எப்படிச் செலவாகிறது எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி?

-சாவித்திரி கண்ணன்

எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ஐந்து கோடியில்  இருந்து பத்து கோடியாக உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். கடந்த 30 ஆண்டுகள் அனுபவத்தை வைத்து பார்க்கும் போது இந்த நிதியால் விளைந்தது நன்மையா? தீமையா? என தெளிவாக ஒரு முடிவுக்கு வரலாம்;

மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள் வழியாக விவாதித்து பட்ஜெட் போடப்பட்டு தேவையான திட்டங்களுக்கு அரசு நிர்வாக ரீதியாக நிதி ஒதுக்கி வருகிறது. இந்தச் சூழலில் மைனாரிட்டி ஆட்சியை மத்தியில் நடத்திய அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அவர்கள் எம்.பிக்கள் சொந்தமாக தங்கள் தொகுதி வளர்ச்சி பணிக்கு நிதியை செலவிட ஆண்டுக்கு ஐந்து லட்சம் எம்.பி நிதி என்பதாக 1993 –ல் ஒதுக்கீடு செய்தார்.

அந்த வகையில் MPLADS  எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம்  என்பது நரசிம்மராவ் அரசாங்கத்தால் டிசம்பர் 23, 1993 அன்று உருவாக்கப்பட்டது.

1993-94 ஆம் ஆண்டில் ஒவ்வொரு எம்.பி.க்கும் ₹ 5 லட்சமாக இருந்த நிதி ஒதுக்கீடு, 1998-99 ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது  ₹ 2 கோடியாக உயர்த்தப்பட்டது. இது 2011-12 ஆம் ஆண்டில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது  ₹ 5 கோடியாக மேலும் அதிகரிக்கப்பட்டது. இதைத் தான் ஸ்டாலின் தற்போது 10 கோடியாக உயர்த்தக் கேட்டுள்ளார்.

இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) தங்கள் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை பரிந்துரைக்க உதவுகிறது. இது உள்ளூர் சமூகத்தின் அத்தியாவசியத் தேவைகளின் பூர்த்தி செய்யும் அடிப்படையில் முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், இந்த நிதி நடைமுறையில் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை மதிப்பீடு செய்த பல ஆய்வு அறிக்கைகள் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு உள்ளன.

இந்த நிதியை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது இதை விரிவாக விசாரித்த நீதிபதிகள் ஐவரில் நால்வர், ‘இந்த நிதி தேவையற்றது’ என்ற முடிவுக்கு வந்த போது, அந்தக் குழுவில் இருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த நீதிபதி சதாசிவம் ஒற்றை ஆளாக இதை வலியுறுத்தி மற்ற நால்வரையும் ‘கன்வின்ஸ்’ செய்து இந்த நிதி ஒதுக்கீடு தொடர 72 பக்கத் தீர்ப்பை எழுதியதாக கூறியுள்ளார்.

இந்திய தலைமை கணக்கு தணிக்கை  வாரியம்

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை தங்களது உறவினர்களால் தொடங்கப்பட்ட அறக்கட்டளைகள் மற்றும் சங்கங்களுக்கு  மடைமாற்றி தந்த சம்பவங்கள் பல நடந்துள்ளன. இத்தகைய முறைகேடுகளை  இந்திய தலைமை கணக்கு தணிக்கை  வாரியத்தின் அறிக்கையில் மீண்டும், மீண்டும் எனப் பலமுறை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. இவை பெருமளவு இடைத்தரகர்கள் மூலம் நடைபெறுகின்றன என்றும், இந்த நிதியில்  எம்.பிக்களும், அதிகாரிகளும் சேர்ந்து கூட்டுக் கொள்ளைகள் நிகழ்த்துவதால் – அதாவது அதிக கமிஷனை நிர்பந்தித்து பெறுவதால் – இந்த நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் தரம் குறைந்ததாக உள்ளன. அதாவது கட்டப்படும் கட்டிடங்கள் வெகு விரைவில் இடிந்து போகும்படியும், போடப்படும் சாலைகள் வெகு சீக்கிரம் சீர்குலைந்து போவதாகவும் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆகவே, ‘அதீத முறைகேடுகளுக்கு வித்திடுவதால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்றும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இடதுசாரிகளும் எதிர்ப்பு;

