திருமணத்திற்காக அழகு நிலையத்தில் மணமகளுக்கு ஒப்பனை நடந்து கொண்டிருந்தது. மணமகன் முஸ்லிம் ;மணமகள் இந்து .இருவரும் அண்டை வீட்டார்கள். கடந்த வாரம் லக்னோவில், இரு குடும்பத்தினரின் ஒப்புதலுடன் திருமணம் நடைபெற இருந்த சமயத்தில், காவல்துறை இந்த திருமணத்தை அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. இனி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு,அவரது அனுமதி பெற்றுதான் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புண்டு. உத்திர பிரதேசத்தில் அரசு இயற்றியுள்ள ‘லவ் ஜிகாத்’ அவசரச் சட்டத்தின் விளைவாக இது நடந்துள்ளது. ஒரே வீட்டில் ஆணும், பெண்ணும் திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கையில் ’லவ் ஜிகாத்’ என்ற அவசரச் சட்டம் கொண்டுவர முடிகிறது? இந்த சட்டம் உணர்த்தும் செய்தி என்ன என்பதை இன்றைய மனித உரிமை நாளில் யோசித்துப் பார்ப்போமா !
1948 ஆண்டு டிசம்பர் 10 ம் நாள் ஐநா அவை மனித உரிமை பிரகடனத்தை வெளியிட்டது. உயிர் வாழும் உரிமை, கண்ணியத்தோடு வாழும் உரிமை, கருத்துரிமைகல்வி உரிமை, விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை, எங்கு வேண்டுமானாலும் குடியேறும் உரிமை என பல்வேறு உரிமைகளை அது பிரகடனப்படுத்தி உள்ளது. நம் நாட்டிலும் 1993 ஆண்டு இதன் அடிப்படையில் இயற்றப்பட்டுள்ள மனித உரிமைச் சட்டத்தின் கீழ்தான் மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றன. அனைவரையும் சமமாகவும், கண்ணியத்தோடும் அரசும், காவல்துறையும் மற்ற அதிகார அமைப்புகளும் நடத்துவதை மனித உரிமை அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
இரு மத இளசுகள் காதலித்தால் இமாலய தண்டனை- யோகி அதிரடி சட்டம்
பம்பாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கௌதம் நவ்லாகா என்பவரின் கண்ணாடி தொலைந்துவிட்டது.இது இல்லையென்றால் அவர் ஏறக்குறைய குருடர்தான். இவருடைய கண்ணாடியை அவரது குடும்பத்தினர் அஞ்சலில் சிறைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதை சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதற்காக சிறைஅதிகாரிகளை மும்பை உயர்நீதி மன்றம் கண்டித்து உள்ளது. ஒரு மனிதனுக்கு உரிய எல்லா உரிமைகளும் சிறைச்சாலைக்குள் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்பதை நாம் கடைபிடிக்கிறோமா ?
ஒரு சமூகம் சிறைவாசிகளை எப்படி நடத்துகிறது என்பதை பொறுத்துத்தான் அதனுடைய நாகரிகம் இருக்கிறது என்பார்கள். “விசாரணைக் கைதிகளையும், தண்டனைக் கைதிகளையும் ஒன்றாகவே வைத்துள்ளனர்.அதாவது குற்றம் இழைத்தவர்கள் என்று தண்டிக்கப்பட்டவர் களையும், குற்றம் சுமத்தப்பட்டு விசாரிப்பவர்களையும் ஒன்றாக சிறையில் வைக்க கூடாது. எல்லா நூல்களும் உள்ள நூலகம் அமைக்க வேண்டும். இரும்பு வலைகள் போன்ற தடுப்பு முறை அநாகரீகமானது. சிறையில் நடைபெறும் சித்திரவதைகளைத் தடுக்க முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் சிறைச்சாலைக்குள் சோதனை செய்ய அரசு அலுவலர்கள் அல்லாத குழு போன்றவை அமைக்கப்பட வேண்டும்” என்று காவல்நீதி மற்றும் சித்ரவதை ஒழிப்புப் பிரச்சாரம் (Campaign for Custodial Justice & Abolition of Torture) என்ற அமைப்பு கூறுகிறது.
UAPA சட்டம் தீவிரவாதத்தை ஒடுக்கவா? வளர்க்கவா?
