நம்பிக்கை அளிக்கிறது, நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களின் துரிதமான, அக்கறையான செயல்பாடுகள்!
இந்த வயதிலும் உடனே களத்தில் இறங்கி, சம்பவ இடத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று அவர் விசாரணை நடத்தும் பாங்கு வியக்க வைக்கிறது. இன்னும் ஒரே மாதத்தில் அவரிடம் இருந்து தெளிவான அறிக்கை வர வாய்ப்புள்ளது என்றே கருதுகிறேன்.
நேர்மையான முறையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வில் விசாரணை நடத்தி, அறிக்கை தந்தவர் நீதிபதி அருணா ஜெகதீசன் என்பதை நாம் நன்றியுடன் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளோம்.
அந்த கொடிய துப்பாக்கி சூடு அதிகாரிகளின் அதிகார அத்து மீறலினால் ஏற்பட்ட விளைவாகும்’’ என்றது, அவர் அறிக்கை.
அத்துடன், சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரில் ஆறு பேருக்கு துப்பாக்கி குண்டுகள் பின் தலையிலும், முதுகிலும், பின் கழுத்திலும் ஊடுருவி முன்புறமாக வந்துள்ளது. அமைதியாக நடந்து சென்ற மக்கள் மீது காவலர்கள் ஒளிந்து கொண்டு சுட்டுள்ளனர் என அம்பலப்படுத்தியது.
மேலும், அத்து மீறலில் ஈடுபட்ட தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 காவல்துறை அதிகாரிகளை அடையாளங்காட்டி, தண்டிக்க பரிந்துரைத்தது, அருணா ஜெகதீசன் அறிக்கை.
ஆனால், என்ன காரணமோ, தெரியவில்லை. அருணா ஜெகதீசன் அறிக்கையை கிடப்பில் போட்டது ஸ்டாலின் அரசு. இந்த அரசால் பல மாதங்களாக கமுக்கமாக வைக்கப்பட்ட அந்த அறிக்கையை பகிரங்கமாக வெளிக் கொணர்ந்தார் பிரண்ட் லைன் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன்.
காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக மதுரை மக்கள் உரிமை கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றமே திமுக அரசை கடுமையாக கேள்வி கேட்டது.
இத்தனைக்கும் அன்று எதிர் கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் அந்த நிகழ்வின் துயரத்தை வெளிப்படுத்த கருப்பு சட்டை போட்டு கை உயர கோஷங்கள் எழுப்பி, ”துரிதமான விசாரணை வேண்டும், உடனடியாக டி ஜி பி உட்பட பொறுப்பில் இருக்கும் அனைத்து காவல் அதிகாரிகளும் இடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு உரிய சன்மானம் தமிழக அரசு வழங்க வேண்டும்” என்று குரல் எழுப்பினார் என்பதை மறக்க முடியாது.
அதே ஸ்டாலின் அவர்கள் முதல்வரானதும் தண்டித்திருக்க வேண்டிய காவர்களை பாதுகாத்து, பதவி உயர்வுகளை வழங்கினார். குறிப்பாக தென் மண்டல ஐ.ஜியாக இருந்து அத்துமீறல்களை செய்த சைலேஷ் குமார் யாதவிற்கு டிஜிபியாக பதவி உயர்வு தந்தார் என்பது தான் முரணாகும்.
ஆக, நமக்கு நீதிபதி மீது முழு நம்பிக்கை உள்ளது. ஆனால், அவர் தரவுள்ள அந்த அறிக்கை மீது ஸ்டாலின் அரசு துணிச்சலாக, பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்குமா? என்பது தான் கேள்வியாகும்.

முதலாவதாக தன்னை இந்த விசாரணைக்கு அருணா ஜெகதீசனை முதல்வர் ஸ்டாலின் நியமித்த போதே அவர் இதை ஒத்துக் கொள்வாரா? என பலருக்கும் ஒரு சந்தேகம் இருந்தது. ஏனென்றால், அவரது முந்தைய அறிக்கையை இந்த அரசு ஒரு சிறிதும் மதிக்காத போக்கு அவருக்கு நிச்சயம் வருத்ததை தந்திருக்கும். ஆனால், பெருந்தன்மையோடு இந்த அறிவிப்பை ஏற்றதோடு, உடனடியாகவும் களப் பணியில் இறங்கிவிட்டார்.
