லடாக்கின் இயற்கை வளத்தை சூறையாடுவது, உள்ளுர் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை மறுப்பது, பெளத்த மத மக்களை வெறுப்பது, ஜனநாயகத்தை காலி செய்து சர்வாதிகாரத்தை திணிப்பது ஆகிய பாஜகவின் நரித்தனங்களால் லடாக் மக்கள் கொந்தளித்துள்ளனர். அகிம்சாவாதியான சோனம் வாங் சுக்கின் மீதே அடக்குமுறையை கட்டவிழ்த்த பாஜக:
மத்திய பாஜக ஆட்சியாளர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக, லடாக்கிற்கு மாநில அந்தஸ்தும், அரசமைப்பு சட்டப்பிரிவு ஆறாவது அம்சத்தின் பாதுகாப்பிற்காகவும் அம் மக்கள் போராடி வரும் வேளையில் 24.9.2025 புதன்கிழமை காலையில் போராட்டங்களில் வன்முறை வெடித்தது, காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐந்து இளைஞர்கள் பலியாகி உள்ளனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது.
சீன எல்லையொட்டிய பரந்து விரிந்த லடாக் பகுதி, ஜம்பு காஷ்மீர் பகுதியை விட அதிக பரப்பளவு கொண்ட பகுதியாகும் . இங்கு வாழும் மக்களில் ஆகப்பெரும்பாலோர் பௌத்த மத்த்தை சார்ந்தவர்கள், மேலும் இந்த பரந்துவிரிந்த பகுதி இமயமலைப்பகுதியின் நொறுங்கு பாறைகள் மிகுந்த பகுதியாகும் . இங்குள்ள பிரத்தியேக பருவச்சூழலை கருத்தில் கொண்டு
இயற்கையோடு இயைந்த நடவடிக்கைகளை எடுக்க மோடி அரசு மறுப்பதோடன்றி , கார்ப்பரேட் கொள்ளையர்களின் லாப வேட்டைக்கு லடாக் பிரதேசத்தை திறந்துவிடுவதையும் மோடி அரசு தவறாமல் செய்கிறது. இந்த கைங்கர்யத்தை ,மலையக வளர்ச்சி குழுவில் (Hills Development Council) பாஜக தங்களது கட்சி ஆட்களை நிரப்பி, கார்ப்பரேட் கொள்ளையை மோடி அரசு நடத்துகிறது. இதன் பொருட்டே இப் பகுதிக்கு சட்டமன்ற தகுதி வழங்குவதோ, ஆறாவது அட்டவணையின் பாதுகாப்பை வழங்குவதோ மத்திய அரசிற்கு வேப்பங்காயாக கசக்கிறது.

கல்வியாளரும் பருவநிலை பாதுகாவலருமான சோனம் வாங் சுக் , தனது “உண்ணாநோன்பு” போராட்டத்தை இந்த வன்முறை- உயிர்ப் பலியை தொடர்ந்து ஒத்தி வைத்து உள்ளார் . இதுவரை பெரும்பாலும் நடுத்தர வயதை கடந்தவர்களும், மூத்த வயதினருமே இத்தகைய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதும் , உண்ணாதோன்பு இருந்தவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாகி மருத்துவ மனைக்கு சென்றதை தொடர்ந்து இளைஞர் பட்டாளம் பொறுமையிழந்து, ஆட்சியாளர்மீது சினங்கொண்டு கிளர்ந்து எழுந்ததன் விளைவே இந்த கிளர்ச்சி புது வடிவத்தை பெற்றுள்ளது.
அண்டை நாடான நேபாளத்தில் சமீபத்தில் நடந்த இளைஞர் பட்டாளத்தின் போராட்டங்களால் ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட்டதால், லடாக்கில் ‘லே நகரில் ‘ நடக்கும் இளைஞர்களின் கிளர்ச்சியும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளதில் வியப்பில்லை.
2019 -ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு தகுதியை நீக்கி, பிரிவு 370 -ஐ ரத்து செய்த மோடி அரசு, அம் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. அவ்வாறு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட லடாக் பகுதிக்கு தனி சட்டமன்றமோ, ஏனைய தகுதிகளையோ மோடி அரசு வழங்கவில்லை! அரசியல் பிரிவு 370 மட்டுமன்றி, நிலம் தொடர்பான உரிமைகளை வழங்கும் அரசியல் பிரிவு 35A யும் மோடி அரசு நீக்கியது.
ஆரம்பத்தில் இதன் ஆபத்தை உணராத லடாக் மக்கள், தங்களது தனித்த அடையாளங்களும், அரசியல் உரிமைகளும், அதிகாரப் பகிர்வும் பறி போனதை உணர்ந்து போராடத் தொடங்கினர்.
மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது பிரிவின் பாதுகாப்பு, வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு மற்றும் அதிகார பகிர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதைப் பற்றி நாம் கடந்த காலங்களில் ஏற்கனவே எழுதியுள்ளோம்.

