கல்வியில் சிறந்துள்ளதா தமிழ்நாடு?

-சாவித்திரி கண்ணன்

மிகப் பிரம்மாண்டமாக கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழக முதல்வரோடு, தெலுங்கானா முதல்வரும் கலந்து கொண்டு பேசினார். சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். நல்லது. தமிழகத்தின் உண்மையான கல்வி நிலைமை என்னவென்று உள்ளதை உள்ளவாறு பார்ப்போம்;

பார்க்கப் பார்க்க நெகிழ்ச்சி தந்தது!

மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களை தந்தது!

நேற்றைய தினம் கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்ற நிகழ்வைப் பார்த்த பலரின் அனுபவங்களும் இப்படித் தான் இருக்கும்!

தைவானில் படிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகள்!

நியூயார்க்கில் படிக்கும் ஆட்டோ ஓட்டுனரின் மகள்!

ஒரு எளிய கிராமத்தின்  ஏழை மாணவி ஜப்பான் சென்று படித்து அந்த மொழியிலேயே பேசி வெளுத்துக்கட்டியது…!

ஜெர்மனியில் படிக்கும் நெசவுத்தொழிலாளியின் மகள்..!

எளியோர் ஏற்றம் காண வேண்டும் விழையும் நம்மை போன்றோருக்கு இதைவிட  வேறென்ன சந்தோசம் இருக்க முடியும்…?

முழுக்க, முழுக்க அரசு செலவில் இந்த நிலைக்கு இந்த ஏழை மாணவர்கள் வந்துள்ளனர் என்ற வகையில்  நிச்சயம் இவை தமிழக அரசின் சாதனைகள் தான்!

ஆனால், இதைக் கொண்டே மாநிலத்தை கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனச் சொல்லிவிட முடியுமா? என்றால்,  இது முழுமையான உண்மையல்ல. இந்த நிகழ்ச்சியானது நமது மாநில அரசின் ஒரு குறிப்பிட்ட சிறந்த அம்சத்தை மட்டுமே வெளிச்சப்படுத்துகிறது.

சுமார் 40 ஆண்டுகளாக கல்வி குறித்து இடையறாது எழுதி வருபவன் என்ற வகையில், நமது தமிழ்நாடு கல்வியில் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, அந்த வீழ்ச்சி தற்போது இந்த ஆட்சியில் வேகம் பெற்றுள்ளது என்பதையும் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

தமிழ்நாட்டில் 1990 களுக்கு பிறகு எத்தனை புதிய அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன? அனேகமாக எதுவுமில்லை. ஆனால், எத்தனை அரசுப் பள்ளிகள் இடித்து அகற்றப்பட்டு உள்ளன என்பதற்கு தமிழக அரசே செப்டம்பர் 2022  மதுரை உயர்நீதிமன்றத்திற்கு தந்துள்ள தகவல்களின்படி, தமிழகத்தில் மொத்தம் 5,553 அரசு பள்ளிகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது!

அவ்வளவு ஏன்? திமுக அரசு பதவியேற்ற முதல் கல்வி ஆண்டில், அதாவது,

2021-22 ஆம் கல்வி ஆண்டில் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டன.

தற்போதைய நிகழாண்டு மட்டுமே 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டன.

இத்தனை பள்ளிகள் மூடப்பட்டதற்கு பள்ளிக் கல்வித் துறையில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தான் காரணம்.

தமிழ்நாட்டின் உண்மையான கல்விச் சூழல்;

#  சுமார் 3,000 பள்ளிகள் ஓராசிரியர்கள் பள்ளிகளாக உள்ளன!

# 25,000 -க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்களே உள்ளனர்.

# 5000 -க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன…

# தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் அனைத்திலுமாக 10,000 பள்ளிகளுக்கு மேலாக தலைமை ஆசிரியர் இல்லாமல் அரசு பள்ளிகள் தள்ளாடுகின்றன.

#  78% தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 100-க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர்! காரணம், அரசு பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளே சரியின்றி, பல பள்ளிகள் பாழுங் கட்டிடத்தில் செயல்படுகின்றன! இதனால் மரத்தடிகளில் வகுப்பு நடத்த வேண்டிய நிலைமைகள் உள்ளன.

தொடக்கப் பள்ளிகள் தொடங்கி மேல் நிலைப் பள்ளிகள் வரை ஆசிரியர்கள் பற்றாக் குறையால் தமிழக கல்விச் சூழல் மிகவும் கதிகலங்கி கிடக்கின்ற காரணத்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்.

அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர்கள் எண்ணிக்கை;

தமிழகத்தில் மொத்தமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  44,884  படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 56,06,423

ஆனால், வெறும் 12,970 தனியார் பள்ளிகளில், 63.42 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

இப்படி அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதற்கு அடிப்படை வசதிகள் கூட பள்ளிகளில் இல்லாத நிலைமைகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் ஆசிரியர்கள் பற்றாகுறை மிக முக்கிய காரணமாகும்.

இன்னும் ஓராசிரியர், ஈராசிரியர்களைக் கொண்டு இயங்கும் பள்ளிகள் நிறைந்துள்ள.. இத்தகைய  அவல நிலைகளை எல்லாம் உள்ள – மாநிலத்தை எப்படி கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பீர்கள்!

அப்படிச் சொல்வதும், நம்புவதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவே உதவும். முதலில் நமது குறைகளை உணர முடிந்தால் தான், நாம் நம் தவறுகளைக் களைந்து முன்னேற முடியும்.