“சமூகத்தில் எங்கெல்லாம் அசமத்துவம், அடக்குமுறை இருக்குமோ அங்கெல்லாம் உரிமைகள் இன்மை இருக்கும். அதற்கு எதிராக உரிமைகள் பேரவா இருக்கும். அந்த அசமத்துவம் குடிமக்கள் Vs அரசு என்பதாக இருக்கலாம்; தலித்துகள்Vs பிராமணர்கள் என்பதாக இருக்கலாம்; பெண்கள் Vs ஆண்கள் என்பதாக இருக்கலாம்; பழங்குடியினர் Vs பழங்குடியினர் அல்லாதவராக இருக்கலாம்; பாகுபாட்டிற்கு இரையான பிராந்தியங்கள் Vs ஆதிக்கம் செலுத்தும் பிராந்தியங்கள் என்று இருக்கலாம்” என்கிறார் ஆந்திராவைச் சார்ந்த மனித உரிமைப் போராளியான கே.பாலகோபால்.
” குடும்ப அமைப்பு செலுத்தும் நெருக்கடி விளைவாகக் கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் பலியாகிற பெண்களின் எண்ணிக்கை அரசு வன்முறையில் இறப்பவர்களின் எண்ணிக்கைக்கு சுமார் 20 மடங்கு அதிகம்” என்று ‘உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்’ என்ற நூலில் கே.பாலகோபால் சொல்லுகிறார். குடும்பம்பத்திற்குள் நாம் சமத்துவத்தை கடைபிடிக்கிறோமா?
முதியோர்,குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களிடம் பரிவுடன் நடக்க வேண்டும் என்பது ஒரு நியதி. சக்கர நாற்காலியில் இருக்கும், ஊனமுற்ற பேராசிரியர்.சாய்பாபா நக்சல்களோடு தொடர்பு இருக்கிறது என்று தண்டிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.
இவர் விடுதலைக்கு நீதிமன்றங்கள் உதவவில்லை. தற்போதைய அரசு இவரைப் போன்ற மனித உரிமையாளர்களை எழுத்தாளர்களை, கலைஞர்களை, வழக்கறிஞர்களை கணக்கு,வழக்கின்றி ’உபா’ என்ற கொடிய சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளி வருகிறது! 83 வயது சமூக சேவகரான ஸ்டேன் சாமி உள்ளிட்ட பலரை தீவிரவாதத்தில் தொடர்புபடுதும் வண்ணம் கதைகட்டி கைது செய்கிறது பாஜக அரசு. இதை கண்டிக்க வேண்டிய நீதி பரிபாலன அமைப்புகள் மெளனித்திருப்பது இன்றைய ஜனநாயகத்திற்கு நிகழ்ந்துள்ள ஆகப் பெரிய ஆபத்து என்கிறார் பிரசாந்த் பூசன்.
நக்சல்களின் பெயரால் நசுக்கப்படும் மனித உரிமையாளர்கள்!
சிறைவாசிகளில் தலித், ஆதிவாசிகள், சிறுபான்மையினரின் விகிதம் அதிகம். விசாரணைக் கைதிகளாக பிணை கொடுக்க வழியில்லாமல், பிணைக்கான தொகை செலுத்த முடியாமல் இருப்போர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு மனித உரிமை நாள் என்றால் தெரியுமா ?
Also read
கடந்த ஆண்டு செகந்திரபாத் அருகில் ஒரு கால்நடை மருத்துவரை வன்புணர்வு செய்து கொலை செய்த்தாக நான்குபேரை அம்மாநில காவல்துறை அதிகாரிகள் அதிகாலையில் சுட்டுக் கொன்றனர். இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் ‘அப்பாவித்தனமாக’ பாராட்டினர். அரசியல் கட்சிகளும் இப்படிப்பட்ட என்கவுண்டர்களை ‘மந்தை மனநிலையில்’ இருந்து பாராட்டுவது துரதிருஷ்டவசமானது.இது போன்ற அத்துமீறல்களை கண்டிக்காத வரை, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் போன்ற சம்பவங்கள் தொடரவே செய்யும்.
” மனித உரிமைக்கல்வியை மாணவர்களுக்கு பயிற்றுவிப்பது அவசியம். இதற்கு ஊடகங்கள், அரசியல் கட்சிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் பொறுப்பு உண்டு.சரியான புரிதலை உருவாக்கிவிட்டால் எளிதாக சவால்களை எதிர்கொள்ள முடியும்” என்கிறார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளரான க.சரவணன்.
வணக்கம் ஐயா நேர்மையான கூர்நோக்கில் பட்சம் சாயாமல் தங்கள் செய்திகள் உள்ளது. தொடர்ந்து ஆதரிக்கிறோம். மற்றும் பொருளாதார சிரமத்தில் உள்ள நான் எவ்வகையிலும் மாதம் 100 ரூபாய் அனுப்ப முயற்சி செய்கிறேன். மிகவும் சிறிய தொகைதான் மனமுவந்து ஏற்றுக் கொள்ளவும். நன்றி. வாழ்த்துடன் – ஜெகதீசன்.
thanks