சொத்து சேர்ப்பில் சாதனை படைத்த அண்ணாமலை!

-சாவித்திரி கண்ணன்

தமிழ்நாட்டில் மிகக் குறுகிய காலத்தில் எந்தப் பதவியிலும் இல்லாமலே அதிகம் சம்பாதித்த முதல் அரசியல்வாதி என்ற புகழ் அண்ணாமலையைத் தான் சாரும். சொத்துக்களை குவிக்க அண்ணாமலை கையாண்ட பாணி என்பது இது வரை தேசிய கட்சியின் தமிழக தலைவர்கள் யாருமே நினைத்துக் கூட பார்த்திராதது;

திமுக ஆட்சியாளர்களின் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக அக்கினிப் பிழம்பு போல அண்ணாமலை மேடையிலும், ஊடகங்களிலும் பேசும் பேச்சுகள் புல்லரிக்க வைக்கும். அடடா! இவரல்லவா அநீதிகளை தட்டிக் கேட்கும் அருமைத் தலைவர் என பார்ப்பவர்களை பரவசப்படுத்தும்.

ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் வேலை பார்த்து வந்த அண்ணாமலை வெறும் ஐந்தே ஆண்டுகளில் தமிழக அரசியலில் பெரும் கோடீஸ்வரராக மாறியது என்பது ஒரு அசாதாரணமான வளர்ச்சியாகும். இன்றைக்கு தனி கட்சி ஆரம்பிக்க போவதாகவும் அந்தக் கட்சிக்கு கொங்கு நாடு ஜனதா கட்சி எனப் பெயரிடப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து நடத்துவது என்பது தான் இன்று இருப்பதிலேயே மிக அதிக செலவாகக் கூடிய முன்னெடுப்பாகும். அரசியலில் பல்லாண்டுகள் இருந்து – மூன்று முறை முதலமைச்சராகவும் வாய்ப்பு பெற்ற மிகப் பெரிய அளவில் சொத்து சேர்த்து வைத்துள்ள – ஒ.பன்னீர் செல்வத்திற்கே ஒரு தனி கட்சி தொடங்கும் தைரியம் இல்லை. ஆனால், அண்ணாமலைக்கு அந்த தைரியம் எப்படி வந்திருக்கிறது என்பதன் பின்னணியை ஆராய்ந்தால், அவர் இந்தக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவு செல்வம் சேர்த்துள்ளதால் பெற்ற தைரியமே இது எனப் புரிய வரும்.

இவ்வளவு செல்வம் எப்படி சேர்ந்தது? என்பதை பார்ப்பதற்கு முன் அண்ணாமலை குறித்து சற்றே பின்னோக்கி சென்று பார்ப்போம்.

41 வயதாகும் அண்ணாமலை கரூர் சின்னதாராபுரம் என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டியில்  ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவராவார். இவர் கர்நாடகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றிய போது ஆர்.எஸ்.எஸ் முக்கியஸ்தர் பி.எல்.சந்தோஷால் அடையாளம் காணப்பட்டு அரசியலுக்கு வந்தார்.

எட்டாண்டுகளே ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை 2019 ஆம் ஆண்டு தன் வேலையை ராஜுனாமா செய்துவிட்டு ஆகஸ்ட் , 2020 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருகிறார். பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தவுடன் மாநிலத் துணைத் தலைவர் பதவி தரப்படுகிறது. அடுத்த ஆண்டே இவருக்கு சட்டமன்ற தேர்தலில் நிற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது..சட்டமன்ற தோல்வியையடுத்து  மூன்றே மாதத்தில் பாஜகவின் மாநிலத் தலைவராக்கப்படுகிறார் அண்ணாமலை.

ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர். சாதாரண விவசாயக் குடும்பத்தின் பின்னணி, துடிப்பான இளைஞர் ஆகிய அம்சங்கள் அவர் மீதான ஈர்ப்பை பொதுத் தளத்தில் ஏற்படுத்தின. கூடவே, ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தால் கிடைத்த ஊடக லாபியால் ஊடக கவனம் பெற்று விரைவில்  புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.

வெறும் மூன்றரை வருடங்களே பாஜகவின் தமிழகத் தலைவராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்த நிலையிலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும், ஆதரவாளர்களையும் பெற்றுள்ளார் அண்ணாமலை.

முதலில் அடிப்படை அரசியல் அறிவும், அனுபவமும் இல்லாமல் அரசியலில் உயர் பதவிக்கு வந்ததால் தப்பும், தவறுமாக பேசி அவமானங்களுக்கு ஆளானார். போதக்குறைக்கு தமிழக பாஜகவில் உள்ள வலிமையான பார்ப்பன லாபியும், சீனியர்களின் அலட்சியமும் அவரை தடுமாறச் செய்தன.