‘எம்.பி தொகுதி நிதி ஊழலின் ஊற்றுக்கண்’ என்றார், இரா. செழியன்

இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் எம்.பிக்களும் இந்த நிதி தேவையற்றது என நாடாளுமன்றத்தில் அறிவுறுத்தி உள்ளனர். முன்னாள் எம்.பியான இரா.செழியன், ‘இந்த எம்.பி நிதி ஊழலின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்வதாக’ பல ஆய்வு கட்டுரைகள் எழுதி புத்தகமாகவே கொண்டு வந்துள்ளார்.

40 சதவிகிதம் செலவழிக்கபடுவதில்லை;

இது ஒருபுறம் இருக்க, இந்த நிதியை எம்.பிக்கள் சரி வர அக்கறை எடுத்து செலவழிக்காமல் இருப்பதாகவும் தொடர்ந்து சுட்டிக்கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக உத்திரபிரதேச எம்.பிக்கள் இந்த நிதியை பெரும்பாலும் பயன்படுத்துவதே இல்லையாம். அதே போல 2022-23 நிதி ஆண்டில் குஜராத் எம்.பி-க்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி ரூ.185 கோடியில் ரூ.66 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டது. கேரள எம்.பி-க்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி ரூ.145 கோடியில் ரூ. 54 மட்டுமே செலவு செய்யப்பட்டது. தமிழக எம்.பி-க்களுக்கென ஒதுக்கப்பட்ட ரூ.285 கோடியில் ரூ.111 தான் செலவு செய்துள்ளனர் என்ற தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய தகவல்கள்  ‘இருக்கின்ற நிதியையே பயன்படுத்த ஆர்வம் காட்டாத தன் கட்சி எம்.பிக்களை கண்டிக்காத ஸ்டாலின் அதிக நிதியை கேட்பது ஏன்?’ என்ற கேள்வியை எழுப்புகின்றது.

சரியாக சொல்ல வேண்டுமென்றால், 2022-23-ம் ஆண்டுக்கான இந்திய அரசின் பட்ஜெட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுக்காக மொத்த ரூ.3,965 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில்  ரூ.2,387 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டு இருப்பதை மத்திய இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது, ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் சுமார் 40 சதவிகிதம் செலவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கிறது.

இந்த நிதி ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டப்படி தவறானது;

இந்தத் திட்டத்தின் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அரசு நிர்வாக வழிமுறைகளில் தான் மக்கள் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமே அல்லாது எம்.பி, எம்.எல்.ஏக்கள் மூலம் அதை செயல்படுத்தக் கூடாது என்பதாகும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட எம்.பி அதை தன் சொந்த நிதியைப் போல உரிமை கொண்டாடி துஷ்பிரயோகம் செய்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்கிறார்கள்.

பல்வேறு அறிஞர்கள் மற்றும் சமூக அர்வலர்கள் இதை தவிர்க்க கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். 2002 ஆம் ஆண்டில், அரசியலமைப்பின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்வதற்கான தேசிய ஆணையம், எம்.பி, எம் எல்.ஏ.களுக்கான தொகுதி நிதி ஒதுக்கும் திட்டம் கூட்டாட்சி உணர்வுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வுக்கு முரணானது என்ற அடிப்படையில் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது கவனத்திற்கு உரியதாகும்.

ஆக எம்.பிக்கள் தொகுதி நிதியில் 60 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் இப்படி பயன்படுத்தப்படும் மேம்பாட்டு நிதியை சரியான வகையில் முறையாக பயன்படுத்துபவர்கள் அதிகபட்சம் 20 சதவிகிதமானோர் என்பதே நடைமுறையில் தெரிய வந்துள்ளது.  80 சதவிகித எம்.பிக்கள் இதை தவறாகவே பயன்படுத்துகின்றனர் என்பதும் கவனத்திற்கு உரியது.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time