தூத்துக்குடியை துயரத்தில் ஆழ்த்தும் அரசின் அழித்தொழிப்புகள்!

-சாவித்திரி கண்ணன்

தூத்துக்குடி உப்பளங்கள் என்பவை உலக பிரசித்தி பெற்றவை. உப்பின் ருசி அப்படியானது. ஒரு லட்சம் பேரின் வாழ்வாதாரத்திற்கு காரணமான உப்பளங்களை அழித்துவிட்டு, அங்கு கப்பல் கட்டும் தொழிற்சாலையை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் மோடி- ஸ்டாலின் முன்னெடுப்பால் தூத்துக்குடியில் கொந்தளிப்பு நிலவுகிறது;

தென் மாநிலங்கள் அனைத்திற்கும் மட்டுமின்றி, இலங்கை, இந்தோனேசியா, மாலத்தீவு, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கும் இங்கிருந்து தான் உப்பு விநியோகம் ஆகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் பலன் அடைகின்றனர்.

போர்ச்சுகீசியர்கள் காலத்தில் உப்பு உற்பத்திக்கு தேவையான தண்ணீர் கடலில் இருந்து நேரடியாக உப்பு வயல்களுக்கு கொண்டு வரப்பட்டது . தற்போது  கடல் தண்ணீர் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்து இருப்பதால், கடற்கரையை ஒட்டியுள்ள நிலப்பகுதியில் போர் போட்டு நிலத்தடி நீரை எடுத்து தண்ணீரை எடுத்து உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக நடக்கும் இந்தத் தொழிலில் சிறிதும், பெரிதுமாக சுமார் 500 உப்பள உரிமையாளர்கள், பல்லாயிரக்கணக்கிலான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உள்ளது.

அப்படிப்பட்ட இந்தத் தொழிலை அழிக்கும் விதமாக இங்கிருக்கும் உப்பளங்களை அழித்து அந்த இடத்தில் இரு பெரும் கப்பல் கட்டும் தொழிற் சாலைகளை தென் கொரிய நிறுவனமான மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட்டுக்கும், கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டுக்கும் தர மத்திய, மா நில அரசுகள் தீர்மானித்து உள்ளதானது தூத்துக்குடி மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை உருவாக்கி உள்ளது.

‘’உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பது நம் முன்னோர் வாக்கு. ஆனால், நமது அரசுகளோ அந்நிய கார்ப்பரேட் நிறுவனத்திற்காக பாரம்பரியமாக தொழில் செய்து வருவோர்களை பலிகடா ஆக்கத் துணிந்திருப்பது கொடுமையானது.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தி, நாம் உப்பெடுப்பதற்கு உள்ள உரிமையை அந்நிய ஆட்சியாளர்களுக்கு நிருபித்த சுயமரியாதை காலகட்டம் போய் நம்மை அழித்துக் கொண்டு வெளி நாட்டு நிறுவனங்களை கார்ப்பரேட்களை ஊக்குவிக்கும் சுதந்திர இந்திய ஆட்சியாளர்களே, நம்மை சூறையாடக் கொடுக்கிறார்கள் என்பது தான் வேதனை.

உப்பளங்களை அழிப்பதை எதிர்த்து நடந்த கடை அடைப்பு;

இரு கப்பல் கட்டும் தளங்கள் ரூ.30 ஆயிரம் கோடி செலவில் கட்டுவதற்காக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில், அந்த தளத்திற்கான நில ஆர்ஜித பணிகள் துவங்கியுள்ளதானது தூத்துகுடி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. இந்த பணிகளுக்கு முள்ளக்காடு மற்றும் பொட்டல் காடு சுற்றுவட்டார பகுதிகளுக்கு உட்பட தொழிலாளர்கள் மற்றும் உப்பள தொழிலில் ஈடுபடும் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். முதலில் தூத்துக்குடி நகரமே ஒன்றுபட்டு கடை அடைப்பு நடத்தியது. பின்னர் எதிர்ப்பு பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடந்தன. ஆயினும், இந்த திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய, தமிழக அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் பழவேற்காடு மீன்பிடித் தளத்தையும், மீனவ கிராமங்களையும் அழித்து அதானியின் கப்பற்கட்டும் தொழிற்சாலைக்கு வழி சமைத்து தந்த திமுக அரசு தற்போது தூத்துக்குடியையும் தூக்கிக் கொடுக்கிறது. இந்த திட்டம்  செயல்பாட்டுக்கு வரும் போது உப்பு உற்பத்தியையும், அதை நம்பியுள்ள அனைத்து உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிடும்.

இதனால், இனி தமிழ் நாட்டு மக்கள் தங்கள் சோற்றுக்கு உப்பு போட்டு சாப்பிடக் கூட குஜராத்தில் இருந்து தான் உப்பு இறக்குமதி செய்தாக வேண்டும்.

முள்ளக்காடு, அதிராம பட்டிணம், சவேரியர்புரம் மற்றும் பழையகாயல் பஞ்சாயத்துகளின் கரையோரத்தில் உள்ள நிலப் பகுதிகளை வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்த போது பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அங்கு 500 க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் இந்த திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட நிலப் பகுதியில் உப்பளங்களை அமைத்துள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.  முல்லக்காடு கடற்கரையில் 1,200 மீட்டர் கடல் நோக்கிய முகப்புடன், புறம்போக்கு மற்றும் தனியார் நிலங்கள் உட்பட சுமார் 2000 ஏக்கரில் இருந்து 3,000 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பகுதியில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், பாரம்பரிய ஆக்கிரமிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்றும் மனுதாரர்கள் வலியுறுத்துகின்றனர்.

இருக்கின்ற ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழிலை உருவாக்குவதற்கு மாற்றாக தூத்துக்குடி வடக்கே வைப்பாறு கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், மற்றும் கடற்கரையை ஒட்டிய தரிசு நிலங்களை கப்பல் கட்டும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பல முறை மனுக்கள் அனுப்பி உள்ளனர். உள்ளூர் எம்.பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரும் இதை முதல்வரிடம் சொல்லி நிச்சயம் தடுத்து உங்களை காப்போம் எனக் கூறிய வாக்குறுதிகளும் காற்றில் கரைந்து போனது தான் மிச்சம்.

அந்த அளவுக்கு கார்ப்பரேட்களுக்கு சேவை செய்வதில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும், முதல்வர் ஸ்டாலினும் பிடிவாதமாக உள்ளனர். மாற்று இடத்தை பரிசீலனை செய்வதற்கு கூட அவர்களுக்கு மனமில்லை. மக்கள் மனுக்கள், போராட்டங்கள், கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டுகளின் வேண்டுகோள்கள்..என எல்லாவற்றுக்கும் வழக்கம் போல கள்ள மெளனத்தையே பரிசளித்து மோடியின் கட்டளைகளை ஓடி, ஓடி நிறைவேற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களும் இதற்கான விலையை தேர்தலில் பெற வேண்டி இருக்கும் என்றாவது சிந்தித்து, மாற்று இடத்தை பரிசீலனை செய்யலாமே!

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time