முதலில் தனக்கு போட்டியாகவும், சவாலாகவும் இருந்த கே.டி.ராகவனை ஊடகவியலாளர் மதன் மூலம் ரகசிய வீடியோ எடுத்து அம்பலப்படுத்தி காலியாக்கினார். அதன் பிறகு எஸ்.வி.சேகர், காய்த்திரி ரகுராம் போன்றவர்களை வெளியேற்றி, தன் அதிகாரத்தின் பவரை உணர்த்தி பார்ப்பன லாபியிஸ்டுகள் அனைவரையுமே அடக்கி மூலையில் கிடத்தினார்.

ஆரம்ப காலத்தில் ஊடகத்தின் கேள்வியை எதிர்கொள்ளும் போது இயலாமை காரணமாக பதட்டமும், எரிச்சலும் கொண்டார். மிக ஆணவத்தோடு பத்திரிகையாளர் சந்திப்புகளை கையாண்டார். அவரது அடங்க மறுக்கும் ஆத்திரமும், குதர்க்கமான பேச்சும் கவனம் ஈர்த்து குறிப்பிட்ட பார்வையாளர்களை அவருக்கு பெற்றுத் தந்தது.

இந்த சமயத்தில் தமிழ்நாட்டில் ‘ஆண்டி பிராமின்’ அரசியலால் அதிகாரத்திற்கு வந்த திமுக மீது தமிழக பார்ப்பனர்களுக்கு இருந்த கோபத்திற்கான ஒரு வடிகாலாகவும் அண்ணாமலையின் திமுக எதிர்ப்பு ஆவேசம் பார்க்கப்பட்டது. அவரது அபத்தமான பேச்சுக்களைக் கடந்து பார்ப்பன ஊடகம் இவரை தலையில் வைத்து கொண்டாடத் தொடங்கியது.

இதனால் அண்ணாமலையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக திமுக மீது தீவிர தாக்குதலைத் தொடுத்தார். தமிழக ஊடகங்களும், அறிவு ஜீவிகளும், இடதுசாரியினரும் திமுகவின் ஊழல்களை, குற்றங்களை மறைத்து, ஆட்சிக்கு பாதுகாப்பு கேடயமாக இருக்கும் புறச் சூழல்களும் அண்ணாமலையின் திமுக ஆட்சிக்குகான எதிர்ப்புக்கு அதிரடி பேச்சுக்களுக்கு  பெரும் முக்கியத்துவத்தை பெற்றுத் தந்தன.

அண்ணாமலை பேசுவதை ஊடகங்கள் ‘ஹைலைட்’ செய்து ‘லைம் லைட்டுக்கு’ கொண்டு சென்றதைத் தொடர்ந்து, தமிழக ஆட்சியாளர்களில் பலர் குறிப்பாக அமைச்சர்கள் சிலரே அண்ணாமலைக்கு கப்பம் கட்டி தங்களை தற்காத்துக் கொள்ளும் சூழல்களும் அரங்கேறின. திமுக அமைச்சர்களின் சொத்து விபரங்களை அறிவிப்பதாகச் சொல்லியே அண்ணாமலை தன் சொத்தை அதிகரித்துக் கொண்டார். இன்று வரை அண்ணாமலை ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் சொத்து குவிப்பை பேசவில்லை என்பதையும் நாம் கவனம் கொள்ள வேண்டும்.

அவரே வார் ரூம் என்ற ஒன்றை உருவாக்கி, வலிமையான அரசியல் பிரச்சாரங்களை முன்னெடுத்தார். பல யூடூபர்களை தனக்கு ஆதரவாகப் பேச வைத்தார்.

அத்துடன் தமிழக பாஜக தலைவர் என்ற வகையில் மத்திய ஆட்சித் தலைமையுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடும் தொழிலதிபர்களை பாதுகாத்த வகையிலும் அதிகமாக பணம் ஈட்டியதாக சொல்லப்படுகிறது. இதற்கு சரியான உதாரணம் மோசடி நிறுவனமான ஆருத்ராவை காப்பாற்றியதாகும். அண்ணாமலைக்கு ஆருத்ராவுடன் உள்ள தொடர்புகள் நன்கு வெளிப்பட்ட நிலையிலும் அவர் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இத்துடன் தமிழ் நாட்டில் ஆபத்தான குற்றவாளிகளாக அறியப்பட்டவர்களையும் கட்சியில் சேர்த்து அவர்களுக்கு பாதுகாப்பு தந்தார்.

இவர் ஒருமுறை தமிழகம் தழுவிய பாதயாத்திரை நடத்திய போதே அவரது ஆதரவாளர்கள் மூல பெரும் வசூல் வேட்டை நடத்தியதை முன்னரே நமது அறம் இதழில் எழுதியுள்ளோம்.

தற்போது அவர் 85 கோடிக்கு நிலம் வாங்கிய விவகாரம் அம்பலப்பட்டுள்ளது.

