மதுரை நகருக்கருகில் மேலூர் அருகே கல்லங்காட்டில் சிப்காட், சிட்கோ மற்றும் எல்காட் ஆகியவற்றை அமைக்க திமுக அரசு திட்டமிட்டு, முதல் கட்டமாக மேலூர் பகுதியில் 278 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதானது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. இந்த எதிர்ப்பு தொழில் வளர்ச்சிக்கு எதிரானதா?
முன்னதாக முதல்வர் முக.ஸ்டாலின் அரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மதுரையை தொழில்மயப்படுத்தவுள்ளதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சிக்கு வந்தது தொடங்கி மாநிலத்தில் அடுத்தடுத்து பல இடத்தில் தொழிற்பூங்கா அமைத்து வரும் வேளையில் மேலூரில் சிப்காட், சிட்கோ மற்றும் எல்காட் ஆகிய 3 முக்கிய அமைப்புகளும் தொழிற்பூங்கா, ஐடி பார்க் ஆகியவற்றை அமைக்க முடிவு செய்துள்ளன என்பது தான் இதில் ஹைலைட்டாகும்.

இந்த தொழிற்பூங்கா அமையுமிடத்தில் உள்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேற்கொள்வதற்காக உலக வங்கி மற்றும் வெளிநாட்டு நிதி உதவிகளுக்கும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் சிப்காட் எனப்படும் தொழிற்பேட்டைகள் அதிகமாக வருகின்றது. இது தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்குமான முன்னெடுப்பு என்பதால் வரவேற்கத் தக்கவையே. ஆனால், இது போன்ற சிப்காட் தொழிற்பேட்டைகளை அந்தப் பகுதி வாழ் மக்களை கலந்து பேசி செய்யாமல், நல்ல வேளாண் நிலங்களை, நீர் நிலைகளை அழித்தும், பழமை வாய்ந்த அரிய பண்பாட்டு பிரதேசங்களை அழித்தும் செய்வதாக அதிரடி அறிவிப்புகள் வெளியிடுவதோடு அதிகாரிகளை அனுப்பி அளவீடுகளைச் செய்வதால், மக்கள் கொந்தளித்து போகிறார்கள்.

இது போன்ற நேரங்களில், ”அரசாங்கம் எங்களுக்கு எந்த உதவியும் செய்யாவிட்டாலும் எங்கள் வாழும் உரிமையை பறிக்காமல் இருந்தாலே போதுமானது” என்பதே அந்தப் பகுதி வாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அந்த வகையில், மதுரை – தூத்துக்குடி தொழில் வளாகத்தில் வரும் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள கல்லாங்காடு பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில்துறை வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதானதும், தற்போது அதற்கான நில அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதும் மக்களை பதற்றத்தில் ஆழ்த்தி நிம்மதி இழக்க வைத்துள்ளது.
மேலூரில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்க தமிழக அரசு சமீபத்தில் முன் மொழிந்திருப்பது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியில் நீண்டகாலமாக வசிப்பவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது அவர்களின் போராட்டங்கள் மூலம் தெரிய வருகிறது.

மதுரையின் முதல் சிப்காட் தொழில் பூங்கா – சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் ஜூன் மாதம் தந்துள்ள விண்ணப்பத்தில், ”இது சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படாத தொழிற்சாலைகளுக்கான பிரத்யேக தொழில் பூங்காவாக அமைய உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
அதே சமயம், ”மதுரையின் எல்லையில் சிவகங்கை மாவட்டத்தை ஒட்டியுள்ள இந்தப் பகுதி, தொடர்ந்து தோண்டி எடுக்கப்பட்டு வரும் ஒரு செழிப்பான பெருங் கற்காலப் பண்பாடுள்ளது மட்டுமல்லாமல், பிற்கால பாண்டியர்களின் காலத்திலும் புகழ்பெற்று விளங்கியதாகும். ஆகவே அரசின் கூற்று பொய்யானது” என்கிறார்கள், மக்கள்.
மேலும் அவர்கள், இப்பகுதியில் சிப்காட் வந்தால் உள்ள செழிப்பான விவசாய நிலங்களை இழப்போம், ஓடைகள், குளங்கள் கொண்ட நீராதாரங்கள் பறிபோகும், 18 கிராமங்களின் ஆடு,மாடுகளுக்கான மிகப் பெரிய மேய்ச்சல் நிலத்தை இழக்க வேண்டி வரும், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் சின்னங்கள் அழிந்துவிடும். பழமை வாய்ந்த கோயில்களைக் கொண்ட கோயில் காடுகள் சிதைக்கப்பட்டுவிடும், காணற்கரிய புள்ளிமான்கள், காட்டுயிர்கள், தேவாங்கு போன்ற விலங்குகளும், புள்ளி புறா, புள்ளிமூக்கு வாத்து, பட்டை கழுத்து கள்ளிப்புறா போன்ற பறவை இனங்களும் மற்றும் சில பல்லுயிரிகளும் பாதிக்கப்படும்.. ‘’ என இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

