நட்பை உருவாக்கவும், பரஸ்பரம் உறவுகளை வலுப்படுத்தவும் நாடுகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் இருந்த காலங்கள் கனவாகிவிட்டன. விளையாட்டிலும் பகையை வளர்க்கும் போக்குகள் பாஜக ஆட்சியில் அரங்கேறி வருகின்றன. இதன் உச்சம் 17 வது ஆசிய கோப்பை கிரிகெட் போட்டிகளின் ஒவ்வொரு நகர்விலும் வெளிப்பட்டதை பார்ப்போம்;
ஆசிய கிரிக்கெட் கோப்பைக்கான போட்டிகள் என்பவை 1984 தொடங்கி நடக்கின்றன. முதல் முப்பது ஆண்டுகள் எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெற்ற இந்த போட்டிகள் கடந்த 11 ஆண்டுகளாக முட்டல், மோதல்கள் இல்லாமல் நடப்பதில்லை.
முந்தைய 16 வது ஆசிய கோப்பையை பாகிஸ்தானும், இலங்கையும் சேர்ந்து நடத்தின. இந்த இரு நாடுகளின் முக்கிய நகரங்களில் நடத்த திட்டமிட்ட போது, இந்திய கிரிக்கெட் வாரியம், ”நாங்கள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடமாட்டோம்” என்று அதிரடியாக அறிவித்தது.
தற்போதைய 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி) தலைவர் மொஹ்சின் நக்வி அறிவித்த போதே அவற்றை ‘எந்த இடத்தில் நடத்துவது?’ என்ற சர்ச்சை உருவானது.
தற்போதைய 17-வது ஆசிய கோப்பை போட்டி யை நடத்தும் உரிமத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ பெற்றிருந்தது. அதன்படி செப்டம்பர் மாதம் இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களில் இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ”சென்ற முறை பி.சி.சி.சி வீரர்கள் பாகிஸ்தானுக்கு வர மறுத்துவிட்ட நிலையில் நாங்களும் இந்தியாவிற்கு விளையாட வரமாட்டோம்’’ என்றது, பாகிஸ்தான் அணி. ஒரு வழியாக பேசி விவாதித்து இந்த போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திலும், துபாயிலும் நடத்தி முடித்துள்ளனர்.
போட்டி துவங்குவதற்கு சில நாட்கள் முன்னதாக ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஊர்வசி ஜெயின் தலைமையிலான நான்கு சட்ட மாணவர்கள் பொதுநல மனு தாக்கல் செய்து தடுக்க முயற்சித்தனர். அவர்கள் தங்கள் மனுவில், ”பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும்’’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ”இந்த போட்டியை ரத்து செய்ய முடியாது திட்டமிட்டபடி நடைபெறும்” என்று தீர்ப்பளித்தது கவனத்திற்குரியதாகும்.
இந்தச் சூழலில் துவக்கத்தில் இருந்தே இந்தியா- பாகிஸ்தான் இரு அணி வீரர்கள் மத்தியிலும் ஒரு சுமூகமான அணுகுமுறை இல்லை. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா இருவரும் இயல்பாக ஒருவருக்கொருவர் பேசுவதைக் கூட தவிர்த்தனர். மேலும், போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கி டாஸ் உள்ளிட்டவற்றிலும் லீக் சுற்று, சூப்பர் 4 சுற்று போட்டியின் முடிவிலும்… என எந்த இடத்திலும் ஒருவருக்கொருவர் கைகுலுக்க கூட மனமற்றவர்களாக வெளிப்பட்டதை அனைவரும் காண முடிந்தது.
அந்த அளவுக்கு நிலைமைகளை மோசமாக்கி உள்ளது, இன்றைய அரசியல், சமூக சூழல்கள். இந்தப் போட்டிகளின் போது சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகமாக சங்கிகளால் வெளிப்படுத்தப்பட்டது. இதுவும் வீரர்களை பாதித்து இருக்கலாம்.

