சிப்காட்டிற்கு நிலம் தரமறுத்த விவசாயி கன்னியப்பன் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தையே திகுதிகுக்க வைத்துள்ளது. தொழில் அதிபர்களுக்கு நிலம் தருவதற்கு மறுத்தால் கொலையும் செய்யும் அரசாங்கம் என்பதற்கு சாட்சியாக இந்த சம்பவத்தை பார்க்கிறோம் என்கிறார், உழவர் உரிமை இயக்கத்தின் அருள் ஆறுமுகம்;
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது. விவசாயமே நமது நாட்டின் உயிர் நாடியாக உள்ளது என்றார், மகாத்மா காந்தி. ஆனால், தொழிற்சாலைகளை அதிகரிக்க, விவசாயத்தை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்வோம் என்பதற்கு ஏற்ப இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஏற்கனவே செய்யாறின் வட பகுதியில் சிப்காட்டுக்கு 645 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வெறும் 13 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இரண்டாவது கட்டமாக 2,300 ஹெக்டேர் எடுக்கப்பட்டு 55 நிறுவனங்கள் உள்ளன. இந்த இடங்களிலேயே சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் உள்ள நிலையில் வேறு பசுமையான விவசாய நிலப்பரப்புகள் வலுக்கட்டாயமாக விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் விரிவாக்கம் என்பதாக செய்யாறு மாங்கால் பகுதியில் பசுமையான விவசாய பூமியை தூக்குகிறார்கள் 2013 அதிமுக ஆட்சியில். அதே சமயம் சந்தை மதிப்புக்கு உகந்தவாறு நிலத்திற்கு பணம் தருவதற்கும் அரசு அதிகாரிகளுக்கு மனமில்லை. விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். இதில் கன்னியப்பன் என்ற விவசாயி மன உறுதியுடன் போராடுகிறார். 2018ல் உயர் நீதிமன்றம் விவசாயிகளுக்கு சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கருக்கு ஆறு மாதத்தில் ஒன்றரை கோடி தரச் சொன்னதாக கன்னியப்பன் மனைவி தமிழ் செல்வி சொல்கிறார். ஆனால் சிப்காட்டோ 7 லட்சம் தருவதாகச் சொன்னார்கள். நாங்கள் ஏற்கவில்லை.

ஆனால், ஆறுமாதம் வரை அமைதியாக இருந்தவர்கள் அதன் பிறகு போலீஸ் துணையுடன் நிலத்தை அபகரிக்க வந்தனர். சொன்ன பணத்தை நீங்கள் தந்தால் விட்டுத் தருகிறோம். தற்போது நெல்லும், வேர்கடலையும் விளைகிறது. விளைச்சல் முடிந்து நிலத்தை ஒப்படைக்கிறோம் என்றோம். உங்களுக்கு தர வேண்டிய பணத்தை லோக்கல் கோர்ட்டில் கட்டிவிட்டோம். போய் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இடத்தை காலி செய்யுங்கள் என்றனர். இதை நாங்கள் எதிர்த்தோம். அவர்களோ எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எட்டு பேரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். குடும்பத் தலைவன், தலைவி 70 வயது மூதாட்டி கல்லூரி செல்லும் பையன் உள்ளிட்ட எட்டு பேர் சிறையில் இருக்க, குழந்தைகள் வீட்டில் தனித்துவிடப்பட்ட நிலையில் நாங்கள் அனைவரும் ஜாமீன் தொகையைக் கட்டி நான்கு நாட்களில் வெளியில் வந்தோம். இதற்குள் நிலத்தில் உள்ள பயிர்களை எல்லாம் ஜேசிபி இயந்திரத்தை இறக்கி அழித்துவிட்டனர். இரண்டு விவசாயக் கிணறுகளையும் மண்ணைக் கொட்டி மூடிவிட்டனர். 20 மாடுகள் வைத்திருந்தோம். அவற்றை வர்கள் அவிழ்த்துவிட்டத்தில் 10 மாடுகளைக் காணவில்லை. இரும்பு கம்பிகளால் காம்பவுண்டும் ஏற்படுத்திவிட்டனர். ஏழேகால் ஏக்கரை எடுத்துக் கொண்டு ஒரே ஒரு ஏக்கரை மட்டுமே விட்டு வைத்தனர்.
இதில் என் கணவர் தீர விசாரித்ததில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வேறு இடம் ஒதுக்கபட்டும் அவர்கள் இந்த இடம் தான் வேண்டும் என பிடிவாதம் பிடித்ததில் சென்டுக்கு ரூ 57,000க்கு சிப்காட் வாங்கியுள்ளது. சரி, அந்தப் பணத்தையாவது எங்களுக்கு அப்படியே தாங்க. மார்க்கெட் மதிப்புக்கு தராக்காட்டியும் ஏத்துக் கொண்டு தலைவிதியேன்னு போயிடுறோம் என்றோம். ஆனால், அதற்கு உடன்படாமல் நெருக்கடி தந்தனர். சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு சிப்காட் அலுவலர், ஒப்பந்ததாரர் வந்து இடத்தை காலி பண்ணாவிட்டால் விளைவுகளை சந்திப்பீர்கள் என எச்சரித்தனர். அந்த பயத்தில் என் கணவர் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். நாங்கள் இதையும் தூசி காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தி அவர் உயிருக்கு பாதுகாப்பு கேட்டோம். ஆனால், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் எதையும் பொருட்படுத்தவில்லை. சொன்னபடியே அவர்கள் என் கணவரை கொன்றுவிட்டனர்.
வீட்டில் சும்மா இருந்தவரை இரவு சுமார் 8 மணியளவில் நண்பர் மூலம் அழைத்து வரவழைத்து திட்டமிட்டு கொன்றுள்ளனர். எங்கள் நிலத்தருகே உள்ள வாய்க்கால் பகுதியில் அவரை வலுக்கட்டாயமாக அடித்து கீழே தள்ளியோ, தூக்கி வீசியோ கொன்றுள்ளனர். நாங்கள் சாலை மறியல் செய்தோம். போராடி வருகிறோம். நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்றார், தமிழ்செல்வி.