கோவை இக்கரை போளுவாம்பட்டி என்பது சிறுவாணி சாலையில் உள்ளது. நல்ல வளம் கொழிக்கும் பூமி. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இது உள்ளது.. நொய்யல் தண்ணீர் பாயும் பூமி இது. தற்போது அண்ணாமலை இங்கு அமைத்து வரும்  பால் பண்ணைக்கு  செல்லும் மண் சாலையை தார் ரோடு போட்டு கொடுத்து உதவியுள்ளது தமிழக அரசு.

இந்த இடத்தில் 16 ஏக்கர் நிலத்தை ரூ85 கோடி 40 லட்சத்து 59, ஆயிரம் தந்து அண்ணாமலை வாங்கி உள்ளதை சமூக ஊடகங்களில் பலரும் கேள்விக்கு உட்படுத்தி உள்ளனர்.

இது மட்டுமின்றி, சந்தை மதிப்பில் 85 கோடியுள்ள இந்த நிலத்தை வெறும் நாலரை கோடியாக குறைத்து கணக்கு காண்பித்து 40 லட்சத்து 59 ஆயிரம் மட்டுமே பதிவு கட்டணம் கட்டியுள்ளார். 85 கோடி பெருமானம் உள்ள நிலத்தை பால்பண்ணை ஆரம்பிப்பதற்காக தான் வங்கியில் ரூ 4 கோடி கடன் பெற்று வாங்கி உள்ளதாக அண்ணாமலை சொல்லி உள்ளார். அதுவும் எந்த வங்கி எனச் சொல்லவில்லை.

மேலும் கடந்த நான்கே ஆண்டுகளில் ரு 2 கோடி செலவு செய்து நான்கு புதிய கார்கள் (Innova Crysta, Fortuner, KIA Carnival, Innova Hycross)  ஆகிய கார்களை அண்ணாமலை வாங்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தல் விண்ணப்பத்தில் அண்ணாமலை தன்னிடம் ஒரு சிறிய ஹோண்டா கார் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது அண்ணாமலை தெரிவித்து இருந்த சொத்துக் கணக்கு. தன்னிடம் உள்ள அசையா சொத்து ரூ ஒரு கோடி மதிப்புள்ள நிலம். அசையா சொத்து 46.13 லட்சம் மட்டுமே. அதே சமயம் தன்னுடைய மனைவி அகிலா பெயரில் அசையும் சொத்து ரூ 94 லட்சம். அசையா சொத்து 50 லட்சம் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது அவர் தெரிவித்தது தன் அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு 1.48 கோடி.  மனைவி சொத்து மதிப்பு 2.53 கோடியாகும். மனைவியிடம் 3.2 கிலோ தங்க நகைகள் உள்ளதாகவும் சொல்லி உள்ளார்.

இந்தச் சூழலில் அண்ணாமலையால் ரூ 85 கோடிக்கு எப்படி நிலம் வாங்கப்பட்டது? என்ற கேள்வி வைக்கப்படுகிறது. உண்மையில் அண்ணாமலையின் சொத்து இந்த 85 கோடிகளை விட பல மடங்கு இருக்கலாம் என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

காரணம், அவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வசிக்கும் பண்ணை வீட்டின் மாத வாடகை மட்டுமே சில லட்சங்கள் என்கிறார்கள். இத்துடன் அவர் அதிக செலவில் பற்பலரை வைத்து வார் ரூம் ஒன்றை நடத்தி வருகிறார்.

மேலும், அண்ணாமலை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமி சேரலாதனுடன் சேர்ந்து Zen Path Ventures தொடங்கியது, அவருடைய நண்பர்  சிவக்குமார், உதவியாளர் அஸ்வின் செல்வம் ஆகியோரை பினாமியாக்கி புதிய நிறுவனங்கள் தொடங்கியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இடையே அண்ணாமலை இலண்டன், அமெரிக்கா என்று போய் வந்தார். அப்போது தான் அவரது சொத்துகுவிப்பு தொடர்பான தகவல்களை அவரது கட்சிக்காரர்களே சேகரித்து மத்திய ஆட்சியாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்தே அவரது மாநிலத் தலைவர் பதவி பறிப்பும் நடந்துள்ளது.

நான் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட தகவல்கள் குறைவானவையே.  உண்மையாகவும், முழுமையாகவும் பார்த்தால் அண்ணாமலை சொத்து சேர்ப்பில் -குறுகிய காலத்தில் அரசு பதவிகள் இன்றியே – சரித்திர சாதனை படைத்துள்ளார்! நேர்மையான அரசியல்வாதியைப் போல தன்னைக் குறித்த மாயபிம்பத்தை கட்டமைத்துள்ள அண்ணாமலை பற்றிய ஒரு அடிப்படை புரிதலையாவது தமிழக மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time