சாராய ஊழலில் சாதனை படைத்தவர் செந்தில் பாலாஜி!

-சாவித்திரி கண்ணன்

மது பாட்டிலுக்கு ரூ 10 அதிகமாக வாங்கப்படுவது குறித்து செந்தில் பாலாஜி அசத்தலான விளக்கம் அளித்தார். என்ன ஒரு நிதானம்! தெளிவு, அருமையான விளக்கம்…!  வாவ்! பெரிய திறமைசாலி. ஆனால், அவர் எப்படி உண்மையை ஊமையாக்கப் பார்க்கிறார், முறைகேடுகளை முறைப்படுத்தி திறம்பட நிர்வகிக்கிறார்…என ஆதாரங்களோடு பார்ப்போம்;

அதாவது 10 ரூபாய் அதிகமாக வசூலிப்பது அதிமுக ஆட்சியிலும் இருந்தது, தற்போதும் உள்ளது. அப்போதும் அந்தப் புகார்களுக்கு  அபராதம் வசூலிக்கப்பட்டது. தற்போதும்  அந்தப் புகார்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. ..என துல்லியமான கணக்கை முன் வைத்துள்ளார், செந்தில் பாலாஜி, சபாஷ்.

அந்தக் கணக்கை பார்த்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு போவோம்.

செந்தில் பாலாஜியின் ஒப்புதல் வாக்குமூலம்;

2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி இருந்தது. அப்போது ரூ.10 கூடுதலாக வசூலித்ததாக 7,540 வழக்குகளும், அதற்கும் கூடுதலாக வசூலித்ததாக 8,666 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு ரூ.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டுக்கு பிறகு 18,253 வழக்குகளும், ரூ.10-க்கு மேல் வசூலித்ததாக 2,356 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு ரூ.8.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இந்தத் தொகை ஆளுங்கட்சிக்கு செல்கிறது என்றால், 2016 முதல் 2021 வரை பழனிசாமிக்கு சென்றதா? என சூப்பராக எதிர் கேள்வி வைத்துள்ளார், செந்தில் பாலாஜி.

சரி, விஷயத்திற்கு வருவோம். புகார்கள் கொடுத்தால், வாங்கியவருக்கு அபராதம்..என பல கோடிப் பணம் வசூலிக்கப்பட்டு மீண்டும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கே வந்து, லாபம் மேலும் அதிகமாகிறது. ஆக, ஊழியர்கள்  செய்யும் தவறுகளால் மீண்டும் டாஸ்மாக் நிறுவனமே ஆதாயத்திற்கு மேல் ஆதாயம் அடைகிறது. அதே சமயம் புகார் தந்த வாடிக்கையாளர்களுக்கு அபராதம் வசூலிப்பதால் இழந்த பணம் திரும்பக் கிடைப்பதில்லை. தொடர்ந்து அவர்கள் நாள்தோறும் இழந்து கொண்டிருப்பதும் தடுக்கப்படுவதில்லை. அது மட்டுமில்லை, இந்தத் தவறுகள் மீண்டும் அதிகரித்தே வருகிறது என்பது அபராத வசூல் அதிகரித்துள்ளதன் மூலம் விளங்குகிறது. அதாவது, முறைகேடுகளை தடுப்பதற்காக அபராதம் என்றில்லாமல், தடையின்றி தொடர்வதற்கு செய்த ஏற்பாடே அபராதம் என்ற புரிதலை ஊழியர்களுக்கு உணர்த்திவிட்டீர்கள்.

அப்படியானால், இந்த மாதிரியான நடவடிக்கைகள் ஒரு கண் துடைப்பு தானே? இவ்வளவு புள்ளி விபரங்களை அள்ளிவிடும் செந்தில் பாலாஜி அவர்கள், புகார்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்ததற்கான சான்றுகளை காட்ட முடியுமா? முடியாது..?

ஏன் முடியாது என்றால், வாடிக்கையாளர்கள் புகார்கள் கொடுத்தால் தானே? அப்படியானால், வாடிக்கையாளர்கள் புகார்களே தருவதில்லையா?  வாடிக்கையாளர்கள் தரப்பில் நிறைய புகார்கள்  உள்ளதென்னவோ உண்மை. ஆனால், அதை சொல்வதால், துளியளவும் பலனில்லை எனும் போது யாரும் அதை மீண்டும், மீண்டும் அரசுக்கு எழுதி தெரிவிக்க மெனக்கிடமாட்டார்கள் என்பதே யதார்த்தம்.

அட்டூழியங்களுக்கு தரப்படும் அங்கீகாரம்:

ஆரம்ப நாட்களில் ஒரு சில புகார்கள் நிர்வாகத்திற்கு எழுதி தெரிவிக்கப்பட்டதோடு சரி.

தினம், தினம் நடக்கிறது,

தொடர் கதையாக உள்ளது.

புகார்கள் மூலம் நிவாரணம் கிடைக்காது என்பது தெளிவாக புரிந்துவிட்டது.