இது குறித்து தூசி காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாதன் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, இன்னும் போஸ்ட்மார்ட் அறிக்கை வரவில்லை. நான் அப்சர்வ் செய்த வகையில் அவர் கீழே தடுமாறி விழுந்து இறந்திருக்கவும் வாய்ப்புள்ளது. எனினும் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்ததின் பேரில் இதை சந்தேக மரணம் என்றே வழக்கு பதிவு செய்துள்ளேன். போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வந்தவுடன் தான் உண்மை தெரியும். கன்னியப்பன் தன் உயிருக்கு ஆபத்து என தந்துள்ள புகார் எனக்கு தெரியாது. அதன்படி உரிய நடவடிக்கை எடுப்பேன். நான் பொறுப்பேற்று 10 நாட்களே ஆகின்றது. (கன்னியப்பன் உயிர் இழந்து ஏழு நாட்கள் ஆகின்றன) முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர் அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால், மிரட்டல் விடுத்த சம்பந்தப்பட்ட நபர் ஸ்பாட்டில் இல்லை, வெளியூரில் இருந்துள்ளார் என தெரிய வந்ததால் அவரை கைது செய்யவில்லை என்றார்.

உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம் அவர்கள் இது பற்றி கூறுகையில், இந்தக் கொலையை செய்தது திமுக அரசின் மேற்பார்வையில் சிப்காட்டில் இயங்கும் நிறுவனமா? அல்லது ஒப்பந்ததாரரா? அல்லது சிப்காட் அலுவலரா? என்பது தான் சந்தேகமே தவிர, இந்த சாவு கொலை என்பதில் சந்தேகமே இல்லை. சிப்காட்டிற்காக மேல்மாவில் எங்கள் நிலத்தை தரமறுத்து போராடி வரும் எங்களுக்கு எச்சரிக்கை தரும் விதமாக இது நடந்துள்ளது.
கன்னியப்பன் அவர்கள் தொடர்ச்சியாக அவருடைய இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்காமல் போராடி வந்துள்ளார் இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சிப்காட் அலுவலர் ஒருவர் கன்னியப்பன் அவர்களிடம் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கூறியுள்ளார் இதனை புகாராக தெரிவித்து தூசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எப்பொழுதும் போல காவல்துறை அந்த புகாரை ஏற்கவில்லை!

அதனைத் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு முன்பு இரவு ஒன்பது மணி அளவில் மர்மமான முறையில் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் கன்னியப்பன் அவர்கள்.இந்த விவசாயி கேட்டதெல்லாம் தன்னுடைய நிலத்துக்கு உரிய இழப்பீடு தான் அந்த இழப்பீட்டை தர மறுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தன் சொந்த நாட்டு மக்களையே அடித்துக் கொள்ளும் அளவிற்கு துணிந்திருக்கிறது ஆளும் திமுக அரசு! கொலையும் செய்யும் அரசு என்று நிரூபித்து உள்ளனர் என்றார்.
இறந்து போன எங்கள் நிலத்தில் ஜெகத்ஜோதியாக ஒரு தனியார் நிறுவனம் கண்ணாடி கட்டிடத்துடன் பளபளப்பாக எழுந்து நிற்கிறது. கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. இன்று வரை இழப்பீடாக நாங்கள் ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்கிறார்கள் இந்த குடும்பத்தினர்.

திமுக ஆட்சிக்கு வந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் எ.வ.வேலு இப்படிப் பேசினார்;
விவசாயிகள் என்ற போர்வையில் சிலர் நிலம் எடுப்பதை எதிர்க்கிறார்கள். யார் எதிர்த்தாலும் சிப்காட் வந்தே தீரும்.
எப்படிப்பட்ட ஆட்சி இங்கு நடக்கிறது என புரிந்து கொள்ள முடியவில்லை.
சாவித்திரி கண்ணன்

















ஊடகங்கள் பல வந்தும் யாரும் எந்த செய்தியையும் வெளியிடவில்லை. அந்த அளவிற்கு அரசின் அழுத்தங்கள் உள்ளன.
பக்கத்தில் காஞ்சிபுரம், செய்யாறு நகரங்கள் இருக்க பிணத்தை கூறாய்வு செய்ய 90 கிமீ தூரம் உள்ள திருவண்ணாமலைக்குக் கொண்டு சென்றதும், இறப்பு நடந்த மறுநாள் காலை சுமார் 100 காவலர்கள் குவிக்கப்பட்டதும் அரசு செய்த கொலை என்பதை உறுதி செய்கிறது.
ஆமாம் மனதிற்கு மிக வறுத்தம் அளிக்கிறது இந்த உயிருக்கு ஒரு மரியாதை கிடைக்காமே போய்விடும் என்ற பயம் தருகிறது