கிராம சபைகள் தங்கள் விருப்பத்திற்கு கூட முடியாதாம்! அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் இயங்க வேண்டுமாம்! கிராம சபை தீர்மானங்களை அரசு பொருட்படுத்தாதாம்! இப்படி எண்ணற்ற வகைகளில் உள்ளாட்சிகளை ஊனப்படுத்தி, 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை நடத்த மறுத்தவர் இன்று உள்ளாட்சிகளை கூட்டி உபதேசிப்பதை பார்ப்போமா?:
தேனில் ஊறிய பலா பழத்தின் சுவையை விஞ்சும் வகையில் இன்று பேசி உள்ளார், முதலமைச்சர் ஸ்டாலின். இப்படியெல்லாம் பேசுவதை கேட்டு பூரிப்பதா? புளகாங்கிதமடைவதா? எனத் தெரியாமல் தவிக்கிறோம், மிஸ்டர். எம்.கே.எஸ்!
நம் நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் தான்.
இந்தியாவின் வலிமை கிராமங்கள்’
என்று காந்தி சொன்னாராம்!
கிராம பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், நிர்வாகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என திட்டங்கள் தீட்டியுள்ளார்களாம்! இத் திட்டங்கள் தான் தமிழ்நாட்டின் கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டிற்கு அடிப்படையாம்!
இந்த வார்த்தை ஜாலங்கள் தான் உங்களை வாழ வைத்துக் கொண்டுள்ளது, முதலமைச்சரே!
ஆனால், நடைமுறையில் என்ன நடக்கின்றது..?
ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு உள்ளாட்ச்சி அமைப்புகளை ஆட்டிப் படைக்கிறது, ஸ்டாலினின் தமிழக அரசு. அவற்றிற்கு வழங்க வேண்டிய மத்திய , மாநில நிதிகளை வேறு துறைகளுக்கு திருப்புவது அல்லது மாநில அரசே நேரடியாக செயல்படுத்துவது என்பது தான் ஸ்டாலின் பாணியாக உள்ளது.
”ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன..” என்கிறார், ஸ்டாலின். இதுவே பச்சை பொய். எத்தனை கிராம சபை கூட்டங்கள் தடுக்கப்பட்டுள்ளன..எனக் கேட்டால் மக்கள் குமுறி தீர்த்துவிடுவார்கள். தங்கள் கிராமத்தில் அந்த கிராமத்து மக்கள் மரத்தடியில் அமர்ந்து பேசி கிராம சபை கூட்டம் நடத்த சென்னையில் உள்ள முதலமைச்சர் அனுமதி ஏன் நிர்பந்திக்கபடுகிறது? என்பதற்கு முதலில் ஸ்டாலின் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

கிராம சபை கூட்டங்களை அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர்கள் நடத்தவே அனுமதியற்ற நிலையைத் தான் ஸ்டாலின் உருவாக்கி வைத்துள்ளார். எல்லாவற்றுக்கும் சென்னையில் இருந்து ஆணை வந்தால் தான் – மாவட்ட ஆட்சியர் அனுமதித்தால் தான் – கிராம சபை கூட்டம் நடத்தவே அனுமதிக்கப்படும் என்பது எவ்வளவு பெரிய அவலம்?
இந்தச் சூழல்கள் காந்தியடிகள் காண விரும்பிய கிராம சுயாட்சி இன்னும் கற்பனையாகவும், கனவாகவுமே உள்ளது.
‘டெல்லியில் உள்ள மத்திய அரசு அனுமதித்தால் தான் இங்கே சட்டமன்றத்தை கூட்ட முடியும்’ எனச் சொன்னால், ”இதென்ன இவ்வளவு அக்கிரமம்?” என்று நாம் கொந்தளிக்கமாட்டோமா? ஆனால், கிராம சபை என்றால், மாநில ஆட்சியாளர்களுக்கு கிள்ளுக் கீரையா?
சுதந்திரமாக கிராம சபை செயல்படத் தான் முடிகிறதா?
ஊராட்சித் தலைவர்களை சுயமாக செயல்படவிடாமல் ஏகப்பட்ட விதிமுறைகள் ஏற்படுத்தி, அரசு அதிகாரிகளின் குறுக்கீடுகள் செய்வதும் ஒவ்வொரு ஊராட்சியும் மாவட்ட ஆட்சியர், இயக்குனர் , ஊரக வளர்ச்சித் துறை, துணை இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO) ..என பல்வேறு நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்துவது என்ன நியாயம்?
அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தலையீட்டால் உள்ளாட்சி பிரதிநிதிகள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் உள்ளனர். மேலும் நிர்வாக அனுமதிகள் மற்றும் தொழில்நுட்ப அனுமதிகள் பெறவேண்டுமென்றால் 5 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கமிஷன் தந்தால் தான், ஒரு ஊராட்சித் தலைவர் தேவையான திட்டங்களை தன்னுடைய உள்ளாட்ச்சிக்கு பெற முடியும் என்ற நிலை உள்ளது!
எத்தனை உள்ளாட்சி அமைப்புகளில் ”எங்கள் ஊரில் டாஸ்மாக் வேண்டாம்” என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளனர். அதை எல்லாம் துளியளவாவது மதித்துள்ளதா ஸ்டாலின் அரசு?
எத்தனை உள்ளாட்சிகளில், ”எங்கள் நீராதரங்களை அழித்து அரசு கட்டிடங்கள் கட்டாதீர்கள்” என்றும்,
”எங்கள் விவசாய நிலங்களை அழித்து சுற்றுச் சூழலுக்கு கேடான தொழிற்சாலைகளை ஏற்படுத்தாதீர்கள்” என்றும் தீர்மானம் நிறைவேற்றி போராடி வருகிறார்கள்..! இதையெல்லாம் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் உள்ளாட்சி தீர்மானங்களை காலடியில் போட்டு நசுக்கி திருவண்ணாமலையின் மேல்மா, மதுரை மேலூரில் கல்லங்காடு..என சிப்காட் ஆரம்பிக்கிறதே திமுக அரசு.
”விமான நிலையம் வேண்டாம்” என பரந்தூர் பகுதி உள்ளாட்சி அமைப்புகள் கூடி போட்ட தீர்மானத்திற்கு என்ன மரியாதை தந்தீர்கள்.
இப்படி போராடும் கிராம மக்கள் ஒரே ஒரு முறை இவர்கள் உங்களை சந்தித்து பேச வேண்டும் எனக் கேட்டு தவமாய், தவமிருந்தார்களே .. சந்தித்தீர்களா?