2020 முதல் நடக்கும் இந்த போராட்டத்தை எதிர்கொண்டு, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மோடி அரசு ஒரு வித்தியாசமான அணுகுமுறையை கையாளுகிறது. போராட்டங்கள் உயர் நிலையை அடையும் போதெல்லாம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுவதும், அப் பேச்சு வார்த்தையில் எட்டப்பட்ட தீர்வுகளை , நடைமுறை படுத்தாமல் காலந் தாழ்த்துவதும் புதுப் பாணியாக உள்துறை அமைச்சர் அமீத் ஷா அரங்கேற்றி வருகிறார். இதை சாணக்கியதனம் என பாஜக வினர் மெச்சி வருகின்றனர்.
நேற்றும் சோனம் வாங்சுக் போன்றோரும், கார்கில் ஜனநாயக முன்னணியினரும் லே மாநகரில் நடத்திய உண்ணநோன்பு போராட்டம் பதினான்கு நாட்களை கடந்து 15வது
நாளைத் தொட்ட பொழுது உண்ணாவிரத போராளிகள் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாகிய போதும், ஒன்றிய அரசு பேச்சுவார்த்தையை துரிதப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காத்தால் இளைய தலைமுறையினர் பொறுமையிழந்துவிட்டனர்.

ஆனால், பாஜகவினரோ, அல்லது ஆளுகின்ற மோடி அரசோ இதை ஏதோ காங்கிரஸ் கட்சி தூண்டிவிட்ட வன்முறை என கூப்பாடு போடுகின்றனர். உண்ணாவிரதத்தை ஒத்தி வைத்த சோனம் வாங்சுக் மீதும் பாஜக சேற்றை வாரி இறைக்கின்றது. லடாக்கில், லே உயர் திலைக் குழுவின் (Leh Apex Body) தலைவரான சோனம் வாங் சுக்கும், கார்கில் ஜனநாயக முன்னணி (Kargil Democratic Alliance) அமைப்பும் கடந்த ஆறு வருடங்களாக
மாநில அந்தஸ்து, அதிகார்ப் பகிர்வு, வேலை வாய்ப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் வேளையில், ஒவ்வொரு முறையும் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட குழு (High Power Committee) வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே உண்ணாவிரதம் இருக்க வேண்டியுள்ளது.
கடந்த அக்டோபர் 2024 லிலும் இதே நிலைதான்- வாங்சுக் உண்ணாவிரதம், தில்லியை நோக்கிய பேரணி, கைது– ஆகியவற்றை தொடர்ந்து பேச்சுவார்த்தை அமீத் ஷாவுடன் நடந்தது.
ஆனாலும், பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
மீண்டும் இப்பொழுது உண்ணாவிரதம் செப்டம்பர் 10-ல் தொடங்கியவுடன் பேச்சு வார்த்தை அக்டோபர் 6ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பேச்சு வார்த்தைக்கும் இப்போது அக்டோபரில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைக்கும் இடைபட்ட கால இடைவெளி ஐந்து மாதங்கள் என்றும், இத்தகைய ஒன்றிய அரசின் தாமதமான நகர்வுகளும் செயல்பாடுகளுமே மக்களின் கோபத்தைக் கிளறுகிறது என்று சோனம் வாங் சுக் கூறுகிறார் .

கார்கில் ஜனநாயக முன்னணியின் அமைப்பாளர் சாஜத் கார்கில் , இந்தியாவிலேயே வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமுள்ள இடங்களில் லடாக் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது என்று கூறுகிறார். மேலும், “ ஜனநாயகம் எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது, சட்டமன்ற உரிமையில்லாத யூனியன் பிரதேசமாக லடாக் சிறுமை படுத்தபட்டுள்ளது. எங்களுடைய குரலை எழுப்ப எங்களது உரிமையை நிலைநாட்ட எந்த சாதனமும் லடாக் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது, அரசமைப்பு சட்டம் வழங்கும் ஆறாவது பிரிவின் (sixth shedule of the Constitution) பாதுகாப்பு கூட எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது” என்று வேதனைப்படுகிறார்.
# கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு கெஜட் அந்தஸ்து பணி கூட லடாக் மக்களுக்கு வழங்கப்படவில்லை என்ற உண்மை.
# லடாக் பல்கலைக்கழகங்களில், பி எஃச் டி பட்டம் பெற்ற லடாக் இளைஞர்களை பணியமர்த்த ஒன்றிய அரசு மறுத்து வேறு மாநிலங்களை சார்ந்தோரை நியமிப்பது.
# மலையக வளர்ச்சி குழுவில் (கவுன்சிலில்) நியமிக்கப்படும் சொற்ப லடாக்கினரும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் நிலைமை , ஆகியவை லடாக் மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது உண்மை.
இதை மறந்துவிட்டு பாஜக வினர் சோனம் வாங் சுக்கையும் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் ஸ்டான்சின் சேப்பாக்கையும் நேற்று நடைபெற்ற வன்முறைக்கு காரணகர்த்தாக்களாக சித்தரிப்பதை என்னவென்பது?

