திகைக்க வைக்கும் தேர்தல் ஆணையச் செயல்பாடுகள்!

-கே.பாலகிருஷ்ணன்

சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) என்பதாக தேர்தல் நடவடிக்கைகளில் பல சீரழிவுச் செயல்பாடுகளை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது ஒன்றிய பாஜக அரசு. பீகாரில் பீதியை கிளப்பிய தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு நகர்வையும், நீதிமன்றத்தையே நிராகரிக்கத் துணிந்த அதன் சர்வாதிகார போக்குகளையும் குறித்த ஒரு அலசல்;

பத்து ஆண்டுகளாக ஒரு பொய் பிரச்சாரம் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது –  பங்களாதேஷிலிருந்து சட்ட விரோதமாக வந்த  இஸ்லாமிய தீவிரவாதிகள் இங்கு தேர்தலில் வாக்களித்து, பாஜகவின் எதிரிகளை வெற்றி பெற செய்கிறார்கள்” – என்பதே அந்தப் பிரச்சாரம்.

இந்தப் பொய் பிரச்சாரம் பீகார், அஸ்ஸாம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில், ஒவ்வொரு தேர்தலிலும் செய்யப்படுகிறது. 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் இது தேர்தலுக்கான முக்கிய பிரச்சாரமானது.. பீகாரில், இருக்கின்ற ஏராளமான பங்களாதேஷியர்கள் வாக்களிப்பதன் வாயிலாக தேர்தலில் பாதிப்பு உருவாகிறது என்று அப்போதும் கூறப்பட்டது .

ஆனால், இந்தப் பிரச்சாரம் உண்மையல்ல என்று 2024 பொதுத் தேர்தலுக்கு முன், தேர்தல் ஆணையம் பங்களாதேஷியர்கள் பட்டியலை வெளியிட்டதன் மூலம் உறுதியானது. சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்யப்பட்ட  5,570 பெயர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்பதை காவல்துறையின் விசாரணை உறுதிப்படுத்தியது. முன்னதாக அந்தப் பட்டியலில் இருந்து 19,200  பேர் சந்தேகத்தின் பெயரில் நீக்கப்பட்டனர். (Pl check no.) இதில் 726 பேர் மீது நடந்த விசாரணையில் இந்தப் பிரச்சாரம் பொய் என்று  நிரூபணமானது.

மேலும் 2019 தேர்தலுக்குப் பின் 3 ஆண்டுகள், பிஜேபி கூட்டணி ஆட்சி தான் இருந்தது. அப்போது மூன்று வெளிநாட்டினர் பெயர்கள் தான் வாக்காளர் பட்டியலில் இருந்தன. இதன் பின் பீகாரில் நாலு பகுதிகளில் நடந்த சர்வேயில் நாலு பெண்களின் மீது பங்களாதேஷியர்கள் என்ற சந்தேகம் எழுந்தது.

பின்னர் நடந்த விசாரணையில் அதுவும் தவறு என்று தெரியவந்தது. எனவே, பங்களாதேஷ் மக்கள்  இந்தியா வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்கள் என்பது ஒரு பொய் பிரச்சாரம் என்று நிரூபணமானது.. இந்தப் பின்னணியில் தான் இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் இந்த ஆண்டு நவம்பர்/டிசம்பர் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஜூன் 24 அன்று எஸ்.ஐ.ஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை அறிவித்தது.

அதில் கூறப்பட்டிருந்ததாவது – வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்காக பீஹாரில் உள்ள அனைவரும் ஜூன் 25 முதல் ஜூலை 25க்குள்,  படிவம் 6ஐ (Form 6)  தேர்தல் ஆணையத்தின் வலை தளத்திலிருந்து  பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திற்கு இணைய வழி மூலமாகவோ அல்லது தங்கள் பகுதியில் உள்ள தேர்தல் அதிகாரியிடமோ கொடுத்து விட வேண்டும். அத்துடன் தேர்தல் ஆணையம் தனியாக அறிவித்திருந்த 11 ஆவணங்களில், ஏதாவது ஒன்றின்  நகலையும் இணைக்க வேண்டும்.

அந்தப் பதினொரு ஆவணங்களின் பட்டியல் விவரம் பின் வருமாறு :

1. ஓய்வூதியம் பெறுவதற்காக வழங்கப்படும் அடையாள அட்டை அல்லது அதற்கான ஆணை.

2. கடவுச் சீட்டு

3. கல்விச் சான்றிதழ்

4. பிறப்புச் சான்றிதழ்

5. குடியிருப்புச் சான்றிதழ்

6. மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கி இருக்கும் குடும்ப பதிவேடு

7. வன உரிமைச் சான்றிதழ்

8. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்

9. ஜாதி சான்றிதழ்

10. என்.ஆர்.ஆர். தேசிய குடிமக்களின் பதிவேடு

11.  மாநில, ஒன்றிய பொதுத்துறை ஊழியர்களுக்காகக் கொடுக்கப்படும் அடையாள அட்டை.