இந்த விசாரணை கமிஷன் முன்பு அரசு அதிகாரிகள், காவலர்கள், த.வெ.க நிர்வாகிகள் என பலரும் ஆஜராக வேண்டி இருக்கும்.
அதில் ஏழு மணி நேரத் தாமதம் குறித்து விஜய் அவர்களும் விளக்கம் தந்தாக வேண்டும். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி போன்றோர் விஜய் கூட்டத்திற்கு குறுகலான இடம் தரப்பட்டது தொடங்கி, அடுத்தடுத்து நிகழ்ந்த ஒவ்வொரு நகர்வுக்கும் உரிய பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது தவறு இருப்பதாக தெரிய வந்தாலோ, செந்தில் பாலாஜி ஆட்கள் இதில் ஊடுருவி தீங்கு விளைவித்தார்கள் என்பது உறுதியானாலோ நிச்சயம் நடவடிக்கை இருக்குமா? என்பது தான் தெரியவில்லை.
————— ————————- ————————— ————————– —————–
தன்னை சுய விமர்சனத்திற்கு உட்படுத்திக் கொண்டாரா?

மூன்று நாட்கள் மவுனத்திற்கு பிறகு வாய் திறந்துள்ளார் விஜய். அவரிடமிருந்து சுய விமர்சனமும், தன்னிலை விளக்கமும் வரும் என எதிர்பார்த்தேன்.
கரூரில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக தன் மனதின் வலியை அவர் சொந்த மொழியில் யாரும் ஸ்கிரிப்ட் எழுதி தராமல் வெளிப்படுத்தினார், உருக்கமாக,. அதில் பாசாங்குத்தனம் இல்லை.
ஆனால், இந்த சம்பவத்தை தான் முறையாக எதிர்கொண்டோமோ என்பது குறித்து இந்த மூன்று நாட்களில் சுய பரிசோதனைக்கு தன்னையும், தன் கட்சியினரையும் உட்படுத்தினாரா? என்று தெரியவில்லை.
அப்படி சுய பரிசோதனை செய்திருந்தால், இந்த காணொளியில் அவர் மக்கள் மனதில் இருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்லி இருப்பார். அரசியல் அனுபவமின்மையால் தவறுகள் நடந்துவிட்டது. அதே சமயம் இந்த அனுபவத்தில் அவர் பாடம் கற்றாரா? என்பதற்கு அவர் காணொளியை பார்த்து முடிவுக்கு வர முடியவில்லை.
# ஏழு மணி நேர காலதாமத்திற்கான தன்னிலை விளக்கம் தந்திருக்க வேண்டும்.
# கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. விஜய் அங்கு வருவதே ரிஸ்க்கானது. ஆகவே, இதை தவிர்ப்பது நல்லது என அவர் மீது பற்றுள்ள ஒரு காவல்துறை அதிகாரி மூலம் அவருக்கு இன்சிஸ்ட் செய்யப்பட்டதை அவர் மீறியதற்கான சுய விமர்சனம் தந்திருக்கலாம்.
# தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறுகலானதா? விசாலமானதா? என்பதை கட்சி நிர்வாகிகளிடம் தீர விசாரித்து முடிவெடுத்தாரா?
# தன் பாதுகாப்பிற்கு பவுன்சர்களை வைத்துக் கொண்டது போல, மக்களை பாதுகாக்க தன் கூட்டத்தில் த.வெ.க தொண்டர்களை ஈடுபடுத்தி இருக்கலாம் என்று யோசித்திருந்தால் எதிர்காலத்திற்கு நல்லது.
# மயங்கி விழுந்த சம்பவங்களை கண் எதிரே கண்ட விஜய், தன் நிர்வாகிகளை அழைத்து பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி அங்கே சுற்றிலும் இருந்த தனியார் மருத்துவனைகளில் பத்திரமாக கொண்டு சேருங்கள்…செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்’’ எனக் கூறி, தன் பின்னே அணிவகுத்து வந்த கார்களை தொண்டர்களுக்கு தந்து உதவி இருக்கலாம். கரூர் சிட்டியிலேயே ரூம் போட்டு தங்கி, நடைபெறும் நிவாரணம் குறித்து கேட்டு அறிந்து வழி நடத்தி இருக்கலாம்.
