தலைமை நீதிபதியை தாக்கியவரை ஏன் தண்டிக்கவில்லை?

-சாவித்திரி கண்ணன்

தலைமை நீதிபதி தாக்கப்படப் போகிறார் என்பதற்கு கட்டியம் கூறுவது போல சனாதன வெறியர்கள் சமூக ஊடகங்களில் வன்மத்தை தொடர்ந்து விதைத்தனர். அதை ஆட்சியாளர்கள்  ரகசியமாக ரசித்தனர். அவர் செருப்பு வீசித் தாக்கப்பட்ட பின்னரும் தாக்கியவரை சம்பிராதாயமாக விசாரித்து உடனே விடுவித்தனர். இதன் பின்னுள்ள அரசியல் என்ன?

அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தலமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது மயூர் விகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் செருப்பை வீசி தாக்கினார். ஆனால், அது குறி தவறி அவரது அருகில் விழுந்தது. அப்போது, ”சனாதனதர்மத்தை அவமதிப்பவர்களை பொறுத்துக் கொள்ள முடியாது” என கோஷம் எழுப்பினார், ராகேஷ் கிஷோர். அங்குள்ள காவலர்களால் ராகேஷ்கிஷோரை அழைத்துச் சென்றனர்.

இதனைக் கண்டு பதற்றமடையாத நீபதி கவாய் அவர்கள், ”இது போன்ற சம்பவங்களால் கவனம் சிதற வேண்டாம். இது எங்களை பாதிக்கவில்லை. எங்கள் கவனமும் சிதறவில்லை…” என்று கூறி ”வாதங்களை தொடருங்கள்” என்றார், வழக்கறிஞர்களிடம்.

பெரிய மனிதர் என்றால், உண்மையிலேயே பெரிய மனிதர். என்னே ஒரு பெருந்தன்மை! நிதானம், பக்குவம்!

தன் மீதான தாக்குதலுக்கு, ”நான் அனைத்து மதங்களையும் நம்புகிறேன். அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்”  என அழகாக விளக்கம் அளித்தது போலவே, இந்த செருப்பு வீச்சு தாக்குதலையும் ஒரு பொருட்டாக மதிக்காமல், புகார் கூட பதியாமல் கடந்து விட்டார், தலைமை நீதிபதி கவாய். அவருடைய மெச்சூரிட்டி மெய் சிலிர்க்க வைக்கிறது.

மனதை கிறங்கடிக்கும் அழகு. ஈடு இணையற்ற சிற்பங்களுக்கு பேர் போனது, மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ கோவில்!

காதல் உணர்வையும் ,காமத்தின் அழகியலையும் கலந்து காட்டும் கஜுரோஹோ சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவை.

கஜுராஹோ கோயில் என்பது கி.பி 950 முதல் கி.பி 1050 வரை சந்தேலா வம்சத்தால் கட்டப்பட்டது. இதில் சைவத்திற்கான சிவன், வைணவத்திற்கான விஷ்ணு மற்றும் சமண மற்றும் பெளத்த மதத்தவர்களுக்கான சிற்பங்கள் உள்ளதால், இது இடைக்காலத்தில் மதங்களிடையே நிலவிய சகிப்புத் தன்மை மற்றும் இணக்கத்திற்குமான ஒரு சான்றாக பார்க்கப்படுகிறது.

இந்தப் பகுதி தொல்லியல் துறையின் பல்லாண்டுகள் பராமரிப்பில் உள்ளது. தொல்லியல்துறையானது அந்தக் காலகட்டத்து சிற்பங்களை அப்படியே பொக்கிஷமாக பாதுகாக்குமே அல்லாது, அதில் கைவைக்காது. ஆகவே, இது உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இது யுனெஸ்கோவின் கண்காணிப்பில் உள்ளது.

இந்த இடத்தில் வழிபாட்டுக்கோ, பூஜை,புணஸ்காரங்களுக்கோ இடமில்லை. இதுவே இந்தியா சுதந்திரம் பெற்றது தொடங்கி நமது அரசின் நிலைபாடு.

இந்தச் சூழலில் இந்து மதத்தில் பற்றுள்ள ஒருவர் “கஜுராஹோவின் ஜவாரி கோயிலில் 7 அடி உயர விஷ்ணு சிலை உடைந்த நிலையில் இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் விஷ்ணு சிலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அந்த சிலையை மாற்றியோ அல்லது புனரமைத்தோ பிரதிஷ்டை செய்து வழிபாட்டுக்குரியதாக்கும் நோக்கத்தில். விஷ்ணு சிலையை சீரமைக்க ஏஎஸ்ஐ-க்கு உத்தரவிட வேண்டும்”  என்கிறார்.

சம்பந்தப்பட்ட விஷ்ணு சிலை

 

இந்த மனுவே விஷமத்தனமானது. அந்த இடம் மாமல்லபுரத்தை போல ஒரு சுற்றுலா தளம். அது சைவம், வைணவம், சமணம், பெளத்தம்  ஆகியவற்றுக்கு பொதுவானது. அந்த இடத்தை ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கான வழிபாட்டுத் தளமாக்க ஒரு போதும் இயலாது.

 

அப்படி மாற்ற முடியுமென்றால், அதை மத்திய பிரதேசத்தை ஆளுவதும் பாஜக தான், மத்தியில் ஆட்சியில் இருப்பதும் பாஜக தான். அவர்கள் எப்போதோ செய்திருப்பார்களே.