ஆகவே, இப்படி கூடுதல் பணம் வாங்குவதில் நிர்வாக மேலிடத்திற்கும் தொடர்புள்ளது என்பது விளங்கியவுடன் வாடிக்கையாளர்கள் தலை எழுத்தே என கூடுதல் தொகையை தந்து தான் பெற முடியும் என்ற யதார்த்தத்திற்குப் பழகிவிட்டனர். அல்லது பழக்கப்படுத்தப்பட்டுவிட்டனர்.

யாராவது அரசை எதிர்த்து கேட்டாலோ அல்லது வழக்கு தொடுத்தாலோ , ’’பார், இதோ நாங்கள் எடுத்த நடவடிக்கை’’ எனக் காட்டுவதற்கே இந்த கண் துடைப்பு.

அதிகாரிகளே புகார்களை கிரியேட் செய்து, அபராதம் வசூலித்தாக கணக்கு காட்டி முறைகேடுகளை தொடர்வது என்பது  நடக்கும் அட்டூழியங்களுக்கு தரப்படும் அங்கீகாரமின்றி வேறென்ன செந்தில் பாலாஜி அவர்களே..?

அடுத்தாக பத்து ரூபாய் என்பதெல்லாம் பழைய கதை. ஜெயிலுக்கு போய் வந்த பிறகு, செந்தில் பாலாஜி அதை ரூ 20 முதல் 40 வரை அதிகரித்துவிட்டார். என்ன அவர் அதிகரித்தாரா? ஆமாம், சாட்சாத் செந்தில் பாலாஜி தான் அதிகரிக்க காரணமானவர்.

பத்து ரூபாய் வசூல் பிறந்த கதை

மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பது என்பது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறை தர முடியாத நிலையில் வசூலிக்கப்பட்டதாகவே ஆரம்பத்தில் இருந்தது. இதை அந்தக் கடை ஊழியர்கள் தங்களுக்குள் பிரித்து எடுத்துக் கொள்வார்கள்.

மிக அதிக லாபம் ஈட்டும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தான் இருப்பதிலேயே மிகக் குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்தத் தொகை அவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. அதுமட்டுமின்றி உடைந்த சேதாரமான பாட்டில்கள் கணக்கை சரிகட்டவும், உள்ளுர் காவல்துறைக்கு  சிறிது கப்பம் கட்டவும் இது பயன்பட்டது. 1996 காலகட்டத்தில் கலைஞர் இந்தப் புகாருக்கு முடிவு காண விலையை ரவுண்டாக்கினார். அதாவது, ரூ 88 விற்பனை விலையை 90 என நிர்ணயித்தார்.

அப்போது, ஏற்கனவே கிடைத்ததை இழக்க விரும்பாத ஊழியர்கள் பாட்டிலுக்கு ரூ 5 அதிகமாக வாங்கினார்கள். அது ஒரு நாளைக்கு ஆயிரம் பாட்டில்கள்  எனும் போது ரூ 5,000 வருமானமானது. எனவே இதில் டாஸ்மாக் உயரதிகாரிகள் தங்களுக்கான பங்கை கறாராக நிர்ணயித்து கேட்டு வாங்க ஆரம்பித்தனர். இதில் உயரதிகாரிகள், காவல்துறை ஆகியோர் மாமூலோடு விஷயம் முடிந்தது.

கரூர் கம்பெனியும், கறார் வசூலும்!

ஆனால், தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்ன நடந்தது?

இந்த ஐந்து ரூபாயை பத்தாக வசூலித்து கட்சிக்காரகளுக்கு தரும் திட்டத்தை அமல்படுத்தியவர் செந்தில் பாலாஜி. இது 10 ரூபாயாக அதிகரிக்கப்பட்டவுடன் தான் கொந்தளிப்பு ஏற்பட்டது.

ஊழியர்களை வாடிக்கையாளர்கள் திட்டித் தீர்த்தனர். சில இடங்களில் அடிக்கவும் பாய்ந்தனர்,.. இதனால், இது போன்ற நிர்பந்தத்தை தங்களுக்கு ஏற்படுத்த வேண்டாம் என சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட யூனியன்கள் முதல்வர் ஸ்டாலினுக்கும், அன்றைய டி.ஜி.பி சைலேந்திரபாவுவிடம் புகார்கள் தந்தனர். கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதை நேரடியாகவே முதல்வர் ஸ்டாலினிடம் முறையிட்டனர். ஆனால், துளியும் பலனில்லை.

கரூர் கம்பெனியின் வலிமை அப்படிப்பட்டது. அது நூற்றுக்கணக்கான இளைஞர்களை டாஸ்மாக் கடைகளில் அன்றாட வசூலுக்கு அனுப்பி முறைகேட்டை இன்ஸ்டியூசனாக்கி முறைப்படுத்தியது. செந்தில் பாலாஜி இந்த வசூலை தான் மட்டுமே எடுத்துக் கொள்ளாமல் மேலிடத்திற்கு பெரிய அளவில் பங்கும் தந்துவிடுகிறார். அந்த மேலிடம் அவர்களை விட பெரிய டெல்லி மேலிடத்திற்கு திணறடிக்கும்படி கப்பம் கட்டுகிறது.

ஏமாந்து கொண்டிருப்பது மக்களே!

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time