நியாயப்படி இவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரமாகி இருக்க வேண்டும். ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளோர் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை. போராடும் போதெல்லாம் கைது செய்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் உஷ்ணமானவை; அவை கீழே தரப்பட்டுள்ளது.
“தமிழ்நாட்டில் தொகுப்பூதியம் பெறும் ஒப்பந்த செவிலியர்களை தமிழக அரசு சுரண்டுகிறது. செவிலியர்களை அளவுக்கு அதிகமாக உழைப்புச் சுரண்டல் செய்கிறீர்கள். ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள்..!
நாட்டிலேயே சிறந்த மாநிலம் என்று கூறும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏன் இப்படி இருக்கிறது? தமிழ்நாடு அனைத்திலும் வளர்ந்த மாநிலம், பொருளாதார ரீதியில் வளர்ந்த மாநிலம் எனக் கூறுகிறீர்கள். ஆனால், சேவை செய்யும் செவிலியர்களுக்கு உரிய ஊதியத்தை கொடுக்க மறுக்கிறீர்கள். இதை நாங்கள் ஏற்க முடியாது..!
இலவசங்களை கொடுக்க பணம் இருக்கிறது. ஆனால், உழைப்பவர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? செவிலியர்களுக்கு ஊதியம் வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசை காரணம் காட்டுவது ஏன்? ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்? என்பதை கூறுங்கள். ஆனால் செவிலியர்களுக்கு சம்பளம் தர பணம் இல்லையா? என காட்டமாக கேள்வி கேட்டு, வழக்கு தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ‘மத்திய அரசிடம் இருந்து உரிய பணம் கிடைக்கவில்லை. அதனால்தான் ஒப்பந்த செவிலியர்களின் ஊதியம் நிலுவையில் உள்ளது’ என தெரிவித்த போது, தமிழக அரசின் வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் ஏன் ஒரு தனித் திட்டத்தை தொடங்கக் கூடாது? உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு தானே? அதை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது” என்றனர், நீதிபதிகள்.
தமிழக மருத்துவத் துறையில் 2015 -ல் நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தேர்தல் அறிக்கையில் இந்த நம்பிக்கையை விதைத்து தான் திமுகவும் அரியணை ஏறியது. ஆனால், அதை செயல்படுத்த மறுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மூர்க்கம் காட்டி வருகிறது மு.க.ஸ்டாலின் அரசு.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளதானது, சமூக நீதி பேசும் திராவிட மாடல் அரசின் பொய் பிம்பத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இது வரை 33,987 பேருக்கு மருத்துவத் துறையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாக அத் துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது உண்மையல்ல. இதில் சுமார் 27 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள். அதாவது உழைப்பு சுரண்டலுக்கு பலிகடாவாகி உள்ளவர்கள். இதனால் தான் தங்களை பணி நியமனம் செய்யக் கோரி இவர்கள் மீண்டும், மீண்டும் போராடி அடி,உதை கைதுக்கு ஆளாகிறார்கள்!

ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதிய செவிலியர்களை மட்டுமே கொண்டு இயங்கும் இடத்தில் நிரந்தர செவிலியர், கண்காணிப்பாளர் பணியிடங்களே இல்லாத அவல நிலை இன்னும் எத்தனை நாட்கள் தொடருமோ..? ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12 முதல் 24 மணி நேரம் வரை பணி செய்யும் செவிலியர்களுக்கு பணி நேரத்தை ஒழுங்குபடுத்தினால் தான் அவர்களின் ஆரோக்கியமும் காப்பாற்றப்படும். செவிலியர்களை அளவுக்கு அதிகமாக கசக்கி பிழிந்து வேலை வாங்கி நோயாளிகளாக்கி விடுகிறது தமிழக அரசு.
அமர்க்களமாக புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் உரிய வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதரப் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப மனமில்லை அரசுக்கு. நான்கு பெட்டுகளுக்கு ஒரு செவிலியர் என்பதே சேவைக்கு சரியான வாய்ப்பாகும். ஆனால், நாற்பது பெட்டுக்கு ஒரு செவிலியர் என்ற அவல நிலையில் தமிழக சுகாதாரத் துறை உள்ளது.
Also read
கொரோனா காலங்களில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த செவிலியர்களை நிரந்தரம் செய்யாமல் பணி நீக்கம் செய்த போதும் நீதிமன்றம் தலையிட்டு, இவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்றது. அதற்கும் இன்று வரை இசையவில்லை தமிழக அரசு.
தற்போது உச்ச நீதிமன்றம் ஓங்கி குட்டியுள்ளது. இதற்கு பிறகாவது செவியர்கள் மட்டுமின்றி சுகாதாரப் பணியாளர்கள், தொகுப்பூதிய ஆசிரியர்கள்.. என அனைத்து அரசு துறைகளிலும் நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து வேலை வாய்ப்பே அற்ற நிலையில் – குறைந்த கூலிக்கு வருவோரையே வைத்து – தொடர்ந்து உழைப்பு சுரண்டலை அரங்கேற்றும் திமுக அரசுக்கு உரைக்குமா? பார்ப்போம்.
சாவித்திரி கண்ணன்















Leave a Reply