ஒரு பக்கம் அரசு பள்ளிகளில் தண்ணீர் வசதியில்லை, கழிப்பிட வசதியில்லை, மேற்கூரையில்லை.. என பெருமளவிலான அரசு பள்ளி மாணவர்கள் அவல நிலையில் உழல, அதில் வெகு சில மாணவர்களை மட்டும் சிறப்பு கவனம் தரப்படும் மாதிரி பள்ளிகள் வாயிலாகவும், நான் முதல்வன் திட்டம் வாயிலாகவும் வெற்றி பெற வைத்து, இதையே தமிழ்நாட்டின் கல்வி வெற்றிக்கான அளவுகோலாக்கிவிட முடியாது.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்று செயல்படுத்தும் தமிழ்நாடு;

இந்த நிகழ்வு குறித்து கல்வியாளர் தோழர் ஜவகர்நேசனிடம் பேசிய போது, தமிழ் நாட்டு பள்ளிகளில் இந்த மண்ணும், மரபும் சார்ந்த கல்விக்கு இடமில்லை. தேசியக் கல்வியை வழி மொழிவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்று தமிழ் நாட்டுக்கான கல்வி கொள்கையை உருவாக்கி வந்த என்னை நிர்பந்தப்படுத்தியது, ஸ்டாலின் அரசு. இன்றைய தமிழக பள்ளிக் கல்வியில் ஹிட்லர், முசோலி காலத்தை நினைவுகூறும் வகையில் – மத்திய அரசின் சனாதனக் கல்விச் சிந்தனைகள் நுழைக்கப்பட்டு – வருகின்றன. பள்ளிக் கல்விக்கான பாடதிட்டங்கள் ஆசிரியர் தகுதிகள், தேர்வுகள்  அனைத்தையும் மத்திய பாஜக அரசு தீர்மானிக்கிறது. ஆசிரியர்களை ஒப்பந்தக் கூலிகளாக வைத்து குறைந்த சம்பளத்தில் வாட்டி வதைக்கிறது தமிழக அரசு…யதார்த்தம் இப்படியிருக்க, இவங்க ஏதோ ஷோ காட்டிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

ஆம், தேசியக் கல்வி கொள்கையில் சொல்லப்பட்ட இந்தி திணிப்பை மட்டுமே தமிழக அரசு நிரகரித்து மற்றவற்றை எந்த எதிர்ப்புமின்றி ஏற்று செயல்படுத்தி வருகிறது.

உண்மை தான். பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் நிரந்தரமாகாமல் ஒப்பந்த ஆசிரியராகவும், பகுதி நேர ஆசிரியராகவும் உழலும் பல்லாயிரம் ஆசிரியர்கள் ஸ்டாலின் ஆட்சியில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற ஞாபகங்கள்  வந்தன.

பள்ளிக் கல்வியின் அவல நிலை இதுவென்றால், உயர் கல்வியின் நிலை இன்னும் படுமோசம். புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஆகியவை பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் , ஊழியர்களுக்கும் சம்பளம் தர முடியாமல் இழுத்து மூடும் நிலைமையில் உள்ளன. கலைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் அனைத்திலும் பேராசிரியர்கள் பற்றாகுறையால் கல்விச் சூழல் கதிகலங்கி கிடக்கின்றது. இங்கேயெல்லாம் ஒப்பந்தக் கூலிகளாக  பேராசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதை கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று புகழ்பாட முடியுமா?

இந்த நிகழ்ச்சியில் கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் மிகப்பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து முதல் மாத ஊதியத்தை தந்தையிடம் கொடுத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள் … இதைப் பார்த்த எனக்கு தோன்றிய முதல் கேள்வி அந்த முதல் மாத சம்பளத்தை தந்தையிடம் வீட்டில் வைத்து உடனே தந்திருக்க வேண்டிய மகள் அதை எத்தனை நாள் பாதுகாத்து இந்த நிகழ்ச்சிக்காக மேடையில் வந்து இவ்வளவு நீண்ட நெடிய உணர்ச்சிகரமான உரையாற்றித் தர நிர்பந்திக்கப்பட்டார் என்பது தான்.

இப்படியெல்லாம்  பல சென்ஷேனல் – உணர்ச்சிகரமான – காட்சிகள்..!

என்ன சொல்வது எனத் தெரியவில்லை.

இந்தச் சூழலில் நாம் ஒரே ஒரு விஷயத்தை கவனப்படுத்துகிறோம். உண்மையிலே இந்த மாநிலத்தை கல்வியில் சிறந்த தமிழ் நாடாக்க முதல்வர் ஸ்டாலின் விரும்பினால், இங்குள்ள மது வியாபாரத்தை வெகுவாக மட்டுபடுத்தி குறைக்க மனது வைக்க வேண்டும். இது ஒன்றைச் செய்தாலே கல்வியில் தமிழ்நாடு தலை நிமிரும். ஏனென்றால், அரசே டாஸ்மாக் மது வியாபாரத்தை பொறுப்பெடுத்து தீவிர மது விற்பனையில் இறங்கிய கடந்த இரண்டு தசாப்தங்களில் தந்தைகளின் மது பழகத்தால் பல குழந்தைகளின் கல்வி சீரழிந்து அவர்கள் குழந்தை தொழிலாளிகளாக மாறியதற்கு பல லட்சக்கணக்கான குடும்பங்களே சாட்சி. அவர்களில் சிலருக்கேனும் இது போல மேடை தந்து நீங்கள் அமர்ந்து கேட்டால் கண்ணீர் மட்டுமல்ல, ரத்தமே வழியும் இதயத்தில் இருந்து!

முடிவாக இன்றைய நமது மாநிலம் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனச் சொல்வதற்கான அருகதையை விடவும், ‘போதையில் சிறந்த தமிழ்நாடு’ எனச் சொல்லதக்க அருகதையில் உள்ளது என்பதே யதார்த்தம்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time