அரசியலுக்கு வந்த ஐந்தே ஆண்டுகளில் அரசியல் தகிடுதத்தங்களில் கைதேர்ந்தவனாகி, இன்று பாஜகவில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கும் நிலைக்கு வந்துள்ளார், அண்ணாமலை. ஏன் இந்த முடிவுக்கு வந்தார்? எப்படித் திட்டமிடுகிறார்? அவரது அரசியல் வியூகம் என்ன? மத்திய பாஜக அண்ணாமலையை அனுமதிக்குமா..? ஒரு அலசல்;
முதலில் ஒரு இயல்பான விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை பாஜகவில் உள்ள மற்றத் தலைவர்களை போல, சித்தாந்த அரசியலுக்குள் சிக்குண்டவர் அல்ல. மிக, மிக பிராக்டிகல் ஆசாமி. இடத்திற்கேற்ப நிறம் மாறுவதற்கும், எதிர்படும் ஆட்களுக்கு ஏற்ப குணம் மாறுவதற்குமான கலையில் நிபுணத்துவம் பெற்றவர்.
இன்றைய அரசியல் கொள்கை அரசியல் அல்ல, கொள்ளை அரசியல் என்பதை நடைமுறையில் கண்டு வெற்றிக் கனியை சுவைத்தவர் அண்ணாமலை!
இன்றைய தமிழகத்தில் 57 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சியின் ஊழல் முறைகேடுகளால் மக்களிடையே ஒரு இயல்பான கோபம் இருக்கிறது. அதை நன்கு அறுவடை செய்யத்தக்க அரசியலை முன்னெடுக்கும் தலைவருக்கு ஒரு அபார வரவேற்பு கிடைத்த வண்ணம் உள்ளது. இதைத் தான் சீமானும் செய்கிறார். த.வெ.கவின் நடிகர் விஜய்யும் செய்கிறார். அண்ணாமலைக்கு என்று தமிழகத்தில் ஒரு ரசிகர் கூட்டம் உருவானதற்கும் இதுவே காரணம்.
அடங்க மறுப்பவன் என்ற அடையாளம் முக்கியமாம்!
தனிக்காட்டு ராஜாவாக வலம் வருவதில் தனிபெரும் இன்பத்தை பார்த்துவிட்டாராம்!
தனிநபர் ஈர்ப்பு, கவர்ச்சியில் தான் இன்றைக்கு அனைத்து கட்சிகளும் உயிர்ப்புடன் உள்ளன. திமுக என்றால் ஸ்டாலின். நாம் தமிழர் என்றால் சீமான். தவெக என்றால் விஜய். இது போல் தனக்கென்று ஒரு கட்சியை ஏற்படுத்த நினைக்கிறாராம், அண்ணாமலை.
அண்ணாமலையை இன்ஸ்டாகிராமில் 15 லட்சம் பேரும்,, பேஸ்புக்கில் 5.77 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 10 லட்சம் பேரும் பின் தொடர்பவர்களாக உள்ளனர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கில் அவரை இளைஞர்கள்,பெண்கள் பின் தொடர்கிறார்கள்.

ஆகவே, “மத்திய பாஜகவிற்கு மோடியின் முகம் என்றால், தமிழக பாஜகவிற்கு அண்ணாமலை தான். இதை ஏற்க மறுத்தால் வெளியேறுவேன்” என்கிறாராம், அண்ணாமலை.
ஆக, அண்ணாமலை தனிக் கட்சி காணும் வாய்ப்பு இருப்பதாகவே நான் நம்புகிறேன்.
கொள்ளையடிப்பதில் வல்லவன் எவனோ, அவனே வெற்றிகரமான அரசியல்வாதியாக இங்கு வலம் வருகிறான்!
அசராமல் பொய் பேசத் துணிவுள்ளவன் எவனோ, அவனே உசரத்தில் வேகமாக மேலேறிச் செல்கிறான்.
யாரையும் நான் மதிக்க மாட்டேன். ஆனால், என்னை மதிப்பதை விட்டால் உங்களுக்கு வேறு கதியில்லை.. என்று ஆணவமாக செயல்படுபவன் பின்னர் அணிவகுக்கின்றனர், ஆயிரக்கணக்கானோர்.

இது தான் இன்றைய அரசியல் சூழலின் யதார்த்தம்.
இந்தச் சூழல் தான் அண்ணாமலை தனி கட்சி துவங்குவதற்கான தைரியத்தை தந்துள்ளது. அதற்கான பணபலத்தையும் ஏற்படுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. அண்ணாமலையின் சொத்து குவிப்பு திறமை குறித்து ஏற்கனவே நாம் அறம் இணைய இதழில் விரிவாக எழுதியுள்ளோம்.
சொத்து சேர்ப்பில் சாதனை படைத்த அண்ணாமலை!
அண்ணாமலையின் சொத்துக் குவிப்பு மற்றும் பினாமி நிறுவனங்கள் குறித்து பாரம்பரிய பாஜக முக்கியஸ்தர்களே சில காணொளிகளையும், பதிவுகளையும் பொதுவெளியில் அம்பலப்படுத்தி உள்ளனர்.
மத்திய பாஜகவினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர்ப்பில் அண்ணாமலையின் பினாமி நிறுவனங்களின் விவரங்கள் தனக்கு கிடைத்தாக கூறி சவுக்கு சங்கரும் அதை பட்டியலிட்டு தனது தளத்தில் அம்பலப்படுத்தி உள்ளார்.