தற்போது தேர்தல் நெருங்கி வந்தவுடன் கிராம சபை உங்களுக்கு ஞாபகம் வருகிறது. இதற்காக 10,000 உள்ளாட்சிகளை ஒரே நேரத்தில் கூட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார். அதுவும் அரசு குறிப்பிடும் அரங்கத்திற்கு அவர்கள் வரவழைக்கப்பட்டு ஸ்டாலின் பேசுவதை நேரலையாக காண்பித்துள்ளனர். இது கிராம சபை அதிகாரத்தில் _ உரிமையில் – தலையிடும் அத்துமீறல் போக்காகும். இதற்காக அக்டோபர் 2-ந்தேதி கிராம சபை வழக்கமாக கூடி தங்கள் உள்ளாட்சி பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதானது மிகவும் அநீதியாகும்.
குடியிருப்பு, சாலை, தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது…, எனச் சொல்லிக் கொண்டே கோவை மேம்பாலத்திற்கு கோபாலசாமி, துரைசாமி எனப் பெயரிடாமல் ஜி.டி. நாயுடு என வலிந்து பெயர் சூட்டுகிறார், ஸ்டாலின் தன்னருகே அந்த சாதியின் அமைச்சரை வைத்துக் கொண்டு. வாழ்க, இரட்டை வேடமிடும் திராவிட மாடல்!
கடந்த அதிமுக ஆட்சி தான் 2016 ஆம் ஆண்டின் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை பல ஆண்டுகள் தள்ளிப் போட்டது என்றால், போது ஆளும் திமுக அரசும், நாங்களும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று, 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை தள்ளி வைத்துள்ளதே?
தமிழ்நாட்டில் பல நூற்றுக்கணக்கான கிராம ஊராட்சிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து மக்கள் ஏராளமான இடங்களில் போராடி வருகிறார்கள். ஆனால், அப்படி போராடுவதே தனக்கு தெரியாதது போல காட்டிக் கொள்வதே ஸ்டாலின் பாணியாகும்.
பக்கத்து மாநிலமான கேரளா சென்று உள்ளாட்சி அமைப்புகள் எவ்வளவு வலிமையாக, உரிமைகளுடன் செயல்படுகின்றன எனப் பார்த்து பாடம் கற்று வர வேண்டும் ஸ்டாலின்.
Also read
முதலமைச்சர் என்பவர் யாருமே சுலபத்தில் அணுக முடியாதவர்.. என்ற தோற்றத்தை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விடவும் ஒருபடி வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டி வருகிறார், ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலினை பொறுத்த வரை எந்த ஒரு பிரச்சினையை தீவிரமாக ஊடகங்களில் கவனப்படுத்தினாலும் கூட பொருட்படுத்தமாட்டார். விவசாயிகளோ, தொழிலாளர்களோ, மருத்துவர்களோ, சுகாதாரத்துறை பணியாளர்களோ, அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ.. எவ்வளவு நாட்கள் போராடினாலும்.. அதை தன் கவனத்திற்கே வராதது போன்ற பாவனையில் போராடுபவர்களை சலிப்படைய வைக்கிறார்!
நம்முடைய அனுபவத்தில் வேறெந்த ஆட்சியாளர்களையும் விட, உள்ளாட்சி அமைப்புகளை ஊனப்படுத்தி, அவர்களின் உரிமைகளை பறித்து, எளிய மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்து அதிகமாக ஒடுக்கிய ஆட்சியாளர் ஸ்டாலின் தான்.
சாவித்திரி கண்ணன்















Leave a Reply