இது மட்டுமின்றி மரங்கள் அடர்ந்த வேளாண் சார்ந்த இந்தக் காட்டுப் பகுதி 3,500 ஆண்டுகளுக்குப் பழமையான கல்பதுக்கைகள், முதுமக்கள் தாழி, கல்திட்டை, கல்வெட்டம், கற்குவியல் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்களைக் கொண்ட பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷமாகும்.
மேலும் பல்வேறு அரிய தாவரங்களான உசிலை, அரசம், தைலம், குருந்தம் போன்றவை இங்கு காணக்கிடைக்கின்றனவாம்.
வஞ்சிநகரம், பூதமங்கலம் மற்றும் கொடுக்கம்பட்டி ஆகிய மூன்று பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட இந்தப் பகுதியில், அரசாங்கப் பதிவுகளில் “தரிசு” (தரையிறவு) என வகைப்படுத்தப்பட்ட சில நூறு ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இங்குள்ள ஏராளமான மரங்கள் நிறைந்த பகுதியை கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே, இதை இழந்தால் கால் நடை வளர்ப்பு சாத்தியமற்றுவிடும். எங்கள் வாழ்க்கையே சூனியமாகிவிடும் என விவசாயிகள் ஊர்கூட்டம் போட்டு எதிர்த்துள்ளனர்.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டங்களை முன்னெடுத்து பெருமூச்சுவிட்ட நிலையில், ஸ்டாலின் அரசின் இந்த சிப்காட் அறிவிப்பு மக்களிடையே பெரும் சீற்றத்தை உருவாக்கி உள்ளதால், கடந்த ஏழட்டு மாதங்களாக பல்வேறு விதங்களில் போராடி வருகின்றனர். ஆனால், திமுக அரசு இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதில் தான் தீவிரமாக உள்ளது. சமீபத்தில் தங்கள் பகுதியை பாதுகாக்க இந்த எளிய மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் மனு அளிக்க சென்றதற்கே கைது செய்யப்பட்டனர் என்பது கவனத்திற்குரியதாகும்.
அதே சமயம் பல்லாயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் – தொழில்வளர்ச்சிக்கு வித்திடும் – சிப்காட் அமைப்பதற்கான பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கிராம மக்கள் சிலரை திரட்டி திமுக நிர்வாகிகள் மார்ச் மாதம் ஆர்பாட்டம் நடத்தியதற்கு காவல் துறையினர் ஒத்துழைத்தனர்.

இப் பகுதி மக்கள் ஊடகங்களிடம் பேசுகையில், ”எங்கள் வாழ்வாதாரம் கல்லாங்காடு பகுதியை நம்பியே உள்ளது. நாகப்பன்சிவன்பட்டி, , தாயம்பட்டி, கண்டுவபட்டி, ஒத்தப்பட்டி, நாட்டார்மங்கலம் போன்ற 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இப்பகுதியை ஆடு, மாடு மேய்ச்சலுக்காக பயன்படுத்துகிறோம். இங்கு சிப்காட் நிறுவப்பட்டால், எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்,”
சிப்காட் திட்டத்தால் 25-க்கும் மேற்பட்ட வழிப்பாட்டுத் தளங்கள், காலங்காலமாக நடைபெற்று வரும் பண்பாட்டு விழாக்கள், 500 ஏக்கர் விவசாய நிலம், 200 ஏக்கர் மேய்ச்சல் நிலம், 20 நீர்நிலைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவும், அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகும் என்று மக்கள் அச்சம். திட்டத்தை உடனே கைவிடக்கோரி 18 கிராம மக்கள் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு வலியுறுத்தி, பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கல்லங்காடு சுற்றுப்பகுதிகளில் உள்ள 18-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வழிபாட்டில், கல்லங்காட்டில் உள்ள சிவன் கோயில் மற்றும் அழகு நாச்சியம்மன் கோயில்கள் முக்கிய பங்கு வகிப்பதால் சிப்காட் அமைக்கப்பட்டால் வழிப்பாட்டு தளங்களும், பண்பாட்டு விழாக்களும், காடுகளும் சிதையும் சூழல் உள்ள கவலைகளையும் இப்பகுதி மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
”தொழில் வளர்ச்சிக்கு யாரும் எதிராக இல்லை. ஆனால், அதை இயற்கையை அழித்து, வேளாண்மையை சிதைத்து, மக்கள் வாழ்வாதாரங்களை தரைமட்டமாக்கி செய்யாதீர்கள். மாற்று இடங்கள் பலவுண்டு. இயற்கைக்கும், மக்களுக்கும் பாதிப்பில்லாத இடங்களை தேர்ந்தெடுத்து தருகிறோம்” என்பது தான் இந்த மக்களின் கோரிக்கை.
அரசாங்கம் இந்த கோரிக்கையை பரிசீலிக்குமா? பலவந்தமாக நினைத்ததை சாதிக்குமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.
சாவித்திரி கண்ணன்















Leave a Reply