தேசியக் கட்சி தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அண்ணாமலை, தனிக் கட்சி தொடங்கி தேசிய கட்சியோடு இணக்கம் பாராட்டலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
கட்சியை வளர்ப்பார் என்று தேடிக் கண்டடைந்து, கத்துக்குட்டியாக இருந்த ஒருவனுக்கு சகல அதிகாரத்தையும் தந்து ஆடவிட்டனர்.
ஆனால், அவரோ தன்னை அதிகாரப்படுத்திய தலைவர்களையே இன்று ஆட்டுவிக்கிறார்.
தன் வளர்ச்சிக்காக தன்னை உருவாக்கிய கட்சியையே இன்று பலவீனப்படுத்தவும் துணிந்துவிட்டார். இவர் சொத்துக் குவிப்பில் ஈடுபட்ட விவகாரத்தை இவர் இலண்டன் சென்ற போது அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தி கண்டறிந்து கொண்டது மத்திய பாஜக தலைமை. அண்ணாமலையின் அதிவேக சொத்துக் குவிப்பு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக சொல்லப்படுகிறது.
அண்ணாமலையின் தமிழகத் தலைமை பதவியை பறித்து அவரை டம்மியாக கட்சிக்குள் வைத்திருக்க திட்டமிட்டது, மத்திய தலைமை. ஆனால், அண்ணாமலையோ அடங்க மறுத்து, தமிழக பாஜக தலைவரையே டம்மியாக்கும் வண்ணம் அரசியல் செய்கிறார்.
தமிழக பாஜகவிற்கு திமுக, தவெகவை விடவும் கூடவே இருக்கும் அண்ணாமலையால் தான் அதிக சேதாரம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் என்ன செய்வார்களோ..?
ஆனால், ஒருவனுக்கு பின்னால் சில லட்சம் பேர் திரள்கிறார்கள். அவனுக்கென்று ஒரு செல்வாக்கு இருக்கிறது என்றால், எந்த அதிகார மையமும் அவனை அழிக்கத் துணியாது. பக்குவமாக பயன்படுத்திக் கொள்ளவே திட்டமிடும். கிரிமினல்களை எந்த நேரத்தில் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதில் மத்திய பாஜக தலைவர்கள் அசகாய சூரர்கள்.
இந்த நம்பிக்கையில் தான் பாஜகவிடமிருந்து சற்று விலகி, அதே நேரம் மத்திய பாஜக தலைமையின் ஆசிர்வாதத்துடன் தனித்து செயல்படத் துணிந்துள்ளார், அண்ணாமலை.

கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கை முற்றிலும் தகர்த்தால் மட்டுமே, தனக்கு எதிர்காலம் என்பதை அண்ணாமலை தன் முதல் இலக்காக வைத்துள்ளதால் அதிமுக- பாஜக கூட்டணி மூலமாக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழக முதல்வராக அதிகாரம் பெறுவதை எப்பாடு பட்டேனும் தகர்ப்பார்.
பாஜக- அதிமுக கூட்டணி பலமாகிவிடக் கூடாது என்பதால் தினகரனையும், ஒ.பி.எஸ்சையும் தூண்டிவிடுகிறார்.
அதிரடி பேச்சால் தனக்கென்று ஒரு கும்பலை உருவாக்கிக் கொண்ட அண்ணாமலை, தறுதலையாக செயல்படும் தலைவனுக்கு ஒரு தனிப்பட்ட செல்வாக்கு தமிழகத்தில் கிடைக்கிறது என்பதால், ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டாலும், அதிரடித் தலைவனாக தன்னை நிலை நிறுத்தி கட்சி அதிகாரத்தை நிரந்தரப்படுத்திக் கொள்ள நினைக்கிறார்.
Also read
இதனால் திமுக எதிர்ப்பு ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளது. மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வருவதை மத்திய பாஜகவே பெரிதாக எதிர்க்காது. ஏனென்றால், வெளியில் எதிர்ப்பது போல காட்டிக் கொண்டாலும் ஸ்டாலின் தங்களுக்கு அனுகூலமாகவே ஒத்துழைப்பதையும், அது தமிழகத்தில் இன்னும் அழுத்தமாக காலூன்றுவதற்கான அவகாசமாகவும் கொள்ளலாம் என மத்திய பாஜக நினைக்க வாய்ப்புள்ளது.
விஜய்யோடு கூட்டணி காண பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகள் எல்லாம் தயக்கம் காட்டுவதால், அண்ணாமலை விஜய்யோடு கைகோர்க்கவும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், விஜய்யை வீழ்த்த வேறு யாருக்கும் அவசியமில்லாமல் போய் விடும். ஏனென்றால், அண்ணாமலை தன்னோடு இருக்கும் யாரையும் தலை எடுக்கவிடமாட்டார்.
பார்க்கலாம், என்ன நடக்கிறது என்பதை!
இந்த சமூகம் உண்மையிலேயே நேர்மையாளர்களை அடையாளம் கண்டு போற்றி பின்பற்றுவதில்லை. நேர்மையாளனை போல பாசாங்கு செய்பவனையே கொண்டாடி தன்னை அழித்துக் கொள்கிறது. சொல்வதற்கு என்ன உள்ளது…?
சாவித்திரி கண்ணன்















தேர்தல் அரசியல் போலியான ஜனநாயகம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கார்ல் மார்க்ஸ் தியரி மீண்டும் மீண்டும் ஊர்ஜிதம் ஆகிறது.
வேறு எதுவும் சொல்ல முடியுமா?