உற்சாகமும், உத்வேகமும் தருகிறது முதலைமைச்சர் ஸ்டாலினின் அறிக்கை!
அட, சூப்பர். ”உண்மையிலேயே தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் – மக்களுக்காக!” என நானும் உரக்க சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.
ஆனால், அவர் கூறிய விடயங்கள் மட்டும் போதுமானதில்லை. இன்னும் கூடுதலாக பாஜகவை எதிர்க்கவும், தமிழ் மண்ணின் நலம் பேணவும் அவசியம் என உணர்ந்தேன்;

தேசியக் கல்வியை தமிழக கல்வி கொள்கையாக்கி திணிக்கும் தந்திரத்தை எதிர்த்து தமிழ்நாட்டு மக்கள் போராடுவார்கள்.
பெரியார் மண்ணின் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் – புரட்டுக் கதைகளையும் சொல்லும் கூட்டத்தை ஆட்சியாளர்களே அனுமதித்து விட்டு, அதற்கு எதிராக பேசும் பாசாங்குதனத்தை எதிர்த்து போராடும்.
திராவிட மாடல் எனச் சொல்லிக் கொண்டு மதவெறிக் கூட்டத்திற்கு மறைமுகமாக உதவ முத்தமிழ் முருகன் மாநாடு, நீதிமன்றமே ஆணையிட்டும் தமிழையும் இணைத்து இன்று வரை குட முழுக்கு நடத்தாமல் பார்பனர்களை வைத்து சமஸ்கிருதத்தில் நடத்துவதை எதிர்த்து போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்து மக்களின் விருப்பத்திற்கு மாறாக, ஜனநாயக விரோதமாக விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பிடுங்கும் பரந்தூர் விமான நிலையத் திட்டம், மேல்மாவிலும் மதுரை மேலூர் கல்லங்காடிலும் சிப்காட் பெயரில் மக்களிடம் கலந்து பேசாமல் விவசாய நிலங்களை பறிக்கும் வில்லங்கத்திற்கு எதிராக போராடும்.
நகர்மயமாக்கல் என்ற பெயரில் கிராமங்களை, இயற்கை வளங்களை அழிக்கும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவான காய் நகர்த்தல்களுக்கு எதிராக போராடும்.
பொதுத் துறையான போக்குவரத்தை மெல்ல மெல்ல தனியார்மயமாக்கும் நரித்தனத்திற்கு எதிராக தமிழகம் போராடும்.
அரசாங்க வேலை வாய்ப்புகளை எல்லாம் அழித்தொழித்து காண்டிராக்டர்களிடம் ஒப்பந்தக் கூலிகளாக தூய்மை பணியாளர்களை ஒப்படைத்து கமிஷன் அடிக்கும் நரித்தனத்திற்கு எதிராக தமிழகம் போராடும்.
அரசுத் துறைகள் அனைத்திலும் பள்ளிக் கல்வித் துறை தொடங்கி உயர்கல்வி வரை ஆசிரியர்களை, பேராசிரியர்களை ஆண்டுக்கணக்கில் தொகுப்பூதியத்திலேயே வைத்து அடிமாட்டுக் கூலிக்கு உழைப்பை சுரண்டுவதற்கு எதிராக தமிழகம் போராடும்.
திண்டுக்கல்லில் மாலிடினம் சுரங்கம் தோண்டும் பணிகளை ரகசியமாக முன்னெடுக்கும் நரித்தனத்திற்கு எதிராக தமிழகம் போராடும்.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதித்துக் கொண்டே- போராடுபவர்களை கைது செய்து ஒடுக்கிக் கொண்டே – ”அதை அனுமதிக்கமாட்டோம்” என போலி வேசம் போடும் கயமைத்தனத்திற்கு எதிராக தமிழகம் போராடும்.

பாஜகவை எதிர்ப்பதாக பாசாங்குத்தனம் செய்து கொண்டே பாஜகவின் திட்டங்களை இங்கு அமல்படுத்தி வரும் திமுகவையும், அதன் கள்ளக் கூட்டாளி பாஜகவையும் எதிர்த்து தமிழகம் போராடும்.
சென்னையில் பழவேற்காடு மீன்பிடித் தளத்தையும், மீனவ கிராமங்களையும் அழித்து அதானியின் கப்பற்கட்டும் தொழிற்சாலைக்கு தாரைவார்த்துவிட்டு, தற்போது தூத்துக்குடி உப்பளங்களை அழித்து தென் கொரிய நிறுவனத்திற்கு தூக்கிக் கொடுக்கும் கார்ப்பரேட் கைகூலிகளுக்கு எதிராக தமிழகம் போராடும்.
தமிழ்நாட்டு மலைகளை வெட்டி, ஆறுகளை பள்ளத்தாக்குகளாக்கி இயற்கை வளத்தை சூறையாடும் போக்கிரித்தனத்திற்கு எதிராக தமிழகம் போராடும்.
தமிழக இளைஞர்களை மீளா மது போதையில் ஆழ்த்தி, டாஸ்மாக் மது விற்பனையில் டாஸ்க் வைத்து, பணமே குறியாக இருப்போரை எதிர்த்து போராடும்.
அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை வெளியிடப் போவதாக மிரட்டி தன் சொத்துக்களை அண்ணாமலை அதிகரித்துக் கொள்ள உதவிய கள்ளக் கூட்டாளிகளுக்கு எதிராக தமிழகம் போராடும்.
Also read
ஜனநாயகத்தை ஆழப் புதைத்து மன்னராட்சி மனோபாவத்தில் வாரிசுகளை அதிகாரப்படுத்தும் ஆணவ அரசியலுக்கு எதிராக தமிழ்நாடு நிச்சயம் போராடும்.
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக அறிக்கைவிடுவது, பின்னர் அவரது தேனீர் விருந்தில் ஓடோடி சென்று கலந்து கொண்டு, ”இந்த கவர்னரை மாற்ற வேண்டாம். இவர் இருப்பது தான் நமக்கு நல்லது” எனச் சொல்வது என ஸ்டாலின் நாடகமாடினாலும், உண்மையிலேயே ஆர்.என்.ரவியை எதிர்த்து தமிழகம் போராடும்.
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! போலிகளை அம்பலப்படுத்தும்! அஞ்சாமல் உண்மைக்காக நிற்கும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்.















Leave a Reply