இந்தப் பட்டியலில் சாதாரண ஏழை எளிய கிராமப்புற மக்களிடம் இருக்கக்கூடிய ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப ரேஷன் அட்டை, 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டை ஆகியவை இந்த 11 ஆவணங்களில் இடம் பெறவில்லை என்பது கவனத்திற்கு உரியதாகும்.

இறுதி வாக்காளர் பட்டியலை செப்டம்பர் 30. தேர்தல் ஆணையம் வெளியிட்ட போது, பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் 2.93  கோடி பேர்.

தேர்தல் ஆணையம் ஜூன் 24ஆம் தேதி எஸ்.ஐ.ஆர் (SIR) வெளியிடும் பொழுது வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள் 7.89 கோடி பேர். ஜுலை 24 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி –

ஜுலை 1987க்கு முன்  பிறந்தவர்கள், தாங்கள் பிறந்த இடம்  மற்றும் தேதியையும் கொடுக்க வேண்டும்.

# 1987 ஜுலைக்கும், 2004 டிசம்பர் 31க்கும் இடையில் பிறந்தவர்கள், தன் பெற்றோரில் யாராவது ஒருவரது  ஒரு ஆவணத்தையும்  கொடுக்க வேண்டும்.

# 2004க்கு பின் பிறந்தவர்கள் தனது பெற்றோர் இருவருடைய (தாய், தந்தை) ஆவணங்களையும் (11இல் ஒன்று) கொடுக்க வேண்டும்…போன்ற நிறைவேற்ற இயலாத கெடுபிடிகளால் கோடிக்கணக்கானவர்கள் பெயர்களை காலி செய்துவிட்டது, தேர்தல் ஆணையம்.

இந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகளும் யோகேந்திரயாதவும், பியுசிஎல் அமைப்பும்  உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.

தேர்தல் கமிஷனின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் யோகேந்திர யாதவ்

பீகாரில் 88.7 விழுக்காடு மக்கள் கிராமப்புறத்தில் வாழ்கின்ற ஏழை எளிய மக்கள். இவர்கள் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால் வாக்காளர்களாக அங்கீகாரம் பெற முடியவில்லை. இவர்கள் படிவம் 6 ஐ இணைய வழியில் பதிவிறக்கம் செய்து, அத்துடன் 11இல் ஒன்று என ஒர் ஆவணத்தையும் நகலெடுத்து பதிவேற்றம் செய்யும் வாய்ப்பு மிகக் குறைவு. எனவே எஸ்.ஐ.ஆரின் நோக்கம் பெருமளவுக்கு இந்த ஏழை எளிய மக்களை, குறிப்பாக சிறுபான்மையினர், பெண்கள் பட்டியலினத்தவர்கள் ஆகியோரை நீக்கி, அவர்கள் குடியுரிமையைப் பறிப்பதாகவே அமைந்துவிட்டது.

7.89 கோடி வாக்காளர்களில் 8.28 விழுக்காடு அதாவது 65 லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், இந்தியா முழுவதும் இதே ரீதியில் 8.28 கோடி பேர் குடியுரிமை இழப்பார்கள்.

தொடர்ந்து ஆறு முறை இது பற்றிய வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்த நிலையில் ஆதார் அட்டையை 12வது ஆவணமாகச் சேர்த்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையம் நடந்து கொண்ட விதமும், அது முன் வைத்த வாதங்களும் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்ட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பற்றிய தரவுகளும், விவரங்களும், நீக்கப்பட்ட காரணமும் வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி  வழக்கறிஞர்களும், பின் உச்சநீதிமன்றமும் சொன்ன பொழுது, தேர்தல் ஆணையம்  மறுத்தது. பல்வேறு சாக்குப் போக்குகளை சொன்னது. பின்னர் உச்ச நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்ட பிறகே தேர்தல் ஆணையம், நீக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டது.

வெளிநாட்டினர் நமது நாட்டில் கள்ளத்தனமாக குடியேறி வாக்களிப்பதை தடுக்கவே எஸ்.ஐ.ஆர்.என்று முதலில் தேர்தல் ஆணையம் சொன்னது.தற்போது வெளிநாட்டினர் எவ்வளவு எத்தனை பேர் நீக்கப்பட்டனர் என்று கேட்டதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க மறுத்தது.