# அன்றே இது போல் காணொளியில் தோன்றி மக்களுடன் தான் இருப்பதாக நம்பிக்கை ஊட்டி இருக்கலாம் . இவை எதனையும் செய்யவில்லை. இதை தற்போதாவது உணர்ந்தாரா தெரியவில்லை.
Also read
# இது போன்ற நெருக்கடிகள், அசம்பாவிந்தங்களில் போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு யாருமே தொடர்பு கொள்ள முடியாதபடி தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது தலைமைப் பண்புக்கு சரியானதா? என்றும் அவர் சுய விமர்சனம் செய்து கொண்டால் நன்று.
# தன் அரசியல் எதிரிகள் மிக பலம் பொருந்தியவர்கள். மக்களோடு களத்தில் நிற்கத் தெரிந்தவர்கள். தகுந்த திட்டமிடலோடு எதையும் துரிதமாகச் செய்து, எதிரிகளை திணறடிப்பவர்கள்… என்ற புரிதலுக்காவது தற்போது வந்தாரா? என்பதும் தெரியவில்லை.
அரசியலில் அனுபவஸ்தர்களை அருகில் வைத்துக் கொள்வதன் அவசியத்தையும், எதிர் தரப்பினரின் அரசியல் வியூகங்களை முன் கூட்டியே ஊகித்து அறிந்து அதற்கேற்ப முன் எச்சரிக்கை அரசியல் செயல்பாடுகளை கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்திருப்பாரா? தெரியவில்லை.
பார்ப்போம், அனுபவம் தான் யாரையும் விட பெரிய ஆசான்.
சாவித்திரி கண்ணன்














நடிகர் விஜய்யின் முதலமைச்சர் கனவின் உச்சமே கரூரில் நடந்த இந்த நிகழ்வு. ஒரு தலைவன் தனது கூட்டத்தில் நடந்த பெரிய பேரழிவுக்கு உடனிருந்து காரியங்கள் செய்திருக்க வேண்டும். என்பதை உணர்ந்து கொண்டதற்கான முகாந்திரம் எதுவும் அவரது தன்னிலை விளக்கத்தில் இருப்பதாக தெரியவில்லை. அவருடன் கூட இருப்பவர்கள் எல்லாருமே அவரை ஏற்றிவிட்டு ஓடிவிட்டார்கள். குறைந்தபட்சம் அவர்களாவது துயரம் நடந்த இடத்தில் இருந்து உதவி செய்து மக்களுக்கு ஆறுதல் அளித்து இருக்க வேண்டும். மிகப்பெரிய துயரம் நடந்து கொண்டிருந்தபோது அதிலிருந்து ஓடிவிட்டது அவருக்கு பெரும் பின்னடைவே. சினிமாவில் ஹீரோவாகவே நடித்துவிட்டு நிஜ வாழ்வில் பல பேர் மரணம் அடைய காரணமாக இருந்துவிட்டு வில்லனைப் போல் ஓடிவிட்டது அவரை பொதுமக்கள் சரியாக புரிந்து கொள்ள உதவி இருக்கிறது. முதலில் விஜய் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தனது நிகழ்ச்சிகளுக்கு வரும் கூட்டம் பெரும்பாலும் அவரைப் பார்ப்பதற்கே. புகழ் போதை அவரை நிதானம் இழக்க செய்து இருக்கிறது.
விஜய் போன்ற லும்பனுக்கு இந்த அளவுக்கு கண்மூடித்தனமாக கும்பல் அதாவது தற்குறி மடையர்கள் தோன்றியது திமுக அதிமுக கட்சியின் அரசியல் அட்டூழியம் கொள்ளை ஊழல் தான் காரணம்
விஜய் அனுபவம் பெற 41 உயிர்களை பலி கொடுத்தால் மட்டும் போதுமா? இன்னும் 9 பேரை சேர்த்து அரைநூற்றை தொட்டு விட்டால் போதும் என்று மட்டும் எழுதவில்லை…