2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பையில் எட்டு அணிகள் போட்டியிட்டன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியவை தான், ஆசிய நாடுகள் என்ற வகையில் இதன் நிரந்தர உறுப்பு நாடுகள். அதே சமயம் இவை தவிர, ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு தரப்பட்டது. இந்த போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் பல கோடிகள் பணம் ஈட்டியுள்ளது. வர்த்தக ரீதியாக இதில் இந்திய கிரிகெட் அணி நல்ல பலன் பெற்றது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஒட்டுமொத்தமாக 21 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்று முடிந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான நமது இந்திய கிரிக்கெட் அணியானது 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து, 150 ரன்கள் குவித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த மகிழ்ச்சிகரமான சூழலை தன்னுடைய பகை உணர்வின் வெளிப்பாட்டால் மட்டுப்படுத்தினார் பிரதமர் மோடி.
இதையடுத்து நடைபெறவுள்ள கோப்பை வழங்கும் நிகழ்வை குலைத்ததில் நமது பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவுக்கு முக்கிய பங்குள்ளது.

இந்திய அணியின் வெற்றி குறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திரடி அவர்கள், விளையாட்டிலும் “Operation Sindoor.. அதே முடிவுதான்.. இந்தியாவுக்கு வெற்றி- நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என்று குதர்க்கமாக பாகிஸ்தானுக்கு எதிரான வன்மத்தை கக்கினார்.
இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் , பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் உள்ள மொஷின் நக்வி அவர்கள் பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் விதமாக, “போர் தான் பெருமைக்கான உங்களின் அளவீடு என்றால், பாகிஸ்தானிடம் இந்தியா பெற்ற அவமானகரமான தோல்வியை வரலாறு பதிவு செய்துள்ளது, அதை எந்த கிரிக்கெட் போட்டியாலும் மாற்ற முடியாது. விளையாட்டிற்குள் போரை இழுப்பது ஏமாற்றமளிக்கிறது மற்றும் விளையாட்டு உத்வேகத்தை அவமதிப்பதாக உள்ளது.” பதிவிட்டார்.

இதையடுத்து தான் நமது இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் வெற்றி பெற்றதற்கான ஆசிய கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான மொஷின் நக்வியிடம் இருந்து பெற முடியாது என்ற முடிவை எடுத்து முரண்டு பிடித்தனர். இத்தனைக்கும் இந்திய அணியின் வெற்றியை மொஷின் நக்வி பெருமிதமாகவே பார்த்தார். தன் கருத்துக்களை அவர் ஆரம்பத்தில் இருந்தே ஆரோக்கியமாக வெளிப்படுத்தி வந்தார் என்பதும் கவனத்திற்குரியதாகும்.
இந் நிலையில் இந்திய கேப்டனுக்கு மற்றுமொரு நெருக்கடியும் தரப்பட்டதா? எனத் தெரியவில்லை.
Also read
ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய போட்டிகளுக்கான தன்னுடைய முழு சம்பளத்தையும் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், ’’நான் செய்வது சரியா? தவறா? என்று தெரியவில்லை இருந்தாலும், இந்த ஆசிய கோப்பை தொடருக்கான என்னுடைய முழு ஊதியமான 28 லட்சத்தையும் நான் பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் அளிக்க விரும்புகிறேன்’’ என்று பேசினார்.
தன்னிடம் ஆசிய கோப்பையை வாங்க மறுத்துவிட்ட நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான மொஷின் நக்வி மேடையில் ஒரு மணி நேரம் காத்திருந்து பார்த்து பொறுமை இழந்து அந்த கோப்பையை எடுத்துச் சென்றுவிட்டார். அதை எதிர்த்து யாரேனும் ஒருவர் மூலம் மொஷின் நக்வி ஆசிய கோப்பையை இந்திய வீரர்களிடம் ஒப்படைத்திருக்கலாமே என்றது பிசிசிஐ.
இதன் பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் துபாயில் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகளாக துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, முன்னாள் பொருளாளர் ஆஷிஷ் ஷிலார் ஆகியோர் கலந்து கொண்டு கோப்பை பிரச்சினையை எழுப்பி சர்ச்சை செய்துள்ளனர்.
நமது விளையாட்டை பகை அரசியலில் இருந்து பாதுகாக்க வேண்டும். மகிழ்ச்சியையும், நட்பையும் பேணும் சூழலை வளர்த்தெடுக்க வேண்டும்.
சாவித்திரி கண்ணன்















Leave a Reply