இந்த எளிய மக்கள் எலியை பிடிப்பதில் வல்லவர்கள்.
ஆனால், காவல் துறையின் வேட்டைக்கு இவர்கள் எலிகளாக பலியாவது தான் சோகம்.
குற்றவாளிகள் என்ற புலிகளை வேட்டையாடத் துப்பில்லாத காவல் துறையினர் இந்தப் அப்பாவி பழங்குடிகளை குற்றவாளியாக சித்தரித்து, பொய் வழக்கு போட்டுத் தண்டிப்பது தான் இன்றைக்கு பழங்குடியினர் சந்திக்கும் துயரமாக உள்ளது.
காவல் துறையின் பார்வையில் தாங்கள் மனிதர்களாகவே கருதப்படாத நிலையில் இந்தியாவில் பிற மக்களுக்கு கிடைத்த சுதந்திரம் இன்று வரை இவர்களுக்கு கிடைக்கவில்லை.
ஆதரிக்க யாருமில்லாத பழங்குடிகளை ஆதரித்து பாதுகாப்புத் தர வேண்டும் என்று பேராசிரியர் கல்யாணி அவர்களின் முன்னெடுப்பில் உருவானது தான் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்.
1993-ல் அத்தியூர் பழங்குடி இளம்பெண் விஜயா காவல்துறையால் பாலியல் துன்பத்திற்கு ஆளானதோடு அவரது குடும்பமே காவல்துறையின் சித்திரவதைக்கு ஆளானது. அப்போது தொடங்கி பாதிப்புக்கு உள்ளாகும் பழங்குடியினர்களை பாதுகாக்க களம் கண்டு வருகின்றனர் கல்யாணி உள்ளிட்ட தோழர்கள். 1996-ல் உருவான இந்த சங்கம் கடந்த மூன்று தசாப்தங்களாக முழு மூச்சாக பழங்குடியினர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அவர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது.

செப்டம்பர் 20-ல் விழுப்புரத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பேராசிரியர் பா.கல்யாணி ஒருங்கிணைப்பில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெரும் திரளான பழங்குடியினர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு எந்த அரசியல் கட்சியிடமும் நன்கொடை பெறாமல் பழங்குடிகளே ஆளாளுக்கு நூறு, நூற்றி ஐம்பது என பணம் போட்டு மண்டபம் எடுத்து நடத்தி உள்ளது தான் சிறப்பாகும்.
இந்த மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார், ‘பிஎம்ஜன்மன் திட்டத்தின் கீழ் இருளர் மக்களுக்கு அரசே வீடுகளைக் கட்டித் தரவேண்டும்; வீட்டுக்கான நிதியை ஐந்து லட்சத்து 9 ஆயிரத்தில் இருந்து 6 லட்சமாக உயர்த்த வேண்டும்; தரமற்ற முறையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதா? என்பதை வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்’ உள்ளிட்ட மாநாட்டின் கோரிக்கைகளுக்கு நியாயம் சேர்க்கும் வண்ணம் உரையாற்றினார்.
தன்னுடைய முயற்சியால் கடந்த இரு ஆண்டுகளில் இந்த பிஎம்ஜன்மன் திட்டத்தின் கீழ் பழங்குடி இருளர் மக்களுக்கு 2,238 வீடுகள் விழுப்புரம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த மாநாட்டின் கோரிக்கைகளை விசிக தலைவர் தொல் திருமாவளன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேரடியாக தரப்பட்டதையும் அவர் தெரிவித்த போது பழங்குடியினர் அதை கரகோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.
இதையடுத்து மனித உரிமை ஆர்வலர்களான பேராசிரியர்கள் அரச.முருக பாண்டியன், சே.கோச்சடை, பொறியாளர்கள் துரைக்கண்ணு, எம்.பி.கணேசன், மக்கள் அதிகாரம் கு.ஏழுமலை, ஆசிரியர் தா.பாலு,பொன்.மாயவன், மனித நேய மக்கள் கட்சியின் ஜெனுல்லாபுதீனெஸ்.டி.பி.ஐயினெம்.ஏ.ஹமீத்,மக்கள் தேசம் மு.சுபாஷ், மக்கள் கண்காணிப்பகத்தின் ஆசிர்வாதம், பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் ஆகியோர் பேசினர்.