அதனால் தான் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “சுயவிளம்பர நோக்கத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. நீங்கள் (மனுதாரர்) விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று கூறுகிறீர்கள். நீங்கள் நேரடியாக சென்று விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த இடம் ஏஎஸ்ஐ கட்டுப்பாட்டில் உள்ளது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்” எனச் சொன்னார்.

இந்த சம்பவம் கடந்த மாதம் 16-ம் தேதி நடந்தது. ஆனால், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமை நீதிபதியை ஏதோ சனாதனத்திற்கு எதிரானவராக பேசியதாக சித்தரித்து கடுமையாக விமர்சித்து இந்துத்துவர்கள் பதிவிட்டவண்ணம் இருந்தனர். விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து இயக்கத் தலைவர்களின் தொடர்ச்சியான துர்பிரச்சாரத்தின் விளைவே நீதிபதி கவாய் மீதான செருப்பு வீச்சு.

சனாதனிகளின் இந்த துர்பிரச்சாரத்தை ஆட்சியாளர்கள் கண்டிக்கவில்லை. குறைந்தபட்சம் தவறு என சுட்டிக்காட்டவும் இல்லை. “அந்த இடத்தை கோவிலாக்க முடியாது” என்று விளக்கம் தரவுமில்லை. கவாய் மீதான துர்பிரச்சாரம் எல்லை மீறி செல்வதை ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்ததன் விளைவாக இந்த விபரீதம் அரங்கேறி உள்ளது.

இந்த சம்பவத்தை நிகழ்த்திய 72 வயதான வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், ‘கடவுள் சொன்னதைக் கேட்டே இது போல செய்ததாக’ கூறியிருக்கிறார். மேலும், ”தனது செயலுக்கு வருத்தமில்லை” என்ற அவர் மன்னிப்பு கேட்கவும் மறுத்து விட்டார். ”நான் இதற்காகச் சிறைக்குச் செல்லவும் கூட தயாராக இருக்கிறேன்…” என்று சொல்லும் அளவுக்கு சனாதன வெறி அவரை சகஜ நிலையில் இருந்து தடம் புரள வைத்துள்ளது.

பல்வேறு சிற்பங்களுக்கு பேர் போன கலைக் கூடங்களின் தாயகமான இடத்தை கோவிலாக்க முடியாது. கோவில் என்றால், அதை அதற்குரிய பக்தி சிரத்தையுடன் ஆகம விதிமுறைப்படி கட்டி எழுப்பி இருப்பார்கள். ஆகவே வழிபாட்டுத்தளமாக மாற வாய்ப்போ, அவசியமோ இல்லாத ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க சுற்றுலா தளத்தை  சர்ச்சைக்கு உள்ளாக்குவது நிம்மதியை குலைக்கும் தீய நோக்கம் கொண்டதாகும்.

தன் செயல் சனாதனத்திற்கு ஏற்பட்ட சரிவு என்பதைக் கூட அவரால் உணர முடியவில்லை. மதப்பற்றோ, கட்சிப் பற்றோ அதி தீவிரமானால், அது மனிதனை மடையனாக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். நீதிபதி கவாய் புகார் தரவில்லை என்பதால்,  உச்ச நீதிமன்றத்தில் பலர் முன்னிலையில் தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பு வீசியவரை தண்டிக்காமல் விடுவித்ததாக காவல் துறை ‘விளங்கிக் கொள்ள முடியாத’ விளக்கத்தை தந்துள்ளது.

கண்முன்னே நடந்துள்ள ஒரு குற்றச் செயலை தானே முன் வந்து காவல்துறை அங்கிருந்தவர்களை சாட்சியமாக்கி தண்டிக்கலாம். தாக்கப்பட்டவர் தலைமை நீதிபதி என்றாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். தாக்கியவர் சனாதனவாதி. அதுமட்டுமின்றி அவர் சனாதனத்தை காக்கும் போராளி. அதனால்,  குற்றம் இழைத்தவர் தண்டிக்கப்படுவதை ஆட்சியாளர்கள் விரும்பமாட்டார்கள் என்பது தான் காவல்துறையின் பின் வாங்கலுக்கான காரணமாகும்.

மேலும் கஜுராஹோவா விசயத்தில் ”தொல்லியல் துறைக்கு ஆணையிட முடியாது” எனக் கூறி தீர்ப்பளித்தது தலைமை நீதிபதி பி. ஆர் கவாய் மட்டுமல்ல, கே.வினோத் சந்திரனுமாவார். ஆனால், அவரும் செருப்பு வீச்சு சம்பவத்தின் போது கவாய் உடனேயே தான் இருந்தார். ஆனால் அவரை தாக்கும் முயற்சி நடக்கவில்லை என்பதும் கவனத்திற்கு உரியது.

சட்டவிரோதமாக வேறொரு மதத்தால் நிலமோ அல்லது அமைப்போ ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பாகுபாடான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக ராகேஷ் கிஷோர் குற்றம் சாட்டி உள்ளார் என்பது தான் இதில் ஹைலைட்.

இது யாருடைய குரல். ..?

இதன் பின்னணியில் இருப்பது யார்.?

அவர்களின் எதிர்கால நோக்கம் என்ன?

என்பதெல்லாம் யாருக்கும் தெரியாதது அல்ல.

சாவித்திரி கண்ணன்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time