வாக்குச் சாவடிக்கு வாக்காளர்கள் வந்து வாக்களிக்கும் வரை உள்ள சிசிடிவி காட்சிகளை வெளியிட கேட்டபோது,  தேர்தல் ஆணையம் வாக்களிப்போரின் உரிமையைப் பாதிக்கும் என்பதால் கொடுக்க இயலாது என்று மறுத்துள்ளது.

வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட செப்டம்பர் 30 அன்றாவது  பிரச்சினைகளுக்கும், குழப்பங்களுக்கும் ஒரு முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்து கூடுதலான பிரச்சனைகளும் குழப்பங்களுமே உருவாகி உள்ளது.

ஆம், தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதிப் பட்டியலில், 7.42 கோடி பேர் தான் உள்ளனர்.

ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிட்ட  வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் 3.66 லட்சம் பேர்.

புதிதாக படிவம் 6 கொடுத்துச் சேர்க்கப்பட்டவர்கள் 21.53 லட்சம் பேர்.

நமது ஆய்வில் தேர்தல் ஆணையத்தின் நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் பெண்களே அதிகமாக உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெண்களே அதிகமாக நீக்கப்பட்டுள்ளனர்

இப்படி ஒருபுறம் நீக்கிவிட்டு, மறுபுறம் போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் இணைத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

அந்த வகையில் கூடுதலாக 4.6 லட்சம் பேர் சேர்க்கப்பட்டது எப்படி என்ற கேள்விக்கு இதுவரை தேர்தல் ஆணையம் பதில் சொல்லவில்லை.

இறுதியில் நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களில், யார்,யார் எந்தெந்தக் காரணங்களுக்காக நீக்கப்பட்டார்கள்? என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் இன்னும் தெரிவிக்கவில்லை.

# இந்தியர் அல்லாதோர் 6,500 பேர் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் இருந்ததாகத் தகவல்கள் (Sources) தெரிவிக்கின்றன. ஆனால் இறுதிப் பட்டியலில் அயல் நாட்டினர் குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இப்படியாக புதிய கேள்விகளும், குழப்பங்களும் எழுந்துள்ளன. இது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வாயைத் திறக்கவில்லை.

மொத்தத்தில், பீகாரில் நடந்திருக்கும் எஸ்.ஐஆர். என்பது, பாஜக ஆட்சி இந்தியாவில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பதற்கான முயற்சி என்பதாகத் தான் புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் தான் எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை (SIR) கடுமையாக எதிர்க்கிறார்கள்.

ஏனெனில், ஏற்கனவே தேர்தல் ஆணையத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர, பாஜக  அரசு நான்கு சட்டங்களை கொண்டு வந்தது.

(1)  அதில் தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதில்   தலைமை நீதிபதி இடம் பெறுவதை நீக்கிவிட்டு, பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என்று மாற்றியதும்,

(2)  தேர்தல்  ஆணையர்கள், தங்கள் பணிக்காலத்தில்  கிரிமினல் குற்றங்களைச் செய்தாலும் அவர்கள் மீது எந்த வழக்கும் போட முடியாது என்ற பாதுகாப்பை தரும் சட்டத்தை இயற்றியதும்,

(3)  சிசிடிவி காட்சிகள் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மையை மறுத்ததும்,

(4)  சிசிடிவி காட்சிகளை 45 நாளில் அழித்து விடும் முடிவுமான சட்டங்கள் அளப்பரிய பாதுகாப்பை தேர்தல் ஆணையத்திற்கு கொடுப்பதுவும்..,

தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றோடு செயல்பட உருவாக்கப்பட்ட  சதி திட்டம் என்பதை தெளிவுபடுத்துகிறது.

இது வரை இந்தியாவில் உள்ள குடிமக்கள் அனைவரும், அடிப்படையில் இந்திய குடிமக்களே. சந்தேகம் ஏற்படுகின்றவர்களிடம் மட்டும்  ஆவணங்களைக் கேட்பது என்ற நடைமுறையை தேர்தல் ஆணையம் இதுகாறும் பின்பற்றி வந்தது.

ஒவ்வொருவரும் இந்தியர்கள் என்று அங்கீகரிக்கும் கடமையை அரசு புறம் தள்ளிவிட்டு, தற்பொழுது இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் நாங்கள் தான் இந்திய குடிமக்கள் என்று நிரூபிக்கும் பொறுப்பை குடிமக்கள் தலையில் தேர்தல் ஆணையம் சுமத்தி உள்ளது. இது பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் எனக் கருதப்படுவர்களை குடியுரிமையற்றவர்களாக்கி கருவறுக்கும் சதியோ..? என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.

கட்டுரையாளர்; கே.பாலகிருஷ்ணன்

இந்திய ஒற்றுமை இயக்கம் ( BJA)

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time