பலரது பேச்சுக்களும் அப்பாவிகள் பழங்குடியினர் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவதையும், அடக்குமுறைகளை ஏவி விடுவதையும், சித்திரவதை செய்வதையும் கண்டிப்பதாக இருந்தது. ‘ஜெய்பீம்’ படத்தில் பழங்குடியினர் காவல்துறையால் கொடூரமாக கொடுமைபடுத்தப்படுவதை காட்டிய போது பெரும் அதிர்வு உண்டானது. முதலமைச்சர் ஸ்டாலின் அந்தப் படம் பார்த்து நெகிழ்ந்தார். அதைத் தொடர்ந்து சில நலதிட்ட உதவிகள் பழங்குடியின மக்களுக்கு கிடைத்தன என்பது ஒரு தற்காலிக நிகழ்வாகிப் போனது.
தற்போதும் ஜாதிச் சான்றிதழ், வீட்டு மனைப்பட்டா போன்றவற்றை பெறுவது இருளர் சமூகத்தை பொருத்த வரை இக்கட்டாகவே உள்ளது. காவல் துறையின் மனநிலையிலோ, எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
பழங்குடிகளின் கோரிக்கைகள் என்பன ஒரு நல்ல மக்கள் நல அரசால் மிக எளிதாக நிறைவேற்றக் கூடியவையே;
# தொன்று தொட்டு வசிக்கும் பகுதியில் மூன்று சென்ட் வீட்டுமனை பட்டா.
# வீடு கட்டுவதற்கான உதவித் தொகையை 5.09 லட்சத்தில் இருந்து 6 லட்சமாக்குவது.
# வீடு கட்டத் தரப்படும் பணத்தை அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்தரார்கள் கொள்ளையடித்து பங்கு போட்டுக் கொண்டு, தரக் குறைவான வீடுகள் கட்டித் தருவதை ஆய்வு செய்து, தண்டிக்க வேண்டும்.
# அரசே நேரடியாக பழங்குடியினர் வீடுகளை கட்டித் தர வேண்டும்.
# பழங்குடியினர் பாதிக்கப்படும் வன்கொடுமை வழக்குகளை காவல்துறையினர் உரிய முறையில் விசாரித்து ஆதிக்கவாதிகளை தண்டிப்பதற்கு மாறாக, வழக்கையே தள்ளுபடி செய்யக் கூடாது.

இந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேற அரசு நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டும்.
பழங்குடியினர் விஷயத்தில் ஆதிக்க சாதியினர் அவர்களுக்கு குறிப்பிட்ட இடத்தில் வீடு கட்டித் தரக் கூடாது என அரசுக்கு நிர்பந்தம் தரும் போது, அடிபணிந்து போகிறது, அரசு நிர்வாகமும், காவல் துறையும்! இவர்களின் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தி, சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும், திராவிட மாடல் அரசு.
Also read
‘பழங்குடியினருக்கு தரப்பட்ட இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு அடாவடி செய்வோருக்கு அரசு நிர்வாகம் அனுகூலமாக இருக்கக் கூடாது. அவர்களை அக்கிரமிப்பில் இருந்து அப்புறப்படுத்தி இடத்தை மீட்டெடுத்து தர வேண்டும்…’ போன்றவை நிறைவேற்ற முடியாதவையல்ல.
இதை செய்வதற்கு தானே ஜனநாயகத்தில் மக்கள் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
சுதந்திரம் பெற்றது தொடங்கி பட்ஜெட்டில் மத்திய, மாநில அரசுகள் பழங்குடியினருக்கு ஒதுக்கும் நிதி முழுமையாக அவர்களுக்காக செலவழிக்கபடுவதில்லை. அப்படி செலவழித்திருந்தால் பல பெரிய மாற்றங்கள் அவர்கள் வாழ்விலும், நாட்டின் வளர்ச்சியிலும் ஏற்பட்டிருக்கும். இதை செய்ய முடியாமை என்பதே அரசு நிர்வகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஆதிக்க மனப்பான்மையைத் தான் பறைசாற்றுகிறது.
சாவித்திரி கண்ணன்


















Leave a Reply