இயற்கை பருவநிலைகளை பேணும் செயல்களில் கவனம் செலுத்தாமல், காடுகளை- மரங்களை- அழிப்பதை, கண் மூடித்தனமான கட்டுமானங்களுக்காக பாறைகளை தகர்த்தல் போன்ற கொடுமைகளை மோடி அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. உச்ச நீதிமன்றமே சமீபத்தில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இமய மலைத் தொடர் பகுதிகளில் இச் சேதாரங்கள் பெருகி வருகின்றன!
அந்தமான் – நிக்கோபர் தீவுகளிலும் வளர்ச்சி என்பதன் பெயரால் இயற்கை சூழலை சீர்குலைக்கும் பணியை மோடி அரசு முன்னெடுத்து வருகிறது.
லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்ததற்கு இரண்டு காரணங்களை மோடி அரசு அப்பொழுது கூறியது. ஒன்று இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும்
மற்றொரு காரணம் லடாக் மக்களின் தேவைகளை – அபிலாஷைகளை- நிறைவேற்றுவதற்காகவும் லடாக் யூனியன் பிரதேசம் அமைக்கப்படுவதாக மோடி அரசு கூறியது.

இது நடந்து ஆறு ஆண்டுகளாகியும் லடாக் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை. அவர்களது அடிப்படை கோரிக்கைகளான, சட்ட மன்றம், ஆறாவது அட்டவணை பாதுகாப்பு, அரசியல் பிரிவு 35A ஐ மீட்டல் , வேலை வாய்ப்பை பெருக்கி உறுதி செய்ய லடாக் பொது சேவை ஆணையத்தை ஏற்படுத்துதல், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை ஒன்றிலிருந்து இரண்டாக உயர்த்துதல் போன்ற கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்ற தயங்குவது ஏன்? இதற்கு தடையாக இருப்பது எது?
இந்தியா என்பது பல்வேறு தேசீய இனங்களை, பல்வேறு மதங்களை பற்றி ஒழுகுபவர்களை, பல்வேறு மொழிகளை, பல்வேறு கலாச்சார மரபுகளை தன்னகத்தே கொண்டது என்ற புரிதல் இதற்கு அவசியமாகிறது, வேற்றுமைகள் இருப்பதை உணர்ந்தாலே ஒற்றுமையின் மகத்துவம் புரிய வரும். அனைவரின் எண்ண ஓட்டங்களை மதித்து, அதிகாரங்களை பரவலாக பகிர்வதன் மூலமே ஒற்றுமையாக இருத்தலின் அவசியமும் கூடிவரும் என்ற முதிர்ச்சி
இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதை இவர்கள், ஜம்மு காஷ்மீரில் தொடங்கி மணிப்பூரில், வட – கிழக்கில், ஏன் தெற்கே தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் இவர்கள் நடந்து கொண்ட விதம், முன்னெடுத்த முயற்சிகள் மூலம் நாம் அறியலாம்.
இதைத் தான் கார்கில் ஜனநாயக முன்னணியின் தலைவர் சாஜத் கார்கில், ஒன்றிய அரசு தனது சண்டியத்தனத்தை விட்டுவிட்டு , பரந்துபட்ட மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முன் வரவேண்டும் . பேச்சுவார்த்தைகளில் ஒன்றிய அரசு உண்மையாக நடந்து கொண்டு – இழுத்தடிப்பு செய்யாமல் – கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.
பாஜக அரசு இதில் உண்மையாக இதுவரை இல்லை’’ என குற்றமும் சுமத்துகிறார்.
தேசீயவாதம் என்றாலே ஒற்றை கலாச்சாரத்தை, ஒற்றை மத உணர்வுகளை தூக்கி பிடிப்பது தான் என பால பாடம் கற்ற பாஜ க வினரும், சங் பரிவாரங்களும் இதை எப்படி ஏற்பர்?
ச.அருணாசலம்























Even though his concerns are correct, but sonam wanchik has connections with Pakistan and Bangladesh which is shocking. We cant allow this anymore and if we are not taking any action now, ladakh will become another bangladesh or nepal. We have to note that ladakh is near china border also and may disintegrate from India in long run.. May be central government should take good initiatives there reg employment of youth and overall development of the place will be a correct solution.